Published:Updated:

`இறக்குமதி' மோகன்; `கோலிக்குண்டு' காளியம்மாள்; பிளட் டெஸ்ட்!  - வடசென்னையைக் கைப்பற்றப் போவது யார்?

`இறக்குமதி' மோகன்; `கோலிக்குண்டு' காளியம்மாள்; பிளட் டெஸ்ட்!  - வடசென்னையைக் கைப்பற்றப் போவது யார்?
`இறக்குமதி' மோகன்; `கோலிக்குண்டு' காளியம்மாள்; பிளட் டெஸ்ட்!  - வடசென்னையைக் கைப்பற்றப் போவது யார்?

வட சென்னை தொகுதியில் ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் காரணிகள் எவை?

தொகுதி: வடசென்னை

திருவெற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர், கொளத்துார், திரு.வி.க. நகர், ராயபுரம் என 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

எங்க ஊரு மெட்ராஸு!

‘எங்க ஊரு மெட்ராஸ்... அதுக்கு நாங்கதானே அட்ரஸ்’... சென்னையின் அடையாளமே வடசென்னைதான். சென்னை என்றால் உங்கள் நினைவுக்கு வரும், அடுக்குமாடி குடியிருப்புகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், போக்குவரத்து நெரிசல், சொகுசுக் கார்கள், ஐ.டி நிறுவனங்கள், மெட்ரோ ரயில்கள் ஆகியவற்றின் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கிறது வடசென்னை. மண்ணின் மைந்தர்கள் என்பதற்கான அடையாளமே இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். வறுமையின் அடையாளமாக இருக்கும் மக்களை உள்ளடக்கியது. தினக்கூலிகள் அதிகம். ‘சென்ன பட்டணம்’ என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகள் இப்போதும் வடசென்னை தொகுதிக்குள்தான் உள்ளன. கால்பந்து விளையாட்டு, வடசென்னை இளைஞர்களின் உயிர்மூச்சு. கேரம் விளையாட்டில் அகில இந்திய அளவில் சாதனை படைத்தவர்கள் நிரம்பி வழியும் பகுதி. இன்றைக்கு வெற்றிகரமான திரைப்படங்களாக அறியப்படும் வடசென்னை, மெட்ராஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் எல்லாம் வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டவை. 

`கஞ்சித் தொட்டி' மணியக்காரர்! 

200 வருடங்கள் பழைமையான ஸ்டான்லி மருத்துவமனை, வடசென்னை வாசிகளின் வாழ்வோடு இரண்டரக் கலந்துவிட்டது. ஆசியாவின் மிகப் பழைமையான மருத்துவமனைகளில் ஒன்று ஸ்டான்லி. வடசென்னை வாசிகளால் ‘கஞ்சித்தொட்டி மருத்துவமனை’ என ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. 1782-ம் ஆண்டில் மணியக்காரர் என்ற செல்வந்தர் ராயபுரத்தில் வசித்து வந்தார். பஞ்சம் தலைவிரித்தாடிய காலகட்டம் அது. சிற்சில போர்களும் நடைபெற்றதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். போர் வீரர்கள், மக்களுக்கு உணவளிக்க தனது தோட்டத்தில் ஒரு சத்திரத்தைக் கட்டினார் மணியக்காரர். அங்கு பல நாள்கள் கஞ்சி வழங்கப்பட்டதால் நாளடையில் அந்த இடம் கஞ்சித்தொட்டி எனப் பெயர் பெற்றது. 

ஆங்கிலேயர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மருத்துவர்கள் இருந்தனர். ஆனால், சென்னையின் பூர்வகுடிகளுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை. அவர்கள் நாட்டு மருத்துவத்தையே நம்பி இருந்தனர். 1799-ம் ஆண்டில் ‘ஜான் அண்டர்வுட்’ என்ற மருத்துவர், சிறிய மருத்துவமனையைத் தொடங்கினார். இதை உள்ளூர்வாசிகள் கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்றே அழைத்தார்கள். 1808-ம் ஆண்டில் அந்தச் சத்திரத்தையும் மருத்துவமனையையும் ஆங்கில அரசு ஏற்று நடத்தியது. பின்னர், 1910-ம் ஆண்டில் அரசுடைமையாக்கப்பட்டது. பிறகு, ‘ராயபுரம் மருத்துவமனை’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1933-ம் ஆண்டில், அப்போது சென்னை மாகாண ஆளுநராக இருந்தவர் ஜார்ஜ் ஃபிரெடரிக் ஸ்டான்லி, மருத்துவக் கல்லூரியை ஆரம்பித்தார். அதுவே ஸ்டான்லியாக உருமாற்றம் அடைந்தது. 

தொகுதியின் அரசியல் வரலாறு! 

வடசென்னை ஒரு காலத்தில் தி.மு.க-வின் கோட்டையாக வர்ணிக்கபட்டது. நாஞ்சில் மனோகரன், செ.குப்புசாமி, ஆசைத்தம்பி எனப் பலரும் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர். டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்ற ஆர்.கே.நகரும் ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள கொளத்துார் தொகுதியும் வடசென்னைக்குள்தான் வருகின்றன. தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க எளிதாக வெற்றிபெறும் தொகுதிகளில் முதலிடத்தில் இருப்பது வடசென்னை. கடந்த முறை அ.தி.மு.க வேட்பாளர் வெங்கடேஷ்பாபு வெற்றி பெற்றார். வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராயபுரம், ஆர்.கே.நகர் உள்ளிட்ட பகுதிகள் அ.தி.மு.க செல்வாக்குள்ள தொகுதிகள். 

