Published:Updated:

`சிங்கிள் டீ' மூர்த்தி, `காஸ்ட்லி' ரட்சகன், `பரிசுப்பெட்டி' பதற்றம்!  - அரக்கோணத்தில் மாம்பழம் பழுக்குமா? 

அரக்கோணம் தொகுதியில் ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள் என்னென்ன?

`சிங்கிள் டீ' மூர்த்தி, `காஸ்ட்லி' ரட்சகன், `பரிசுப்பெட்டி' பதற்றம்!  - அரக்கோணத்தில் மாம்பழம் பழுக்குமா? 
`சிங்கிள் டீ' மூர்த்தி, `காஸ்ட்லி' ரட்சகன், `பரிசுப்பெட்டி' பதற்றம்!  - அரக்கோணத்தில் மாம்பழம் பழுக்குமா? 

தொகுதி: அரக்கோணம்

காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம், திருத்தணி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

ஆன்மிகமும் விவசாயமும்:

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி ஆன்மிகம் மற்றும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. வடமாவட்டங்களில் சாதி வாக்குவங்கியை மையப்படுத்தி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளும் முக்கியத் தொகுதிகளில் ஒன்று. தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தொடர்ச்சியாக வெற்றிபெறும் காட்பாடி சட்டமன்றத் தொகுதி, தோல் தொழிற்சாலைகள் நிறைந்த ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, வரலாற்றுச் சிறப்புமிக்க ஆற்காடு சட்டமன்றத் தொகுதி, 108 திவ்யதேசங்களில் புகழ்பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்திருக்கும் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி, மக்களவைத் தொகுதியின் மையப்பகுதியான அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி, முருகன் கோயிலுக்குப் பெயர்போன திருத்தணி சட்டமன்றத் தொகுதி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியிருக்கின்றன. 

ரயில்வே திட்டங்களும் இங்குதான் அதிகமாகச் செயல்படுத்தப்படுகின்றன. சென்னைக்கு மிகமிக அருகில் இருப்பதால், அரக்கோணம் மக்களின் வாழ்க்கைமுறை சென்னையுடன் ஒன்றிப்போயிருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மின்சார ரயில்கள் மூலம் சென்னையில் வேலைக்குச் சென்று திரும்புகின்றனர். 

பேரிடர் மீட்பு நாயகர்கள்:

சுனாமி, புயல், மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலும், அங்கு விரைந்துசென்று பொதுமக்களை காப்பாற்றுவதில் சிறந்து விளங்குகிறது, அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழு. தலைநகர் சென்னையை தலைகீழாகப் புரட்டிப்போட்ட பெருவெள்ளம், டெல்டா மாவட்டங்களைக் கலங்கடித்த கஜா புயலின் தாக்கத்தின்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேசியப் பேரிடர் குழு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் துரிதமாக ஈடுபட்டது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, அதில் சிக்கியவர்களை மீட்டதிலும் பேரிடர் குழு பெரும் பங்காற்றியது.

அதி வெப்ப நகரமான அரக்கோணத்தின் பூர்வீகப் பெயர் `அருள் தமிழ் குன்றம்’ என்று சொல்லப்படுகிறது. `ஆறு கோணம்’ என்ற மற்றொரு பெயரும் இருந்ததாம். காலப்போக்கில் இந்தப் பெயர்கள் அரக்கோணம் என்று மறுவியது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாணத்தின் முதல் நகராட்சியாக 1866-ல் வாலாஜாபேட்டை நகராட்சி தொடங்கப்பட்டது. தென்னிந்தியாவில் முதல் ரயில் சேவை 1856 ஜூலை 1-ல் சென்னை ராயபுரத்திலிருந்து அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் உள்ள வாலாஜா ரோடு ரயில் நிலையம் வரை இயக்கப்பட்டது. அந்த வகையில், இந்திய ரயில் வரலாற்றில் இடம்பெற்ற பெருமை அரக்கோணத்துக்கு உண்டு.

