Published:Updated:

இப்படியும் ஒரு எம்.பி; எம்.ஜி.ஆரின் 5 லட்சம், தினகரனின் பலம்! - தென்காசியின் களநிலவரம் என்ன?

தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் 'டாப்-5’ காரணிகள் எவை? 

இப்படியும் ஒரு எம்.பி; எம்.ஜி.ஆரின் 5 லட்சம், தினகரனின் பலம்! - தென்காசியின் களநிலவரம் என்ன?
இப்படியும் ஒரு எம்.பி; எம்.ஜி.ஆரின் 5 லட்சம், தினகரனின் பலம்! - தென்காசியின் களநிலவரம் என்ன?

தொகுதி: தென்காசி

சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

தென்னகத்தின் `ஸ்பா'!

தென் மாவட்டங்களில் இருக்கும் ஒரே தனி தொகுதி. தென்னகத்தின் ’ஸ்பா’ மற்றும் ‘ஏழைகளின் ஊட்டி’ எனவும் வர்ணிக்கப்படும் குற்றாலம், ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த சதுரகிரி மலை ஆகியவை தொகுதியின் தனிச்சிறப்புகள். நெல்லை மாவட்டத்தின் 4 சட்டமன்றத் தொகுதிகளும் விருதுநகர் மாவட்டத்தின் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும் தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய இந்தத் தொகுதியில் விவசாயமே பிரதானத் தொழிலாக இருக்கிறது. அடுத்தபடியாக, நெசவு மற்றும் பஞ்சாலைத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். 

பூலித்தேவனும் ஒண்டிவீரனும்! 

சேர நாட்டை ஆண்ட பந்தள மன்னர்களில் ஒருவர் கலங்காதகண்டி மன்னர். இவரது ஆட்சி எல்லையானது, அச்சன்கோயில் வரையில் நீடித்திருந்தது. அங்குள்ள ஐயப்பன் கோயில், திருமலைக் கோயில் ஆகியவற்றை நிர்மாணித்தவரான கலங்காதகண்டி ராஜா, தன் மகளை தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியனுக்கு மணமுடித்து வைத்தார். ஒரு நாள், தன் மகளைக் காண தென்காசிக்கு அவர் வருவதாகத் தகவல் அனுப்பியிருக்கிறார். தந்தை வரும் தகவலை ராஜாவிடம் இளவரசி தெரிவித்துள்ளார். அதற்கு, பராக்கிரம பாண்டியன், `உன் தந்தைதானே வருகிறார். வந்துவிட்டுப் போகட்டும். அவர் என்ன ஓடைத் தண்ணீரையா கொண்டுவருகிறார்?’ என நக்கலாகச் சொல்லியிருக்கிறார். இதைத் தன் தந்தையிடம் இளவரசி தெரிவித்ததால், ஹரிகர நதியை தென்காசியை நோக்கித் திருப்ப நடவடிக்கை எடுத்துள்ளார் ராஜா. இந்த நதி, குண்டாற்றில் இணைந்து பின்னர் சிற்றாற்றில் கலக்கிறது. இதன் மூலம் செங்கோட்டை, தென்காசி, வீரகேரளம்புதூர், ஆலங்குளம் ஆகிய தாலுகாகள் பயனடைகின்றன.  

இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட மாமன்னன் பூலித்தேவன், அவரது படையில் இருந்த முன்னணித் தளபதியான ஒண்டிவீரன் ஆகியோர் வழ்ந்த பகுதி இந்தத் தொகுதிக்குள்ளேயே இருக்கிறது. 1949-ல் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த பி.எஸ்.குமாரசாமி ராஜா இந்தத் தொகுதியைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் சிறப்பு.

1 லட்சம் வாக்குகள்! 

தென்காசி தொகுதியைப் பொறுத்தவரையிலும் காங்கிரஸின் கோட்டையாகத் திகழ்ந்தது. 1957 முதல் 1991 வரையிலும் 9 முறை காங்கிரஸ் கட்சியே தொடர்ந்து வென்றது. 1996 தேர்தலில் த.மா.கா வென்றது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மறைந்த அருணாச்சலம் இந்தத் தொகுதியிலிருந்து 6 முறை தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா இருமுறை வென்றுள்ளன. இந்தத் தொகுதியில் இரண்டு முறை தனியாகவும் கடந்த முறை தி.மு.க கூட்டணியிலும் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டுள்ளார். இவர் தனது சொந்த செல்வாக்கில், இந்தத் தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை வைத்திருப்பது ஹைலைட். 

வறட்சியும் 4 வழிச் சாலையும்! 

