Published:Updated:

பிளாஸ்டிக் தாமரை, மோடிக்கு நோபல்..! தூத்துக்குடியில் தாமரையை மலர வைப்பாரா தமிழிசை?

பிளாஸ்டிக் தாமரை, மோடிக்கு நோபல்..! தூத்துக்குடியில் தாமரையை மலர வைப்பாரா தமிழிசை?
பிளாஸ்டிக் தாமரை, மோடிக்கு நோபல்..! தூத்துக்குடியில் தாமரையை மலர வைப்பாரா தமிழிசை?

தூத்துக்குடி தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜனின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? அவரைச் சுற்றியிருக்கும் சர்ச்சைகள் என்னென்ன?

நட்சத்திர வேட்பாளர்: டாக்டர்.தமிழிசை செளந்தரராஜன் (தூத்துக்குடி )

ஒரே மேடையில் எம்.ஜி.ஆர், கருணாநிதி! 

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் 2.6.1961-ம் ஆண்டு பாரம்பர்யமான காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தார் தமிழிசை. தந்தை குமரி அனந்தன். தாய் கிருஷ்ணகுமாரி. சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றார். டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தில் டி.ஜி.ஓ படிப்பும் கருவளர்ச்சி மற்றும் சோனாலஜியில் கனடா நாட்டில் உயர் பயிற்சியும் பெற்றவர். ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் மகப்பேறு மருத்துவத்துறையின் துணைப் பேராசிரியராக 7 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். 

இவரின் கணவர் டாக்டர் செளந்தரராஜன். சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை நிபுணர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இருவருமே மருத்துவர்கள். பள்ளியில் படிக்கும்போதே பேச்சுப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றவர் தமிழிசை. மருத்துவக் கல்லூரியில் மாணவர் தலைவராக இருந்திருக்கிறார். கல்லூரியில் படித்த முதல் வருடத்திலேயே அதே கல்லூரியில் மேல் படிப்பு படித்த மருத்துவ மாணவரான செளந்தரராஜனுடன் திருமணம் ஆனது. தமிழிசையின் திருமணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. அவரது திருமணத்துக்கு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரும் அவரது எதிர் துருவமான கருணாநிதியும் ஒரே மேடையில் பங்கேற்றனர். 

மகளிர் பஞ்சாயத்து! 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் ஒரே மேடையில் கலந்துகொண்டதால், தமிழிசையின் திருமணச் செய்தியே தலைப்புச் செய்தியானது. "தமிழ் இசை பிறக்காதா இந்தத் தமிழகத்தில்... என்று ஏங்கிய காலகட்டத்திலேயே தன் மகளுக்கு தமிழிசை என்று பெயர் வைத்தவர் குமரி அனந்தன்" என மணமேடையில் பாராட்டினார் கருணாநிதி. மருத்துவப் படிப்பு முடித்து மருத்துவராகப் பணிபுரிந்த போதிலும், பேச்சும் அரசியலும் தமிழிசைக்கு இரு கண்களாகவே இருந்தன. அந்த நேரத்தில் தனியார் தொலைக்காட்சியில், 'நீங்களும் பேச்சாளர் ஆகலாம்' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராகப் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சியும் கொடுத்தார். அத்துடன், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மகளிர் பஞ்சாயத்து என்ற நிகழ்ச்சியையும் நடத்தினார். காங்கிரஸில் இணைந்து செயல்பட விரும்பிய தமிழிசைக்கு, வாரிசு அரசியலைக் காரணம் காட்டி தடுப்பணை போட்டார் குமரிஅனந்தன். 

கடந்த 1999-ம் ஆண்டு நாகர்கோவில் நாடாளுமன்றத் தேர்தலில் குமரி அனந்தன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். அதில் அப்பாவுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரசாரம் செய்தார் தமிழிசை. அந்தத் தேர்தலில் பா.ஜ.க-வின் கொள்கைகளால் கவரப்பட்டார் தமிழிசை. தன்னுடைய ஆசையை அப்பாவிடம் தெரிவித்தார். காங்கிரஸின் சித்தாந்தத்துக்கு நேர் எதிரான பா.ஜ.க-வில் தமிழிசை சேர்வதில் குமரி அனந்தனுக்கு விருப்பமில்லை. தந்தைக்குத் தெரியாமலேயே பா.ஜ.க-வில் இணைந்தார். இதை அறிந்து 7 மாதங்கள் வரை தன் மகளுடன் பேசாமல் இருந்தார் குமரி அனந்தன். உறுப்பினராக இருந்து பேச்சாளராக உயர்ந்தார். ஆனால், கட்சியோ அவரைக் காங்கிரஸ் கண்ணோட்டத்திலேயே பார்த்தது. 

