Published:Updated:

`தப்புதான் மன்னிச்சுருங்க..'; `அனுதாப' விஷ்ணு; `அசால்ட்' அ.தி.மு.க! - ஆரணி கோட்டையைக் கைப்பற்றப் போவது யார்?

ஆரணியில் சேவல் கூவுமா... கை ஓங்குமா? பரபர தொகுதி நிலவரம்...

`தப்புதான் மன்னிச்சுருங்க..'; `அனுதாப' விஷ்ணு; `அசால்ட்' அ.தி.மு.க!  - ஆரணி கோட்டையைக் கைப்பற்றப் போவது யார்?
`தப்புதான் மன்னிச்சுருங்க..'; `அனுதாப' விஷ்ணு; `அசால்ட்' அ.தி.மு.க! - ஆரணி கோட்டையைக் கைப்பற்றப் போவது யார்?

தொகுதி: ஆரணி 

ஆரணி, போளூர், செய்யார், வந்தவாசி, செஞ்சி, மயிலம் என 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

ஆரணி கோட்டை:

தொண்டை மண்டலத்தில் பல்லவர் ஆட்சிக்காலத்திலும் சம்புவராயர் ஆட்சிக் காலத்திலும் ஆரணிக்கென்று தனிப்பக்கம் உண்டு. பிற்கால சோழர்கள் ஆட்சியில், சிற்றரசர்களாகக் குறுகிப்போன பல்லவர் வழித்தோன்றல்களில் ஒரு பிரிவான கடம்பூர் சம்புவராயர்கள் படை வீட்டைத் தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தனர். இவர்கள், சோழர்களின் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு, சுதந்திரமாக தங்களது மூதாதையர்களின் பெருமையை நிலைநாட்ட முயன்றனர். இவர்களில் கோப்பெருஞ்சிங்கன் என்பவன் சேந்தமங்கலத்தில் சோழர் படையை வென்று 50 ஆண்டுகளுக்கும் மேல் அங்கிருந்தபடியே ஆட்சி செய்தான் என்பது வரலாறு. இவ்வாறு படைவீடு சாம்ராஜ்ஜியத்துடன் இணைந்திருந்த ஆரணி, விஜயநகர பேரரசின் காலத்தில் முக்கியத்துவம் பெற்றது. விஜயநகர பேரரசின் மண்டலமாக ஆரணி விளங்கியது. ஆரணி மண்டலேஸ்வரர்கள், தங்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதியைக் கண்காணிக்கவும் பாதுகாக்கவும் நிர்வாகம் செய்யவும் வசதியாகக் கோட்டையைக்  கட்டிக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இப்படி கட்டப்பட்டதுதான் ஆரணி கோட்டை. 

இந்தக் கோட்டைக்காக ஆரணி அடுத்த படைவீட்டைச் சுற்றியுள்ள குன்றுகளிலிருந்து பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. விஜயநகர பேரரசர்களின் கோட்டை கொத்தளங்களில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்குமோ அத்தனை சிறப்பம்சங்களும் ஆரணி கோட்டையிலும் இடம்பெற்றிருந்தன. மண்டலேஸ்வரர்களுக்கான அரண்மனைகள், அதிகாரிகள், படைவீரர் குடியிருப்புகள், ஆயுதக் கிடங்கு, குதிரைகளுக்கான லாயம் என அனைத்து அம்சங்களுடன் ஆரணி கோட்டை விளங்கியது. காலங்கள் மாறவே, கிழக்கிந்திய கம்பெனியின் வசம் கோட்டை வந்தது. ஆரணியின் நிர்வாகம் முழுவதும் அவர்கள் வசமே சென்றது. பின்னாள்களில் வட ஆற்காடு மாவட்டத்தின் அங்கமாக ஆரணி மாறியது. பட்டு நெசவு, விவசாயம் என இரண்டு பிரதான தொழில்களில் புகழ்பெற்று வளர்ச்சியடையத் தொடங்கியது ஆரணி நகரம்.

காங்கிரஸ் கட்டிய தனிக் கோட்டை:

