Published:Updated:

நாளுக்கு 120 கோடி ரூபாய் மதுபான விற்பனை! தமிழக தேர்தல் கள நிலவரம்

நாளுக்கு 120 கோடி ரூபாய் மதுபான விற்பனை! தமிழக தேர்தல் கள நிலவரம்
நாளுக்கு 120 கோடி ரூபாய் மதுபான விற்பனை! தமிழக தேர்தல் கள நிலவரம்

அரசு நினைத்திருந்தால் தேர்தல் குறித்து அறிவிப்பு வந்த உடனே முழுமையாக மது விற்பனையைத் தடை செய்திருக்க முடியும். மத்திய, மாநில அரசுகள் கலந்து பேசி மது ஒழிப்பில் ஒரு சரியான முடிவு எடுக்கும்போதுதான், இந்தப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரமான தீர்வுகாண முடியும்.

``முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு” - கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள பெருவாரியான கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற்றிருந்த முக்கியமான வாக்குறுதிகளாகும். ஆனால், இன்றைய சூழலில் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு மக்களைத் திரட்டுவதில் மதுபானங்கள் என்பவை முக்கியமான காரணிகளாக உள்ளன. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், நாளொன்றுக்கு 120 கோடி ரூபாய்க்கு மேல் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதுவும் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களுக்குத் தற்போதைய நிலவரபடி மவுசு கொஞ்சம் அதிகம் என்று சொல்லப்படுகிறது.

கடந்த தேர்தலில், அனைத்துக் கட்சிகளும் உடனடி மதுவிலக்கை அமல்படுத்துவோம் என வாக்குறுதியை அறிவித்த நிலையில் அ.தி.மு.க மட்டும், ``நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக அமல்படுத்துவோம்" என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், முதல்கட்டமாக 500 மதுபானக் கடைகள் மூடப்பட்டன. அதைத்தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மேலும், மதுபானக் கடைகளின் செயல்படும் கால அளவு குறைப்பு போன்ற மது விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகளும் தமிழகத்தில் நடந்தேறின.

தமிழகத்தின்  2019 - 20-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழகத்தில் செயல்பட்டு வந்த 7,896 கடைகள் 5,198 கடைகளாகக்  குறைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது . ஆனால் 2,500-க்கும் அதிகமான  டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையிலும், மதுபான பாட்டில்களின் விற்பனையும் அதன்மூலமாகத் தமிழக அரசுக்குக் கிடைக்கும் வருவாயும் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே  இருக்கிறது.  கடந்த 2015 - 16-ம் நிதியாண்டில் 25,000 கோடி ரூபாயாக இருந்த மதுபான விற்பனை, தமிழக அரசின் வருவாய், கடைகள் குறைப்பு போன்ற சில நடவடிக்கைகளுக்குப் பின்னரும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016-17-ம் நிதியாண்டில் மது விற்பனை மூலமான வருவாய், கிட்டத்தட்ட 27,000 கோடி ரூபாயாக உயர்ந்ததுள்ளது. இவைதான் அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளுக்கும் செயலுக்கும் உள்ள வேறுபாடுகளாக இருக்கின்றன. இப்படி, தேர்தல் நேரங்களில் வெளியாகும் பொய்யான வாக்குறுதிகள் அரசியல் லாபத்துக்காகக் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன.

கட்சித்  தலைவர்கள் என்னதான், `ஒரு சொட்டு மது இல்லாமல் தமிழகம் படைப்போம்' என மேடைகளில் முழங்கினாலும். தேர்தல் சமயங்களில், `மதுபாட்டில்,’ `பணம்’ போன்ற வார்த்தைகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பவையாகவும் மாறியுள்ளன.  இவை ஒரு புறமிருக்க.... மறுபுறம், 'ஜன'நாயகத் திருவிழாக்களான தேர்தல் கொண்டாட்டங்கள், மக்களின் நவீன பொருளாதார மனநிலைக்கு இரையாகி, `பண'நாயகமாகி விட்டதனால் தேர்தல் திருவிழாக்கள்  பொலிவிழந்து வருகின்றன. இந்த நிலையில், ஒரு கோடி தொண்டர்களை வைத்திருக்கிறோம் எனச் சொல்லிக்கொள்ளும் பெரிய கட்சிகள்கூடத்  தேர்தல் பிரசாரங்களுக்கு, கூட்டத்தைச் சேர்ப்பதற்கு, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவிகளைத்தான் தேடிச் செல்கின்றன. ஆனாலும், சில நேரங்களில் பொதுக்கூட்டங்களில் ஆக்கிரமித்திருக்கும் ஆளில்லாத நாற்காலிகளைத் தவிர்க்க முடிவதில்லை. இவற்றையெல்லாம் சரிக்கட்டவே வாக்காளர்களைக் கவர்வதற்காக மதுபானங்களைக் கொடுத்து கூட்டம் கூட்டுகின்றனர். இப்படி, மக்களும் அதை நாடிச் செல்வதால், கூட்டம் கூடும் இடங்களில் மதுவிற்பனை அமோகமாக நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது. 

