Published:Updated:

டார்கெட் 272... அறிவிப்பு 75... பி.ஜே.பி-யின் பிளானும் பின்னணியும்!

75 முக்கிய வாக்குறுதிகளோடு வெளியாகியுள்ள இந்தத் தேர்தல் அறிக்கை, எதிர்பார்த்த அளவுக்குத் தேர்தல் வெற்றியை ஈட்டித்தருமா என்று அலச ஆரம்பித்துள்ளார்கள் பி.ஜே.பி-யின் அகில இந்திய தலைவர்கள். 

டார்கெட் 272... அறிவிப்பு 75... பி.ஜே.பி-யின் பிளானும் பின்னணியும்!
டார்கெட் 272... அறிவிப்பு 75... பி.ஜே.பி-யின் பிளானும் பின்னணியும்!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 75 முக்கிய வாக்குறுதிகளோடு வெளியாகியுள்ள இந்தத் தேர்தல் அறிக்கை, எதிர்பார்த்த அளவுக்குத் தேர்தல் வெற்றியை ஈட்டித்தருமா என்று அலச ஆரம்பித்துள்ளார்கள் பி.ஜே.பி-யின் அகில இந்திய தலைவர்கள். 

காங்கிரஸ் கட்சி கடந்த வாரம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக, 'ஆண்டுக்கு 72,000 ரூபாய், வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ள ஏழை மக்களின் குடும்பத்துக்கு உதவித்தொகைக்கு ஒதுக்கீடு' என்ற அறிவிப்புக்கு நாடு முழுவதும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதேபோல், விவசாயக் கடன் ரத்து, ஜி.எஸ்.டி-யில் சீர்திருத்தம் போன்ற முக்கிய அம்சங்களும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றது. நாடு முழுவதும் ஏப்ரல் 11-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், 8-ம் தேதி அன்று தங்களது தேர்தல் அறிக்கை வெளியிட முடிவு செய்தனர். அதன்படி, டெல்லியில் பி.ஜே.பி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. 

காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்குப் போட்டியாக இந்தத் தேர்தல் அறிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லியில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, “நாங்கள் தேர்தல் அறிக்கையை நம்பி வாக்கு கேட்கப் போவதில்லை. ஐந்தாண்டுகளில் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கப்போகிறோம்” என்று சொல்லியிருந்தார். அப்போதே தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சிக்குப் போட்டியாக எந்த அறிவிப்பும் இருக்காது என்பதை யூகித்துவிட்டார்கள். இன்று வெளியான பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையில் 75 அம்சங்களின்கீழ் வாக்குறுதிகள் பட்டியலிடப்பட்டுள்ளது. 

பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையில், “60 வயதான சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும். ஜி.எஸ்.டி நடைமுறைகள் எளிமையாக்கப்படும். முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படும். ராமர் கோயில் கட்ட முயற்சி செய்யப்படும். நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டுக்குச் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும். சிறு விவசாயிகளுக்கு நிதிநிலையில் அறிவிக்கப்பட்ட ஆண்டுக்கு ரூ.6,000 அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படும்” உள்ளிட்டவை பிரதானமாக இடம்பெற்றுள்ளது. வழக்கம்போல இந்த முறையும் ராமர் கோயில் விவகாரத்தை பி.ஜே.பி கையில் எடுத்துள்ளது. ஆனால், இது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்கிறார்கள், அந்தக் கட்சியின் சீனியர் தலைவர்களே. அதே நேரம், காங்கிரஸ் கட்சி அறிவித்த 72,000 ரூபாய்க்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையில் எந்தக் கவர்ச்சிகரமான திட்டங்களும் இல்லாமல் போனது அந்தக் கட்சியின் தலைவர்களுக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


