Published:Updated:

தென்சென்னை `செமதி'யை அரவணைக்குமா? - தமிழச்சி தங்கப்பாண்டியன் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்

தென்சென்னை `செமதி'யை அரவணைக்குமா? - தமிழச்சி தங்கப்பாண்டியன் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்
தென்சென்னை `செமதி'யை அரவணைக்குமா? - தமிழச்சி தங்கப்பாண்டியன் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்

`ஹாட்ரிக் முறையாக இலை மலர்வதை சூரியன் தடுக்கும்' என நம்பிக்கையோடு வலம் வருகிறார் தமிழச்சி. படித்தவர்கள் நிரம்பியுள்ள தொகுதியில், `தமிழச்சியா...ஜெயவர்தனா?'

நட்சத்திர வேட்பாளர்: தமிழச்சி தங்கப்பாண்டியன் (தென்சென்னை)

சுமதி வாத்தியார், தமிழச்சி ஆன கதை:

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணற்றில் பிறந்தவர் தமிழச்சி தங்கப்பாண்டியன். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் வணிக வரித்துறை அமைச்சருமான தங்கப்பாண்டியனின் மகள். விருதுநகரில் பள்ளிப் படிப்பை முடித்தவர், மதுரை மீனாட்சிக் கல்லூரி, தியாகராயர் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். `ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை புலம்பெயர் தமிழர்களின் ஆங்கிலப் படைப்பிலக்கிய வெளிப்பாடுகள்' என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார். பள்ளிப்படிப்பின் போதே இசை, நடனத்தின் மீதிருந்த ஈர்ப்பால், நாட்டியக் கலைஞராகவும் மாறினார். தமிழ் மீது கொண்ட காதலால் சுமதி என்ற பெயரை தமிழச்சி மாற்றிக் கொண்டவர்.

எழுத்தாளர், பேச்சாளர், இலக்கியவாதி, கவிஞர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். தந்தையின் மரணத்தால் தீராத சோகத்தில் இருந்தவர், `கையறுநிலை' என்ற பாடல் ஒன்றை எழுதினார். இதுவே அவரது முதல் படைப்பு. இதன் பிறகே கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, யுனிசெப் கௌரவ விருது உட்பட 23 விருதுகளைக் குவித்திருக்கிறார். சென்னை ராணி மேரி கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியையாகப் பணியாற்றியபோது, அரசியலில் பணியாற்றுவதற்காக விருப்ப ஓய்வு பெற்றார். கணவர் சந்திரசேகர் காவல்துறையில் உயர்பதவியில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றுவிட்டார். சென்னை நீலாங்கரையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள். 

`ரோல்மாடல்' பிரபாகரன்:

தங்கப்பாண்டியனின் மகள், முன்னாள் தி.மு.க. அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி போன்ற அடையாளங்கள் இருந்தாலும், அரசியலில் தனக்கெனத் தனி முத்திரை பதித்திருப்பவர் தமிழச்சி. தி.மு.க.வின் மாநில கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் துணைத் தலைவராக இருக்கிறார். தி.மு.க. மீது பற்று இருக்கும் அதே தமிழச்சியின் ரோல் மாடல் என்றால் அது விடுதலை புலிகள் அமைப்பின் தலைவராக இருந்த பிரபாகரன்தான். `உலகத்தில் அவரைப் போன்ற தியாகத்தை எந்தத் தலைவரும் செய்யவில்லை' என ஈழ நினைவுகளில் மூழ்கிவிடுவார். தி.மு.க.வில் பல ஆண்டுகளாக இருந்தாலும் தற்போதுதான் அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. 

அப்படியும், வாரிசு அரசியலை தி.மு.க. மையப்படுத்துவதாக விமர்சனங்கள் வரவே, ``மிசா காலத்தில் எங்கள் அப்பாவை சிறையில் அடைத்தார்கள். ஒரு வருடம் சிறையில் இருந்தார். சிறையில் அடித்து துன்புறுத்தினார்கள் என்ற செய்திதான் எங்களுக்கு கிடைத்தது. யார், எந்தச் சிறை என்று யாருக்கும் தெரியாது. என்னுடைய அம்மா இரண்டு குழந்தைகளோடு மதுரை கலெக்டர் அலுவலகம் முன்னால் செய்வதறியாது திகைத்து நின்றார். எங்களோடு ஏகப்பட்ட தி.மு.க. குடும்பங்கள் கலெக்டர் அலுவலக வாசலில் நின்று அழுதுகொண்டிருந்தார்கள். அப்படி நாங்கள் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீரும் கம்பலையுமாக நின்று இருந்தோமே, அன்று தெரியவில்லையா நாங்கள் தி.மு.க வாரிசு என்று!" என்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். தமிழகத்திலேயே படித்தவர்கள் அதிகம் உள்ள தொகுதியான தென்சென்னையில் முதல்முறையாக தேர்தல் களம் காண்கிறார் தமிழச்சி தங்கப்பாண்டியன். வேளச்சேரி, சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிகளில் நிறைந்துள்ள தி.மு.க. வாக்குகளும் படித்தவர் என்கிற இமேஜும் தனக்கு கை கொடுக்கும் என நம்புகிறார் தமிழச்சி. 

