Published:Updated:

மாறிமாறி கேள்விகள்... மாணவர்களிடம் கலந்துரையாடிய கார்த்தி சிதம்பரம்!

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கல்லூரி மாணவர்களுடன் உரையாடியதுபோல், தானும் கல்லூரி மாணவர்களுடன் உரையாட வேண்டும் என்று நினைத்து, அதற்கான நிகழ்ச்சியை மகிளா காங்கிரஸ் மூலம் ஏற்பாடு செய்திருந்திருந்தார் கார்த்தி சிதம்பரம்.

மாறிமாறி கேள்விகள்... மாணவர்களிடம் கலந்துரையாடிய கார்த்தி சிதம்பரம்!
மாறிமாறி கேள்விகள்... மாணவர்களிடம் கலந்துரையாடிய கார்த்தி சிதம்பரம்!

சிவகங்கை, மாயா திருமணம் மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தோடு பல்வேறு கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அங்குள்ள கல்லூரி மாணவர்களுடன் உரையாடியதுபோல் தானும் கல்லூரி மாணவர்களுடன் உரையாட வேண்டும் என்று நினைத்து, அதற்கான நிகழ்ச்சியை மகிளா காங்கிரஸ் மூலம்  ஏற்பாடு செய்திருந்திருந்தார் கார்த்தி சிதம்பரம்.

திருப்பத்தூர் அடுத்துள்ள பூலாங்குறிச்சி அரசு கலைக் கல்லூரி, சிவகங்கை மன்னர் கலைக் கல்லூரி, முதுகுளத்தூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ மலேசியா பாண்டியனுக்குச் சொந்தமான பாண்டியன் சரஸ்வதி கல்லூரிகளிலிருந்து மாணவ - மாணவியர்கள் வாகனங்களில் அழைத்துவரப்பட்டிருந்தார்கள். முன்கூட்டியே மாணவ, மாணவிகளிடம், 'நீங்கள் கேட்கும் கேள்விகளைத் தனித்தனியாக எழுதிக் கொடுங்கள்' என்று வாங்கிக்கொண்டார்கள். அதிலிருந்து மாணவர்கள் என்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்று மகிளா காங்கிரஸ் நிர்வாகியான வித்தியா போன்றவர்கள் முடிவு செய்துவிட்டார்கள். எந்தக் கேள்வியை யார் கேட்க வேண்டும் என்பது வரையிலும் முடிவு செய்திருந்தார்கள். 

கார்த்தி சிதம்பரம் உட்காருவதற்குத் தனி சிம்மாசனம் போன்று நாற்காலி போடப்பட்டிருந்தது. நிகழ்ச்சி தொடங்கியதும் மைக் செட்டு இடையிடையே மக்கர் செய்ததால் டென்ஷன் ஆனார் கார்த்தி. 

பின்னர் மாணவர்களிடம், "நான் வேஷ்டி சட்டையில் வந்திருக்கக் கூடாது. ஃபார்மல் உடையில் வந்திருக்க வேண்டும். என்னிடம் வேஷ்டி சட்டைதான் இருக்கிறது. ஒரு ஷுகூட இல்லை; எல்லாம் சென்னையில் இருக்கிறது (இப்போதே சென்னையில் இருக்குனா, நாளைக்கு ஜெயிச்சா தொகுதிக்கு வருவீங்களா? இல்லே, சென்னையிலிருந்து சிவகங்கையைப் பாக்குறேனு சொல்வீங்களானு மாணவர்கள் கமென்ட் அடித்தனர்). "நீங்க என்னிடம் எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். கேளுங்கள்" என்றார். மறுபடியும் மைக் மக்கர் செய்ய... "நான் எத்தனை முறைதான் உங்களுக்கு சொல்வது? மைக் ஃபெய்லியராக இருக்கக் கூடாதென்று? என பெண் நிர்வாகிகளைக் கடிந்துகொண்டார் கார்த்தி சிதம்பரம்.

