Published:Updated:

மும்மதங்களின் சங்கமம்; சிவத்துரோகம்; 27 சதவிகித வாக்கு! - ராமநாதபுரம் தொகுதி நிலவரம் என்ன?

மும்மதங்களின் சங்கமம்; சிவத்துரோகம்; 27 சதவிகித வாக்கு! - ராமநாதபுரம் தொகுதி நிலவரம் என்ன?

பணப்பட்டுவாடா, தேர்தல் கால வாக்குறுதிகளைத் தாண்டி ராமநாதபுரம் தொகுதிக்குள் ஏணி சின்னத்துக்கு ஏற்றம் கிடைக்குமா... தாமரை மலருமா?

மும்மதங்களின் சங்கமம்; சிவத்துரோகம்; 27 சதவிகித வாக்கு! - ராமநாதபுரம் தொகுதி நிலவரம் என்ன?

பணப்பட்டுவாடா, தேர்தல் கால வாக்குறுதிகளைத் தாண்டி ராமநாதபுரம் தொகுதிக்குள் ஏணி சின்னத்துக்கு ஏற்றம் கிடைக்குமா... தாமரை மலருமா?

Published:Updated:
மும்மதங்களின் சங்கமம்; சிவத்துரோகம்; 27 சதவிகித வாக்கு! - ராமநாதபுரம் தொகுதி நிலவரம் என்ன?

தொகுதி: ராமநாதபுரம்

அறந்தாங்கி, திருவாடானை, பரமக்குடி (தனி), முதுகுளத்தூர், ராமநாதபுரம், திருச்சுழி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது 

மும்மதங்களின் சங்கமம்:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொடங்கி விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வரை நீண்ட பரப்பைக் கொண்டது. இந்துக்களின் புனித தலமாக விளங்கும் ராமேஸ்வரம், இஸ்லாமியர்களின் பிரசித்திபெற்ற ஏர்வாடி தர்ஹா, கிறிஸ்துவர்களின் பெருமைமிகு ஓரியூர் அருளானந்தர் ஆலயம் என மும்மதங்களின் சங்கமமாக விளங்குகிறது. ஒருபுறம் கடல் நீரால் சூழப்பட்டு இருந்தாலும் மறுபுறம் வானம் பார்த்த பூமியாகக் காய்ந்து கிடக்கிறது. தொகுதியின் மேற்குப் பகுதிகளில் விளையும் மிளகாய்க்கு, சந்தைகளில் தனி இடம் உண்டு. ஓரளவு கை கொடுக்கும் மீன்பிடித் தொழிலும் நாளுக்கு நாள் கையைவிட்டு நழுவிக்கொண்டே இருக்கிறது. இதனால் தொகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பிழைப்புக்காக வெளிநாடுகளிலும் வெளிமாநிலங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். 

ஒரு காலத்தில் தனுஷ்கோடி, தொண்டி, வாலிநோக்கம் போன்ற வர்த்தகத் துறைமுக நகரங்கள் இருந்த பகுதி. இப்போது இந்த அடையாளங்களைக்கூட தோண்டி எடுத்துப் பார்க்கும் நிலை உள்ளது. இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒருவருக்கு ஒருவர் உறவு முறை சொல்லி வாழும் பகுதி. மீனவர் குடும்பத்தில் மகனாகப் பிறந்து தனது உழைப்பாலும் அறிவாலும் இந்தியாவின் அக்னி நாயகனாக உருவெடுத்து, பின்னர் ஜனாதிபதியாகப் பதவி வகித்து, மாணவர்கள் மத்தியிலேயே வாழ்நாளைக் கழித்த டாக்டர் அப்துல்கலாம் பிறந்த ஊர் இது. 

