Published:Updated:

தி.மு.க 3.5 லட்சம், ம.தி.மு.க 2 லட்சம், அ.தி.மு.க? - காஞ்சிபுரம் தொகுதி வெற்றி நிலவரம்

தி.மு.க 3.5 லட்சம், ம.தி.மு.க 2 லட்சம், அ.தி.மு.க? - காஞ்சிபுரம் தொகுதி வெற்றி நிலவரம்
தி.மு.க 3.5 லட்சம், ம.தி.மு.க 2 லட்சம், அ.தி.மு.க? - காஞ்சிபுரம் தொகுதி வெற்றி நிலவரம்

காஞ்சிபுரம் தொகுதியில் ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் காரணிகள் என்னென்ன?

தொகுதி: காஞ்சிபுரம் (தனி)

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், உத்திரமேரூர், செய்யூர்(தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

வேடந்தாங்கலும் முதலைப் பண்ணையும்! 

பல்லவர்களின் தலைநகர் காஞ்சிபுரம். ‘நகரேஷு காஞ்சி’ எனப் போற்றப்படும் ஆன்மிகம் இழைந்தோடும் கோயில் நகரம். சைவம், வைணவம் சார்ந்த கோயில்கள் அதிகம் கொண்ட நகரம். அதுபோல் காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் உலகப் புகழ் பெற்றவை. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மாமல்லபுரம் தொல்லியல் சின்னங்கள், வண்டலூர் உயிரியல் பூங்கா, முதலைப் பண்ணை, கிழக்குக் கடற்கரை சாலை என சுற்றுலாத்தலங்கள் நிறைந்த பகுதி. உலகுக்கே தேர்தல் முறையை அறிமுகப்படுத்திய சோழர்கள் ஆண்ட உத்தரமேரூர் இந்தத் தொகுதியில் இடம் பெற்றிருக்கிறது. வேலூர் மாவட்டம் வழியாக காஞ்சிபுரம் வரும் பாலாறு காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக கல்பாக்கம் அருகே உள்ள வாயலூர் கடலில் கலக்கிறது. பாலாறு இந்தத் தொகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கிறது.   

ஜெ,.வின் வடக்கு சென்டிமென்ட்! 

திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்த அண்ணாதுரை பிறந்த ஊர். 1967-ம் ஆண்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று அரியணையில் ஏறினார். மதராஸ் மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றிய பெருமைக்குரியவர். இந்தத் தொகுதியில் போட்டியிடும் திராவிடக் கட்சிகள், அண்ணா பெயரை முன்னிறுத்தியே பிரசாரம் செய்வது வழக்கம். திராவிடக் கட்சிகளின் சென்டிமென்ட் தொகுதியாகப் பார்க்கப்படுகிறது. வடக்கு நோக்கிய பயணம் என்பதால் கடந்த தேர்தலில் காஞ்சியில் இருந்தே சென்டிமென்டாகப் பிரசாரத்தைத் தொடங்கினார் ஜெயலலிதா. இதன் காரணமாகவே, 37 தொகுதிகளைக் கைப்பற்றியதாகப் பேச்சு உள்ளது. 

முடங்கிய பட்டுப் பூங்கா! 

தயாநிதி மாறன் மத்திய ஜவுளித் துறை அமைச்சராக இருந்தபோது, காஞ்சிபுரத்தில் பட்டுப் பூங்கா திட்டத்தை செயல்படுத்தினார். ஆனால், இன்னும் செயல்படாமலேயே உள்ளது. இதனால் அப்பகுதியில் பட்டு நெசவுத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாலாற்றில் தடுப்பணை இல்லாததால் வெள்ள நீர் வீணாக கடலில் கலக்கிறது. `பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்' என்ற நீண்டநாள் கோரிக்கையை ஏற்று `காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் தடுப்பணை கட்டப்படும்' என அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அறிவிப்பு செய்து ஒரு வருடம் கழிந்த நிலையில் வாயலூர், வல்லிபுரம் என இரண்டு இடங்களில் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக அடிக்கல் நாட்டினார்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்போரூர் போன்ற பகுதிகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் சென்னையில் வேலை செய்கிறார்கள். சென்னைக்கு எளிதில் சென்று வரமுடியாத அளவுக்குப் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. போதிய ரயில் இல்லாதது, சாலைகளை அகலப்படுத்தாதது, பத்து ஆண்டுகளாகச் சில மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்படாதது என போக்குவரத்து நெருக்கடிகளால் தினம்தினம் அவதிப்படுகின்றனர் மக்கள். 

