Published:Updated:

`நோ பெர்சனல் அட்டாக்; பிஞ்சிலே பழுத்த பழம்; ஜெயலலிதா பாசம்!’ - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்

`நோ பெர்சனல் அட்டாக்; பிஞ்சிலே பழுத்த பழம்; ஜெயலலிதா பாசம்!’ - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்

தி.மு.க கூட்டணி பலம், சிறுபான்மையினர் வாக்குகள், தொகுதி முழுக்க கணிசமாக இருக்கும் நாயக்கர் சமூக வாக்குகள் ஆகியவற்றை நம்பிப் பிரசாரம் செய்து வருகிறார் இளங்கோவன். அவரின் வெற்றி வாய்ப்பு எப்படி?

`நோ பெர்சனல் அட்டாக்; பிஞ்சிலே பழுத்த பழம்; ஜெயலலிதா பாசம்!’ - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்

தி.மு.க கூட்டணி பலம், சிறுபான்மையினர் வாக்குகள், தொகுதி முழுக்க கணிசமாக இருக்கும் நாயக்கர் சமூக வாக்குகள் ஆகியவற்றை நம்பிப் பிரசாரம் செய்து வருகிறார் இளங்கோவன். அவரின் வெற்றி வாய்ப்பு எப்படி?

Published:Updated:
`நோ பெர்சனல் அட்டாக்; பிஞ்சிலே பழுத்த பழம்; ஜெயலலிதா பாசம்!’ - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்

நட்சத்திர வேட்பாளர்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (தேனி)

ஈ.வி.கே.சம்பத் - சுலோச்சனா தம்பதியின் மூத்த மகனாக 1948-ம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். ஈ.வெ.ரா. பெரியாரின் சகோதர் மகன். சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ பொருளாதாரம் பட்டம் முடித்துள்ளார். தந்தை சம்பத், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர், தி.மு.க-வைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். தாயார் சுலோச்சனா, அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்தவர். பாரம்பர்ய அரசியல் குடும்பம் என்றாலும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சியில் இருப்பார்கள். தமிழக அரசியல் களத்தில் சர்ச்சைகளுக்கும் அதிரடிகளுக்கும் பெயர் போனவர் இளங்கோவன். கருணாநிதி முதல் தினகரன் வரையில் இவர் விமர்சிக்காத அரசியல்வாதிகளே இல்லை. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தவர். சொந்த கட்சிக்குள் இருக்கும் தலைவர்களையே வெளிப்படையாக விமர்சிப்பது இவரது வழக்கம். திருநாவுக்கரசர், விஜயதரணி, தங்கபாலு, ஜோதிமணி என இவரால் விமர்சிக்கப்படாத கதர்க்கட்சி நிர்வாகிகள் மிகவும் குறைவு. மனதில்பட்டதை எந்தவித தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்தும் குணமுள்ளவர். 

தேர்தல் களம்:

கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 2004-ம் ஆண்டு போட்டியிட்டு வென்றார் ஈ.வி.கே.எஸ். இதன் பலனாக மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சரானார். 2009 தேர்தலில் ம.தி.மு.க-வின் கணேசமூர்த்தியை எதிர்கொண்டார். இந்த முறை அவருக்குத் தோல்வியே கிடைத்தது. `இனி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை' எனக் கூறிவந்தவர், தற்போது தேனி தொகுதியில் களமிறங்கியுள்ளார். `இந்தத் தொகுதியில் 2004 தேர்தலில் டி.டி.வி.தினகரனைத் தோற்கடித்த காங்கிரஸ் கட்சியின் ஜே.எம்.ஆரூண் வேட்பாளராக நிறுத்தப்படுவார்' எனப் பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில், ஈ.வி.கே.எஸ் பெயரை டிக் அடித்திருக்கிறார் ராகுல்காந்தி. இந்தத் தொகுதியை இளங்கோவனும் எதிர்பார்க்கவில்லை. அவரது முதல் சாய்ஸ் ஈரோடாகத்தான் இருந்தது. வேறு வழியில்லாமல் தலைமையின் முடிவை ஏற்றுக் கொண்டார். 

டாப் 5 சுவாரஸ்யங்கள்: 

1. `சாதி மதங்களைக் கடந்து தமிழக மக்களுக்காக உழைத்த பெரியாரின் பேரன் நான்' என்று பிரசாரத்தின்போது அடிக்கடி பெருமையாகக் கூறுவார். 

2. மேடைப் பேச்சின்போது, `என்னைப் பொறுத்தவரையில்' என்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவார். 