மேற்குத் தொடர்ச்சியையொட்டியுள்ள பகுதி. இங்குள்ளவர்களின் பிரதான தொழிலே விவசாயம்தான். இங்கு எந்த பெரிய தொழிற்சாலைகளோ, தொழில் வாய்ப்புகளோ அறவே கிடையாது. விவசாயத்தை மட்டுமே நம்பி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சமீபகாலமாக வறட்சி தாண்டவமாடுவதால், விவசாயத் தொழிலை மேற்கொள்ள முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வெளியூர்களுக்கு வேலை தேடிச் செல்கின்றனர். வறட்சியான காலத்தில் பூக்கள் உற்பத்தி அதிகமாக நடைபெறுவதால் சென்ட் தொழிற்சாலை தேவை எனப் பல காலமாக மக்கள் கூறி வருகின்றனர். திருமங்கலம் - தென்காசி நான்கு வழிச்சாலை போடப்படும் என அறிவித்து அதற்கு கருத்து கேட்டு வருகிறது அரசு. இதிலும் பல சிக்கல்கள் நீடிக்கின்றன. அரசு இதற்கென இரண்டு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. ஒன்று விவசாய நிலங்களை கையகப்படுத்தி சாலை போடுவது. இன்னொன்று மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி சாலை போடுவது. இந்த இரண்டில் எதைத் தேர்வு செய்தாலும் விவசாயிகளுக்குப் பாதிப்புதான். இதனால் மக்கள் இதை எதிர்த்து வருகின்றனர். 

கலங்க வைத்த கன்னியா மதகு!  

தமிழக - கேரள எல்லையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சிவகிரி ஜமீனுக்கும் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும் இடையே செண்பகவல்லி அணைக்கட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி செண்பகவல்லி ஆற்றில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியா மதகு கட்டப்பட்டு மேடான தமிழகப் பகுதிக்குள் தண்ணீர் திருப்பப்பட்டது. இந்தத் தண்ணீரின் மூலம் வாசுதேவநல்லூர், சிவகிரி, சங்கரன்கோவில், மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சாத்தூர் வரை விவசாய நிலங்கள் பயனடைந்தன. 1976-ம் ஆண்டு கனமழையில், கன்னியா மதகு இடிந்தது. அதனால் தமிழகப் பகுதிக்கு வரக்கூடிய நீர்வரத்து நின்றுபோனது. 

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, கன்னியா மதகில் ஏற்பட்ட பழுதைச் சரிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த மதகு இருக்கும் பகுதியானது கேரள வனப்பகுதிக்குள் இருப்பதால், கேரள அரசிடம் 5 லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்கியது. ஆனால், மதகு சீரமைப்புப் பணியை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்திய கேரள அரசு, 2006-ம் ஆண்டு பணத்தை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டது. கன்னியா மதகு சீரமைக்கப்படாததால் நெல்லை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 25,000 ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக மாறிவிட்டன. அதனால் இந்த மதில் ஏற்பட்டுள்ள உடைப்பைச் சரிசெய்து விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம் என்பது தென்காசி வரை நீண்டது. மிகப்பெரிய தொகுதியாக இருக்கிறது. இதே நிலைதான் விருதுநகர் மாவட்டத்துக்கும். இதனால் தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை. இதை எந்த அரசும் இதுவரை பரிசீலிக்கக்கூட இல்லை.

தற்போதைய நிலவரப்படி கட்சிகளின் செல்வாக்கு என்ன?

தென்காசி தொகுதியில் கடந்த முறை அ.தி.மு.க வேட்பாளர் வசந்தி முருகேசன் 1,61,774 வாக்குகள் வித்தியாசத்தில் டாக்டர் கிருஷ்ணசாமியை வென்றார். இந்த முறை அ.தி.மு.க கூட்டணியிலேயே கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். அதுவும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஏற்கெனவே ஐந்து முறை இந்தத் தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய அவர் இந்த முறை எப்படியும் வென்றாக வேண்டும் என இரட்டை இலையைத் தேர்வு செய்துள்ளார். இது அவருக்குக் கூடுதல் பலம்தான் என்றாலும், தோல்வி பயத்தின் காரணமாகவே அவர் இரட்டை இலையில் போட்டியிடுகிறார் என எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். இது கிருஷ்ணசாமிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியிருக்கிறது. 

தி.மு.க வேட்பாளராகத் தனுஷ்குமார் நிறுத்தப்பட்டுள்ளார். அ.தி.மு.க, பா.ஜ.க மீதான அதிருப்தி இவருக்கு ப்ளஸ். அதேபோல், தொகுதியில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் வாக்குகளும் பெருவாரியாக இருக்கின்றன. கூட்டணி வாக்குகளும் சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளும் தி.மு.க வேட்பாளருக்குப் ப்ளஸ். 

