Published:Updated:

என்ன சொன்னார் அமித் ஷா..? எதற்காக அடங்கிப்போனார் அய்யாக்கண்ணு?

என்ன சொன்னார் அமித் ஷா..? எதற்காக அடங்கிப்போனார் அய்யாக்கண்ணு?
என்ன சொன்னார் அமித் ஷா..? எதற்காக அடங்கிப்போனார் அய்யாக்கண்ணு?

என்ன சொன்னார் அமித் ஷா..? எதற்காக அடங்கிப்போனார் அய்யாக்கண்ணு?

டைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த 111 விவசாயிகள் வாரணாசி தொகுதியில் போட்டியிடப்போவதாகத் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு அறிவித்திருந்தார். இந்த நிலையில், அந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்றுள்ளார் அய்யாக்கண்ணு. அவர், பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷாவைச் சந்தித்த பிறகு, இந்த முடிவை எடுத்துள்ளார். அவருடைய இந்த முடிவு குறித்து பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

"வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போராட்டத்தைத் திரும்பப்பெறப் போவதாகக் கூறியிருக்கிறீர்கள்?" 

"விவசாயிகள்  பிரச்னைகளைத் தீர்க்கக்கோரிக் கடந்த ஆண்டு 120 நாள்களுக்கு மேல் டெல்லியில் போராட்டம் நடத்தினோம். மத்திய  அரசின் கவனத்தை ஈர்க்க, நிர்வாணப் போராட்டம், பிச்சை எடுக்கும் போராட்டம் எனப் பல வடிவங்களில் போராட்டம் நடத்தியும் எங்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில்தான் கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் இயற்றி  இருந்தோம். 'மத்திய அரசு இதுவரை எங்களுடைய போராட்டங்களுக்கு செவிசாய்க்கவில்லை. அதனால் வரும் தேர்தலுக்கு முன்பாக  எங்களுடைய ஆறு கோரிக்கைகளான நதிகள் தேசிய மயமாக்கப்பட வேண்டும்; லாபகர விலை நிர்ணயம் கொள்கையைக் கொண்டுவர வேண்டும்; மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இறக்குமதி செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைளை மத்திய அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும்' என அதில் கூறியிருந்தோம். அப்படியே அந்தக் கோரிக்கை மனுவை, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி மற்றும் பி.ஜே.பி தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு அனுப்பியிருந்தோம். அதற்கு ராகுல் காந்தி தரப்பிலிருந்து விவசாயக் கடன் மட்டும் தள்ளுபடி செய்கிறோம் என்று வாக்குறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து  பி.ஜே.பி தரப்பிலிருந்து அமித் ஷா அழைப்பு விடுத்திருந்தார். டெல்லி சென்று அவரைச் சந்தித்துப் பேசினோம். அதற்கு அவர், விவசாயக் கடன்  தள்ளுபடி போக மற்ற 5 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். அதோடு, 'வாரணாசிக்கு அரைநிர்வாணமாகச் சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நிகழ்வையும் வாபஸ் வாங்கிக் கொள்ளுங்கள்' என்றார். இதையடுத்து, எங்களால் எப்படி அந்த வாக்குறுதியை  நிராகரிக்க முடியும்?"

"தேர்தலுக்காகத்தான் உங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியவில்லையா?"

"அப்படி நிராகரிப்பது மனித மாண்புக்கு அழகல்ல என்பதால், 'உங்களுடைய வாக்குறுதி மனநிறைவைத் தருகிறது. அதேநேரத்தில், அமைப்பின் மாநிலக் குழுவைக் கூட்டி எங்களுடைய முடிவை அறிவிக்கிறோம்' என்று கூறிவிட்டு வந்துள்ளோம்." 

"100 நாள்கள் நீங்கள் கடுமையான போராட்டத்தை நடத்தியபோது கண்டுகொள்ளாதவர்கள், தற்போது உங்களை அழைத்துப் பேசுவது தேர்தலுக்காகத்தான் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா?"  

"தேர்தலுக்காக அல்ல... 111 விவசாயிகள் அகோரிகள்போல் திரிந்தால் இந்த உலகம் சிரிக்காதா? எனவே, அதைக் கருத்தில்கொண்டுதான் இப்படியான வாக்குறுதி கொடுத்துள்ளனர். அப்படி அந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை என்றால், அவர்கள் எங்களை சுட்டுத் தள்ளினாலும் பரவாயில்லை என்று அமித் ஷா வீட்டிலேயே படுத்துக்கொள்வோம்."  

"இப்படியான முடிவை நீங்கள் எடுத்துள்ளதால், 'அய்யாக்கண்ணு என்ற பண்ணையார் அமித் ஷாவிடம் அடிமையாகிவிட்டார்' என்று சமூக வலைதளங்களில் உங்களைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார்களே?"

"நாங்கள் அரசியல் கட்சி இல்லை... யார் என்ன சொன்னாலும் எங்களுக்குக் கவலை இல்லை. பசியோடு இருக்கும் எங்களுக்கு, ஒருவர் சோறு போடும்போது அதை நாங்கள் எப்படி வேண்டாம் எனச் சொல்ல முடியும்? தண்ணீர்ப் பிரச்னையால் காவிரி டெல்டா பகுதிகள் கடுமையாகப்  பாதித்துள்ளன. கர்நாடகா 30 லட்சம் ஏக்கர் நிலச் சாகுபடியை மேற்கொண்டு வருகிறது. நம்மால் 10 லட்சம் ஏக்கர் நிலச் சாகுபடியைக்கூட அடைய முடியவில்லை. அதையெல்லாம் கேட்கக்கூடிய அரசியல் அமைப்புகள் இதுபற்றி வாய் திறக்காமல், எங்களைத் தேர்தலுக்காகப் பயன்படுத்திக்கொள்கிறார்களே தவிர, வேறு எதுவும் செய்வதில்லை. எனவே, நாங்கள் எந்தக் கட்சிக்கும் ஓட்டுப்போடுங்கள் என்று கேட்கப்போவதில்லை. எங்களுக்கு, எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றினால் போதும்."   

 "உங்களுடைய மனுத்தாக்கல் விவகாரத்தைத் திரும்பப் பெறுவதால் பி.ஜே.பி-யை ஆதரிக்கிறீர்களா?"

இதுவரை பி.ஜே.பி-யை ஆதரிக்கிறோம் என்று எங்கேயும் கூறவில்லை. நான் மட்டும் போய் அமித் ஷாவைச் சந்திக்கவில்லை. எங்களுடைய அமைப்பைச் சேர்ந்த ஒன்பது நிர்வாகிகள் சந்தித்துப் பேசி இருக்கிறோம். அந்தச் சந்திப்பில் உங்களுடைய வாக்கு மனநிறைவைத் தருகிறது என்று மட்டுமே கூறியிருக்கிறோம்".

அடுத்த கட்டுரைக்கு