மரண தண்டனை கொடுத்த சிவத் துரோகம்:

1730-களில் ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆட்சி செய்தார் மன்னர் முத்து விஜயரகுநாத சேதுபதி. இவரின் மகள்கள் சீனி நாச்சியார், லெட்சுமி நாச்சியார். இவர்கள் இருவரையும் தண்டத் தேவர் என்பவர் மணமுடித்திருந்தார். அக்கால கட்டத்தில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ராமேஸ்வரம் கோயிலுக்கு சிவ பக்தர்கள் வந்துள்ளனர். இந்தப் பக்தர்கள், மண்டபம் தோணித்துறை பகுதிக்கும் பாம்பன் பகுதிக்கும் இடையில் உள்ள பாம்பன் வராவதி (கால்வாய்)யைக் கடக்க படகில் செல்ல வேண்டும். இந்தப் படகு வசதியை சிவ பக்தர்களுக்காக மன்னர் முத்து விஜயரகுநாத சேதுபதி இலவசமாக செய்து கொடுத்திருந்தார். ஆனால், இப்பணியை நிர்வகித்த தண்டத் தேவரோ படகில் செல்பவர்களிடம் கட்டணம் வசூலித்து அவற்றை இறைபக்தர்களின் நலனுக்குச் செலவிட்டுள்ளார். தான் அறிவித்த இலவச சேவைக்குக் கட்டணம் வசூலித்ததன் மூலம் சிவத் துரோகம் செய்துவிட்டதாகக் கருதிய மன்னர் முத்து விஜயரகுநாத சேதுபதி, தன் மகள்களின் கணவர் என்றும் பாராமல் தண்டத் தேவருக்கு மரண தண்டனை வழங்கினார். தண்டத் தேவர் உயிரிழந்த செய்தியை அறிந்த சீனி நாச்சியாரும் லெட்சுமி நாச்சியாரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். இவர்களின் நினைவாகத் தங்கச்சி மடம், அக்காள் மடம் என இரு ஊர்கள் இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறது.

சுயேச்சையின் ஆதிக்கம்:

சுதந்திரத்துக்குப் பின் நடந்த 3 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் கையில் இருந்த ராமநாதபுரம் தொகுதியை 1967 தேர்தலில் ஷெரிஃப் என்ற சுயேச்சை வேட்பாளரிடம் பறிகொடுத்தது. 71-ல் ஃபார்வர்ட் பிளாக் வேட்பாளர் மூக்கையா தேவரிடம் இழந்தது காங்கிரஸ். 77-ல் அ.தி.மு.க-வும் 80-ல் தி.மு.க-வும் வென்றன. 1984, 1989, 1991 தேர்தல்களில் மீண்டும் காங்கிரஸ் வசம் வந்தது. 1996 தேர்தலில் த.மா.கா வென்றது. 1998, 1999 தேர்தல்களில் அ.தி.மு.க வசம் இருந்த தொகுதியை 2004 மற்றும் 2009 தேர்தல்களில் தி.மு.க வென்றது. அதிலும் 2009 தேர்தலில் தி.மு.க-வில் யார் என்றே தெரியாமல் இருந்த ஜெ.கே.ரித்தீஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் தொகுதிக்குள் கரன்ஸி கட்டுக்களால் முன்னாள் அமைச்சரான அ.தி.மு.க-வின் சத்தியமூர்த்தியைத் தோற்கடித்தார். கடந்த தேர்தலில் அன்வர்ராஜா தொகுதியின் எம்.பி ஆனார். தமிழக வாக்காளர்களின் ஒட்டுமொத்த மனநிலையைப் பிரதிபலிக்கும் நகராக, ராமநாதபுரம் இருக்கிறது. 

முடங்கிய குடிநீர்த் திட்டங்கள்: 

குடிநீர் பற்றாக்குறை பிரதான பிரச்னை. பொதுவாகவே, வறட்சிப் பகுதியாக அறியப்படுகிற ராமநாதபுரத்தில் குடிநீர் பஞ்சம் தீர்க்கப்படாத ஒன்றாகவே இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு கடந்த தி.மு.க. ஆட்சியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்தை முழுமையாகக் கொண்டு செல்வதற்கு அ.தி.மு.க அரசு ஆர்வம் காட்டவில்லை. தெற்குப் பகுதியில் உள்ள கடலாடி, முதுகுளத்தூர் போன்ற பகுதிகளில் கடும் நீர்த்தட்டுப்பாடு நிலவி வருகிறது. தி.மு.க ஆட்சியின்போது நரிப்பையூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இது ஓரளவுக்கு குடிநீர் தட்டுப்பாட்டை சமாளித்து வந்தது. ஆனால் இதையும் ஆளும் அரசு சரிவர கவனிக்காததால் முடங்கிப்போயுள்ளது. 

விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீட்டுத் திட்டதுக்கான கடந்த ஆண்டு பணமும் இன்னும் வந்துசேரவில்லை. பெரிய அளவில் தொழில்வளம் இல்லாத இந்தத் தொகுதியில் விவசாயத்தை நம்பி சிலர் வாழ்ந்து வருகின்றனர். மழையில்லாமல் விவசாயம் பொய்த்துப்போனதால் இப்போது அவர்களும் கஷ்டத்தில் உள்ளனர். இப்படியான நிலையில் பயிர்க் காப்பீட்டுத் தொகைக்கான பணத்தை நிறுத்தி வைத்துள்ளது ஆளும் அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பயிர்க் காப்பீட்டுத் தொகைக்காகத் தினமும் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் விவசாயிகள்.

கனவாகிப்போன கச்சத்தீவு:

1974-ல் இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவு நீண்டகால பிரச்னையாகவே உள்ளன. இதனால், இலங்கை கடற்படையால் மீனவர்கள் தினந்தோறும் பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். வருகின்ற ஒவ்வோர் அரசும் இலங்கை பிரச்னை தீர்க்கப்படும் என்று வாக்குறுதிகளை அளிக்கிறார்களே தவிர, அதைச் செயல்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. `தினமும் நடக்கும் மீனவர்கள் கைது, மீனவர்கள் மீது தாக்குதல் போன்ற செய்திகள் இவர்கள் கண்ணில்படுகிறதா இல்லையா..?' என்று மீனவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுபோக கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டமும் தொகுதியின் நீண்ட கால பிரச்னைகள். 

விவசாயமும் பொய்த்துப் போய்விட்டது. ஒரு தொழிற்சாலைகூட குறிப்பிட்டு சொல்லும்படியாக இங்கு இல்லை. இதனால் இங்குள்ள பலரும் பிழைப்பைத் தேடி வெளிநாடுகளுக்குப் போக வேண்டும் என்றாலும், திருச்சி அல்லது சென்னைக்குத்தான் போக வேண்டியுள்ளது. இதனால், ராமநாதபுரம் அருகே விமான நிலையம் கொண்டு வர வேண்டும் என்பது பல ஆண்டு கோரிக்கை. இதுவும் மத்திய, மாநில அரசுகளால் கண்டுகொள்ளப்படாமலே இருந்து வருகிறது. அதேபோல் தூத்துக்குடியிலிருந்து ராமநாதபுரம் வழியாகக் காரைக்குடிக்கு கிழக்குக் கடற்கரை சாலையில் ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. தொகுதியில் போட்டியிடும் ஒவ்வொருவரும் இதைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப் போராடுவேன் எனக் கூறுவார்கள். ஆனால், அதற்கான அறிகுறியே இல்லை. 

கட்சிகளின் செல்வாக்கு? 

தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவுடன் களத்தில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளராகத் தனியார் கூரியர் கம்பெனி உரிமையாளர் நவாஸ்கனி போட்டியிடுகிறார். அவருக்கென தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு இல்லை. கூட்டணியின் பலம், இஸ்லாமிய மற்றும் பட்டியலின மக்கள், கண்ணப்பனின் வரவால் கிடைக்கும் யாதவர் சமுதாய வாக்குகள் இவற்றுடன் பண விநியோகம் ஆகியவற்றுடன் முன்னணி வகிக்கிறார் நவாஸ். தி.மு.க-வில் நிலவும் உட்கட்சி பூசல் மட்டுமே பெரிய மைனஸ். அ.தி.மு.க கூட்டணி சார்பில் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பசையான வேட்பாளர் வேண்டும் என்பதற்காகவே நெல்லையிலிருந்து நயினாரைக் களமிறக்கியிருக்கிறார்கள். இது உள்ளூர் பா.ஜ.க-வுக்குள் புகைச்சலை உருவாக்கியுள்ளது. அமைச்சர் மணிகண்டனின் நடவடிக்கைகளால் அ.தி.மு.க-வும் பல கோஷ்டிகளாகப் பிரிந்து கிடக்கிறது. 

