Published:Updated:

காந்தியின் அஞ்சலை; மோடியின் நல்லாட்சி; கரன்ஸி சப்ளை!  - கடலூரைக் கைப்பற்றப் போவது யார்?

காந்தியின் அஞ்சலை; மோடியின் நல்லாட்சி; கரன்ஸி சப்ளை!  - கடலூரைக் கைப்பற்றப் போவது யார்?
காந்தியின் அஞ்சலை; மோடியின் நல்லாட்சி; கரன்ஸி சப்ளை!  - கடலூரைக் கைப்பற்றப் போவது யார்?

கூட்டணி பலம், சாதிய ஓட்டு எனக் கடலூரின் வெற்றி வேட்பாளர் யார் என்பதற்கான விடையை அறிந்துகொள்ளக் காத்திருக்கின்றனர் தொகுதிவாசிகள். 

தொகுதி: கடலூர் 

கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி என 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது

அருட்பெருஞ்சோதியின் கருணை! 

`வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என உலகுக்கு அன்பை போதித்த அருட்பெருஞ்சோதி ராமலிங்க அடிகளார் பிறந்த மண். வடலூர் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் பிறந்தவர். இறைவன் ஜோதி வடிவில் இருக்கிறார் என்பதை எடுத்துரைக்கும் வகையில், சத்திய ஞானசபையை நிறுவினார். ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்க, தர்மசாலையை நிறுவினார். அன்று முதல் இன்று வரை அணையா நெருப்பின் மூலம் ஏழைகளின் பசி தீர்க்கப்பட்டு வருகிறது. மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி பெற்றதாகவும் தகவல் உண்டு. அவரது மரணம் குறித்த குழப்பம் இன்றளவும் தீர்க்கப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது. 

ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் மிகச் சிறந்த கடல் வாணிபத்தலமாக விளங்கியது கடலூர். தமிழகத்தின் தலைநகராகச் சிலகாலம் இருந்ததாகவும் தகவல் உண்டு. மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாகும். சிப்காட் தொழிற்சாலைகள், நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் ஆகியவை இம்மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. பண்ருட்டி பலாப்பழம், முந்திரி வெகு பிரபலம். பாடலீஸ்வரர் கோயில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர், திருவந்திபுரம் தேவநாதசாமி ஆகியவை பிரசித்திபெற்ற கோயில்கள். 

காந்தியை வியக்கவைத்த அஞ்சலை!

வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த காலம் அது. இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும் இருக்கும் சுதந்திரம் மறுக்கப்பட்ட அந்த நாள்களில் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டவர் அஞ்சலையம்மாள். கடலூர் முதுநகரில் பிறந்த அஞ்சலையம்மாள் காந்தியடிகளில் ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். போராட்டமே வாழ்க்கை எனக் கொண்டவர். தன்னுடைய பெரும்பாலான நாள்களை சிறைவாசத்திலே கழித்தவர். 1927-ம் ஆண்டு நீலன் சிலை அகற்றும் போராட்டம், உப்பு சத்தியாகிரகம், தனிநபர் சத்தியாகிரகம் எனப் பல போராட்டங்களில் ஈடுபட்டார். கடலூர், திருச்சி, வேலூர் என இவர் கால்படாத சிறைகளே இல்லை. 1932-ம் ஆண்டு வேலூர் சிறையில் அஞ்சலையம்மாள் இருந்தபோது அவர் நிறைமாத கர்ப்பிணி. பிரசவத்துக்காகப் பரோலில் வெளியில் வந்தார். குழந்தை பிறந்ததும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இவரின் மன தைரியத்தை காந்தியே வியந்து பாராட்டியிருக்கிறார். 

நீலன் சிலை அகற்றம் போராட்டத்தில் தன் 9 வயது மகள் அம்மா கண்ணுவோடு சேர்ந்து போராட்டம் செய்தார். தாயும் மகளும் சிறை சென்றனர். அம்மாக்கண்ணு காந்தியடிகளின் மனதை வென்றார். அவருக்கு லீலாவதி எனப் பெயர் சூட்டி தனது வார்தா ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டார் காந்தி. சொந்த வீட்டை அடமானம் வைத்து காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். மூன்று முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்திருக்கிறார். 