வன்னியர் பாசம்:

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி ஆரம்பக் காலகட்டத்தில் காங்கிரஸின் கோட்டையாகப் பார்க்கப்பட்டது. 1996-க்குப் பிறகு காங்கிரஸ் இத்தொகுதியில் வெற்றிபெறவில்லை. அதன்பிறகு தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகள்தாம் வெற்றிபெற்றுள்ளன. வன்னியர், முதலியார் சமூக மக்கள் கணிசமாக வசிப்பதால், இந்த இரண்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக வெற்றிபெற்றிருக்கிறார்கள். அனைத்து அரசியல் கட்சிகளும், இந்த இரண்டு சமூகங்களைச் சார்ந்த வேட்பாளர்களையே தொடர்ந்து களத்தில் இறக்குகின்றன. கடந்த காலங்களில் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வெற்றிபெற்றனர்.

பின்னாளில், வன்னியர் சமூக வேட்பாளர்கள்தாம் தொடர்ந்து வெற்றிபெற்றார்கள். உதாரணமாக, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஜெகத்ரட்சகன், பா.ம.க. அரங்கவேலு இருவரும் அரக்கோணத்தில் வெற்றிபெற்று மத்திய இணையமைச்சராகப் பதவிவகித்தனர். சிட்டிங் எம்.பி., கோ.ஹரியும் வன்னியர்தான்.

`பாழான' பாலாறு: 

1.குடிநீர்ப் பஞ்சம் மக்களை வாட்டுகிறது. பெரும்பாலான பகுதிகளில் தெருவிளக்குகள், பாதாளச் சாக்கடை வசதிகள் அமைத்துக் கொடுக்கவில்லை. சுகாதாரப் பணிகள் சுத்தமாக மேற்கொள்ளப்படவில்லை. இதையெல்லாம் விட, குப்பை வண்டி டயரை கூட மாற்றிக் கொடுக்காததால் துப்புரவுப் பணியாளர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். 

2. ராணிப்பேட்டையில் உள்ள தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவுகளால் பாலாறு மாசடைந்திருப்பது.

3. திண்டிவனம் - நகரி இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை. அந்தத் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ரிங் ரோடும் ரோப் காரும்:

மெட்ரோ ரயில் திட்டத்தில் சென்னையின் புறநகர்ப் பகுதிகளுடன் அரக்கோணத்தையும் இணைத்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் இந்தத் தொகுதி அடுத்த 20 ஆண்டுக்கால வளர்ச்சிக்கான முன்னோட்டத்தை அடைந்திருக்கும். பேரூராட்சியாக உள்ள சோளிங்கரை நகராட்சியாகவும் தனி தாலுகாவாகவும் தரம் உயர்த்தவேண்டும் என்பது தொகுதி மக்களின் நெடுநாள் கோரிக்கை. சுற்றுலா வளர்ச்சிக்காக நரசிம்மர் கோயிலில் கொண்டுவரப்பட்ட `ரோப்கார்’ திட்டம், ஆரம்ப கட்டப் பணிகளுடன் முடக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருத்தத்தில் உள்ளனர். 

காவேரிப்பாக்கத்தில் `ஜவுளி பூங்கா’ அமைப்பதுடன், விசைத்தறி மேம்பாட்டுக்காக கட்டணம் இல்லாத மின்சாரம் வழங்க வேண்டும் என்பது விசைத்தறி தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. பனப்பாக்கத்தில் வாரச்சந்தை அமைக்கத் தனி இடம் ஒதுக்காதது, சோளிங்கர் தக்கான் குளத்தைத் தூர்வாராதது, கடந்தகால ஆட்சியாளர்களின் அலட்சியமாகக் கருதப்படுகிறது. பாணாவரம் ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்கள் நின்று செல்லவேண்டும் என்பதும் பல ஆண்டுக்கால கோரிக்கை. சோளிங்கரில் இயற்கை வளங்களைப் பெரும்புள்ளிகள் அழித்துவருகின்றனர். இதுவரை, மூன்று மலைகளை வெட்டி சுவடே தெரியாமல் கொள்ளையடித்துவிட்டதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

