Published:Updated:

`எம்.ஜி.ஆர் பிளான், ஜெயலலிதா ராசி, கருணாநிதி அச்சம்!' - கோவையின் கள நிலவரம் என்ன?

'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என்றழைக்கப்படும் கோயம்புத்தூர் தொகுதியில் ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் டாப் 5 காரணிகள் என்னென்ன?

`எம்.ஜி.ஆர் பிளான், ஜெயலலிதா ராசி, கருணாநிதி அச்சம்!' - கோவையின் கள நிலவரம் என்ன?
`எம்.ஜி.ஆர் பிளான், ஜெயலலிதா ராசி, கருணாநிதி அச்சம்!' - கோவையின் கள நிலவரம் என்ன?

தொகுதி: கோயம்புத்தூர்

கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், சிங்கநல்லூர், சூலூர், பல்லடம் என 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

சிறுவாணி நீரும் ராபர்ட் ஸ்டேன்ஸும்! 

`தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' ;`கிரைண்டர்களின் தாயகம்' என்றழைக்கப்படுகிறது. பேருந்து பயணத்தில் யாராவது மிதித்தால்கூட, `ஏனுங்கனா... பாத்து மிதிக்கக் கூடாதுங்களாங்..?' என மரியாதையோடு கண்டிக்கும் நகரம். கோயம்புத்தூரை நீக்கிவிட்டு தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அளவிட முடியாது. அந்தளவுக்குக் கிரைண்டர் தயாரிப்பில் ஆரம்பித்து ‘பம்ப்-செட்’ வரையில் தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்திப் பிடிக்கும் நகரம் கோவை. தலைசிறந்த மருத்துவமனைகளும் கல்வி நிறுவனங்களும் இதன் அடையாளங்கள். தமிழகத்தின் வேறுமாவட்டங்களிலிருந்து தொழில் நிமித்தமாக யாராவது கோவையில் சில காலம் வாழ்ந்துவிட்டால் அவர்களால் இந்த நகரைவிட்டு அவ்வளவு எளிதில் நகர்ந்துவிட முடியாது. கோவை மக்களின் பண்பாடும் பருவநிலையும் அப்படிப்பட்டது. 

பல லட்சம்பேர் வசிக்கும் இடமாகவும் பல கோடி பேருக்கு வாழ்வளிக்கும் இடமாகவும் வளர்ந்து நிற்கிற; வளர்ந்து கொண்டிருக்கிற கோயம்புத்தூரை 1900-களின் தொடக்கத்தில் மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரம் என்று ஆங்கிலேயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். கோவைக்கு சிறுவாணி நீர் கொண்டுவரப்படாத சமயம் அது. கோட்டைமேட்டைச் சுற்றி நகரம் மிகச் சிறிய அளவில் கட்டமைக்கப்படிருந்தது. நெரிசலான பகுதியில் மக்கள் வாழ்ந்தார்கள். சுகாதாரம் போதவில்லை. தண்ணீர் வசதி பெரிதாக இல்லை. பிளேக், காலரா போன்ற நோய்களால் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்துகொண்டிருந்தார்கள். 1904-ம் ஆண்டிலிருந்து 1923 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்டோர் இறந்துபோனார்கள். கொள்ளை நோய்களுக்குப் பயந்து மக்கள் இங்கிருந்து வெளியேறத் தொடங்கினார்கள். 1929-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி சிறுவாணி குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. சிறுவாணி நீரும் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவரால் 1888-ல் 'கோயம்புத்தூர் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ்' என்கிற பெயரில் நிறுவிய முதல் பஞ்சாலையும்தான் கோவை நகரின் வளர்ச்சிக்கான தொடக்கப் புள்ளி! 

தி.மு.க. அ.தி.மு.க, சென்டிமென்ட்! 

