Published:Updated:

''இது போட்டோஷாப் தேர்தல் அறிக்கை!'' - பி.ஜே.பி-யை அலறவிட்ட 'ஆன்டி இந்தியன்ஸ்'

இந்தப் போலிச் செய்திகளால் ஏற்படப்போகும் விளைவுகள் என்னவென்று யாருக்கும் தெரியாது. சொல்லப்போனால், திடீரெனக் கொடுக்கப்படும் அதீத கவனமும் பி.ஜே.பி-க்கு இந்தத் தேர்தலில் சாதகமாகவும் செல்ல வாய்ப்பிருக்கிறது.

''இது போட்டோஷாப் தேர்தல் அறிக்கை!'' - பி.ஜே.பி-யை அலறவிட்ட 'ஆன்டி இந்தியன்ஸ்'
''இது போட்டோஷாப் தேர்தல் அறிக்கை!'' - பி.ஜே.பி-யை அலறவிட்ட 'ஆன்டி இந்தியன்ஸ்'

பி.ஜே.பி தேர்தல் அறிக்கையைக் கேலி செய்யும்விதத்தில், தேர்தல் அறிக்கையில் அவர்கள் குறிப்பிடாதவற்றை, போட்டோஷாப் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள், `ஆன்டி இண்டியன்ஸ்'.

இந்தியாவில் உள்ள எல்லா முக்கியக் கட்சிகளின் தேர்தல் அறிக்கையும் வெளியானபிறகு, மெதுவாக வந்தது பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கை. மிக முக்கியமான அறிவிப்புகள் ஏதாவது வெளியாகியிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2014-ல் என்ன சொல்லி வாக்கு கேட்டார்களோ, அவைதான் பெரும்பாலும் இந்தத் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றிருந்தது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ``ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது''. இதையடுத்து, விவசாயிகளுக்கு ஏதாவது சொல்லவேண்டும் என்றரீதியில் ஒரு தேர்தல் வாக்குறுதியாக, ``விவசாயிகளுக்கு வட்டியில்லாத கடன் வழங்கும் திட்டம் மற்றும்  60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம்'' என்ற அறிவிப்புகள் இருக்கின்றன. டெல்லியில் தமிழக விவசாயிகள் போராடியபோது, எட்டிக்கூடப் பார்க்காத மத்திய அரசுதான், இப்போது தேர்தல் ஸ்டன்டுக்கு இதையெல்லாம் சொல்கிறது என்கிறார்கள் சமூக ஊடகத்தினர்.

``நதிகள் இணைப்புக்குத் தனி ஆணையம், சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கைகள், சடங்குகளை உச்ச நீதிமன்றம் முன் எடுத்துரைத்து அவற்றைப் பாதுகாப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்தும் முயற்சியில் பள்ளிகள் அளவில் சம்ஸ்கிருத பாடம் அதிகரிக்கப்படும். சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும். காலச் சூழலுக்கு ஏற்ப பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்'' என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. நேற்று  தேர்தல் அறிக்கை வெளியானதும், பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கை இதுதான் என்று போட்டோஷாப் செய்யப்பட்ட படங்களைப் பகிர்ந்து, அதில் பி.ஜே.பி சொல்லாத வாக்குறுதிகளைக் கேலியாக இடம்பெறச் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்கள் `ஆன்டி இண்டியன்ஸ்'.

`அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்டுவோம்' என்ற வாக்குறுதியைக் கேலி செய்யும் விதத்தில், தமிழக நகைச்சுவை நடிகர் ராமர் படத்தைப் பகிர்ந்து, அவருக்குக் கோயில் கட்டப்படும் என்று போட்டோஷாப் செய்திருக்கிறார்கள். தமிழ்த் திரைப்படமான `96 படத்தில் வரும் கதாபாத்திரங்கள், வாழ்க்கையில் ஒன்றுசேர நடவடிக்கை எடுக்கப்படும்' என்று இன்னொரு போட்டோஷாப் செய்தி சொல்கிறது. `மன்கீ பாத்' என்ற திட்டத்தில் குரங்கு குளிர்விப்பு முகாம் வருடம்தோறும் பரங்கிமலையில் நடத்தப்படும் என்கிறது மற்றொரு போட்டோஷாப்.

இதுபோன்ற போலிச் செய்திகள், சமூக வலைதளங்கள் மூலம் பெரும்பாலான மக்களைச் சென்றடைந்திருக்கிறது. இதுபோல் பரப்பப்படும் செய்திகளில் பலவற்றை, உண்மைச் செய்திகள் என்று நிறைய பேர் தொடர்ந்து பகிர்ந்துவருகிறார்கள். பி.ஜே.பி-யைச் சேர்ந்த சிலரே, இதை உண்மையென நம்பி, பகிர்ந்தது வேறுகதை. பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டில் மட்டும் கேலி செய்யப்பட்டுவருவதால், தமிழக பி.ஜே.பி ரொம்பவே டென்ஷனில் இருக்கிறது. ஏற்கெனவே நோட்டாவோடு போட்டிபோடும் என்று பி.ஜே.பி-யைக் கிண்டலடித்துவரும் `ஆன்டி இந்தியன்'கள், தற்போது இந்தப் போலி தேர்தல் அறிக்கையை இன்னும் கேலியோடு பரப்பி வருகின்றனர்.

பி.ஜே.பி -யின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் இதுகுறித்து கூறுகையில், ``இதுபோன்ற போலிச் செய்திகளைப் பரப்புவது முறையற்ற செயல். இதைத் தனிநபர் செய்ததாக நான் கருதவில்லை. தி.மு.க-வின் ஐ.டி விங்தான் இதுபோன்ற செயல்களுக்குக் காரணம். இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். காவல் துறையும் தேர்தல் கமிஷனும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்களும் இதுகுறித்து காவல் துறையில் புகார் கொடுத்திருக்கிறோம்'' என்றார்.

ஆனால், சமூக வலைதளங்களில் இந்தச் செய்தியைப் பகிர்ந்து, ``போட்டோஷாப் செய்தவனுக்கு; போட்டோஷாப்தான் பதில்'' என்று இப்போதுவரை அந்தப் போலிச் செய்திகளைப் பகிர்ந்துவருகிறார்கள், ஹெச்.ராஜா போன்றவர்களால் அடையாளம் காணப்பட்ட ``ஆன்டி இந்தியன்ஸ்''. இந்தப் போலிச் செய்திகளால் ஏற்படப்போகும் விளைவுகள் என்னவென்று யாருக்கும் தெரியாது. சொல்லப்போனால், திடீரெனக் கொடுக்கப்படும் அதீத கவனமும் பி.ஜே.பி-க்கு இந்தத் தேர்தலில் சாதகமாகவும் செல்ல வாய்ப்பிருக்கிறது.