தொடக்க காலங்களில் காங்கிரஸ் கட்சியே இங்கு ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை 7 முறை வென்றுள்ளது. 2009 ம் ஆண்டு நடந்த 15வது மக்களவைத் தேர்தலின் போது தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அப்போதுதான் ஆரணி நாடாளுமன்றத் தொகுதி புதிதாக உருவானது. அதற்கு முன்புவரை வந்தவாசி தொகுதியாக இருந்தது. வந்தவாசி தொகுதியாக இருந்தபோது, காங்கிரஸ் கட்சியே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது.1962-ல் காங்கிரஸ் சார்பில் ஜெயராமன், 1967, 1971-ல் தி.மு.க. சார்பில் விஐடி விஸ்வநாதன், 1977-ல் அ.தி.மு.க சார்பில் வேணுகோபால்கவுண்டர், 1980-ல் காங்கிரஸ் சார்பில் பட்டுசாமி, 1984, 1989-ல் காங்கிரஸ் பலராமன், 1991-ல் காங்கிரஸ் கிருஷ்ணசாமி ஆகியோர்  வெற்றிபெற்றனர். அதன் பிறகு காங்கிரஸிலிருந்து மூப்பனார் விலகினார். அப்போது நடந்த 1996-ம் ஆண்டு தேர்தலில் த.மா.கா. பலராமன் வெற்றிபெற்றார். 1998, 1999-ல் பா.ம.க. துரையும், 2004-ல் ம.தி.மு.க. செஞ்சி ராமச்சந்திரனும் அதன் பின்பு, 2009-ல் தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணசாமியும் 2014-ல் அ.தி.மு.க-வைச் சேர்ந்த செஞ்சி சேவல் ஏழுமலையும் வெற்றி பெற்றுள்ளனர்.

7 முறை காங்கிரஸ் தனித்து நின்றும், கூட்டணி வைத்தும் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. 2 முறையும், அ.தி.மு.க. 2 முறையும், பா.ம.க. 2 முறையும், த.மா.கா., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. இந்த முறை அ.தி.மு.க சிட்டிங் எம்.பி சேவல் ஏழுமலையே மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஷ்ணுபிரசாத் களமிறங்கியிருக்கிறார். 

மணல் திருட்டும், இனிக்காத கரும்பும்:

ஆரணியைச் சுற்றியோடும் கமண்டல நாகநதி ஆற்றிலும் செய்யாறு ஆற்றிலும் இரவு பகல் பாராமல் மணல் கடத்தல் நடக்கிறது. பிரதானமான இரண்டு முக்கியக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மணல் திருட்டில் ஈடுபடுகின்றனர். இதை அரசு அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை. பொதுமக்கள் தடுக்கச் சென்றால் அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துகிறனர். இந்த மணல் கடத்தலால் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீரை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

வந்தவாசி பகுதியில் அதிக அளவு கோரைப்பாய் மற்றும் லுங்கி நெசவு அதிகம். அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை நல்ல விலைக்கு எடுக்க கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது மிக முக்கியமான கோரிக்கைகள். அதேபோல் தொழில் வாய்ப்புகளும் தொகுதியில் இல்லை. வேலைக்காக இடம்பெயரும் மக்கள் அதிகம். கரும்பு உற்பத்தி அதிகம் நடைபெறும் பகுதி ஆரணி. ஆனால் கரும்பு விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டிய பல கோடி ரூபாய்கள் நிலுவையில் இருக்கிறது. 

2 நதிகள்... ஆனால், தண்ணீர்ப் பிரச்னை:

ஆரணி பட்டு மிகவும் பிரபலமானது. பட்டுக்கெனத் தனிப் பூங்கா அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி நெசவாளர்களின் நீண்ட காலக் கோரிக்கை. இதுவரை எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் அதற்கான முயற்சிகளைக்கூட எடுக்கவில்லை. சிட்டிங் எம்.பி.யும் இதற்கான வாக்குறுதியைக் கொடுத்தார். ஆனால் இப்போது `அதற்கான வாய்ப்பில்லை' என வெளிப்படையாகப் பேசி வருகிறார். 

திண்டிவனம் - நகரிக்கு ரயில் பாதை அமைக்கப்படும் என 2004-ல் அறிவிக்கப்பட்டு, அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளும் தொடங்கின. அந்தத் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரபூர்வமற்ற முறையில் நிறுத்தப்பட்டுவிட்டது. கடந்த 5 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அ.தி.மு.க.-வைச் சேர்ந்த ஏழுமலை, எந்த முயற்சியையும் இதற்காக எடுக்கவில்லை. ஆரணி பகுதியில் அரசு கலைக் கல்லூரி ஒன்றை அமைக்கவேண்டும். ஆரணியைச் சுற்றி இரண்டு நதிகள் இருந்தாலும், குடிநீர்ப் பிரச்னை என்பது தீராத ஒன்று. 

