Published:Updated:

இந்தப் படை போதுமா? - கோயிலுக்கு வந்த கூட்டத்தை மடை மாற்றிய ஆளுங்கட்சியினர்

இந்தப் படை போதுமா? - கோயிலுக்கு வந்த கூட்டத்தை மடை மாற்றிய ஆளுங்கட்சியினர்
இந்தப் படை போதுமா? - கோயிலுக்கு வந்த கூட்டத்தை மடை மாற்றிய ஆளுங்கட்சியினர்

ஊட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரக் கூட்டத்துக்கு மக்கள் அதிகம் கூடாததால், அப்பகுதியில் இருந்த மாரியம்மன் கோயிலுக்கு வந்த கூட்டத்தை அப்படியே நகர்த்தி கூட்டத்துக்கு ஆட்கள் சேர்ந்திருப்பதாக ஆளுங்கட்சியினர் கணக்குக் காட்டினர். 

நீலகிரி  தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து ஊட்டி ஏ.டி.சி பகுதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். காலை 11 மணிக்கு ஊட்டியில் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கூட்டத்தைச் சேர்ப்பதற்காக காலை 10 மணி முதலே ஏ.டி.சி. சந்திப்பு பகுதியில் உள்ள சுதந்திரதின நினைவு திடலில் இன்னிசைக் கச்சேரி நடந்தது. ஆனால், கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

கூட்டத்தைக் காட்ட முடியாத நிலையில், இன்று ஊட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில் படுகர் இன மக்களின் உபய தேர் நடந்தது. இதில், கலந்துகொள்வதற்காக மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த படுகர் இன மக்கள் மாரியம்மன் கோயிலுக்கு வெள்ளை உடை அணிந்து வந்திருந்தனர். அவர்களை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி வந்து முதலமைச்சர் பிரசார கூட்டத்தில் ஆளுங்கட்சியினர் நிறுத்தி வைத்தனர் .

படுக மக்களைக் கவர முதலமைச்சர் எடப்பாடிக்கு படுகர் இன மக்களின் பாரம்பர்ய உடையான தலைப்பாகை வெள்ளை நிற சால்வை அணிவித்து வரவேற்றனர். முதல்வரும் சால்வை மற்றும் தலைப்பாகை அணிந்தபடியே பேசினார். படுகர் நடனம் பாடல் எனப் படுகர் கலை நிகழ்ச்சி போன்றே நடைபெற்ற பிரசாரத்தில் கடைசியாகப் பிரசாரத்துக்கு வந்திருந்த பக்தர்களைப் பார்த்து விழா வாழ்த்துகளையும் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி கூட்டத்துக்கு மக்கள் கணக்கைக் காட்ட கோயிலுக்கு வந்த பக்தர்களை அழைத்து வந்ததால் கூட்டணிக் கட்சியினர் அப்செட் ஆகினர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசார வாகனத்தில் வேட்பாளர் தியாகராஜனும், நீலகிரி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் புத்திசந்திரன் இருவர் மட்டுமே இருந்தனர். புத்திசந்திரன் முதல்வர் பேசத் துவங்கியது முதல் முடியும் வரை முதல்வரின் சால்வையை சரிசெய்துகொண்டே இருந்தார். படுகர் இன மக்களின் பாரம்பர்ய உடைகளை அரசியல் கட்சியினர்களுக்கு அணிவிக்கப் படுகர் இளைஞர் அமைப்புகள் விமர்சித்து வந்தனர். கடைசியாகப் படுகர்களை பழங்குடி பட்டியலில் சேர்க்கப் பாடுபடுவேன் என்றார். சேலம் எட்டு வழிச் சாலைக் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு எந்தப் பதிலும் அளிக்காமல் சென்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.