Published:Updated:

`பதறவைத்த’ பெரியப்பா; `மெர்சல்’ மனோஜ்; `வாக்குறுதி’ திரவியம்! - நெல்லைத் தொகுதியின் களநிலவரம்

திருநெல்வேலித் தொகுதியில் ஏப்ரல் 18 வாக்குப்பதிவைத் தீர்மானிக்கும் டாப் 5 காரணிகள் எவை?

`பதறவைத்த’ பெரியப்பா; `மெர்சல்’ மனோஜ்; `வாக்குறுதி’ திரவியம்! - நெல்லைத் தொகுதியின் களநிலவரம்
`பதறவைத்த’ பெரியப்பா; `மெர்சல்’ மனோஜ்; `வாக்குறுதி’ திரவியம்! - நெல்லைத் தொகுதியின் களநிலவரம்

தொகுதி: திருநெல்வேலி

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஆலங்குளம், நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் என 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது

தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு! 

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகை நிலங்களையும் கொண்ட தொகுதி. விவசாயமே பிரதான தொழில். பீடி சுற்றும் தொழிலில் 5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மீன் பிடி தொழிலாளர்களும் கட்டுமானத் தொழிலாளர்களும் பெருமளவில் உள்ளனர். தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என வர்ணிக்கப்படும் பாளையங்கோட்டை, பிரசித்திபெற்ற சைவத் தலமான நெல்லையப்பர் கோயில், கூடங்குளம் அணு உலை, இஸ்ரோ கட்டுப்பாட்டில் செயல்படும் திரவ இயக்க உந்து மையம், கடற்படைத் தளம் ஆகியவையும் இந்தத் தொகுதிக்குள் அமைந்திருக்கின்றன. 

தாமிரபரணி புரட்சி!

1790-களில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியால் நெல்லை மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயே அரசின் படைத்தளம் பாளையங்கோட்டையில் அமைக்கப்பட்டது. இங்கிருந்தே பாளையக்காரர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஆங்கிலேயர்கள் மேற்கொண்டனர். 1908-ம் ஆண்டு தாமிரபரணி நதிக்கரையில் வெடித்த புரட்சி, விடுதலை வேள்வியின் தூண்டுகோலாக அமைந்தது. இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிய கட்டபொம்மன், சுந்தரலிங்கம், பாரதியார், வ.உ.சி, வாஞ்சிநாதன் போன்றோர் வாழ்ந்த மண். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக திருநெல்வேலி பார்க்கப்படுகிறது. 

தி.மு.க-வின் 23 ஆண்டுக்கால போராட்டம்! 

திருநெல்வேலி தொகுதி, அ.தி.மு.க-வின் கோட்டையாகப் பார்க்கப்படுகிறது. இதுவரை 7 முறை அ.தி.மு.க வென்றுள்ளது. அக்கட்சியின் சார்பாக 4 முறை வெற்றியைக் கைப்பற்றியிருக்கிறார் கடம்பூர் ஜனார்த்தனம். காங்கிரஸ் கட்சி 5 முறை வென்றிருக்கிறது. தி.மு.க-வைச் சேர்ந்த டி.எஸ்.ஏ.சிவபிரகாசம் இரண்டு முறை தொகுதியைக் கைப்பற்றியிருக்கிறார். சுதந்திர கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை தலா ஒருமுறை வென்றிருக்கின்றன. 23 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க, இந்த முறை வெற்றியைக் கைப்பற்ற தீவிரமாகப் போராடி வருகிறது. 

முடங்கிய முப்போக சாகுபடி! 

நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தொழிற்சாலைகளைக் கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இந்தப் பகுதியில் உள்ள படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு என்பது கனவாகவே இருக்கிறது. பீடித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் திருநெல்வேலி தொகுதியில், அவர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன. புகையிலைத் தொழில் நலிந்துவரும் நிலையில் இந்தத் தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழில் வாய்ப்பு ஏற்படுத்தப் பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.

மானூர் பகுதியில் இருக்கும் பெரிய குளம் நிறைந்தால், அப்பகுதியில் இருக்கும் விவசாயிகளால் ஆயிரக்கனக்கான ஏக்கரில் முப்போகம் சாகுபடி செய்ய முடியும். அதனால் அந்தக் குளத்துக்கு தாமிரபரணியிலிருந்து தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்கிற கோரிக்கை கிடப்பில் கிடக்கிறது. 

தாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு! 