அரக்கோணம், ராணிப்பேட்டை, சோளிங்கர், திருத்தணி ஆகிய பகுதிகளை ஒருங்கிணைத்து `சிறப்புப் பொருளாதார மண்டலமாக’ மாற்றியிருந்தால் பெரிய பெரிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டிருக்கும். அதன்மூலம் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியிருக்கலாம். ராணிப்பேட்டை சிப்காட்டில் சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்திருக்கிறார்கள். குடிநீர்ப் பிரச்னையும் தாண்டவமாடுகிறது. ரசாயனத் தோல் கழிவுகளால் பாலாறு மாசுபட்டு நிலத்தடி நீர் உப்புத் தன்மையாக மாறியிருக்கிறது. அரக்கோணத்தில் `ரிங் ரோடு’ திட்டம் செயல்படுத்தப்பட இருந்தது. ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானத் தளத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி `ரிங் ரோடு’ திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டனர். 

3,500 வகையான ரசாயன மாசு:

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் `தமிழ்நாடு குரோமேட்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் லிமிடெட்’ என்ற தொழிற்சாலை 40 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இந்தத் தொழிற்சாலை வளாகத்தில் மலைபோல் குவித்துவைக்கப்பட்டுள்ள சுமார் 2.27 லட்சம் மெட்ரிக் டன் குரோமியக் கழிவுகள் இதுவரை அகற்றப்படாததால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு, 2006-ம் ஆண்டு பிளாக் மித் இன்ஸ்டிட்யூட் என்ற அமெரிக்கச் சுற்றுச்சூழல் அமைப்பினர் ஆய்வு செய்தனர். 3,500 வகையான ரசாயன மாசு நேரடியாக நிலம், நீர், காற்று ஆகியவற்றில் கலந்திருப்பதாக அறிக்கை சமர்ப்பித்தனர். ஆனால், இதுவரை குரோமியக் கழிவுகளை அகற்ற மத்திய-மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரக்கோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் முக்கியக் கோரிக்கை. காட்பாடியில், தமிழ்நாடு அரசின் டெல் வெடிமருந்து தொழிற்சாலை மூடப்பட்டுவிட்டது. நேரடியாக ராணுவமே டெல் தொழிற்சாலையை கையகப்படுத்தி தங்களுக்கான வெடிமருந்துகளைத் தயாரித்திருக்கலாம். வெடிமருந்து ஆலையை மூடியதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ராணிப்பேட்டையில், 9 லட்சம் மரங்களைக் கொண்ட ‘நவ்லாக்’ பெரிய பண்ணையை சரியாகப் பராமரிக்கவில்லை. மரங்கள் வெட்டிக் கடத்தப்படுகிறது. மொத்தத்தில் குறைகளை மட்டுமே சுமக்கிறது, அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி.

கட்டுக் கட்டாகப் பறக்கும் பணம்: 

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் ஜெகத்ரட்சகன், பா.ம.க சார்பில் ஏ.கே.மூர்த்தி, அ.ம.மு.க சார்பில் பார்த்திபன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ராஜேந்திரன், நாம் தமிழர் கட்சி சார்பில் பாவேந்தன் ஆகியோர் களத்தில் மோதுகின்றனர். இந்தத் தொகுதியில் ஜெகத்ரட்சகன் ஏற்கெனவே களம் கண்டு வெற்றிபெற்றுள்ளார். `காஸ்ட்லி’ வேட்பாளரான அவர், எதிரணி கட்சி நிர்வாகிகள் பலரை பண மழையால் குளிர்வித்துவருகிறார். பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி, அரக்கோணம் தொகுதிக்கு புதிய முகம் என்பதால் ஜெகத்ரட்சகனுக்கு ஜாக்பாட். தவிர, சிங்கிள் டீ-கூடத் தொண்டர்களுக்கு வாங்கித்தர யோசிப்பதால் ஏ.கே.மூர்த்தியை பா.ம.க.-வினரே கடிந்து கொள்கிறார்கள். தொகுதியில் தலித் மக்களின் வாக்குகளும் கணிசமாக உள்ளன. பா.ம.க. எதிர்ப்பு மனநிலையில் அவர்கள் இருப்பது மூர்த்திக்கான மைனஸ்.

சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பார்த்திபன், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் அ.ம.மு.க வேட்பாளராகப் போட்டியிடுவதால் அ.தி.மு.க. வாக்குவங்கி கடுமையாக சரிய வாய்ப்பிருக்கிறது. அடுத்த தேர்தலை குறிவைத்து இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு எதிரான களப்பணியைத் தீவிரப்படுத்தியுள்ளார் பார்த்திபன். ரூ.20 கோடி முதல் ரூ.50 கோடி வரை தொகுதி முழுவதும் பணம் கட்டுக்கட்டாகப் பறக்கிறது. நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் நிலை டல்லாகத்தான் இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணி மீதான அதிருப்தி, அ.ம.மு.க. மீதான வெறுப்பைப் பொதுமக்களிடம் பார்க்கும்போது, தி.மு.க.-வுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறது.

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள் 

1. சாதிய வாக்குகள்

2. பணப்பட்டுவாடா 

3. தலைவர்களின் பிரசாரம்

4. வாக்குறுதிகள்

5. வேட்பாளரின் செல்வாக்கு

பிரசாரத்தில் என்ன நடக்கிறது?

அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ம.க சார்பில் ஏ.கே.மூர்த்தி, தி.மு.க சார்பில் ஜெகத்ரட்சகன் களமிறங்கியிருக்கிறார்கள். இருவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கடும் போட்டி நிலவுகிறது. ஜெகத்ரட்சகன் கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். கூடவே அவரது மகள், ஆதரவாளர்கள் பிரசாரம், பண பலம் ஆகியவற்றால் அவரது பிரசாரத்துக்கு மக்கள் அதிக அளவில் திரள்கிறார்கள். ஆனால் மூர்த்திக்கோ கூட்டம் அதிகமாகக் கூடுவதில்லை. விமர்சனம் செய்துவிட்டு அ.தி.மு.க, பா.ஜ.க.-வுடன் கூட்டணி சேர்ந்துள்ளதால் பா.ம.க. மீது அதிருப்தி காணப்படுகிறது. ஆளும் கட்சி அமைச்சர்கள் யாரும் அவரின் பிரசாரத்துக்கு வர மறுப்பது மூர்த்திக்கு மைனஸ். ஏ.கே.மூர்த்திக்குப் பெருகிவரும் ஆதரவை பணபலத்தால் வீழ்த்தும் வேலைகளைச் செய்கிறார் ஜெகத்ரட்சகன்.

அ.ம.மு.க. வேட்பாளரான பார்த்திபனோ பணத்தை தண்ணீராகச் செலவழித்து வருகிறார். தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்பதால் அந்த ஓட்டுக்களை அப்படியே வாங்கிவிட வேண்டும் என முயற்சி செய்து வருகிறார். ஆனால், கிராமங்களில் வாக்கு சேகரிக்க செல்லும்போது "உங்களுக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களிக்கிறோம்" என பாமர மக்கள் பேசுவதால், பரிசு பெட்டகம் சின்னத்தை மக்களிடம் எப்படி கொண்டு போய்ச் சேர்ப்பது எனத் தெரியாமல் விழிக்கிறார். 

தொகுதிக்குள் பிரச்னை என்பது அதிகளவில் இருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்பும் நிறைய இருக்கிறது. ஆனால் சாதிய ஓட்டுகள், பணபட்டுவாடா ஆகியவை அதிக வாக்குறுதிகள், கோரிக்கைகளை மறக்க வைத்து வருகின்றன. இதனால் அரக்கோணத்தை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.