குடிநீரில் சாக்கடை! 

1.தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் சுற்றுசூழல் சார்ந்த பிரச்னைகள் உள்ளன. 

2.மீனவர்கள் பிரச்னை.

3.குடிநீரில் கழிவுநீர் கலப்பது.

தொகுதியின் நீண்டகால பிரச்னை என்ன..?

சென்னையில் சேகரிக்கபடும் ஒட்டுமொத்த குப்பைகளும் கொட்டப்படும் பகுதியாக கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு உள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 270 ஏக்கர். இங்கே ஒரு நாளைக்கு 2,100 முதல் 2,300 மெட்ரிக் டன் வரை குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதன் அருகில் வசிக்கும் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இதனால் இந்தப் பகுதி பெண்களின் திருமணமும் தள்ளிப்போகிறது. ஈக்களின் பெருக்கமும் சூழல் சீர்கேடும் கொடுங்கையூரின் அவலம். இதற்கான நிரந்தரத் தீர்வை வாக்குறுதிகளாக மட்டுமே அரசியல் கட்சிகள் முன்வைக்கின்றன. 

`இறக்குமதி' வேட்பாளர்! 

தி.மு.க வேட்பாளராகக் களத்தில் நிற்கிறார் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி. தே.மு.தி.க வேட்பாளராக அழகாபுரம் மோகன்ராஜைக் களமிறக்கிவிட்டுள்ளனர். சேலத்திலிருந்து வடசென்னைக்கு இறக்குமதி செய்யபட்டவர் என்பது பெரிய மைனஸ். இவருக்காக உழைப்பதற்கு அ.தி.மு.க தயாராக இருக்கிறது. அ.ம.மு.க சார்பில் மாவட்ட செயலாளராக இருக்கும் சந்தானகிருஷ்ணன் களத்தில் நிற்கிறார். பணத்தை இறைக்க பலமுறை யோசிக்கிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி மௌரியா களத்தில் நிற்கிறார். நேரடி போட்டியில் தி.மு.க-வும் தே.மு.தி.க-வும் இருக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள், சிறுவர்களுடன் கோலிக்குண்டு விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு களத்தைக் கலகலப்பூட்டி வருகிறார். 

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் ’டாப்-5’ காரணிகள்?

1. சிட்டிங் எம்.பி வெங்கடேஷ் பாபு மீதான அதிருப்தி.

2. அ.தி.மு.க -பி.ஜே.பி கூட்டணிக்கு எதிரான மனநிலை.

3. தே.மு.தி.க வேட்பாளர் மீதான வெளியூர் இமேஜ்.

4. சாதி வாக்குகள் .

5. பணப்பட்டுவாடா.

தென்சென்னையில், `வடசென்னை' ஜெயக்குமார்! 

வடசென்னையில் தி.மு.க-வினர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க தலைவர் ஸ்டாலினும் இங்கு பிரசாரத்தை முடித்துவிட்டார். மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்பை, தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு வலம் வருகிறார் கலாநிதி. "தி.மு.க வீட்டு விளக்கு. அ.தி.மு.க வீட்டை கொளுத்தும் நெருப்பு. அந்த நெருப்புக்கு டெல்லியில் இருந்து எண்ணெய் ஊற்றிக்கொண்டிருக்கிறார் மோடி. இவர்களுக்கா நீங்கள் வாக்களிக்கப்போகிறீர்கள்?" எனப் பிரசாரத்தில் கொந்தளித்தார் ஸ்டாலின். வாரிசு அரசியல் குறித்து எழுந்த சலசலப்புக்கும் அந்தக் கூட்டத்திலேயே அவர் பதில் அளித்தார். "தி.மு.க வேட்பாளர்கள் தகுதியானவர்களா என விவாதம் செய்யுங்கள். ஆனால், ரத்தப் பரிசோதனை செய்ய யாருக்கும் உரிமை இல்லை" என்றார் நிதானமாக. 

வடசென்னையில் தே.மு.தி.க-வுக்கு எனக் கட்டமைப்பு இல்லை. அ.தி.மு.க-வை நம்பியே களமிறங்கியிருக்கிறார். அமைச்சர் ஜெயக்குமாரின் ராயபுரம் தொகுதி வடசென்னையில்தான் உள்ளது. ஆனால், அவரோ தன் மகனுக்காகத் தென்சென்னையில் பிரசாரம் செய்துவருகிறார். அ.தி.மு.க நிர்வாகிகளும் அதிகம் ஆர்வம் காட்டாததால் தேர்தல் வியூகங்களை வகுக்க முடியாமல் தே.மு.தி.க-வினர் திணறி வருவது மைனஸ். கடைசிநேர பணப்பட்டுவாடாவும் பிரசார முறைகளுமே வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதால், உதயசூரியனா... முரசு சின்னமா என்பதை வாக்கு எண்ணிக்கை நாளில் தெரிந்துவிடும். 

அடுத்த கட்டுரைக்கு