மோடிக்கு நோபல் பரிசு! 

அந்தக் காலகட்டத்தில் தமிழிசைக்கு ஊக்கமளித்தவர் பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான இல.கணேசன். தொடர்ந்து, மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர், மாநில மருத்துவ அணிச் செயலாளர், கோட்டப் பொறுப்பாளர், மருத்துவ அணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர், மாநிலப் பொதுச் செயலாளர், செய்தித் தொடர்பாளர், மாநில துணைத் தலைவர், தேசியச் செயலாளர்  எனக் கட்சியில் படிப்படியாக உயர்ந்தார். `பெண் சக்தி இயக்கம்' என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராகவும், இல.கணேசனின் பொற்றாமரை இலக்கிய அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். மருத்துவத் துறையில் இரண்டு நூல்களை
எழுதியிருக்கிறார். 

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சரானார். பா.ஜ.க விதிகளின்படி மத்திய அமைச்சர்களாக இருப்பவர்கள் மாநிலத் தலைவராக இருக்க முடியாது என்பதால், தமிழகத்தின் புதிய பா.ஜ.க தலைவராகத் தமிழிசை நியமிக்கப்பட்டார். தற்போது தலைவர் பதவியில் நான்காண்டுகளை நிறைவு செய்துவிட்டார். பா.ஜ.க-வில் உள்ள மாநிலத் தலைவர்களில் தமிழக தலைவரான தமிழிசை ஒருவர் மட்டுமே பெண் என்பது ஹைலைட். இருப்பினும் மற்ற தலைவர்கள் சந்திக்காத பிரச்னைகளை எல்லாம் தமிழிசை சந்தித்து வருகிறார். உருவ கேலி, ஹெச்.ராஜா போன்ற சொந்தக் கட்சித் தலைவர்களே விமர்சிப்பது என அனைத்தையும் எதிர்கொண்டு வருகிறார். 

`நம்ம பிரதமர் மோடிக்கு நோபல் பரிசு கிடைக்கணும்; உதவி பண்ணுங்க'; `வெற்றிகரமான தோல்வி', `தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்' என கட்சிக்காக ரைமிங், டைமிங்காகப் பேசி மற்றவர்களுக்கு டஃப் ஃபைட் கொடுப்பதில் தமிழிசைக்கு நிகராக வேறு எவரையும் குறிப்பிட்டுச் சொல்வது அரிது. 

தேர்தல் ரேஸில் தமிழிசை!

2006-ம் ஆண்டு ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியிலும் 2011-ல் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியிலும் 2009-ல் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். கன்னியாகுமரி தொகுதி தனது சொந்த தொகுதி என்றாலும், பொன்.ராதாகிருஷ்ணனின் கண்ணசைவில் குமரி மாவட்ட பா.ஜ.க இயங்குவதால், இன்று வரை அவரால் அங்கு போட்டியிட முடியவில்லை. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தென்சென்னையைக் குறி வைத்தார் தமிழிசை. ஆனால், அந்தத் தொகுதி மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தனுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதால், எடப்பாடியும் கோரிக்கை வைத்தார். இந்தக் கோரிக்கைக்கு ஜெயக்குமார் செவிசாய்க்கவில்லை. 

இந்நிலையில், வேறு வழியில்லாமல் தன்னுடைய லிஸ்டிலேயே இல்லாத தூத்துக்குடியை டிக் அடித்துக் கொண்டார் தமிழிசை. `கனிமொழியை வீழ்த்த நீங்கள்தான் சரியான வேட்பாளர்' எனத் தைரியம் கொடுத்து அனுப்பியுள்ளது தலைமை. தூத்துக்குடியில் கணிசமாக உள்ள நாடார் இன மக்களின் வாக்குகளை நம்பிக் களமிறங்கியிருக்கிறார். 

டாப் 7 சுவாரஸ்யங்கள்: 

1. சீரடி சாய்பாபா, புட்டபர்த்தி சத்ய சாய்பாபா என இரண்டு பாபாக்களும் பிடித்த தெய்வங்கள். நெற்றியில் சந்தனம் வைத்துக்கொள்வது வழக்கம். 

2. உடைக்கு ஏற்றாற்போல, அதே நிறத்தில் மேட்சிங்காக கம்மல், பாசி, வளையல் அணிவது ரொம்பப் பிடிக்கும்.

3. அசைவத்தை ஒதுக்கி சில வருடங்களாகிவிட்டன. இருந்தாலும், வாரம் ஒருமுறை மீன் மட்டும் விரும்பிச் சாப்பிடுவார்.

