Published:Updated:

டெண்டர் ஓட்டுப் போடுவது எப்படி? - ’சர்க்காரி’ல் விஜய் செய்தது நிஜத்தில் சாத்தியமா?

பிரபாகரன் செ

அறிவோம் தேர்தல்: ஒருவரது வாக்கானது வேறு ஒருவரால் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருப்பின், அதை நிரூபிப்பது சாத்தியமா? என்ன சொல்கிறது தேர்தல் ஆணையம்.

டெண்டர் ஓட்டுப் போடுவது எப்படி? - ’சர்க்காரி’ல் விஜய் செய்தது நிஜத்தில் சாத்தியமா?
டெண்டர் ஓட்டுப் போடுவது எப்படி? - ’சர்க்காரி’ல் விஜய் செய்தது நிஜத்தில் சாத்தியமா?

லகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்குச் சொந்தமானது இந்தியா. அந்த ஜனநாயகத்தை உறுதி செய்பவை தேர்தல்களும் அவற்றில் மக்களின் பங்களிப்புமே. இந்தியாவின் அடுத்த ஐந்து ஆண்டுக்கால ஆட்சியைத் தீர்மானிக்கும் - புதிய அரசைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் களப் பணிகள் தொடங்கிவிட்டன. நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் கோடிக்கணக்கான வாக்காளர்கள் பங்கேற்று வாக்களிக்கவுள்ளனர். அதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டையை  அனைவரும் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்க வேண்டும். தேர்தல் அரசியலை மையமாக வைத்துப் பேசிய தமிழ் சினிமாக்கள் ஏராளம். அண்மையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த 'சர்க்கார்' படம் தேர்தல் வாக்குரிமையைப் பற்றிப் பேசியது. நமது ஓட்டைப் பொய்யான அடையாளம் கொண்டு வேறொருவர் பதிவு செய்யும்போது அதை நிரூபிப்பது சாத்தியமா, நாம் மீண்டும் நமது ஓட்டுரிமையைப் பதிவு செய்ய முடியுமா? முடியும்..! 

டெண்டர் ஓட்டுகள் (Tendered Votes) 

ஒருவரின் வாக்கானது வேறு ஒருவரால் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருப்பின்,1961-ம் ஆண்டு வகுக்கப்பட்ட தேர்தல் விதிமுறைகளின் பிரிவு 49-பி-யின்படி சம்பந்தப்பட்ட நபர், அரசால் அங்கீகரிக்கப்பட்ட உரிய அடையாள அட்டையைக் காண்பித்து வாக்களிக்கலாம். அப்படி வாக்களிக்கும் ஓட்டு, டெண்டர் ஓட்டு (tendered votes) எனக் கருதப்படும்.

பெரும்பாலும் உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி அல்லது கள்ள ஓட்டுப் போடும் நோக்கத்தில் ஒருவருடைய வாக்கை, வேறொருவர் பதிவுசெய்ய வாய்ப்புள்ளது. அந்த மாதிரியான நேரத்தில் தன்னுடைய ஓட்டு ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கும் வாக்காளரின் அடையாள ஆவணங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர், உண்மையான வாக்காளர் அவர்தானா; அவருடைய வாக்கு ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வார். வாக்காளரை உறுதிப்படுத்த இயலாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட வாக்காளர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார் அல்லது அவர்தான் உண்மையான வாக்காளர் என உறுதி செய்தால், அந்த வாக்காளருக்கு வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படும். அவர்கள், ஈவிஎம் (EVM) மூலம் வாக்களிக்க அனுமதிக்க மாட்டார்கள்.

மாறாக, ஆய்வுக்குரிய `டெண்டர் ஓட்டு’ப் படிவம் (17B படிவம், Tendered Ballot Paper) மூலம், 49 பி-ன் படி அவரை வாக்களிக்கச் செய்து,  அதற்குரிய உறையில் சீலிட்டு தனியாகக் கணக்கு வைத்து வாக்குப்பதிவு முடிந்ததும் மண்டல அதிகாரிகளிடத்தில் ஒப்படைக்கப்படும். வாக்கு எண்ணிக்கையின்போது, 49 பி முறைப்படி வாக்களிக்கப்படும் வாக்குகள் எண்ணப்படாது. ஒருவேளை வேட்பாளர்களின் வாக்குகள்  வித்தியாசம் மிகவும் குறைவாக இருப்பின் டெண்டர் ஓட்டுகள் நீதிமன்ற உத்தரவின்பேரில் மட்டுமே எண்ணப்படும். இதுதான் தற்போது நடைமுறையில் உள்ள 49 பி விதிமுறை ஆகும்.

வாக்குச்சாவடி மையத்துக்கு ஒரு வாக்காளர், தன் வாக்கைச் செலுத்த வரும்போது, அங்குள்ள அரசியல் கட்சி வேட்பாளரின் முகவர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் இவர் இல்லை என்று மறுப்பு தெரிவித்தால், அது எதிர்க்கப்பட்ட வாக்காக (சவால் வாக்கு ) (Challenged Votes) கருதப்படும். பின்னர் எதிர்ப்பு தெரிவித்த கட்சி வேட்பாளரின் முகவர்களிடமிருந்து ரூ.2-ஐ வசூலித்துக்கொண்டு சம்பந்தப்பட்ட வாக்காளரின் அடையாள ஆவணங்களைச் பரிசோதித்து வாக்குச்சாவடி தலைமை அலுவலர் விசாரணை நடத்துவார். விசாரணையில் எதிர்ப்பு நிரூபிக்கப்பட்டால் வேட்பாளர் முகவரிடம் வசூலித்த ரூ.2-ஐ திருப்பிச் செலுத்திவிட்டு, போலியாக வாக்குப் பதிவு செய்யவந்த அந்த நபரை வாக்குச்சாவடி தலைமை அலுவலர், போலீஸார் வசம் ஒப்படைப்பார். மாறாக விசாரணையில் எதிர்ப்பு நிரூபிக்கப்படாவிட்டால் அந்த வாக்காளரை வாக்களிக்க அனுமதிப்பர்.

எனவே டெண்டர் ஓட்டு, சவால் வாக்கு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்... வாக்களிக்க வேண்டியது, நம் அனைவரின் கடமை. அந்த ஜனநாயகக் கடமையை தவறாமல் நிறைவேற்றுவோம்!