அ.ம.மு.க வேட்பாளர் பொன்னுத்தாய் கணிசமான வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடிப்பார் என்ற கருத்தும் உள்ளது. அ.தி.மு.க வாக்குகளை அ.ம.மு.க வேட்பாளர் பொன்னுத்தாய் கணிசமாகப் பிரிக்கும் நிலை உருவாகியிருக்கிறது. இது கிருஷ்ணசாமிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். நாம் தமிழர் கட்சிக்கு ஒரு சில இடங்களில் செல்வாக்கு இருக்கும் நிலையில், அந்தக் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளரான மதிவாணனும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். 

இப்படியும் ஒரு எம்.பி!

கடந்த முறை இந்தத் தொகுதியில் அ.தி.மு.க-வின் வசந்தி முருகேசன் வெற்றிபெற்றார். வெற்றிபெற்ற பிறகு, தொகுதிப் பக்கமே அவர் தலைகாட்டவில்லை. நன்றி அறிவிப்பு கூட்டமும் நடத்தவில்லை. அமைச்சர் கலந்துகொள்ளும் அரசு விழாக்களில் மட்டுமே தவறாது கலந்துகொள்வார். தனியாக எந்தவொரு விழாவையும் அவர் நடத்தியது கிடையாது. சிவகிரி அருகில் விஸ்வநாதபேரி என்ற கிராமத்தை தத்தெடுத்தார் வசந்தி. அந்தக் கிராமத்துக்கே தத்தெடுக்கும் விழாவின்போது சென்று பார்த்தாரே தவிர, அதன் பிறகு எட்டிக்கூட பார்க்கவில்லை. இது அ.தி.மு.க வேட்பாளர் கிருஷ்ணசாமிக்கு பெரும் மைனஸ். 

பிரசாரத்தில் என்ன நடக்கிறது?

`தென்காசி பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தொழிற்சாலைகளைக் கொண்டு வருவேன்' என வாக்குறுதிகளை முன்வைக்கிறார் கிருஷ்ணசாமி. தொகுதியில் பட்டியலின மற்றும் முக்குலத்தோர் வாக்குகள் அதிகம். பட்டியலினத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற கிருஷ்ணசாமி தொடர்ச்சியாகக் கூறி வந்தது அவரது சமூக மக்களிடையே சிலரிடம் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அவருக்கு மைனஸ். இதை அறிந்துகொண்ட கிருஷ்ணசாமி, அந்த விவகாரத்தைப் பற்றியே பேசுவதில்லை. மேலும், முக்குலத்தோர் சமூகத்தைப் பொறுத்தவரை கிருஷ்ணசாமி எதிர்ப்பு மனநிலையிலேயே உள்ளனர். அவர்கள் சில இடங்களில் கிருஷ்ணசாமியின் பிரசாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேபோல் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க தரப்பிலும் போதிய ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. அமைச்சர் ராஜலட்சுமி மட்டுமே கிருஷ்ணசாமிக்காக ஆதரவு திரட்டி வருகிறார். 

தி.மு.க வேட்பாளர் தனுஷ்குமாரோ `சென்ட் தொழிற்சாலை கொண்டு வருவேன், நான்கு வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பேன்' என மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். இவருக்கும் சமூக பலம் இருக்கிறது. கூடவே, கிருஷ்ணசாமியை எதிர்க்கும் முக்குலத்தோர் வாக்குகளும் கணிசமாக இவருக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தனுஷ்குமார் தந்தையின் நண்பர் என்பதால் பழைய பாசத்தில் இறங்கி வேலை பார்த்து வருகிறார். 

அ.ம.மு.க வேட்பாளர் பொன்னுத்தாய் அ.தி.மு.க வாக்குகளை குறிவைத்து வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் தொகுதியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மக்களிடம் உறுதியான வாக்குறுதிகளைக் கொடுத்து வருகிறார். கூடவே தொகுதியில் இருக்கும் முக்குலத்தோரிடம் இருக்கும் டி.டி.வி.தினகரனின் செல்வாக்கு, பண பலம் ஆகியவற்றை நம்பிக் களத்தில் வேலை செய்து வருகிறார்.

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள் எவை? 

1. கூட்டணி பலம்.
2. பிரசார யுத்தி.
3. பண பலம்.
4. வேட்பாளர்களின் வாக்குறுதிகள்.
5. தலைவர்களின் பிரசாரம்.

தென்காசி நாடாளுமன்றத் தனித் தொகுதியில், பட்டியலின மக்களின் வாக்குகள் கிருஷ்ணசாமிக்குக் கணிசமாகக் கிடைத்து வந்த நிலையில், இந்த முறை தி.மு.க வேட்பாளர் அந்த வாக்குகளில் கை வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணசாமியைத் தவிர்த்து மற்றவர்கள் பணத்தை அள்ளி வீசி வருகின்றனர். இந்த முக்கோண மோதலில், `தென்காசியில் தடம் பதிக்கப்போவது யார்?' என்பதற்கான விடை வாக்கு எண்ணிக்கை நாளில் தெரிந்துவிடும்