4. ஹேண்ட் பேக்கில் சிறிய பிளாஸ்டிக் தாமரைப் பூ ஒன்றை எப்போதும் வைத்திருக்கிறார். அத்துடன், மருத்துவராக முதலில் வைத்தியம் பார்த்து சம்பாதித்த 50 ரூபாய் நோட் ஒன்றையும் வைத்திருக்கிறார். அதே ஹேண்ட் பேக்கில் சிறிய கைகழுவும் லிக்விட் பாட்டிலை வைத்திருப்பார். தன்னுடன் சாப்பிடுபவர்களையும் கை கழுவச் சொல்வதுடன், எப்போதும் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என அட்வைஸ் செய்வார் டாக்டர். 

5. வீடு, அலுவலகம், கார் என எந்தப் பக்கம் திரும்பினாலும் புத்தகங்கள் நிறைந்திருக்கும். தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன் எத்தனை மணியானாலும் குறைந்தது ஒரு மணி நேரமாவது புத்தகம் படிக்காமல் தூங்கச் செல்லமாட்டார். 

6. அரசியல் தலைவர்களில் தன்னைப் பற்றி யார் என்ன விமர்சனம் செய்திருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், அனைவருக்கும் அவரவர் பிறந்தநாளன்று போனில் வாழ்த்து சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

7 `தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம்’, `தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’, ‘அது அவரது தனிப்பட்ட கருத்து’, ‘நாங்க இருக்கோம்’ ஆகியவை தமிழிசையின் வைரல் வாக்கியங்கள்.

டாப் 3 சர்ச்சைகள்: 

1. தூத்துக்குடி ஷோபியா விவகாரத்தில் நடந்துகொண்ட விதம்.

2. எஸ்.வி சேகர், ஹெச்.ராஜா போன்றவர்கள் விமர்சிக்கும்போது அவர்களைக் கண்டிக்காதது.

3. வேதாந்தா குழுமம் பா.ஜ.க-வுக்குத் தேர்தல் நிதி கொடுத்துள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை.

சக போட்டியாளர்களின் ப்ளஸ், மைனஸ்: 

தமிழிசையை எதிர்த்து தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி களமிறங்கியிருக்கிறார். மத்திய மாநில அரசுகள் மீதான எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, பணமதிப்பிழப்பு, சிறுபான்மை மக்களின் வாக்கு போன்றவை கனிமொழிக்கான பெரிய ப்ளஸ்கள். சொந்த சமூக மக்களின் வாக்குகளும் அ.தி.மு.க கூட்டணி பலமும் தமிழிசைக்குப் ப்ளஸ். சிறுபான்மை மீனவ மக்களின் வாக்குகள் கிடைப்பது சிரமம். இருப்பினும், `தூத்துக்குடி மாவட்டத்துக்கு எனத் தனியாக தாமிரபரணி வடிநிலக் கோட்டம் அமைக்கப்படும். தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும், கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூர் - தூத்துக்குடி - ராமேஸ்வரம் - புதுச்சேரி வழியாக சென்னைக்கு புல்லட் ரயில் விடப்படும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை திருப்பதி கோயிலைப்போல மாற்றுவேன். 

சுப்பிரமணியன் சுவாமி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். பனைநார்களில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும். வீட்டுக்கு ஒருவருக்கு நிச்சயம் வேலைவாய்ப்பு. அரசுத்துறை இல்லாவிட்டாலும் ஏதாவது ஒருவகையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பேன். இவற்றையெல்லாம் நிறைவேற்ற மக்கள் எனக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும். நாடு பாதுகாப்பாக இருக்க மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்' என ஏராளமான வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்து நம்பிக்கையோடு வலம் வருகிறார் தமிழிசை. ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை, துப்பாக்கிச்சூடு சம்பவம் போன்றவற்றால் அ.தி.மு.க, பா.ஜ.க மீதான எதிர்ப்புகள் மிகப் பெரிய மைனஸ். 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வழக்கறிஞர் புவனேஸ்வரன், நாம்தமிழர் கட்சி சார்பில் கிறிஸ்டன்டைன் ராஜசேகர், மக்கள் நீதி மய்யம் சார்பில் பொன் குமரன் ஆகியோரும் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். தி.மு.க நிர்வாகிகளின் களப் பணிக்கு முன், `தாமரையை மலரவிடுமா சூரியன்?' என்ற வாதங்களும் தூத்துக்குடி தொகுதியில் களைகட்டி வருகின்றன. 

அடுத்த கட்டுரைக்கு