பிறகு, "மைக்கை மாணவர்களிடம் கொடுங்க" என்றார். "சார், நான் பூலாங்குறிச்சியிலிருந்து வந்திருக்கிறேன். எங்க ஊர்ல பள்ளிக்கூடம், தாலுகா ஆபீஸ், போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் இருக்கு. ஆனால், படித்த பெண்கள் தொழில் வளர்ச்சி இல்லாததால் வருமானம் இன்றி கஷ்டப்படுகிறார்கள்" என்றார். அதற்குப் பதிலளித்த, "உங்கள் திட்டம் என்ன? உங்க ஊருக்கு என்ன தேவை என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதை முடிவு செய்து திட்ட அறிக்கையாகக் கொடுத்தீர்கள் என்றால் என்னால் முடிந்ததைச் செய்வேன்" என்றார் கார்த்தி. இதையடுத்து எழுந்த இன்னொரு மாணவி, "நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன் என்று அழுகிறேன். அந்த அளவுக்குப் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. எ.கா. பொள்ளாச்சி சம்பவம். நீங்கள் எம்.பி-யானால் கடுமையான சட்டம் கொண்டுவர முயல்வீர்களா?" என்றார்.
அதற்கு, "பாலியல், கொலை சம்பங்கள் நடக்கத்தான் செய்யும். அதை, கடுமையான சட்டங்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியாது. பெற்றோர்கள், குழந்தைகளை வளர்க்கும்போதே பெண்கள் பற்றிச் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும்" என்றார் கார்த்தி

இதையடுத்து, எழுந்த ஒரு மாணவன், "நீங்கள் எம்.பி-யானால் சீமைக் கருவேல மரங்களை ஒழிக்க நடவடிக்கை எடுப்பீர்களா?" என்றார். அதற்குப் பதிலளித்தவர், "சீமைக் கருவேல மரங்களால் விஞ்ஞானரீதியாகச் சிலர் தீமை இருப்பதாகவும் சிலர் தீமை இல்லை என்றும் சொல்கிறார்கள். இதனால் தண்ணீர்ப் பிரச்னைக்கும் சீமைக் கருவேல மரங்களுக்கும் சம்பந்தம் இல்லை. எனவே, அதுகுறித்து தீர்வு காணும் நிலையில் நான் இல்லை" என்றார்.

பின்னர் அவரைத் தொடர்ந்து எழுந்த மாணவி ஒருவர், "அரசுக் கல்லூரியில் படிக்கும் நாங்கள், தமிழ் மொழியைத் தவிர வேறு மொழி தெரியாததால் வேலைவாய்ப்புக்காக நேர்காணலுக்குச் செல்லும்போது ஆங்கிலத்தில் பேச முடியாமல் சிரமப்படுகிறோம். நீங்கள் எம்.பி-யானால் அரசுக் கல்லூரிகளில் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்களா?" என்றார். அதற்குப் பதிலளித்த கார்த்தி, "அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழ், ஆங்கிலம் கட்டாயமாகக் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். ஓர் எம்.பி நன்கொடை கொடுக்கலாம். தமிழக அரசுதான் தமிழுக்கு இணையாக ஆங்கில மொழிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்றார். அவரைத் தொடர்ந்து எழுந்த வீரகுமார் என்ற மாணவர், "கோவிலூர் கொமிக்கல் ஆலையை மூட நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்களா" என்று வினவினார்.  

"இதற்கு மாநில அரசிடம்தான் முழு அதிகாரம் இருக்கிறது. அப்படியென்றால், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மூடுவீர்களா" என்று தொடர்ந்து கேட்டார்.  "அது, எனக்குத் தெரியவில்லை" என்ற கார்த்தி சிதம்பரத்திடம், மேலும் "சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு இல்லாததால் இங்குள்ளவர்கள் வெளிநாட்டில் வேலை செய்யும் நிலை இருக்கிறதே" எனக் கேள்வி கேட்டார். அதற்குப் பதிலளித்த கார்த்தி, "நம்ம ஏரியாவுக்கேற்ற, தனியார் துறை நிறுவனங்களை என்னால் கொண்டுவர முடியும். ராஜஸ்தான் போன்று, 'ஹெரிட்டேஜ் டூரிஸம்' , 'டெம்பிள் டூரிஸம்' கொண்டுவருவேன்" என்றவரிடம், "செந்தில் நாதனுக்கு முன்னாடி உங்கள் அப்பாதானே எம்.பி-யாக இருந்தார்" என்று அந்த மாணவர் சொன்னதும், "தம்பி எம்.பி-னா தொகுதிக்கு மகாராஜாவோ, சுல்தானோ கிடையாது" என்று சொல்லிச் சமாளித்தார் கார்த்தி. 

பின்னர் மாணவி ஒருவர், "33 சதவிகித இடஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால்  நடைமுறைப்படுத்தப்படுமா" என்று வினவினார். அதற்கு அவர், "எந்தக் கட்சியிலும் இதை நடைமுறைப்படுத்தவில்லை. ஏன், காங்கிரஸ் கட்சியில்கூடப் பின்பற்றவில்லை. இதைச் சட்டவடிவமாகக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் அனைத்து அரசியல் கட்சிகளும் இதைக் கட்டாயமாகக் கடைப்பிடிப்பார்கள். அப்போதுதான் பெண்களுக்கும் அரசியல்மீது நம்பிக்கை வரும்" என்றார்.