தேர்தல் ஆணையமும் தேர்தல் களத்தில் மதுபானங்கள் செலுத்தும் தாக்கத்தைக் கவனத்தில்கொண்டு, தமிழ்நாட்டில் ஏப்ரல் 16-ம் தேதி முதல் தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 18-ம் தேதி வரையும், அதேபோல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் தேதியான மே 23-ம் தேதியும்  தமிழகத்தில் மது விற்பனைக்குத் தடை விதித்துள்ளது. ஆனாலும் பிரசாரங்கள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் தற்போதைய சூழலில் மதுபானங்களின் விற்பனை தமிழக தேர்தல் களத்தை தள்ளாட வைத்திருக்கின்றது.

இதுகுறித்து பேசிய மதுபான விற்பனை ஊழியர்கள், “தமிழகத்தில் தேர்தல் களம் மார்ச் மாதம் விறுவிறுக்க ஆரம்பித்த உடனே, தமிழக டாஸ்மாக் கடைகளிலும் வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. எப்போதும் தீபாவளி போன்ற விழா நாள்களில் நடக்கும் வியாபாரங்களைப்போல இப்போது சாதாரண வார நாள்களிலேயே நல்ல விற்பனை நடக்கிறது. கடந்த சில வாரங்களாகவே நாளொன்றுக்கு 110 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு தீபாவளி அன்று நடந்த 4 நாள்கள் விற்பனையே 600 கோடி ரூபாய்தான். அதேபோல் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனை 35 சதவிகிதம் அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ளது. ஆதலால், இப்போது இருப்பதைக் காட்டிலும், இடையில் விடுமுறை என்பதாலும் விற்பனை இன்னும்  20 சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளும் மொத்தமான மது விற்பனையைத் தடுக்க அவ்வப்போது பரிசோதனைகளில் ஈடுபட்டுத்தான் வருகின்றனர். எனினும், நாளுக்குநாள் விற்பனை அதிகமாகிறது” என்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்பு உணர்வு சங்க மாநிலத் தலைவர் பி.செல்லப்பாண்டியன், ``இந்தியாவில் மது கலாசாரம் பிரபலமடைந்ததற்கு முக்கியமான காரணமே, தேர்தல் அரசியல்தான். அரசியல் கட்சிகள் தங்களின் சுயநலத்துக்காக மதுபானங்களை ஊக்குவித்து மக்களை அடிமையாக்கிவருகின்றனர். இதுமாதிரியான தேர்தல் சமயங்களில்தான் பல இளைஞர்களுக்கு இலவச மது பாட்டில்கள் கிடைக்கின்றன. தமிழகத்தில் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், மது விற்பனை 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போதே, வேட்பாளர்கள் மதுபானங்களுக்குச் செலவிடும் தொகையையும்,  தேர்தல் செலவின கணக்கில் சேர்க்கச் சொல்லித் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தோம். அதைத் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. தற்போது தேர்தல் நடக்கும் நாள்களில் மட்டும் மது விற்பனைக்குத் தடை விதித்துள்ளனர். ஆனால், அரசு நினைத்திருந்தால் தேர்தல் குறித்து அறிவிப்பு வந்த உடனே முழுமையாக மது விற்பனையைத் தடை செய்திருக்க முடியும். மத்திய, மாநில அரசுகள் கலந்து பேசி மது ஒழிப்பில் ஒரு சரியான முடிவு எடுக்கும்போதுதான், இந்தப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரமான தீர்வுகாண முடியும்" என்றார்.  

மது உடலுக்கு மட்டுமல்ல… ஜனநாயகத்துக்கும் கேடுதான்!

அடுத்த கட்டுரைக்கு