Published:Updated:

``என் பையில் இருந்தா பணத்தை எடுக்க முடியும்?" - மக்களிடம் மீண்டும் கோபப்பட்ட தம்பிதுரை!

``என் பையில் இருந்தா பணத்தை எடுக்க முடியும்?" - மக்களிடம் மீண்டும் கோபப்பட்ட தம்பிதுரை!
``என் பையில் இருந்தா பணத்தை எடுக்க முடியும்?" - மக்களிடம் மீண்டும் கோபப்பட்ட தம்பிதுரை!

"மத்திய அரசு கொடுத்த 2,000 ரூபாயை நீங்க வாங்கலையா? இங்க மாநில அரசு பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு 1,000 ரூபாய் தரலையா? மின்சாரம் 100 யூனிட் இலவசமா கொடுக்கலையா? மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வரவில்லையா? அதெல்லாம் நான் கொடுத்தமாதிரிதான்." - தம்பிதுரை

ரூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக தம்பிதுரையே மறுபடியும் களமிறக்கப்பட்டிருக்கிறார். தி.மு.க கூட்டணியில், கரூர் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அந்தக் கட்சியின் வேட்பாளராக ஜோதிமணி களமிறக்கப்பட்டிருக்கிறார். இருவரும் அனல்பறக்கும் பிரசாரத்தில் குதித்திருக்கிறார்கள். ஜோதிமணி வெற்றிக்காக, தி.மு.க மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி பம்பரமாகக் களப் பணியாற்றி வருகிறார். தம்பிதுரைக்காகப் போக்குவரத்துத் துறை அமைச்சரும், அ.தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குகள் வேட்டை நடத்திவருகிறார். 

இந்நிலையில், கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள ஏமூர் புதூரில் பிரசாரம் மேற்கொண்ட தம்பிதுரையிடம் அப்பகுதி பெண்கள், ``எங்க ஊருக்கு என்ன செஞ்சிட்டீங்கனு இவ்வளவு தைரியமா ஓட்டு கேட்டு வர்றீங்க? தண்ணீர்ப் பிரச்னை, சுடுகாடு, பஸ் பிரச்னை, சாக்கடைப் பிரச்னைனு பல பிரச்னைகளோடு அல்லாடிக்கிட்டு இருக்கோம்" என்று கேள்வி கேட்டார்கள். அதைக் கேட்டு கோபமான தம்பிதுரை, ``இந்தா பாரு... எனக்கு ஓட்டு போட்டா போடுங்க...போடாட்டி போங்க. ஓட்டுக்காக உங்க கால்ல எல்லாம் விழமுடியாது" என்று பேசி, ஏமூர் புதூர் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்தச் சம்பவத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட ஜோதிமணி உள்ளிட்ட மாற்றுக்கட்சி வேட்பாளர்கள், தொகுதி முழுக்க இதைப் பிரசாரத்தில் பயன்படுத்த தம்பிதுரைக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள்.
 

இந்நிலையில், அந்தச் சர்ச்சை அடங்குவதற்குள் தம்பிதுரையும், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் அடுத்த சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்கள். இருவரும் கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முத்தலாடம்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது நடந்தவற்றைப் பற்றி நம்மிடம் பேசிய அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலர், ``தம்பிதுரை வந்ததும், `எங்க ஊருக்கு ஒண்ணுமே செய்யலை'னு மக்கள் கேள்வி கேட்டாங்க. உடனே, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், `நீங்க யாரு சொல்லி இப்படிக் கேள்வி கேட்கிறீங்கனு தெரியும். நேத்து யார் வந்தா, அவர் என்ன உங்களிடம் சொன்னார்ங்கிற வரைக்கும் நாங்க விசாரிச்சுட்டுத்தான் வந்திருக்கோம். எங்ககிட்ட இப்படிக் கேள்வி கேட்கச் சொல்லி அவங்க தூண்டியதும் எங்களுக்குத் தெரியும். நாங்க பல திட்டங்களைச் செஞ்சுருக்கோம். நீங்க கேட்டிருக்கிற சாக்கடை வடிகால் பிரச்னை, குடிநீர்ப் பிரச்னை உள்ளிட்டவற்றை எல்லாம் தீர்க்க இருக்கிறோம். ஆனால், அதுக்குள்ள, `என்ன பண்ணுனீங்க'னு கேட்டா எப்படி? எங்கிட்ட இப்படிக் கேள்வி கேட்கிறீங்களே, எங்ககிட்ட இப்படி கேள்விகேட்கச் சொன்னவர்தான் இங்க முன்னாடி எம்.எல்.ஏ-வா இருந்தாரு. எங்க கட்சியிலிருந்து ரெண்டு கட்சி மாறிப் போயிருக்காரு. 