தி.மு.க ஆட்சி காலத்தின்போது தாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு நதிகளை இணைப்பதற்கான திட்டம் தொடங்கப்பட்டது. இடையில், இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மூன்றாவது கட்டப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துவருகிறது. இந்த நதிநீர் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், மழைக்காலங்களில் தாமிரபரணி நதியிலிருந்து வெளியேறும் உபரி நீர் கடலில் கலப்பதைத் தடுக்க முடியும். அத்துடன், பாலைவனமாகக் காட்சியளிக்கும் தேரிக்காடுகள் இந்தத் திட்டத்தால் பலன் அடைந்து பசுமையான சோலையாக மாறும் வாய்ப்பு உருவாகும். அதனால் இந்தத் திட்டம் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்பது தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.  

தற்போதைய நிலவரப்படி கட்சிளின் செல்வாக்கு என்ன? 

அ.தி.மு.க. சார்பில் மனோஜ் பாண்டியன், தி.மு.க தரப்பில் ஞானதிரவியம் ஆகியோர் களம் இறங்கியுள்ளனர். அ.ம.மு.க வேட்பாளராக மைக்கேல் ராயப்பனும் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சத்யாவும் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க-வுக்கு சாதகமான தொகுதியாக இருந்தபோதிலும், தொகுதியில் வசிக்கும் பெரும்பான்மையான கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மக்கள், பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க-வை சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்றனர். தொகுதியில் கணிசமாக இருக்கும் முக்குலத்தோர் சமுதாயத்தினரின் வாக்குகள் அ.ம.மு.க பக்கம் சாயும் நிலை உள்ளது. அதனால் அ.தி.மு.க வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

நாம் தமிழர் கட்சியின் சத்யா, மக்கள் நீதி மய்யம் கட்சியின் வெண்ணிமாலை ஆகியோரும் தங்கள் பங்குக்கு வாக்குகளைப் பிரிப்பார்கள். இது தவிர, அ.தி.மு.க-வின் மனோஜ் பாண்டியனின் பெரியப்பாவான பி.எஸ்.பாண்டியன் சுயேச்சையாகக் களமிறங்கி மனோஜுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிவருகிறார். 

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள் 

1. கூட்டணி பலம்.

2. பண பலம்.

3. வேட்பாளரின் பிரசாரம். 

4. மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்பு.

5. சிறுபான்மையினரின் வாக்குகள்.

பிரசாரத்தில் என்ன நடக்கிறது..?

அ.தி.மு.க வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து பிரசாரம் செய்த துணை முதல்வர் ஓ.பி.எஸ். "மக்களவைத் தேர்தலோடு, தி.மு.க என்ற அரசியல் கட்சி இருக்காது. வன்முறையைக் கைவிடாத தி.மு.க எந்தக் காலத்திலும் மக்களின் நம்பிக்கையை பெற முடியாது" என்றார். மனோஜ் பாண்டியனும் தன்னுடைய பிரசாரத்தில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, குடிநீர் பிரச்னைகளுக்குத் தீர்வு உள்ளிட்ட வாக்குறுதிகளை முன்வைக்கிறார்.

"தி.மு.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் கூறியுள்ளதை நிறைவேற்றுவேன், வேலைவாய்ப்புகளைப் பெருக்க முயற்சி மேற்கொள்வேன்" எனப் பிரசாரத்தில் பேசி வருகிறார் தி.மு.க வேட்பாளர் ஞானதிரவியம். அ.ம.மு.க வேட்பாளர் மைக்கேல் ராயப்பனும் தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றப் பாடுபடுவேன் எனக் கூறி நம்பிக்கையோடு வாக்கு சேகரித்து வருகிறார். 

அ.தி.மு.க வேட்பாளரான மனோஜ் பாண்டியன் ஏற்கெனவே மாநிலங்களவை உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். இவரது தந்தை, முன்னாள் சபாநாயகரான பி.ஹெச்.பாண்டியன். அவரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பணியாற்றியவர். மனோஜ் பாண்டியனின் தாயாரான மறைந்த சிந்தியா பாண்டியன், நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றியவர். அரசியல் பின்புலமும் இரட்டை இலைக்கான செல்வாக்கும் தன்னைக் கரையேற்றும் என நம்பி பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் தி.மு.க. நிர்வாகிகள் களத்தில் தீவிரமாகப் பணிபுரிந்து வருகின்றனர். `இறுதி வெற்றி யாருக்கு?' என்பதை அறிந்துகொள்ள ஆவலோடு காத்திருக்கின்றனர் தொகுதி மக்கள்.