Published:Updated:

திருப்பம் `தி.மு.க'; கரன்ஸி அ.தி.மு.க; எ.வ.வேலு சீக்ரெட்! - திருவண்ணாமலையில் இலையா... சூரியனா? 

தி.மு.க-வை சேர்ந்த வேட்பாளர் அண்ணாதுரையோ, முத்துகுமாரசாமி தற்கொலையை மக்களிடம் எடுத்து சொல்லி வாக்கு கேட்டு வருகிறார். `அரசியல் வாழ்க்கைக்கு வாழ்வா சாவா..?' என தீர்மானிக்கும் தேர்தலாக இருப்பதால், தொகுதி மக்களிடம் வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார் அக்ரி.

திருப்பம் `தி.மு.க'; கரன்ஸி அ.தி.மு.க; எ.வ.வேலு சீக்ரெட்! - திருவண்ணாமலையில் இலையா... சூரியனா? 
திருப்பம் `தி.மு.க'; கரன்ஸி அ.தி.மு.க; எ.வ.வேலு சீக்ரெட்! - திருவண்ணாமலையில் இலையா... சூரியனா? 

தொகுதி: திருவண்ணாமலை

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம்(தனி), கலசப்பாக்கம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. 

பஞ்சபூதங்களில் ஒன்று!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னியின் வடிவமாகப் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் கார்த்திகை தீபத்துக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கத்தை எழுப்பி வருகை தருகின்றனர். திருவண்ணாமலையைச் சுற்றி 14 கி.மீ தூரம் கிரிவலம் வருவது சிறப்பு. 

திருவண்ணாமலை திருப்பம்! 

தி.மு.க. வரலாற்றில் மிக முக்கியமான தொகுதி திருவண்ணாமலை. தி.மு.க. என்கிற கட்சி தொடங்கப்பட்டபோது, முதன்முதலில் 1957-ம் ஆண்டு எதிர்கொண்ட நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதியில் தி.மு.க வெற்றி பெற்றது. அதில், திருவண்ணாமலையும் ஒன்று. அந்தத் தேர்தலில் தர்மலிங்கம் வெற்றி பெற்றார். அன்று முதல் தற்போது வரை தி.மு.க.-வின் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக இருந்து வருகிறது.

தி.மு.க. கோட்டையில் வனரோஜா!

திருவண்ணாமலை தொகுதி 1971 தேர்தலின்போது திருப்பத்தூர் தொகுதியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு நடந்த தேர்தல்களில், 1977-ல் தி.மு.க சி.என்.விஸ்வநாதன், 1980-ல் தி.மு.க முருகையன், 1984, 1989, 1991-ல் காங்கிரஸின் ஜெயமோகன் வெற்றி பெற்றார். அதன்பிறகு 1996, 1998, 1999, 2004 எனத் தொடர்ச்சியாக 4 முறை தி.மு.க-வைச் சேர்ந்த வேணுகோபால் வெற்றி பெற்றார். அதன் பிறகு 2009-ல் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இதில் திருப்பத்தூர் மக்களவைத் தொகுதி  நீக்கப்பட்டு, மீண்டும் திருவண்ணாமலை தொகுதியாகவே உருவானது. அந்தத் தேர்தலில் தி.மு.க-வின் வேணுகோபால் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ம.க.-வைச் சேர்ந்த காடுவெட்டி குரு இரண்டாம் இடம் வந்தார். 2014-ல் அ.தி.மு.க-வைச் சேர்ந்த வனரோஜா வெற்றி பெற்றார். அவர் அரசியல் அனுபவம் இல்லாதவர். ஜெயலலிதாவுக்காக மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்தார்கள். 

தொகுதியின் தலையாய பிரச்னை.

1. சாத்தனூர் அணையைத் தூர்வார வேண்டும், மத்திய அரசின் நிதியுதவியோடு பெரிய சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை.

2. நந்தன் கால்வாயை சீரமைத்துத் தூர் வாரவேண்டும் என்பது முக்கியமான பிரச்னை.

விவசாயி டு கொத்தனார்! 

1. திருவண்ணாமலை நகரத்தை இணைத்துக்கொண்டு செல்லும் திண்டிவனம் டு கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்றன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இந்தப் பணியும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. பல போராட்டங்களை நடத்தியும் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை.

2. மேல் செங்கத்தில் மத்திய அரசின் விதைப்பண்ணை செயல்பட்டு வந்தது. நிர்வாக குளறுபடியால் அதுவும் மூடப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான நிலம் எந்தவிதப் பயன்பாடு இல்லாமல் வீணாக உள்ளது. அந்த இடத்தில் சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. 

