Published:Updated:

செங்கோட்டையன் வியூகம்; கணேசமூர்த்தி கலக்கம்; பூத்துக்கு 1 லட்சம்! - ஈரோட்டில் வெற்றி யாருக்கு?

ஈரோடு தொகுதியில் ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள் எவை?

செங்கோட்டையன் வியூகம்; கணேசமூர்த்தி கலக்கம்; பூத்துக்கு 1 லட்சம்! - ஈரோட்டில் வெற்றி யாருக்கு?
செங்கோட்டையன் வியூகம்; கணேசமூர்த்தி கலக்கம்; பூத்துக்கு 1 லட்சம்! - ஈரோட்டில் வெற்றி யாருக்கு?
செங்கோட்டையன் வியூகம்; கணேசமூர்த்தி கலக்கம்; பூத்துக்கு 1 லட்சம்! - ஈரோட்டில் வெற்றி யாருக்கு?

தொகுதி: ஈரோடு

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கயம், தாராபுரம், குமாரபாளையம் என 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

பெரியார், ராமானுஜம், குமரன்! 

தமிழகத்துக்கு சுயமரியாதையையும் பகுத்தறிவையும் கற்றுத்தந்த ஈ.வெ.ரா. பிறந்த மண். ஈரோட்டிலிருந்து வெளியான பெரியாரின் ‘குடிஅரசு’ இதழில் பணியாற்றி, பெரியாரிடம் அரசியல் பாடம் பயின்ற கருணாநிதியை உருவாக்கியதும் இதே மண்தான். ‘கணித மேதை' சீனிவாச ராமானுஜத்தை உருவாக்கிய பெருமை ஈரோட்டுக்கு உண்டு. ஆங்கிலேயர்களின் அடியை எதிர்கொண்டு இறுதிவரையில் சுதந்திரக் கொடியை கீழேவிடாமல், தாங்கிப் பிடித்து ‘வந்தே மாதரம்’ என ஓங்கி ஒலித்து உயிர்துறந்த கொடிகாத்த ‘திருப்பூர் குமரன்’ பிறந்ததும் இதே மண்ணில்தான்.

செங்கோட்டையன் வியூகம்; கணேசமூர்த்தி கலக்கம்; பூத்துக்கு 1 லட்சம்! - ஈரோட்டில் வெற்றி யாருக்கு?

3 மாவட்டங்களின் சங்கமம்! 

ஈரோடு மக்களவைத் தொகுதியின் எல்லை 3 மாவட்டங்கள் வரை பரவியிருக்கிறது. ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் ஈரோடு மாவட்டத்திலும், காங்கேயம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் திருப்பூர் மாவட்டத்திலும், குமாரபாளையம் தொகுதி நாமக்கல் மாவட்டத்திலும் வருகின்றன. கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்கள், சிறு குறு ஜவுளி வியாபாரிகள், சாய ஆலைத் தொழிலாளர்கள், விவசாயிகள் என பல தரப்பினரும் இந்தத் தொகுதியில் நீக்கமற நிறைந்திருக்கின்றனர். ஈரோடு மக்களவைத் தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக பட்டியலின சமுதாயத்தவரும் செங்குந்த முதலியார், வன்னியர், வேட்டுவக் கவுண்டர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர். சாதி ஒழிப்புக்காகவும் சமூக சமத்துவத்துக்காகவும் போராடிய பெரியார் பிறந்த மண்ணில், மூன்று முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்களும் கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது ஹைலைட். 

ஈரோடு மஞ்சள், சென்னிமலை போர்வை! 

மஞ்சள் மற்றும் ஜவுளித்தொழிலுக்கு பெயர் பெற்றது ஈரோடு. இங்கு கைத்தறி, விசைத்தறி மற்றும் ஆயத்த ஆடைகள் அதிகளவில் தயாரிக்கப்பட்டு, உலகின் பல இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இத்தொகுதியில் அமைந்துள்ள சென்னிமலையில் தயாரிக்கப்படும் போர்வைகள் மிகவும் பிரபலம். மஞ்சள் மாநகரம் எனப்படும் ஈரோட்டில் மஞ்சள், நெல், கரும்பு போன்றவை அதிகளவில் பயிரிடப்படுகின்றன. ஆனால், ஈரோடு என்றாலே மஞ்சள்தான் என்ற பெருமையை உடையது. சமீபத்தில்தான் ஈரோடு மஞ்சளுக்குப் புவிசார் குறியீடு கிடைத்தது. 

செங்கோட்டையன் வியூகம்; கணேசமூர்த்தி கலக்கம்; பூத்துக்கு 1 லட்சம்! - ஈரோட்டில் வெற்றி யாருக்கு?

கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம் என்ற பெருமையை உடைய சென்னிமலை முருகன் கோயில் அமைந்திருக்கிறது. மலை மீதுள்ள இக்கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து பொதிகாளைகள் மூலம் படிக்கட்டுகள் வழியாக தீர்த்தம் கொண்டு செல்லப்படுவது எங்கும் காணக்கிடைக்காத ஆச்சர்யம். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில் ஒன்றான திண்டல் முருகன் கோயிலும் இங்கு அமைந்திருக்கிறது. அதேபோல், பிரம்மா, சிவன், பெருமாள் ஆகிய மூவரும் அருள்பாலிக்கும் மும்மூர்த்திகள் தலமான கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலும் இங்குதான் அமைந்திருக்கிறது. திருமணத் தடை, குழந்தை வரம், ராகு-கேது தோஷம் மற்றும் நாக தோஷம் ஆகியவை நீங்க இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா எனப் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

1,033 வேட்பாளர்கள்! 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் 1,033 விவசாயிகள் தேர்தலில் போட்டியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். தேர்தல் ஏற்பாட்டுக்காக இந்த ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தலைத் தள்ளி வைத்தது ஆணையம். 60 பக்கம் கொண்ட வாக்குச்சீட்டு புத்தகத்தைத் தேர்தல் கமிஷன் அச்சிட்டது. 1,033 விவசாயிகளுக்கும் சின்னத்தை ஏற்பாடு செய்ய முடியாமல் திணறியது தேர்தல் ஆணையம். 60 பக்க வாக்குச்சீட்டுப் புத்தகத்தில் தாங்கள் வாக்களிக்க விரும்பும் வேட்பாளர்களைத் தேடிப்பிடித்து வாக்களித்து பொதுமக்களையும் சோர்வடையச் செய்தனர் விவசாய வேட்பாளர்கள். 

செங்கோட்டையன் வியூகம்; கணேசமூர்த்தி கலக்கம்; பூத்துக்கு 1 லட்சம்! - ஈரோட்டில் வெற்றி யாருக்கு?

அ.தி.மு.க. கோட்டையில் ம.தி.மு.க.! 

2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது ஈரோடு மக்களவைத் தொகுதி உருவானது. அதற்கு முன்பு வரை திருச்செங்கோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. 1951-ம் ஆண்டிலிருந்து 2004-ம் ஆண்டு வரை திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி சந்தித்த 14 தேர்தல்களில் தி.மு.க, அ.தி.மு.க தலா ஐந்து முறையும், காங்கிரஸ் இரண்டு முறையும், ம.தி.மு.க மற்றும் சுயேச்சை தலா ஒருமுறையும் வென்றிருக்கின்றனர். ஈரோடு மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டு 2009-ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கணேசமூர்த்தி வெற்றி பெற்று ஈரோட்டின் முதல் எம்.பி என்ற பெருமையைப் பெற்றார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த செல்வகுமார சின்னையன் வெற்றி பெற்றார். தற்போது தி.மு.க கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் ம.தி.மு.க-வின் கணேசமூர்த்தி. 

ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம் ஆகிய நான்கு தொகுதிகளில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் காங்கேயத்தில் அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏ தனியரசுவும் உள்ளனர். தாராபுரத்தில் மட்டும்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ இருக்கிறார். ஆக, கடந்த கால தேர்தல் வரலாறுகளின் மூலம் ஈரோடு அ.தி.மு.க-வின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

செங்கோட்டையன் வியூகம்; கணேசமூர்த்தி கலக்கம்; பூத்துக்கு 1 லட்சம்! - ஈரோட்டில் வெற்றி யாருக்கு?

விளைநிலங்களில் உயர்மின் கோபுரம்! 

1. ஜி.எஸ்.டி வரியால் ஜவுளித்தொழிலை சார்ந்துள்ள சிறு, குறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

2. விவசாய விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பது மற்றும் விளைநிலங்களில் குழாய் அமைத்து பெட்ரோலியப் பொருள்கள் கொண்டு செல்லும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

3. கீழ்பவானி பாசனப் பகுதிகள் மற்றும் காலிங்கராயன் பாசனப் பகுதிகளுக்கு நீர் திறப்பதில் நீடித்து வரும் சிக்கல்.

நடுவழியில் நிறுத்தப்பட்ட ரிங் ரோடு! 

1. தோல், சாய ஆலைக் கழிவுகளால் குடிநீர் ஆதாரங்கள் மாசடைந்து புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான பொது சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்க வேண்டுமென்பது நீண்டகால கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், இன்று வரை இந்தப் பிரச்னை தீர்க்கப்படவில்லை.

2. நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை உள்ளது எனக் கூறி, பாதியில் நிற்கும் ரிங் ரோடு பணிகளால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகின்றனர். 

3. ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகம் மற்றும் காய்கறி, பழங்களுக்கான பொது குளிரூட்டும் நிலையங்கள் போன்றவை விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைகள். 

செங்கோட்டையன் வியூகம்; கணேசமூர்த்தி கலக்கம்; பூத்துக்கு 1 லட்சம்! - ஈரோட்டில் வெற்றி யாருக்கு?

பூத்துக்கு 1 லட்ச ரூபாய்! 

தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க ஆகிய மூன்று முக்கிய பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுமே கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மற்றும் தி.மு.க கூட்டணி ஆகியவை கணேசமூர்த்திக்கான ப்ளஸ்கள். உள்ளூர்வாசி, விவசாயிகளுக்கு நெருக்கமானவர் என ம.தி.மு.க மீதான அலை வீசிக்கொண்டிருக்கிறது. அதேநேரம், கட்சி நிர்வாகிகளுக்குக் கரன்ஸியைக் காட்டாதது, பெயரளவுக்கு நடக்கும் பிரசாரம், கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பின்மை போன்றவை உதயசூரியனுக்கான பெரிய மைனஸ்கள். 

இதற்கு நேர்மாறாக, அ.தி.மு.க வேட்பாளரான மணிமாறனுக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பணனின் தீவிரமான பிரசாரமும் தொகுதியில் அள்ளி வீசப்படும் கரன்சியும் பெரும் பலம். ஆனால், காங்கேயத்திலிருந்து இறக்குமதியான வேட்பாளர் என்பதால், மணிமாறனை லோக்கல் கட்சி நிர்வாகிகளே ஏற்றுக்கொள்ள யோசிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், சீட் கிடைக்காத விரக்தியில் உள்ள சீனியர் நிர்வாகிகளும் சத்தமில்லாத உள்ளடி வேலைகளைச் செய்கின்றனர். மகனுக்கு சீட் கிடைக்காத கோபத்தில் முகத்தில் கடுகடுப்போடு வேலை செய்து வருகிறார் கே.வி.ராமலிங்கம். எம்.எல்.ஏ-க்கள் மீதுள்ள அதிருப்தி ஆகியவை மணிமாறனின் மைனஸ்கள். 

செங்கோட்டையன் வியூகம்; கணேசமூர்த்தி கலக்கம்; பூத்துக்கு 1 லட்சம்! - ஈரோட்டில் வெற்றி யாருக்கு?

தி.மு.க-வில் பூத் கமிட்டிக்கு வெறும் 5,000 கொடுத்து வரும் நிலையில், அ.தி.மு.க தரப்பிலோ பூத் கமிட்டிக்கு ஒரு லட்சம் கொடுத்திருப்பது நிர்வாகிகளை உற்சாகமாக வேலை பார்க்க வைத்திருக்கிறது. அ.ம.மு.க-வின் பிரசாரத்தால், அ.தி.மு.க தரப்பில் அதிர்ச்சி தென்படுகிறது. இதை தனக்கான ப்ளஸ்ஸாகப் பார்க்கிறார் கணேசமுர்த்தி. 

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள்?

1. கொங்கு வேளாளர் சமுதாயம் மற்றும் பட்டியலின மக்களின் வாக்கு.

2. உள் கட்சி பூசல். 

3. பணப்பட்டுவாடா.

4. விவசாயிகள் மற்றும் ஜவுளித் தொழிலாளர்களின் ஆதரவு.

5. வேட்பாளர்களின் பிரசாரம்.

லஞ்சம் வாங்காத எம்.பி! 

கணேசமூர்த்திக்கு ஆதரவாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஈரோட்டில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மொடக்குறிச்சி பகுதியில் பேசிய கணேசமூர்த்தி, “மொடக்குறிச்சி தொகுதிக்கு 1977-ல் தி.மு.க எம்.எல்.ஏ-வாக வந்தவன் நான். தொடர்ந்து உங்களுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை ஏற்றுக்கொண்டிருக்கிற லட்சியத்தில் உறுதி என்கின்ற கோட்பாட்டின் அடிப்படையில் என்னுடைய அரசியல் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கிறேன். யாரிடமும் கை நீட்டியதில்லை. சுத்தமானவனாக இருந்து வருகிறேன்" என்று சொல்ல, கூட்டத்திலிருந்து, 'நீங்கள் சொல்வது 100 சதவிகிதம் உண்மை' என்ற குரல் பலமாக எழுந்தது. மக்கள் மத்தியிலிருந்து எழுந்த இந்த ஆதரவைக் கேட்டு கலங்கிய கணேசமூர்த்தி பேச முடியாமல் திக்கித்து நின்றார். உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கிய நிலையில் மேற்படி பேச முடியாமல் மைக்கை வைகோவிடம் கொடுத்தார். 

செங்கோட்டையன் வியூகம்; கணேசமூர்த்தி கலக்கம்; பூத்துக்கு 1 லட்சம்! - ஈரோட்டில் வெற்றி யாருக்கு?

அதே நேரம், கொங்கு மண்டலம் அ.தி.மு.க-வின் கோட்டையாகத் திகழ்கிறது. ஈரோடு தொகுதியில் அமைச்சர்களின் தீவிர பிரசாரமும் தேர்தல் வாக்குறுதிகளும் மணிமாறனுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அதேநேரம், விவசாய விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பது, விவசாய விளைநிலங்களில் பெட்ரோலிய குழாய்களைப் பதிப்பது போன்றவற்றால் ஆளும் அ.தி.மு.க ஆட்சியின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். இதைச் சரிசெய்வதே அமைச்சர்களுக்கான மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. இவை அனைத்தையும் தாண்டி உதயசூரியன் உதிக்குமா...  இலை மலருமா எனத் தீவிர பட்டிமன்றமே நடந்து வருகிறது.