3. புகைப் பழக்கத்தை மட்டும் அவரால் கைவிட முடியவில்லை. இதன் காரணமாக, இதய அறுவைசிகிச்சையையும் எடுத்திருக்கிறார். 

4. அதிரடி கருத்துக்களுக்குச் சொந்தக்காரர். தற்போது பிரசாரத்திலும், `பிஞ்சிலே பழுத்தப்பழம்’ என ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்தை விமர்சித்தார்.

5. அரசியல் கட்சித் தலைவர்களை விமர்சித்தாலும், அதை மறந்து நட்பு பாராட்டக்கூடிய குணம்.

டாப் 5 சர்ச்சைகள்:

1. தி.மு.க தலைவர் கருணாநிதியை சாதிரீதியாக விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கியது (2005-ம் ஆண்டு).

3. ஜெயலலிதா, மோடி சந்திப்பு குறித்து இவர் கூறிய வார்த்தைகள் கொந்தளிப்பை ஏற்படுத்தின. அ.தி.மு.க-வினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். "அரசியல் ரீதியான எனது கருத்தைத் திரித்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போராட்டம், எதிர்போராட்டம் என நடைபெறுவது மிகுந்த வேதனையைத் தருகிறது" என்றார் ஈ.வி.கே.எஸ். (2015).

4. ஜெயலலிதாவின் இளமைக்கால பெயரை பத்திரிகையாளர் சந்திப்புகளில் எள்ளலாகச் சொல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். 

5. விஜயதரணி, ஜோதிமணி எனக் காங்கிரஸ் கட்சியின் பெண் பிரமுகர்களை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தது.

சக போட்டியாளர்களின் ப்ளஸ், மைனஸ்:

அ.தி.மு.க. வேட்பாளராக ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். ஆளும் அரசுகள் மீதான அதிருப்தி, லட்சுமிபுரம் கிணறு விவகாரத்தில் பன்னீர்செல்வத்தின் செயல்பாடு, தொகுதிக்குள் நிலவும் அதிருப்தி போன்றவை இளங்கோவனுக்கான ப்ளஸ். ஓ.பி.எஸ் தரப்பில் பணத்தைத் தண்ணீராக வாரியிறைத்துப் பிரசாரம் செய்வதும் தேர்தல் வாக்குறுதிகளும் இளங்கோவன் தரப்புக்கான மைனஸ். 

அ.ம.மு.க சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். பரிசுப் பெட்டி சின்னத்தை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க முடியுமா என்ற சந்தேகம், இன்னும் அவருக்குள் இருக்கிறது. தேர்தல் பிரசாரம் களைகட்டினாலும் போதிய நிதி இல்லாதது தங்கத்துக்கான மைனஸ். தேனி மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கும் பிரமலைக்கள்ளர் சமுதாய வாக்குகளை நம்பியிருப்பது ப்ளஸ். 

ரவீந்திரநாத் குமாரும் தங்க தமிழ்ச்செல்வனும் தனிப்பட்ட காரணங்களுக்காக மோதிக்கொண்டாலும், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பிரசாரம் செய்கிறார் இளங்கோவன். தொகுதி மக்களிடம் பேசும்போது, "நான் எம்.பி-யானால் ஆறே மாதத்தில் தேனிக்கு ரயிலை கொண்டுவருவேன், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த பாடுபடுவேன்" என்கிறார். தேனி மாவட்டத்தில் ஜெயலலிதாவின் விசுவாசிகள் அதிகம் இருப்பதால், "ஜெயலலிதாவை தனிப்பட்ட ரீதியில் விமர்சித்ததில்லை, அரசியல் ரீதியாகவே விமர்சித்தேன்" என நிலைமையை உணர்ந்து பேசுகிறார். தொகுதிக்கு நன்கு பரிச்சயமான ஜே.எம்.ஆரூண் தரப்பினரின் ஆதரவு இல்லாதது இளங்கோவனுக்கான மைனஸ். 

தி.மு.க கூட்டணி பலம், சிறுபான்மையினர் வாக்குகள், தொகுதி முழுக்க கணிசமாக இருக்கும் நாயக்கர் சமூக வாக்குகள் ஆகியவற்றை நம்பிப் பிரசாரம் செய்து வருகிறார் இளங்கோவன். இரட்டை இலையின் பண பலத்தையும் பரிசுப்பெட்டியின் வீச்சையும் தாண்டி, கையின் ஆதிக்கம் ஓங்குமா என்பதற்கான விடைக்காகக் காத்திருக்கிறார்கள் ஈ.வி.கே.எஸ் ஆதரவாளர்கள்.