காங்கிரஸ் கோட்டை! 

கடலூரில் காங்கிரஸ் கட்சி அதிகமுறை வெற்றி பெற்றுள்ளது. இதுவரை நடந்த 16 நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள் மாறி, மாறி வெற்றி பெற்றுள்ளன. த.மா.கா. வேட்பாளர் ஒருமுறையும் சுயேச்சை வேட்பாளர் ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளனர். இங்கு தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் சம பலத்தில் உள்ளன. அதேபோல் பா.ம.க., தே.மு.தி.க, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கும் கணிசமான வாக்குகள் உள்ளன. 

தொகுதியின் தற்போதைய தலையாய பிரச்னை?

1. ஹைட்ரோ கார்பன் திட்டம் 
2. என்.எல்.சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்துக்குக் நிலம் கையகப்படுத்துவது
3. தண்ணீர் பற்றாக்குறை

நீண்டகால பிரச்னைகள்? 

ஆங்கிலேயர் காலத்தில் கடல் வாணிபத்தளமாக இருந்ததாக வரலாறு கூறுகிறது. ஆனால், அதற்கான சுவடுகளே தற்போது இல்லை. மாவட்டத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிற்சாலைகள் இல்லை என்பது நீண்டகாலக் குறை. வளர்ச்சித் திட்டங்கள் ஏதும் இல்லாமல் பின்தங்கிய மாவட்டமாகவே உள்ளது. என்.எல்.சிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டபோது மக்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும் என வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால், அதற்கான எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. 

தற்போதைய நிலவரப்படி கட்சிகள் செல்வாக்கு என்ன? 

கடலூர் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க வேட்பாளராக டாக்டர்.கோவிந்தசாமி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்துத் தி.மு.க-வில் தொழிலதிபர் ரமேஷ் போட்டியிடுகிறார். மாவட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு கட்சிகளும் சம பலத்தில் உள்ளன. பா.ம.க வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி, கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க ஆதரவுடன் தேர்தல் பணி, பிரசாரம் செய்து வருகிறார். தி.மு.க. தரப்பிலோ, இன்னும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளையே ஒருங்கிணைக்காமல் உள்ளனர். தேர்தல் பணிக்காக பணத்தை இறக்காததால், தி.மு.க. உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். மறுபுறம், அ.ம.மு.க, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்களும் தீவிரமாகத் தேர்தல் வேலை பார்த்து வருகின்றனர். 

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள்!  

1. பணப்பட்டுவாடா

2. கூட்டணி கட்சியினரின் ஒருங்கிணைப்பின்மை

3. வேட்பாளர்களின் சொந்த செல்வாக்கு

4. சாதி பலம்

5. மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்பு

பிரசாரத்தில் என்ன நடக்கிறது? 

பா.ம.க. வேட்பாளர் டாக்டர் ஆர். கோவிந்தசாமி தனது பிரசாரத்தில், "மத்தியில் நிலையான பாதுகாப்பான ஆட்சியை மோடியால்தான் தர முடியும். தமிழக அரசு கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி நல்லாட்சி செய்து வருகிறது. கடலூர் தொகுதியில் வேலைவாய்பை உருவாக்கும் புதிய தொழிற்சாலைகளைக் கொண்டு வருவேன். மத்தியிலும் மாநிலத்திலும் நல்லாட்சி தொடர எனக்கே வாக்களியுங்கள்" என்கிறார். தி.மு.க வேட்பாளர் ரமேஷ், "நீட் தேர்வை ரத்து செய்வோம், கல்விக் கடன் ரத்து செய்யப்படும். மீண்டும் மாநில பட்டியலுக்குக் கல்வியைக் கொண்டு வருவோம். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.6,000 ஆயிரம் வீதம் வருடத்துக்கு ரூ.72,000 தரப்படும்" என வாக்குறுதி அளிக்கிறார். கூட்டணி பலம், சாதிய ஓட்டு எனக் கடலூரின் வெற்றி வேட்பாளர் யார் என்பதற்கான விடையை அறிந்துகொள்ளக் காத்திருக்கின்றனர் தொகுதிவாசிகள். 

அடுத்த கட்டுரைக்கு