வெளித் தோற்றத்துக்காக எல்லோரும் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாலும், உள்ளுக்குள் ஒவ்வொரு கோஷ்டியும் தனித்தனி அஜென்டாவுடன் இயங்குகின்றனர். இதனால் யாரை நம்பி பணத்தை செலவு செய்வது எனத் தெரியாமல் பா.ஜ.க வேட்பாளர் திணறுகிறார். அ.ம.மு.க வேட்பாளராக ஆனந்த் போட்டியிடுகிறார். தொகுதியில் அதிக அளவு முக்குலத்தோர் உள்ளதால் அ.ம.மு.க-வுக்கு சமுதாய ரீதியிலான வாக்குகள் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. இதனால் தாமரைக்கும் - பரிசு பெட்டகத்துக்கும் இடையில் கடும் மோதல் நிலவுகிறது. அ.ம.மு.க-வுக்கு அறந்தாங்கி, திருவாடானை, முதுகுளத்தூர், ராமநாதபுரம் பகுதிகளில் கணிசமான வாக்கு வங்கி உள்ளது ப்ளஸ். இவர் வாங்கும் ஒவ்வொரு வாக்கும் தாமரையின் வெற்றிக்கு இடையூறாக மாறலாம். மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் விஜயபாஸ்கரும் தொகுதிக்குப் புதியவர். இவரும் நாம் தமிழர் வேட்பாளர் புவனேஸ்வரியும் களத்தில் பின்தங்கியுள்ளனர். 

தொகுதியில் சுமார் 27 சதவிகித பட்டியல் இன வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் ஆகியோர் இங்கு நேரடியாகக் களம் இறங்கவில்லை. இதனால் இவர்களுக்கு ஆதரவு வாக்குகள் எதிர் அணிக்கே செல்ல வாய்ப்புள்ளது.

ஏப்ரல் 18 வாக்குப் பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள் 

1. பண விநியோகம்.
2. மத வேறுபாடு.
3. பிரதான கட்சிகளுக்குள் நிலவும் உள்ளடி வேலைகள்.
4. மத்திய, மாநில ஆட்சிகளுக்கு எதிரான மனநிலை.
5. இளைஞர்களின் பங்களிப்பு. 

பிரசாரத்தில் என்ன நடக்கிறது?

பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், நேரடியாகச் சென்று வாக்காளர்களைச் சந்திக்காமல், ஆங்காங்கே பிரசாரம் செய்துவிட்டுச் சென்று விடுகிறார்கள். எந்த வேட்பாளரும் கீழ்மட்ட அளவில் இறங்கி பிரசாரம் செய்யவில்லை. கட்சிக்காரர்கள் ஏற்பாடு செய்து இருக்கும் இடத்தில் பேசிவிட்டுச் சென்றுவிடுகின்றனர். இருப்பினும், தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளின் பூத் கமிட்டிகளுக்குத் தாராளமாக இறைக்கப்பட்டதால், உற்சாகத்துடன் வேலை செய்கின்றனர். பா.ஜ.க, அ.ம.மு.க ஆகிய கட்சிகளும் தங்கள் பங்குக்குப் பணத்தைச் செலவு செய்கின்றனர். 

பணப்பட்டுவாடா, தேர்தல் கால வாக்குறுதிகளைத் தாண்டி தொகுதிக்குள் ஏணி சின்னத்துக்கு ஏற்றம் கிடைக்குமா... தாமரை மலருமா என்ற கேள்விகளுக்கான விடை, வாக்கு எண்ணிக்கை நாளில் தெரிந்துவிடும்.