Published:Updated:

வயநாடு தொகுதி: வரலாறு படைப்பாரா, ராகுல்? - ஒரு நேரடி ரிப்போர்ட்

கடந்த பத்து ஆண்டுகளாக வயநாட்டில் காங்கிரஸின் ஷாநவாஸ்தான் எம்.பி. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றரை லட்சம் வாக்குகளில் வெற்றி பெற்ற ஷாநவாஸ், எம்.பி-யான பிறகு சொல்லிக் கொள்ளும் அளவுக்குச் செயல்படவில்லை. ஆனாலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஷாநவாஸ் தான் வெற்றி பெற்றார். இதில் இருந்தே வயநாட்டில் காங்கிரஸ் எந்த அளவுக்கு வலுவாக உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

வயநாடு தொகுதி: வரலாறு படைப்பாரா, ராகுல்? - ஒரு நேரடி ரிப்போர்ட்
வயநாடு தொகுதி: வரலாறு படைப்பாரா, ராகுல்? - ஒரு நேரடி ரிப்போர்ட்

``ராகுல் காந்தி ஜிந்தாபாத்…" ``யூ.டி.எஃப் ஜிந்தாபாத்.." "ராகுலே… ராகுலே.. " "அபிவாத்யங்கள் (நல்வாழ்த்துகள்)… அபிவாத்யங்கள்… ராகுல் ஜி அபிவாத்யங்கள்" என்று காங்கிரஸ்காரர்கள் எழுப்பிய கோஷங்களால் வயநாடு அதிர்ந்துபோய்க் கிடக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் மட்டும் போட்டி போடுவார் என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த நிலையில், ``கேரள மாநிலம், வயநாட்டிலும் களம் காண்பேன்" என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அறிவிப்பு நாடாளுமன்றத் தேர்தலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மற்றும் கர்நாடகா தவிர்த்து மற்ற தென் மாநிலங்களில் காங்கிரஸ், பி.ஜே.பி போன்ற தேசியக் கட்சிகளுக்கு வாய்ஸ் இல்லை. இந்நிலையில், தென் இந்தியாவிலும் தங்களை வலுப்படுத்திக்கொள்ள பி.ஜே.பி., காங்கிரஸ் கட்சிகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. அதில், ஒரு முயற்சிதான் ராகுல் காந்தி வயநாட்டில் போட்டிபோடுவது. தமிழகம், கேரளம், கர்நாடகம் என்று மூன்று மாநிலங்களில் இருந்தும் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கு விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்ட நிலையில், வயநாட்டைத் தேர்ந்தெடுத்தார் ராகுல் காந்தி. மூன்று மாநில எல்லை… காங்கிரஸின் எஃகு கோட்டை என்று ராகுல் காந்தி வயநாட்டைத் தேர்ந்தெடுக்க பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளாக வயநாட்டில் காங்கிரஸின் ஷாநவாஸ்தான் எம்.பி. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றரை லட்சம் வாக்குகளில் வெற்றிபெற்ற ஷாநவாஸ், எம்.பி-யான பிறகு சொல்லிக்கொள்ளும் அளவுக்குச் செயல்படவில்லை. ஆனாலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஷாநவாஸ்தான் வெற்றிபெற்றார். இதிலிருந்தே வயநாட்டில் காங்கிரஸ் எந்த அளவுக்கு வலுவாக உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

ராகுலின் வருகையை அடுத்து பி.ஜே.பி., துஷார் வெள்ளப்பள்ளியை வேட்பாளராகக் களமிறக்கியுள்ளது. பி.ஜே.பி-யைப்போல வேட்பாளரை மாற்றாமல் பிரசார வியூகங்களை மட்டும் மாற்றி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சுனீர் போட்டியிடுகிறார். சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கிய சரிதா நாயரும் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி பெயரில் இரண்டு சுயேச்சைகளும் போட்டியிடுகின்றனர். வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது வயநாடு தொகுதி. கல்பெட்டா, சுல்தான் பத்தேரி, மானந்தவாடி, திருவம்பாடி, நிலம்பூர், வண்டூர், எர்நாடு என்று ஏழு சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. இதில், நான்கு தொகுதிகள் ஆளும் கம்யூனிஸ்ட்கள் வசமும், மூன்று தொகுதிகள் காங்கிரஸ் வசமும் உள்ளன.