அவர்கிட்ட, `எங்க ஊருக்கு என்ன பண்ணுனீங்க'னு கேட்க வேண்டியதுதானே? நீங்க கேட்கும் அனைத்துப் பிரச்னைகளும் விரைவில் தீர்க்கப்படும். அதுக்கு மறக்காம இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க'னு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் குறிப்பிட்டுப் பேசினார். `உங்க அரசியலுக்கு நாங்களா அவல்'னு நாங்க குமுறினோம். ஆனா, அதுக்குள்ள மைக்கை வாங்கிய தம்பிதுரை, `எம்.பி ஒண்ணும் பண்ணலை, எம்.பி ஒண்ணும் பண்ணலை'னு எல்லாரும் கேட்கிறீங்க. எம்.பி-யும், அரசாங்க ஆள்தான். எம்.பி பண்றதும் ஒண்ணுதான், அரசாங்கம் பண்றதும் ஒண்ணுதான். மத்திய அரசு கொடுத்த 2,000 ரூபாயை நீங்க வாங்கலையா? இங்க மாநில அரசு பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு 1,000 ரூபாய் தரலையா? மின்சாரம் 100 யூனிட் இலவசமா கொடுக்கலையா? மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வரவில்லையா? அதெல்லாம் நான் கொடுத்தமாதிரிதான். 

அதேபோல், எம்.பி பணம் அனைத்தையும் தொகுதிக்காகச் செலவு பண்ணிட்டேன். மத்த விசயம் செய்ய, நான் என்ன என்னோட சொந்த பாக்கெட்டுல இருந்தா பணத்தை எடுக்க முடியும்? அப்படி, பண்ணவும் வழியில்லை. ஏன்னா, நானும் உங்களமாதிரி சாதாரண கஷ்டப்படுற நபர்தான். என்கிட்ட அவ்வளவெல்லாம் காசு கிடையாது'னு பேசி, எங்களை வெறுப்பேத்தினார். அதேபோல், அடுத்த ஊரான வெங்ககல்பட்டியில் தம்பிதுரை, `அம்மா ஆட்சியில்தான் இந்தத் திட்டம் வந்துச்சு, அந்தத் திட்டம் வந்துச்சு'னு பேசினார். அதைக் கேட்ட அந்த ஊர் மக்கள், `நீங்க சொல்ற திட்டமெல்லாம் எங்கூருக்கு வந்தது உங்களுக்குத் தெரியுமா? குடிக்கத் தண்ணி இல்லை. பேச வந்திட்டீங்க'னு மக்கள் பிரச்னை பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்குள்ள கூட்டத்துல ஒருத்தர், `கீழ இறங்கி வந்து சொல்லுங்க'னு தம்பிதுரையைச் சத்தமா கூப்புட்டார். இதனால், அ.தி.மு.க-வினர் கோபமாக, கைகலப்பாகும் சூழல் எற்பட்டுச்சு. ஆனால், அதற்குள் தம்பிதுரை பிரசார வாகனத்தை அடுத்த ஊருக்கு நகர்த்தச் சொல்லிட்டார்" என்றார்கள்.

இந்நிலையில், நம்மிடம் பேசிய தம்பிதுரை ஆதரவாளர்கள் சிலர், ``தம்பிதுரை அண்ணன் பத்து வருஷமா எம்.பி-யாக இருக்கிறார். ஆனால், அவருக்கு வரும் பணம் முழுவதையும், ஒரு ரூபா மிச்சம் வைக்காம தொகுதிக்குச் செலவழிச்சுட்டார். கரூர் தொகுதி முழுக்க வெப்பபூமி. அதனால், குடிநீர்ப் பிரச்னை இயல்பாகவே இருக்கு. மொத்தமா சரிபண்ண ஒரு எம்.பி-யால் முடியாது. மத்திய, மாநில அரசுகள் மூலமாகத்தான் செய்ய முடியும். அதற்காகதான், ஒரு மாதத்துக்கு முன்பு அரவக்குறிச்சி, க.பரமத்தி பகுதிகளுக்கு குடிநீர்ப் பிரச்னை தீர 250 கோடி ரூபாயில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை முதல்வரை விட்டு அறிவிக்க வைத்தார். அதேபோல், மற்ற பகுதிகளுக்கும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலமாகச் சீரான குடிநீர் கிடைக்க ஏற்பாடு பண்ணி இருக்கார். கடுமையான கோடை நிலவுவதால், குடிநீர்த் தட்டுப்பாட்டை முற்றிலும் தடுக்கமுடியவில்லை. அந்த உண்மை நிலவரத்தை அண்ணன் தனது பிரசாரத்தில் தெளிவாக விவரிக்கிறார். பல கிராம மக்கள் அண்ணனின் நிலையைப் புரிஞ்சுக்குறாங்க. ஆனால், செந்தில்பாலாஜி தி.மு.க-வினரைத் தூண்டிவிட்டு, அண்ணனுக்கு எதிராகக் கேள்வி கேட்க வைத்து, விவகாரத்தைப் பெரிதாக்குகிறார். ஆனால், அவரது எண்ணம் ஈடேறாது. தம்பிதுரைதான் இந்த முறையும் ஜெயித்து, `ஹாட்ரிக் வெற்றி'யை ருசிப்பார்" என்றார்கள்.

கரூரில், தம்பிதுரை `கறார்' செய்வது வாடிக்கையாகிவிட்டதுபோல.

பின் செல்ல