1975-ம் ஆண்டு, வ.உ.சி மைதானத்தில் தி.மு.க-வின் மாநில சுயாட்சி மாநாட்டை நடத்தினார் கருணாநிதி. பல மாநிலங்களிலிருந்தும் தலைவர்கள் வந்து கலந்துகொண்டார்கள். இந்திய அளவில் விவாதப் பொருளாக மாறியது. ஆனால், இதையடுத்து நடந்த 1977 தேர்தலில் தி.மு.க தோல்வியடைந்தது. அதேபோல, 2010-ம் ஆண்டு கோவையில் உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு ஒன்றை நடத்தி தமிழகத்தை அதிர வைத்தார் கருணாநிதி. ஆனால், அதற்கு அடுத்து வந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தோல்வியைத் தழுவியது. ஆனால், இதே கோவையில்தான் 2011-ம் ஆண்டு தேர்தலுக்கான முதல் கூட்டத்தை நடத்தினார் ஜெயலலிதா. பிரமாண்ட கூட்டம் கூடியது. அதையடுத்து 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் தொடர் வெற்றியில் திளைத்தது அ.தி.மு.க. கோவையில் தி.மு.க-வுக்கு கூட்டம் கூடினால் மைனஸாகவும் அ.தி.மு.க-வுக்குக் கூடினால் ப்ளஸ்ஸாகவும் சென்டிமென்ட் பார்க்கிறார்கள். 

காங்கிரஸ் கோட்டை, கரைந்த கதை! 

கோவையின் வளர்ச்சி எப்படித் தொழில் அதிபர்களையும் தொழிலாளர்களையும் உள்ளடக்கியதோ... அதேபோல்தான் அரசியல் வரலாறும். 1952-ம் ஆண்டு காங்கிரஸைச் சேர்ந்த டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் போட்டியின்றி கோவை எம்.பி-யாகத் தேர்வானது முதல் 2014-ம் ஆண்டு வரை காங்கிரஸ் 6 முறையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 முறையும், தி.மு.க, பி.ஜே.பி ஆகிய கட்சிகள் தலா 2 முறையும் அ.தி.மு.க ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.

ஆரம்பகாலங்களில் கோவையில் அதிக அளவில் பஞ்சாலைகள் இருந்ததால், அதன் தொழிலாளர்களை மையப்படுத்தியே வேட்பாளர்கள் முன்னிறுத்தப்பட்டார்கள். தொழிற்சங்கவாதிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும்தான் ‘வாய்ஸ்’ இருந்தது. காங்கிரஸ் கட்சி தொழிலதிபர்களையும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொழிற்சங்கவாதிகளையும் தேர்தலில் களம் இறக்கின. இதன் அடித்தளத்தை தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் நன்கு உணர்ந்திருந்தன. அதனால்தான் தி.மு.க-வின் செல்வாக்கு பட்டிதொட்டியெல்லாம் பரவியிருந்தபோதும்கூட 1967-ம் ஆண்டு நடந்த நான்காவது நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் தி.மு.க வேட்பாளரைக் களம் இறக்காமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கோவையை ஒதுக்கினார் அண்ணா. 

1972-ம் ஆண்டு அ.தி.மு.க-வை உருவாக்கிய எம்.ஜி.ஆர் 1973-ல் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பாக மாயத்தேவரைக் களம் இறக்கி வெற்றிபெறச் செய்தார். ஆனால், அதற்கு அடுத்த ஆண்டான 1974-ல் கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கும் கோவை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கும் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில், கோவை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் மட்டும் அ.தி.மு.க சார்பாக அரங்கநாயகத்தை வேட்பாளராக நிறுத்திவிட்டு, கோவை நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட பார்வதி கிருஷ்ணனுக்கு ஆதரவளித்தார். 

பகையை விரும்பாத எம்.ஜி.ஆர்! 

கோவையில் கம்யூனிஸ்ட்களைப் பகைத்துக்கொண்டு அ.தி.மு.க. வேட்பாளரைக் களம் இறக்கினால் பலன் கிடைக்காது என்று நினைத்தார் எம்.ஜி.ஆர். இதனால் எம்.ஜி.ஆரின் ஆதரவில் சி.பி.ஐ வேட்பாளர் பார்வதி கிருஷ்ணன் அந்தத் தேர்தலில் வெற்றிபெற்றார். 1977 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை அ.தி.மு.க  கூட்டணியில் இணைத்துக்கொண்ட எம்.ஜி.ஆர், அப்போதும் கோவையை சி.பி.ஐ கட்சிக்கே ஒதுக்கினார். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குப்புசாமி 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பார்வதி கிருஷ்ணன் 3 முறையும் அலங்கரித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் மேலோங்கியிருந்த கோவையில் பா.ஜ.க உதயாமானதற்குப் பிறகு, லேசான மாற்றங்கள் தென்படத் தொடங்கின. காங்கிரஸைக் காட்டிலும் தங்கள் சிந்தனைக்கு நெருக்கமாக இருந்த பி.ஜே.பி-யை ‘பெஸ்ட்’ என முதலாளி வர்க்கம் நினைக்க ஆரம்பித்தது. அதன் விளைவாக 1989-ல் நடந்த தேர்தலில் கோவையில் போட்டியிட்ட பி.ஜே.பி 3.34 சதவிகித வாக்குகளையும் 1991-ல் தேர்தலில் 6.78 சதவிகித வாக்குகளையும் 1996-ல் நடந்த தேர்தலில் நிலவிய பலமுனை போட்டியிலும் 5.30 சதவிகித வாக்குகளையும் பெற்று வளரத் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியும் கரையத் தொடங்கியது. பி.ஜே.பி-க்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் 1998-ல் பி.ஜே.பி-யோடு கூட்டணி வைத்தார் ஜெயலலிதா. கோவை தொகுதி பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போதைய வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்தான் அப்போதும் வேட்பாளர்.  