செய்யூரில் 24,000 கோடி ரூபாயில் அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் பல ஆயிரம் பேருக்கு நேரடியாகவும்  மறைமுகமாகவும் வேலை கிடைக்கும். செங்கல்பட்டு நகரத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டுவந்தும் செயல்படுத்த முடியாமல் பல ஆண்டுகளாக கிடப்பிலேயே இருக்கிறது. தொடர்ந்து நிதி ஒதுக்கப்படுவதும் திட்டம் செயல்படுத்தப்படாமல் போவதும் தொடர்வதால் இப்பகுதி மக்கள் கொசு பிரச்னையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் மூடப்படுவதால் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. அதுபோல் பன்னாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் இருப்பதால் விவசாயத்துக்கான ஆட்கள் கிடைப்பதில்லை. 

தனி மாவட்டக் கோரிக்கை! 

ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டம் அண்ணா மாவட்டம், எம்.ஜி.ஆர் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. தற்போது காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டமாக அவை இருக்கின்றன. காஞ்சிபுரம்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஒரத்தி, சூணாம்பேடு, செய்யூர், கேளம்பாக்கம் போன்ற பகுதிகளில் இருந்து செல்ல வேண்டுமானால் குறைந்தது நான்கு பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. செங்கல்பட்டை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம்  ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

கடைசி வேட்பாளர்; அதிசய வெற்றி! 

தமிழக மக்களின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்ப இந்தத் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க என மக்களின் மனநிலை மாறும். வன்னியர்கள், தலித்துகள், முதலியார் சமூகங்கள் கணிசமாக வாழ்கின்ற பகுதி. பா.ம.க.வும் வி.சி.க.வும் தங்களுக்கென வாக்குவங்கியை வைத்துள்ளன. வன்னியர்கள் நிரம்பியிருப்பதால், இத்தொகுதியைக் கேட்டுப் பெறுவதை வழக்கமாக வைத்திருந்தது பா.ம.க. இங்கு பா.ம.க.-வைச் சேர்ந்த ஏ.கே.மூர்த்தி 1999, 2004 ஆகிய நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறார். 2009 தேர்தலில் இந்தியாவிலேயே கடைசியாக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளரான பெ.விஸ்வநாதன் குறைந்த நாள்கள் மட்டுமே பிரசாரம் செய்து வெற்றிபெற்றார். 

கடந்த முறை அ.தி.மு.க சார்பில் மரகதம் குமரவேலும் தி.மு.க சார்பில் `சிறுவேடல்’ செல்வமும் போட்டியிட்டனர். அதே வேட்பாளர்கள் இந்த முறையும் எதிரெதிராகக் களம் காண்கிறார்கள். வெற்றிக்குப் பிறகு தொகுதிப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை என்பதால் செய்யூர் போன்ற பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அ.ம.மு.க வேட்பாளர் பிரிக்கப் போகும் வாக்குகளையும் பிளஸ்ஸாகப் பார்க்கிறது தி.மு.க. 

தீர்மானிக்கும் ‘டாப்-5’ காரணிகள்!

1. அ.தி.மு.க வேட்பாளர் மரகதம் குமரவேல் தொகுதிப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை என்ற குமுறல்.

2. கணிசமான வாக்கு வங்கி வைத்திருக்கும் பா.ம.க., அ.தி.மு.க கூட்டணியில் இருப்பது அ.தி.மு.கவுக்குப் பலம். பா.ம.க-வினர் உற்சாகமாகக் களவேலை பார்த்தாலும் உட்கட்சி அதிருப்தி மைனஸ். 

3. விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க மற்றும் கம்யூனிஸ்டுகளின் வாக்குகள் சிதறாமல் கிடைப்பது தி.மு.கவுக்குப் பலம். அதுபோல் கல்பாக்கம், கோவளம் பகுதியில் உள்ள சிறுபான்மை வாக்குகளும் சிறுவேடல் செல்வத்தின் பிளஸ். 

4. பணப்பட்டுவாடா.

5. அ.தி.மு.க. உட்கட்சி பிரச்னை, தினகரனின் பிரசாரம்.

பிரசாரத்தில் என்ன நடக்கிறது? 

பாலாற்றில் தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டியதை சாதனையாகக் கூறுகிறார் அ.தி.மு.க வேட்பாளர் மரகதம் குமரவேல். "பட்டுப் பூங்கா அமைப்பேன், பாலங்கள் கட்டிக் கொடுப்பேன்" என வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். தி.மு.க.விலும் இதே வாக்குறுதிகளை முன்வைக்கிறார் செல்வம். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 4.99 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் செல்வம் 3.5 லட்சம் வாக்குகளும் ம.தி.மு.க வேட்பாளர் மல்லை சத்யா 2 லட்சம் வாக்குகளையும் பெற்றனர். காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது. இந்த முறை அணிகள் மாறிவிட்டன. `இந்தக் கூட்டல், கழித்தல் கணக்குகள் மூலம் உதயசூரியன் உதிக்குமா... இலை மலருமா?' என்பதற்கான விடையை வாக்கு எண்ணிக்கை நாளில் அறிந்து கொள்ளலாம். 

அடுத்த கட்டுரைக்கு