இதுகுறித்து நம்மிடம் பேசிய பி.ஜே.பி தரப்பினர், “பிரதமர் மோடிக்குக் கடந்த தேர்தலில் இருந்த எழுச்சி, இந்தத் தேர்தலில் குறைந்துள்ளது உண்மை. இப்போது காங்கிரஸ் கட்சியும் வலுவான கட்சியாக அறியப்படவில்லை. ஊழல் விஷயத்தில் பி.ஜே.பி மீது காங்கிரஸ் கட்சி கைநீட்ட முடியாது. எனவே, அவர்கள் தேர்தல் அறிக்கையை முழுவதும் நம்பி அதைவைத்து வாக்குகளைக் கவர திட்டமிட்டார்கள். பி.ஜே.பி தரப்பு மோடி, ஐந்தாண்டுக்கால ஆட்சி இந்த இரண்டு பிம்பங்களை வைத்து தேர்தலைச் சந்திக்க முடிவு செய்தது. ஆனால், மக்களிடம் ஏதாவது கவர்ச்சியைக் கொண்டு சேர்க்காவிட்டால், சில பின்தங்கிய பகுதிகளில் வாக்குகளைக் கவருவது கடினம். எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஏதாவது ஒரு விஷயம் காங்கிரஸ் கட்சிக்குப் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் காங்கிரஸ் கட்சிக்குப் போட்டியாக பி.ஜே.பி தேர்தல் அறிக்கை கொடுத்துள்ளது என்ற விமர்சனத்தை பி.ஜே.பி விரும்பவில்லை” என்கிறார்கள். 

பி.ஜே.பி மீண்டும் ஆட்சிக்கு வர 272 எம்.பி-க்களின் ஆதரவு தேவை. கடந்த தேர்தலைப்போல இந்தத் தேர்தலில் பி.ஜே.பி தனிப்பெரும் கட்சியாக வருமா என்கிற சந்தேகம் உள்ளது. கூட்டணிக் கட்சியுடன் ஆட்சியைப் பிடிக்கும் நிலையே பிரதானமாக உள்ளது. இந்நிலையில், இந்த 75 வாக்குறுதிகள் பி.ஜே.பி கூட்டணிக்கு 272 தொகுதிகளுக்கும்மேல் பெற்றுத்தர வழி செய்யுமா என்ற கணக்கிலும் பி.ஜே.பி தரப்பு இறங்கியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மூலம் கடந்த வாரம் பி.ஜே.பி தரப்பு எடுத்த சர்வேயில் 220 தொகுதிகள்வரை இந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்றும், தேர்தல் அறிக்கை வெளியான பிறகு இதில் ஏற்றம் இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்கள். மாநிலவாரியாக அந்த சர்வேயில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கை, “உத்தரப்பிரதேசத்தில் 42, சத்தீஸ்கரில் கடந்த முறை 11 இடங்களைப் பிடித்த பி.ஜே.பி இந்த முறை 1 முதல் 3 சீட் வரை மட்டுமே வெல்லுமாம். மத்தியப் பிரதேசம் 14, பீகார் 28, ராஜஸ்தான் 8, குஜராத் 21, கேரளா 1, மகாராஷ்ட்ரா 24, மேற்கு வங்கம் 8, ஒடிசா 6, ஜார்க்கண்ட் 8, கர்நாடகா 10 முதல் 14, இமாசலப் பிரதேசம் 1 முதல் 2, தெலங்கானா 0, ஆந்திரா 2, தமிழ்நாடு 5, ஜம்மு-காஷ்மீர் 2, ஹரியானா 10, அஸ்ஸாம் 8, பஞ்சாப் 2 மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் 11, டெல்லியில் ஆம் ஆத்மியோடு காங்கிரஸ் கூட்டணி அமைத்தால் 2, கூட்டணி அமைக்காவிட்டால் 6, கோவா 2, லட்சத்தீவு 1, அந்தமான் 1, டையூடாமன் 1 என இந்த எண்ணிக்கையில் சர்வே முடிவுகள் வந்துள்ளன. 

இந்த எண்ணிக்கை அதிகரிக்க பி.ஜே.பி தரப்பு தீவிரமாகக் களப்பணியாற்றி வருகிறது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது ராமர் கோயில் தீர்வு உத்தரப்பிரதேசத்தில் கூடுதல் சீட்டுகளுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உதவித்தொகை நாடு முழுவதும் பரவலாகத் தங்களுக்கு வாக்குகளைப் பெற்றுத்தரும் என எதிர்பார்க்கிறார்கள். பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையில் பெரும்பாலான திட்டங்கள் வட இந்தியாவை மையப்படுத்தியே இருப்பதாக ஒருகுறை இருந்தாலும், எங்கு அந்தக் கட்சிக்கு வலுவான நிலை இருக்கிறதோ, அந்தப் பகுதியின் வாக்குகளை அள்ள... இது ஒரு யுக்தி என்று பி.ஜே.பி தரப்பில் சொல்கிறார்கள்.

272 தொகுதிகளுக்கு வைக்கப்பட்ட டார்கெட்தான், இந்த 75 அம்ச வாக்குறுதிகள் என்கிறார்கள் பி.ஜே.பி தரப்பினர்.