தேர்தலுக்கு முன்பு கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடக்கவே, இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை அதிகரித்தது. அந்தக் கொந்தளிப்பில் அபார வெற்றிபெற்றார் சி.பி.ஆர். அடுத்து 1999-ல் நடந்த தேர்தலில் தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி அமைந்தது. தி.மு.க-வும் கோவையை பி.ஜே.பி-க்கே ஒதுக்கியது. ஜெயலலிதா சி.பி.ஐ-க்கு கோவை தொகுதியை ஒதுக்கினார். கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து இந்து - முஸ்லீம் பிரிவினைகள் உச்சத்தில் இருந்த சமயத்தில் அமைதியான வேட்பாளர் என்கிற அடைமொழியோடு நல்லகண்ணு களம் இறக்கப்பட்டார். ஆனால், நல்லகண்ணுவைத் தோற்கடித்து சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார். இனி தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என நல்லகண்ணுவும் ஒதுங்கிக்கொண்டார். 

தலையாய பிரச்னை? 

1. ஜி.எஸ்.டி-யால் சிறுகுறு தொழில்கள் பாதிக்கப்பட்டிருப்பது.

2. விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படுவது.

3. குடிநீர் விநியோகம் பிரான்ஸ் நிறுவனமான சூயஸிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது.

ஆமை வேக ஏர்போர்ட்! 

கோவையின் தொழில் வளர்ச்சிக்கு உள்நாட்டு வெளிநாட்டு விமானச் சேவைகளை அதிகப்படுத்த வேண்டும் என்பது கோவை தொழில்துறையினரின் நீண்டநாள் கோரிக்கை. பெரிய அளவிலான சர்வதேச விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்கள் இறங்குவதற்கான வசதிகள் கோவை ஏர்போர்ட்டில் இல்லை. பெயர்தான் சர்வதேச விமான நிலையம். ஆனால், கோவையிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு விமான சேவைகள் கிடையாது. அதுமட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளை அனுப்புவதற்கான கார்கோ காம்ப்ளெக்ஸும் இல்லை. இந்தப் பிரச்னைகளையெல்லாம் தீர்க்க வேண்டுமென்றால் முதலில் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட விமான நிலைய விரிவாக்கப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. அதுதொடர்பான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. விமானநிலைய விரிவாக்கம் எப்போது முடிவடையும் எனத் தொழில்துறையினர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

கட்சிகளின் செல்வாக்கு என்ன? 

அ.தி.மு.க கூட்டணி சார்பாகப் போட்டியிடும் பி.ஜே.பி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், தி.மு.க கூட்டணியில் சி.பி.எம் சார்பாக போட்டியிடும் பி.ஆர்.நடராஜன் என இரு பிரதான வேட்பாளர்களுமே கோவையின் முன்னாள் எம்.பி-க்கள். சி.பி.ராதாகிருஷ்ணன் 2 முறையும் பி.ஆர்.நடராஜன் ஒருமுறையும் வென்றுள்ளனர். 2014 தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் நாகராஜன் வெற்றிபெற்றார். சி.பி.ஆர் இரண்டாவது இடம்பிடித்து தி.மு.க-வை மூன்றாவது இடத்துக்குத் தள்ளினார். இப்போது அ.தி.மு.க-வும் தங்கள் கூட்டணியில் இருப்பதால் வெற்றி நிச்சயம் என்று உறுதியாக நம்புகிறது பி.ஜே.பி.   

