Published:Updated:

வயநாடு தொகுதி: இந்தப் பிரச்னையெல்லாம் தெரியுமா ராகுல்ஜி?

வயநாடு தொகுதி: இந்தப் பிரச்னையெல்லாம் தெரியுமா ராகுல்ஜி?
வயநாடு தொகுதி: இந்தப் பிரச்னையெல்லாம் தெரியுமா ராகுல்ஜி?

வயநாட்டில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் பழங்குடி மக்கள் இருக்கின்றனர். இதில், பலருக்கும் நிலம் இல்லை. நிலம் இருந்தாலும் வீடு இல்லை. வீடு இருந்தாலும், அது மிகவும் சேதமடைந்த நிலையில்தான் இருக்கும். மெட்ரோ காலனி, நெட்ரோ காலனி என்று பெயர்களில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அந்த மக்களின் அடிப்படை விஷயங்களில் எந்த முன்னேற்றமும் இல்லை.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவதால் தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது, கேரளாவின் வயநாடு நாடாளுமன்றத் தொகுதி. கள நிலவரம் தெரிந்துகொள்ள வயநாட்டில் ஆய்வு மேற்கொண்டோம். வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய தொகுதி. கல்பெட்டா, சுல்தான் பத்தேரி, மானந்தவாடி, திருவம்பாடி, நிலம்பூர், வண்டூர், எர்நாடு என்று 7 சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. ராகுல் காந்தியின், வெற்றி தோல்விகளைக் கடந்து வயநாட்டின் பிரச்னைகள் குறித்துப் பேச வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.

வயல்நாடு என்பதுதான் வயநாடு என்று மருவியதாகக் கூறப்படுகிறது. விவசாயம்தான் இங்கு பிரதானம். குறுமிளகு, டீ, காபி, நெல் போன்ற பயிர்கள் அதிகம் பயிரிடப்படும். ``கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நீரின் நிறமே மாறிவிட்டது. இதைவைத்து நாங்கள் எப்படி விவசாயம் செய்வது" என்று கண்ணீர் விடுகின்றனர், அங்குள்ள மக்கள். வயநாட்டில் முக்கியப் பிரச்னையாக இருப்பது நிலம். வயநாட்டில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் பழங்குடி மக்கள் இருக்கின்றனர். இதில், பலருக்கும் நிலம் இல்லை. நிலம் இருந்தாலும் வீடு இல்லை. வீடு இருந்தாலும், அது மிகவும் சேதமடைந்த நிலையில்தான் இருக்கும். மெட்ரோ காலனி, நெட்ரோ காலனி என்று பெயர்களில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அந்த மக்களின் அடிப்படை விஷயங்களில் எந்த முன்னேற்றமும் இல்லை.

கல்பெட்டா டவுனில் இருந்து 75 கி.மீ தொலைவில் உள்ள, திருநெல்லி பஞ்சாயத்துக்குட்பட்ட  நெட்ரோ காலனிக்குச் சென்றோம். நெட்ரோ காலனி உள்ள பகுதிக்கு ஒரு கி.மீ தூரம் முன்பு வரைதான் ஜீப், ஆட்டோ போன்ற வாகனங்கள் செல்ல முடியும். ஒரு கி.மீ-தானே என்று எளிதாக நினைத்து நடக்க ஆரம்பித்துவிட்டோம். நெட்ரோ காலனிக்குச் செல்ல வேண்டும் என்றால், இடையில் உள்ள ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும்.  ஆற்றைக் கடப்பதற்கு ஒரு மரப்பாலம் இருக்கிறது. அது பயன்படுத்தும் நிலையில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவே 10 நிமிடங்கள் ஆனது. உள்ளூர் மக்கள் நம்பிக்கை கொடுத்ததால், பாலத்தில் நடந்தோம். ஒருவர்பின் ஒருவர்தான் செல்ல வேண்டும். அதுவும் எப்போது, எந்த நேரத்தில் உடைந்து விழும் என்று தெரியாமலேயே எல்லோரும் எச்சரிக்கையுடன் நடக்க வேண்டிய சூழ்நிலை. பாலத்தைக் கடந்து, சற்று தூரம் உள்ளே நடந்ததும் வீடுகள் தெரிந்தன. மொத்தம் 28 வீடுகள். அதில் சில, சேதம் அடைந்திருந்தன.