12.5 லட்சம் வாக்குகள். பழங்குடி மக்களும், சிறுபான்மையினரும் அதிகம் வசிக்கின்றனர். இதில், நிலம்பூர் தொகுதியைத் தவிர, மற்ற தொகுதிகளில் கம்யூனிஸ்ட்களைவிட, காங்கிரஸ் கையே ஓங்குகிறது. மேலும், முஸ்லிம் லீக் கூட்டணியில் இருப்பது காங்கிரஸ் கட்சிக்குக் கூடுதல் பலம். பழங்குடி மக்களின் ஆதரவு, இருவருக்கும் சமமாக இருக்கிறது. இதில், முக்கியப் போட்டி காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களுக்கு இடையேதான். தொகுதிக்குள் இருக்கும் இந்துக்களின் ஓட்டை மட்டுமே நம்பி பி.ஜே.பி களமிறங்குகிறது. பெரு வெள்ளத்தில் சிறப்பான பணி செய்தது, காங்கிரஸ் எம்.பி ஷாநவாஷ் மீது அதிருப்தி போன்றவை கம்யூனிஸ்ட்களுக்கு பிளஸ். தாங்கள் வலுவாக உள்ள இடத்தில், ராகுலுக்கு வாக்கு சென்றுவிடக் கூடாது என்ற கோணத்தில் கம்யூனிஸ்ட்கள் வேலை பார்த்தனர். காங்கிரஸ் தரப்பில் கடைசி நேரத்தில் பணப்பட்டுவாடா செய்யவும் திட்டமிட்டுள்ளனர். வயநாடு இளைஞர்கள் ராகுலை மிகவும் விரும்புகின்றனர். இதனால், ராகுலின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது. வயநாடு மட்டுமல்லாமல், ராகுலின் வருகையால் தென் இந்தியா  முழுவதுமே தங்களது செல்வாக்கு அதிகரிக்கும் என்று காங்கிரஸ் கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறது.

தொகுதிக்குள் பிரதான பிரச்னையாக இருப்பது பழங்குடி மக்களுக்கான நிலம்தான். டிஜிட்டல் இந்தியாவிலும் தங்களுக்குப் பாதுகாப்பான வாழ்விடம்கூட அந்த மக்களுக்குக் கிடைக்கவில்லை. அப்படியே வாழ்விடம் இருந்தாலும் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் பழங்குடிகள். ஆனால், பழங்குடி கிராமங்களில் இருக்கும் ரிசார்ட்ஸ்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன.

இதுகுறித்து கல்பெட்டா நகராட்சியில் கவுன்சிலராக இருக்கும் அஜி பஷீர் (சி.பி.எம்), ``வயநாட்டுக்கு ரயில் போக்குவரத்து வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரிக்கைவைத்து வருகிறோம். கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில், விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல மக்கள் இப்போதும் முகாம்களில்தான் வாழ்ந்துவருகின்றனர். யானை – மனித மோதலும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதற்கு ஒரு சீரிய திட்டம் வேண்டும். இரவு நேர போக்குவரத்து தடையை நீக்க வேண்டும். முக்கியமாக வயநாட்டுக்கு மருத்துவக் கல்லூரி அமைய வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. கடந்த ஆண்டு அதற்கான பணிகள் நடைபெற்றது. ஆனால், வெள்ளத்தால் தற்போது அந்தப் பகுதியில் மருத்துவக் கல்லூரி அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, வயநாட்டில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். அவசர சிகிச்சைக்காக, வயநாட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்க வேண்டும்" என்றார்.

``கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனீர், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வயநாட்டைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற சி.ஆர்.பி.எஃப் இடத்துக்கு நினைவஞ்சலி செலுத்திவிட்டு வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அதேபோல, பி.ஜே.பி வேட்பாளர் துஷார் வெள்ளப்பள்ளி, வயநாடு மலைப்பகுதியில் இருந்து கீழ்ப்பகுதிக்கு வருவதற்கான வழியைக் கண்டுபிடித்த கரிந்தண்டன் என்ற பழங்குடி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு வேட்பு மனுத்தாக்கல் செய்தார். ஆனால், ராகுல் ஹெலிகாப்டரில் வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். அவருக்கு இந்த மண்ணைப் பற்றி என்ன தெரியும்" என்று கம்யூனிஸ்ட்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தற்போதைய சூழ்நிலைக்கு ராகுலின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது. ``என் சகோதரன். என்னுடைய உண்மையான நண்பன். வயநாடு மக்கள், அவனைப் பார்த்துக் கொள்ளுங்கள். அவன் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டான்" - இது ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் சொன்ன வார்த்தைகள். ராகுல் காந்தி எப்படியோ, ஆனால், வயநாடு மக்கள் அவரைக் கைவிடுவதுபோல் தெரியவில்லை. இளைஞர்கள் அவரை மிகவும் விரும்புகின்றனர். தங்களுக்கு ஏதோ நல்லது நடக்கப்போவதாகவே வெகுஜன மக்களும் நினைக்கிறார்கள். இதனால், கடந்த தேர்தல்களைவிட வயநாட்டில் இந்த முறை வாக்குப்பதிவு சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பழங்குடி நிலம் பிரச்னை, விவசாயிகளின் தண்ணீர்ப் பிரச்னை, மனித விலங்கு மோதல் என்று வயநாடு மற்ற ஊர்களைப்போல மாற, பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டியது அவசியம். எனவே, அவர்களை ராகுல் காந்தி கைவிடாமல் இருந்தால் சரி.