சி.பி.எம் வேட்பாளர் நடராஜனோ, "இவர்கள் பழைய முடிவுகளை வைத்துக்கொண்டு பகல் கனவு காண்கிறார்கள். அப்போது பி.ஜே.பி-க்கு மோடி அலை இருந்தது. அ.தி.மு.க-வில் ஜெயலலிதா இருந்தார். இப்போது மோடி அலையும் இல்லை. ஜெயலலிதாவும் உயிரோடு இல்லை. அதுமட்டுமல்லாது மோடி ஆட்சியையும் எடப்பாடி ஆட்சியையும் அகற்றும் மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். ஆகையால் வெற்றி எங்களுக்கே!" எனப் பிரசாரத்தை முன்வைக்கிறார். எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதியான அ.ம.மு.க வேட்பாளர் அப்பாதுரையின் கணக்கு, அ.தி.மு.க வாக்குகளை மையப்படுத்தியே இருக்கிறது. மக்கள் நீதி மய்யத்தின் மகேந்திரனும் நம்பிக்கையோடு வாக்கு சேகரித்து வருகிறார். 

ஏப்ரல் 18 வாக்குப்பதிவைத் தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள் 

1. ஜி.எஸ்.டி.
2. வாக்குறுதிகள், மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்பு.
3. மதம்.
4. பணப்பட்டுவாடா.
5. வேட்பாளர்களின் தனிப்பட்ட மதிப்பீடுகள்.

பிரசாரத்தில் என்ன நடக்கிறது?

மக்களை சந்திப்பதற்கு முன்னதாகத் தொழிலதிபர்கள், தொழிற்சங்க அமைப்புகள் என ஆதரவைத் திரட்டத் தொடங்கினார் சி.பி.ஆர். இதன் பிறகு, மூன்று நாள்களுக்குப் பிறகே மக்களை சந்தித்தார். "எதிரணியினர் பிரதமர் வேட்பாளர் யார் என்பதிலேயே குழப்பமான மனநிலையில் இருக்கிறார்கள். நிலையான பிரதமர் மோடி வேண்டுமானால் பி.ஜே.பி-க்கு வாக்களியுங்கள்" எனக் கூறி மத்திய அரசின் திட்டங்களை அடுக்கி ஆதரவு திரட்டி வருகிறார். அவருக்கு ஆதரவாக முதல்வர், துணை முதல்வர், அமித் ஷா ஆகியோர் பிரசாரம் செய்துவிட்டனர். மோடியும் வந்து பிரசாரம் செய்துள்ளார். இதனால் கூடுதல் உற்சாகத்தில் வேலை செய்து வருகின்றனர் பா.ஜ.க தொண்டர்கள். அமைச்சர் வேலுமணி முழு வீச்சில் இறங்கி வேலை செய்து வருவது ப்ளஸ்ஸாகப் பார்க்கிறார். 

"ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றால் மத்திய அமைச்சராகிவிடுவார். அவர் வெற்றி உறுதி என்றாலும், அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும். இது நமது மான பிரச்னை" எனக் கூறி தொண்டர்களிடம் வேலை வாங்குகிறது உள்ளூர் அ.தி.மு.க. இருப்பினும், பணப்பட்டுவாடா என்பது பெயரளவுக்குக்கூட இல்லாமல் இருப்பது சி.பி.ஆருக்கு மைனஸ். 

சி.பி.எம் வேட்பாளரான பி.ஆர்.நடராஜன், தன்னுடைய பிரசார வாகனத்தையே ரஃபேல் ஊழலைக் குறிக்கும் விதமாகவும் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களைக் குறிப்பிடும் விதமாகவும் விமான வடிவில் அமைத்துள்ளார். கோவையின் குடிநீர் விநியோகத்தை பிரான்ஸ் நிறுவனத்துக்குத் தாரை வார்த்த அ.தி.மு.க அரசின் செயல்பாடுகளையும் ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளால் கோவையின் சிறு குறு தொழில்களில் ஏற்பட்ட பாதிப்புகளையும் சொல்லி வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துவருகிறது. கூடவே எளிமையான மனிதராக இருப்பது இவருக்கான ப்ளஸ்கள். 

இருப்பினும், `தாமரையின் ஆதிக்கத்தை வீழ்த்தி சுத்தி அரிவாள் ஜொலிக்குமா?' என்பதை அறிந்துகொள்ள ஆவலோடு காத்திருக்கின்றன கொங்கு மண்டல அரசியல் கட்சிகள்.