Published:Updated:

பொன்முடி யுத்தம்; `1.50 லட்சம்' தே.மு.தி.க; `அதிர்ச்சி' அ.ம.மு.க!  - சுதீஷ் Vs கௌதம சிகாமணி

பொன்முடி யுத்தம்; `1.50 லட்சம்' தே.மு.தி.க; `அதிர்ச்சி' அ.ம.மு.க!  - சுதீஷ் Vs கௌதம சிகாமணி
பொன்முடி யுத்தம்; `1.50 லட்சம்' தே.மு.தி.க; `அதிர்ச்சி' அ.ம.மு.க!  - சுதீஷ் Vs கௌதம சிகாமணி

சுதீஷ், கௌதம சிகாமணி இருவருக்கும் தொகுதியில் இருக்கும் அத்தனை பலத்தையும் தாண்டி சிக்கலை ஏற்படுத்துவது அவரவர் கட்சிகளின் உட்கட்சிப்பூசல் தான். இந்தச் சவாலை அவர்கள் எப்படிச் சமாளிக்கப்போகிறார்கள்?

தொகுதி: கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ( தனி) கெங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (எஸ்.டி) என 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. 

மாறுபட்ட பூகோள அமைப்பு! 

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி பிற மக்களவைத் தொகுதியில் இருந்து வேறுபட்டு நிற்கிறது. காடுகள், மலைகள், குன்றுகள், வறட்சி, வயல்கள், ஆறுகள் என மாறுபட்ட புவியியல் அமைப்பைப் பெற்றுள்ள நகரம். பட்டியலினத்தவர், வன்னியர், பழங்குடியினர், உடையார்கள், கார்காத்த வேளாளர்கள், கொங்கு வேளாளக் கவுண்டர்கள், நாயுடு இன மக்கள் என பல்வேறு சமூகங்களை உள்ளடக்கிய தொகுதி. முஸ்லிம், கிறிஸ்துவ மக்களின் வாக்குகளும் கணிசமாக உள்ளது. நிலம், மக்கள், தொழில், நிர்வாகம் என பன்முகத் தன்மையைக் கொண்டது கள்ளக்குறிச்சி. 

தமிழகத்தின் வடக்கு மண்டலத்தில் சேலம் டு சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய விழுப்புரம் மாவட்டத்தின் ஓர் அங்கமாக விளங்குகிறது கள்ளக்குறிச்சி. இதைப் புதிய மாவட்டமாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு. ஆனால், இன்னும் செயல்வடிவம் பெறாமல் புதிதாய்ப் பிறந்த குழந்தையைப்போல இருக்கிறது. 1967, 1971 ஆகிய இரண்டு மக்களவைத் தேர்தல்களில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி இருந்தது. அந்த இரண்டு தேர்தல்களிலும் தி.மு.க.வைச் சேர்ந்த தெய்வீகம், எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு மறுசீரமைப்பின் காரணமாக கடலூர், ராசிபுரம் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்தது. மீண்டும் 2009 தொகுதி மறுசீரமைப்பில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. 

வாக்குவங்கியைத் தக்கவைத்த தே.மு.தி.க! 

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி 2009-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்படி உருவாக்கப்பட்டது. தமிழகத்திலேயே 4 தனிச் சட்டமன்ற தொகுதிகளையும் அதிக கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்களை உள்ளடக்கியது. ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகள் விழுப்புரம் மாவட்டத்திலும் கெங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் சேலம் மாவட்டத்திலும் வருகின்றன. 

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற முதல் தேர்தலில் தி.மு.க சார்பாக போட்டியிட்ட ஆதிசங்கர் 3,63,601 வாக்குகளும், பா.ம.க சார்பில் போட்டியிட்ட தனராசு 2,54,993 வாக்குகளையும் பெற்றனர். இவர்களை எதிர்த்து தே.மு.தி.க சார்பில் போட்டியிட்ட எல்.கே.சுதீஷ் 1,32,223 வாக்குகளையும் பெற்று மூன்றாம் இடத்துக்கு வந்தார். இதன்மூலம் மக்களுக்குப் பரிச்சயமான முகமானார் சுதீஷ். அடுத்து 2014 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பாக போட்டியிட்ட  காமராஜ் 5,33,383 வாக்குகளையும் தி.மு.க சார்பாகப் போட்டியிட்ட மணிமாறன் 3,09,876 வாக்குகளையும் தே.மு.தி.க சார்பாகப் போட்டியிட்ட ஈஸ்வரன் 1,64,183 வாக்குகளையும் பெற்றனர். இதன்மூலம் தே.மு.தி.க இத்தொகுதியில் கணிசமான வாக்குவங்கியை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. 