நெட்ரோ காலனிக்குச் செல்லும் பாலம்

``நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இந்தக் கிராமத்தில்தான். எனக்குத் தற்போது 68 வயதாகிறது. இப்போதுவரை நிலமும், வீடும் எங்களுக்குக் கனவாகத்தான் இருக்கிறது. ஒரு பாலத்தைக்கூட இந்த அதிகாரிகளால் உருப்படியாக அமைத்துத் தர முடியவில்லை. வாழ்வில் பல நாள்களை, பஞ்சாயத்து அலுவலகத்துக்குச் சென்று கோரிக்கை வைப்பதிலேயே இழந்துவிட்டோம். என் கணவர் இறந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. வெள்ளத்தில் எங்களது வீடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தில் விரிசல் இருப்பதால், பகல் நேரத்தில் மட்டும்தான் நாங்கள் இங்கு தங்குவதற்கு அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர். இரவு நேரம் வேறு எங்காவது சென்றுதான் தங்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம். இது ஏதோ சில ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை இல்லை. காலம்காலமாக இருக்கும் பிரச்னை. ராகுல் காந்தி இப்போது போட்டியிடலாம். ஆனால், இந்தப் பிரச்னைகள் எல்லாம் மறைந்த முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலத்தில் இருந்தே இருக்கின்றன. அவர்கள் வழியில் வரும் ராகுலை மட்டும் நாங்கள் எப்படி நம்ப முடியும்?  நாங்கள் இந்தத் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்கப் போவதில்லை" என்கிறார் குறுமாணி என்ற பழங்குடி மூதாட்டி.

கூலித் தொழில் செய்து வரும் சுப்பிரமணி, ``எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். வெள்ளத்தில் வீட்டை இழந்துவிட்டோம். உறவினர்

வீட்டில்தான் தங்கியிருக்கிறேன். பலரும் உறவினர் வீடுகளிலும், தார்பாய் செட்களிலும்தான் தங்கியிருக்கிறோம். இங்கு, யானை போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம். இவர்கள் அமைத்திருக்கும் பாலம், அதிக மழை பெய்தால்,வெள்ளத்தில் அடித்துச் சென்றுவிடும். கலெக்டர் முதல் அனைத்து அதிகாரிகளையும் பார்த்துவிட்டோம். வயநாடு தனிமைப்படுத்தப்பட்ட ஒரு பகுதி. தற்போது தேர்தல் பிரசாரத்துக்காக வரும் ராகுல் காந்தி, இத்தனை நாள்கள் எங்கே சென்றார்? ராகுலின் தந்தை ராஜீவ் காந்தியின் அஸ்தியை, எங்களது பஞ்சாயத்தில் உள்ள பாபநாஷினி ஆற்றில்தான் கரைத்தனர். தன் தந்தையின் அஸ்தியைக் கரைத்த பகுதிக்கு, ராகுல் ஒருமுறைகூட வந்ததில்லை. இப்போது மட்டும் வயநாடு வருகிறார் என்றால், அது அரசியல் ஆதாயத்துக்குத்தானே? அதுவும் எங்களுக்குப் பிரதமர் வேட்பாளரோ, ஹெலிகாப்டரில் வந்து செல்லும் தலைவர்களோ தேவையில்லை. எங்களது பிரச்னையை களத்தில் வந்து பார்த்து தீர்வு காண்பவர்களே எங்களுக்கு வேண்டும்" என்றார்.

தேவி என்ற மற்றொரு பழங்குடி பெண், ``கடந்த பத்து ஆண்டுகளாக இங்கு காங்கிரஸின் ஷாநவாஷ்தான் எம்.பி-யாக இருந்தார். எங்களின் எந்தப் பிரச்னைக்கும் அவரால் தீர்வு கிடைக்கவில்லை. மருத்துவ உதவிக்குக்கூட இங்கிருந்து 33 கி.மீ பயணித்து, மானந்தவாடி செல்ல வேண்டும். இதனால் பல பிரசவங்கள் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே நடந்துவிடும். பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்றால்  2 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டும். மழைக் காலங்களில் நிலைமை இன்னும் மோசம் ஆகிவிடும். முழங்கால் அளவுக்குச் சகதி சேர்ந்துவிடும். நடக்கக்கூட முடியாது. எப்போதாவது அதிகாரிகள் வருவார்கள். எங்களது உறவினர்கள் சிலர், இப்போதும் முகாம்களில்தான் வசித்து வருகின்றனர். எங்களுக்கு இந்த மண்ணைத் தவிர, வேறு எதுவும் தெரியாது. இதைவிட்டு நாங்கள் வேறு எங்கும் செல்லவும் மாட்டோம். தற்போது மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாகவும் கூறுகின்றனர். எங்களுக்கு யாரை நம்புவது என்றே தெரியவில்லை. நாங்கள் கேட்பது எல்லாம், பயமில்லாமல் நிம்மதியாக வாழ ஒரு வீடும் நிலமும் மட்டும்தான்" என்றார் அழுத்தமாக.

வயநாட்டு மக்களின் பிரச்னைகளை நினைவில் வையுங்கள் வேட்பாளர்களே!

அடுத்த கட்டுரைக்கு