3. பிரதான தொழில் விவசாயம் மட்டுமே. நிலத்தடி நீரை மட்டுமே நம்பி விவசாயம் நடக்கும் பகுதி. ஒரு குறிப்பிட்ட பகுதி விவசாய நிலங்களுக்கு மட்டும் சாத்தனூர் அணையின் நீர் பாசனத்துக்கு வந்து சேருகிறது. விவசாயம் இல்லாத காலங்களில் இப்பகுதி மக்கள், பெங்களூரூ, சென்னை போன்ற பெருநகரங்களுக்குக் கொத்தனார் வேலைக்குச் செல்கின்றனர். இங்குள்ள ஏரிகள் கால்வாய்கள் தூர் வாரப்படாமல் இருப்பதால் விவசாயப் பணிகள் முடங்கிக் கிடக்கிறது. 

கட்சிகளின் செல்வாக்கு? 

2014 தேர்தலில் தி.மு.க.சார்பில் போட்டியிட்ட சி.என்.அண்ணாதுரையே இந்த முறையும் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மொத்தப் பணத்தையும் இறக்கியதால், இந்த முறை செலவுக்குப் பணமில்லாமல் தவித்து வருகிறார். மீண்டும் தேர்தலில் நிறுத்தப்பட்டதற்கு முக்கியக் காரணம் எ.வ.வேலு. தன் மகன் கம்பனுக்கு சீட் வாங்கிவிடலாம் என முதலில் நினைத்தார் எ.வ.வேலு. கட்சி நிர்வாகிகளும் அப்படித்தான் நினைத்தார்கள். ஆனால், யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதில் குழப்பமான மனநிலையில் இருந்ததால், கம்பனை நிறுத்தும் முடிவில் இருந்து பின்வாங்கிவிட்டார் எ.வ.வேலு. அதனால்தான் மீண்டும் அண்ணாதுரைக்கே லக் அடித்தது. இருப்பினும், அண்ணாதுரைக்காக எ.வ.வேலு கரன்ஸிகளைக் கண்ணில் காட்டுவாரா என்பதற்கான விடையும் தெரிந்தபாடில்லை. 

அ.தி.மு.க. வேட்பாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி களமிறங்கியிருக்கிறார். திருநெல்வேலி மாவட்ட வேளாண் உதவிச் செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமிக்கு அப்போது அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி குடைச்சல் கொடுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார். இதன் காரணமாக, அரசியலைவிட்டே அக்ரியை ஓரம்கட்டினார் ஜெயலலிதா. `அரசியல் வாழ்க்கைக்கு வாழ்வா சாவா..?' என தீர்மானிக்கும் தேர்தலாக இருப்பதால், தொகுதி மக்களிடம் வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார் அக்ரி. உட்கட்சி அதிருப்தியாளர்களையும் கரன்ஸியால் சரிக்கட்டி வருவதால், இலைக்கும் சூரியனுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. 

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள்?

1. விவசாயிகளுக்கு எதிரான எட்டுவழிச் சாலை

2. அ.தி.மு.க கோஷ்டி மோதல்

3. பணப்பட்டுவாடா

4. வேட்பாளர்களின் பிரசாரம்

5. கட்சிகளின் செல்வாக்கு

பிரசாரத்தில் என்ன நடக்கிறது?

மாவட்டத்திலேயே எ.வ.வேலுவுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்கும் ஒரே நபர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. சிட்டிங் எம்.பி வனரோஜா தொகுதிக்கு எதையுமே செய்யவில்லை என்பது அக்ரிக்கு மைனஸ். ஆனால், `வனரோஜா செய்யாதது அனைத்தையும் நான் கண்டிப்பாகச் செய்கிறேன்' எனத் தொகுதி மக்களை சமாதானப்படுத்தி வருகிறார் அக்ரி. கரன்ஸி கவனிப்புகளால் தொகுதியைக் குளிர்வித்து வருகிறார். அதேநேரம், தி.மு.க-வைச் சேர்ந்த வேட்பாளர் அண்ணாதுரையோ, முத்துக்குமாரசாமி தற்கொலையை மக்களிடம் எடுத்து சொல்லி வாக்கு கேட்டு வருகிறார். திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், திருப்பத்தூர் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகள் தி.மு.க. வசம் இருப்பது அண்ணாதுரைக்குப் ப்ளஸ்ஸாக அமையலாம். 

பிரதானக் கட்சிகளின் வேட்பாளர்கள் ஒரேமாதிரியான வாக்குறுதிகளை அள்ளி வீசினாலும், அக்ரியா.... அண்ணாதுரையா என முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் திருவண்ணாமலை மக்கள்.