தற்போது கள்ளக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க சார்பாக எல்.கே.சுதீஷும் தி.மு.க. சார்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம சிகாமணியும் அ.ம.மு.க. சார்பில் கோமுகி மணியனும் களமிறங்கியுள்ளனர். மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கணேஷ் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 24 பேர் களத்தில் உள்ளனர். 

`தனி மாவட்டம்' ஆத்தூர்?

1. சேலம் டு உளுந்தூர்பேட்டை தேசிய தங்க நாற்கர சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இரு வழிப் பாதையாகவே இருந்து வருகிறது. இதனால் குறித்த காலத்தில் சென்னைக்குச் செல்ல முடியாமலும் தொடர்ந்து இப்பாதையில் விபத்துகள் நடப்பதும் தொடர்கதையாகி வருகிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை முழுமை பெற வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை

2. கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் உள்ள ஆத்தூர், சேலம் மாவட்டத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது. சேலத்திலிருந்து தொலைவில் இருப்பதால் பெரிய வளர்ச்சி அடையாமல் பின்தங்கிய நகரமாக இருந்து வருகிறது. அதனால் சேலம் மாவட்டத்திலிருந்து ஆத்தூரைப் பிரித்து தனி மாவட்டமாக அமைத்தால் வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கின்றனர். 

3. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை மழைக் காலங்களில் நிரம்பி உபரி நீர் வெளியேறி கடலில் கலக்கிறது. இந்த உபரி நீரை வாய்க்கால் மூலம் திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதி, கல்லாற்றில் இணைத்தால் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் உள்ள அயோத்தியாபட்டணம், வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், சின்னசேலம், விருத்தாசலம் வரை நிலத்தடி நீர் மட்டம் உயருவதோடு செழிப்பான பகுதியாகவும் மாறும். 

செம்மரக் கடத்தலும் பழங்குடியினர் வேதனையும்! 

ஊட்டியை அடுத்து அதிக மலைவாழ் மக்கள் வசிக்கும் தொகுதியாக கள்ளக்குறிச்சி இருக்கிறது. இத்தொகுதியில் ஏற்காடு, கருமந்துறை, சின்ன கல்வராயன், பெரிய கல்வராயன், அருநூத்துமலை, பச்சமலை எனப் பல மலைகள் இருக்கின்றன. இங்கு வசிக்கக்கூடிய மலைவாழ் மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு இல்லாமல் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள். இதுவரை, மத்திய, மாநில அரசுகள் இவர்களின் வளர்ச்சிக்காக பெரிதாக எதுவும் செய்யவில்லை. 

இம்மக்கள் வாழ்வாதாரத்துக்காக வேலை தேடி தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் செல்கின்றனர். இவர்களின் அறியாமையையும் இயலாமையையும் பயன்படுத்தி சில புரோக்கர்கள் மூங்கில் வெட்டுவதற்காக அழைத்துச் சென்று ஆந்திராவில் செம்மரம் வெட்டக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதனால் ஆந்திரக் காவல்துறையின் என்கவுன்டர் நடவடிக்கைகளுக்கு ஆளாகின்றனர். 

தற்போதைய நிலவரப்படி கட்சிகளின் செல்வாக்கு என்ன?

கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிக வாக்குவங்கியை வைத்திருக்கும் அ.தி.மு.க., பா.ம.க. கூட்டணிக் கட்சிகளின் பலம் மற்றும் தே.மு.தி.க வாக்குவங்கி ஆகியவற்றைக் கணக்குப் போட்டு களமிறங்கியிருக்கிறார் சுதீஷ். கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பிரசாரமும் ஆளுங்கட்சியின் செல்வாக்கும் அவருக்கு கை கொடுக்கிறது. அதேவேளையில் மத்திய, மாநில அரசுகள் மீது இருக்கும் அதிருப்தி. குறிப்பாக பா.ஜ.க. மீது விவசாயிகள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், சிறுபான்மை சமூகத்தினர் என பல தரப்பினரின் எதிர்ப்பலை மைனஸ். அ.தி.மு.க உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குமரகுருவும் அமைச்சர் சி.வி.சண்முகமும் தேர்தல் பணி செய்யாமல் புறக்கணிப்பு செய்வது, பா.ம.க-வின் உட்கட்சி மோதலும் சுதீஷுக்கு பெரிய மைனஸ். 

தி.மு.க வேட்பாளர் கெளதம சிகாமணியின் தந்தை பொன்முடி தன் மகனின் வெற்றிக்காக தெருத்தெருவாக, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கிறார். விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்பதால் தொகுதி முழுவதும் தன்னுடைய ஆதரவாளர்களைக் களமிறக்கியிருக்கிறார். கூட்டணிக் கட்சிகளின் பலம், தலைவர்களின் பிரசாரம் என கூடுதல் உற்சாகத்துடன் வலம் வருகிறார் சிகாமணி. கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உதயமான பிறகும் இங்குள்ள சீனியர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் பொன்முடியின் வாரிசுக்கு வாய்ப்பு கொடுத்ததால் அதிருப்தியில் உள்ளனர் கட்சி நிர்வாகிகள். கோஷ்டிப் பூசல் கெளதம சிகாமணிக்குத் தொய்வை ஏற்படுத்துகிறது. 

அ.ம.மு.க வேட்பாளர் கோமுகி மணியன். இவர் எம்.ஜி.ஆர் காலத்து எம்.எல்.ஏ என்ற பெருமையைப் பெற்றவர். அதனால் அ.தி.மு.க-வில் உள்ள சீனியர்களும் அதிருப்தியாளர்களும் கோமுகி மணியனுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் ’டாப்-5’ காரணிகள் எவை?

1. கூட்டணி பலம்

2. பணமதிப்பிழப்பு நடவடிக்கை

3.  குடிநீர் பிரச்னை

4. மலைவாழ் மக்களுக்கும் கிராமப்புற மக்களுக்கும் அரசின் நல்லத்திட்ட உதவிகள் கிடைக்காதது

5. சேலம் டு சென்னை 8 வழிச் சாலை பிரச்னை

பிரசாரத்தில் என்ன நடக்கிறது? 

தே.மு.தி.க சார்பில் போட்டியிடும் சுதீஷ், ``வசிஷ்ட நதி, கல்லாறு ஆகியவற்றை இணைத்து பாலைவனமாக உள்ள இத்தொகுதியை சோலைவனமாக மாற்றுவேன். ஆத்தூரைப் புதிய மாவட்டமாக  அறிவிக்க நடவடிக்கை எடுப்பேன். சேலம் டு உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விபத்தில்லா பயணம் மேற்கொள்ள உதவுவேன். படித்த இளைஞர்களுக்கு தொழில் பேட்டைகளை உருவாக்கித் தருவேன்" என வாக்குறுதிகளை மழையாகக் கொட்டுகிறார். 

தி.மு.க வேட்பாளர் பொன் கெளதம சிகாமணியோ, ``குடிநீர், சாக்கடை, சாலை வசதி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். தேர்தல் அறிக்கையில் உள்ள நலத்திட்டங்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பேன்" என பிரசாரத்தில் உறுதி கொடுக்கிறார். அ.ம.மு.க வேட்பாளர் கோமுகி மணியனோ, "வசிஷ்ட நதியில் உள்ள தடுப்பணைகள் தூர்வாரப்படும். பச்சமலையில் புதிய சாலை, ஆத்தூர் புதிய மாவட்டம், தொகுதி முழுக்க போக்குவரத்து வசதி செய்து தரப்படும்" என்கிறார். 

வேட்பாளர்களின் வாக்குறுதிகளை அலசி மக்கள் ஜெயிக்க வைக்கப்போவது முரசையா, உதயசூரியனையா? வாக்கு எண்ணிக்கை நாளில் தெரிந்துவிடும். 

அடுத்த கட்டுரைக்கு