தி.மு.க. கோட்டை:

தென்சென்னையைப் பொறுத்தவரை தி.மு.க-வின் கோட்டையாக இருந்து வந்துள்ளது. அண்ணா, முரசொலி மாறன் ஆகியோர் போட்டியிட்டு வென்ற தொகுதி இது. அதன்பிறகு டி.ஆர்.பாலு தொடர்ந்து நான்கு முறை வெற்றி கண்டு தொகுதியை தி.மு.கவின் கோட்டையாக மாற்றி வைத்திருந்தார். ஆனால், கடந்த இரு தேர்தல்களில் அ.தி.மு.கவே வென்றுள்ளது. கடந்த முறை வென்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தனே இந்த முறையும் களம் காண்கிறார். இவர் தமிழச்சிக்குக் கடும் போட்டியாக இருப்பார். ஆனால், போக்குவரத்து நெருக்கடி, திடக்கழிவு மேலாண்மை, குடிநீர்ப் பிரச்னை போன்றவற்றுக்கு அவர் தமிழச்சி முன்வைக்கும் தீர்வுகளுக்கு மக்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ். கூட்டணிக் கட்சிகளின் பலம், மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்பு, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவைகளால் தமிழச்சிக்கான வாய்ப்புகளும் அதிகம். 

டாப் 7 சுவாரஸ்யங்கள்: 

1. புத்தகப் பிரியர், கவிதை, கட்டுரை தொகுப்பு என இதுவரை 18 புத்தகங்களை எழுதியிருக்கிறார்

2. கிராமத்து உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார், நாளொன்று ஒரு கறிவேப்பிலை உருண்டை உணவில் இடம் பிடித்துவிடும். 

3. சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். வீட்டுக்குள் நுழையும்போது கால்களைக் கழுவிவிட்டு வர வேண்டும் என்பது இவரது அன்புக் கட்டளை

4. தங்கத்தை விரும்புவதில்லை. ஆனால் புதுப்புது மாடல்களில் புடவைகளை உடுத்துவதில் விருப்பம் உள்ளவர்  

5. ராகியும் கம்பங்கூழும் இவரது ஃபேவரைட் உணவு

6. சொந்தக் கிராமத்துக்குச் சென்றால், சுமதி என்ற இயற்பெயரை அப்பகுதி பெண்கள் `செமதி' என்றழைப்பதை ரசிப்பார்.

7. வீட்டில் இவரை வாத்தியார் என்றுதான் அழைக்கிறார்கள்.  

டாப் 2 சர்ச்சைகள்:

1. வாரிசு அரசியல் வழி வந்தவர்

2. மேல்தட்டு மேனரிஸம் உள்ளதால், எளியவர்களை அணுகுவது கடினம் என்ற விமர்சனம். ஆனால், `நான் இன்னமும் கிராமத்துப் பெண்தான்' எனச் செயல்பாடுகள் மூலமாகக் காட்டிக் கொள்வது வழக்கம்

சக போட்டியாளர்களின் பிளஸ், மைனஸ்

தமிழச்சியை எதிர்த்துப் போட்டியிடும் ஜெயவர்தன், தொகுதிக்கு நன்று அறிமுகமானவர். இரட்டை இலைக்கான வாக்குகள், பி.ஜே.பி கூட்டணியில் இருப்பதால் வரப் போகும் பிராமணர் வாக்குகள், கடைசி நேர பணப்பட்டுவாடா ஆகியவற்றை பிளஸ்ஸாகப் பார்க்கிறார் ஜெயவர்தன். ஆனால், கடந்த முறை வென்ற பிறகு தொகுதிப் பக்கம் பெரிதாக எட்டிப் பார்க்காதது, 2015 பெருவெள்ளத்துக்குப் பிறகும் மழைநீர் வடிகால்வாய் நடவடிக்கையைத் துரிதப்படுத்தாதது, தொகுதி எங்கும் நிலவும் கடும் போக்குவரத்து நெருக்கடி போன்றவை ஜெயவர்தனுக்கான மைனஸ்கள். 

அ.ம.மு.க சார்பில் இசக்கி சுப்பையா போட்டியிடுகிறார். டி.டி.வி.தினகரனின் செல்வாக்கு மற்றும் பணபலத்தை மட்டுமே நம்பிக் களமிறங்கியிருக்கிறார். `வெற்றிபெறுகிறோமோ இல்லையோ ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனை ஜெயிக்க விடக்கூடாது' என்பதற்காக வரிந்து கட்டிக்கொண்டு களவேலை பார்த்து வருகிறார். இசக்கி சுப்பையா போட்டியின் மூலமாக அ.தி.மு.க. வாக்குகள் பிரிவது தமிழச்சிக்கான பிளஸ்ஸாகப் பார்க்கப்பட்டாலும், `ஹாட்ரிக் முறையாக இலை மலர்வதை சூரியன் தடுக்கும்' என நம்பிக்கையோடு வலம் வருகிறார் தமிழச்சி. படித்தவர்கள் நிரம்பியுள்ள தொகுதியில், `தமிழச்சியா...ஜெயவர்தனா?' என்ற மோதல் களைகட்டியிருக்கிறது. 

அடுத்த கட்டுரைக்கு