வெற்றியைத் தீர்மானிக்கும் சாதி:

சாதி வாக்குகளால் வெற்றி தீர்மானிக்கப்படும் தொகுதிகளில் ஆரணியும் ஒன்று. வன்னியச் சமுதாய வாக்குகள் அதிகம் உள்ள தொகுதி. காங்கிரஸ் கட்சிக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரண்டு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களும் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்குமே சாதி ஓட்டுகள் கணிசமாகப் பிரியும் நிலை உள்ளது. ஆனாலும், காங்கிரஸின் கை ஓங்கி நிற்கிறது. அடுத்த இடத்தில் அ.தி.மு.க. உள்ளது. ஆளும் கட்சி என்பதால் சேவல் ஏழுமலைக்கு செல்வாக்கு உள்ளது. ஆனால், சிட்டிங் எம்.பி யாக இருக்கும் ஏழுமலை கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்காக ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப்போடவில்லை என்பது தொகுதி மக்களின் குமுறல். 

பட்டு நெசவாளர்கள் அதிகம் இருக்கும் ஆரணியில் பட்டுப் பூங்கா அமைத்துத் தருவதாகச் சொன்னார். ஆனால், `பட்டுப் பூங்காவால் ஆரணி மக்களுக்கு என்ன பயன்?' என பல்டி அடித்தார். இந்த ஸ்டேட்மென்ட் அவருக்கான மைனஸ். அதோடு அ.தி.மு.க. வாக்குகளை அ.ம.மு.க. கணிசமாகப் பிரித்துவிடும் என்பதும் ஏழுமலைக்கான மைனஸ். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் விஷ்ணுபிரசாத் கடந்த இரண்டு தேர்தல்களில் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவியதால் அனுதாப ஓட்டுகள் விழும் என எதிர்பார்க்கிறார். தி.மு.க ஆதரவும் விடுதலைச் சிறுத்தைகளின் ஆதரவும் கை கொடுக்கும் என நம்புகிறார். வந்தவாசி தொகுதியில் 30 சதவிகிதம் இஸ்லாமியர்களின் ஓட்டு உள்ளது. அது அப்படியே காங்கிரஸுக்கு விழும் என்பது பிளஸ். 

பிரசாரத்தில் என்ன நடக்கிறது?

"`ஆரணிக்கு நவீன வளர்ச்சி திட்டங்களைக் கொண்டுவந்து வளர்ச்சிப் பாதையில் முன்னிறுத்துவேன்' எனக் கடந்தமுறை சொன்னார் சேவல் ஏழுமலை. ஆனால் அவரால் எந்தப் பயனையும் ஆரணி அடையவில்லை" என மைனஸ் பாயின்டுகளை பிரசாரத்தில் முன்வைக்கிறார் விஷ்ணுபிரசாத். பட்டுப் பூங்கா அமைக்காதது, ஜி.எஸ்.டி. பிரச்னையால் பட்டு நெசவாளர்கள் பாதிக்கப்பட்டது, சிறு குறு வியாபாரிகள் நலிவடைந்தது என பா.ஜ.க அரசின் செயல்பாடுகளை பிரசாரத்தின் முக்கியக் கருத்தாகப் பேசுவது மக்களிடம் எடுபடுகிறது. 

செஞ்சி சேவல் எழுமலையோ, ``கடந்த ஆட்சியில் நான் ஏதாவது தப்பு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்' என்று கட்சி நிர்வாகிகளிடம் பகிரங்கமாகவே மன்னிப்பு கேட்டு கட்சிக்காரர்களை ஒருங்கிணைத்து வருகிறார். ``கடந்த ஆட்சியில் செய்ய முடியாமல் போனதை இந்த ஆட்சியில் செய்துவிடுகிறேன்" எனப் பிரசாரத்தில் சத்தியம் செய்கிறார். அ.ம.மு.கவின் பிரசாரம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. அ.தி.மு.க. வாக்குகளை குறிவைத்தே அவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். 

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள்

1. சாதி வாக்குகள்

2. பணப்பட்டுவாடா

3. வேட்பாளர்களின் செல்வாக்கு

4. கூட்டணி பலம்

5. மணல் கொள்ளை, பட்டுச்சேலை நெசவாளர்களின் கோரிக்கை

ஆரணியில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது பட்டு நெசவாளர்களின் வாக்குகளே. அதனால் இரண்டு வேட்பாளர்களும், பட்டு நெசவுக் கமிட்டியின் ஆதரவைப் பெறுவதற்கு போட்டிப்போட்டு வருகிறனர். ஆனால் மக்களோ உறுதியான வாக்குறுதிகளை எதிர்பார்க்கின்றனர். அதைச் சிறப்பாகச் செய்து, கடைசிநேரப் பணப்பட்டுவாடாவை தீவிரப்படுத்துபவர்களுக்கே ஆரணி கைவசமாகும். அந்த வகையில், சேவல் கூவுமா... கை ஓங்குமா என அறிந்துகொள்வதில் ஆவலாக இருக்கின்றனர் இரண்டு கட்சிகளின் நிர்வாகிகளும்.