Published:Updated:

மும்மதங்கள்; மரக்கிளை உணவு மூட்டை; கம்யூனிஸ்ட் கோட்டை! - நாகப்பட்டினம் களநிலவரம்

நாகப்பட்டினம் தொகுதியில் ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் காரணிகள் எவை?

மும்மதங்கள்; மரக்கிளை உணவு மூட்டை; கம்யூனிஸ்ட் கோட்டை! - நாகப்பட்டினம் களநிலவரம்
மும்மதங்கள்; மரக்கிளை உணவு மூட்டை; கம்யூனிஸ்ட் கோட்டை! - நாகப்பட்டினம் களநிலவரம்

தொகுதி: நாகப்பட்டினம்

நாகப்பட்டினம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், வேதாரண்யம், கீழ்வேளூர் என 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. 

மும்மதங்களின் சங்கமம்! 

மத நல்லிணக்கத்துக்குப் புகழ்பெற்ற தொகுதி. கிறிஸ்துவர்களின் புனிதத் தலமான வேளாங்கண்ணி, இஸ்லாமியர்களின் நாகூர் தர்கா, இந்துக்களின் சிக்கல் சிங்காரவேலர் கோயில் ஆகிய மூன்று ஆன்மிகத் தலங்களும் இத்தொகுதியில் இருப்பது தனிச் சிறப்பு. இங்குள்ள மக்கள் கடுமையான உழைப்பாளிகள். தன்மானமும் போர்க்குணமும் கொண்டவர்கள். விவசாயம், மீன்பிடிப்பு, உப்பளம் ஆகியவை இத்தொகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரம். கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத்தும் நாகூர் ஹனிபாவும் நாகையின் பெருமிதங்கள்.  

மரக்கிளைகளில் உணவு மூட்டைகள்! 

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இந்தியாவில் உப்புக்கு வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்து, வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகம் போராட்டம் இந்திய அளவில் கவனம் பெற்றது. 1930-ம் ஆண்டு ராஜாஜி தலைமையில் ஏராளமானோர் வேதாரண்யத்தை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டார்கள். இவர்களை ஒடுக்க காவல்துறையினர் கடும் அடக்குமுறைகளை மேற்கொண்டிருந்த தருணம் அது. நடைப்பயணம் வருபவர்களுக்கு இப்பகுதியில் உள்ள மக்கள் உணவளிக்கக் கூடாது எனத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், காவல்துறையினரின் கண்களின் மண்ணைத் தூவி, போராட்டக்காரர்களின் பசியை ஆற்றினார்கள் இப்பகுதி மக்கள். சாலை நெடுகிலும் மரக்கிளைகளில் உணவு மூட்டைகளை மறைவாகத் தொங்கவிட்டிருந்தனர். இந்தத் தகவல் போராட்டக்காரர்களுக்கு சங்கேத வார்த்தைகளில் தெரிவிக்கப்பட்ட சம்பவம் இன்றளவும் பேசப்படுகிறது. 

கம்யூனிஸ்ட் கோட்டையில் தி.மு.க.! 

1960-ம் ஆண்டுகளுக்கு முன்னர் இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி செல்வாக்குடன் இருந்தது. சர்தார் வேதரத்தினம் பிள்ளை உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் இங்கு கோலோச்சினார்கள். 1960-களில் கம்யூனிஸ்டு இயக்கங்கள் இங்கு வேகமாக வளர்ச்சியடைந்தன. விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக வீரம் செறிந்த போராட்டங்களை கம்யூனிஸ்டு இயக்கங்கள் நடத்தின. இந்திய அளவில் புகழ்பெற்ற கம்யூனிஸ்டு இயக்கத்தலைவர் மணலி கந்தசாமியின் தியாகமும் போராட்டக் குணமும் இன்றளவும் போற்றப்பட்டு வருகின்றன. காலப்போக்கில் இத்தொகுதியில் தி.மு.க. செல்வாக்கு பெறத் தொடங்கியது. குறிப்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி இத்தொகுதியைச் சேர்ந்தவர் என்பதால் இப்பகுதி மக்களிடம் தி.மு.க-வின்  தாக்கம் அதிகமாக உள்ளது. ஆனாலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-வைச் சேர்ந்த கோபால் வென்றார். காவிரி பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த தேர்தலில் தி,மு.க மீது இத்தொகுதி மக்கள் கோபத்தில் இருந்தனர். விவசாயிகளையும் மீனவர்களையும் பாதுகாப்பேன் என ஜெயலலிதா உரக்க குரல் கொடுத்ததால், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வை வெற்றி பெறவைத்தனர். 

தற்போதைய தலையாய பிரச்னை? 

1. குடிநீர் மற்றும் விவசாயத்துக்குக் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவது.

2. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டுவது.

3. பெரும்பாலான கிராமங்களில் தரமான சாலை வசதிகள் இல்லாதது. 

நீண்டகால பிரச்னை? 

காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதி என்பதால், வறட்சி வெள்ளம் ஆகிய இரண்டாலும் இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். 

கட்சிகளின் செல்வாக்கு?

தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பாக செல்வராஜ் களமிறக்கப்பட்டிருக்கிறார். கூட்டணிக் கட்சிகளின் பலமும் தொழிலாளர்கள் நிறைந்திருப்பது கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கான ப்ளஸ்கள். அ.தி.மு.க. சார்பில் தாழை.சரவணன் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் தி.மு.க மீது இருந்த அதிருப்தி வாக்குகளை அ.தி.மு.க.-வினர் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர். ஆளும் மத்திய, மாநில அரசுகளின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி அ.தி.மு.க.-வுக்கு சற்று பின்னடைவாகத்தான் பார்க்கப்படுகிறது. அதிகார பலம் மற்றும் பணபலத்தின் மூலம் வெற்றி பெற்றுவிடலாம் என தி.மு.க. கணக்குப் போடுகிறது. அ.ம.மு.க. தரப்பில் செங்கொடி போட்டியிடுகிறார். இவர் இப்பகுதியில் உள்ள அ.தி.மு.க. வாக்குகளை கணிசமாகப் பிரிக்க வாய்ப்புள்ளது. பெண் வேட்பாளர் என்பது அ.ம.மு.க.-வுக்கு கூடுதல் ப்ளஸ். 

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள்?

1. பணப்பட்டுவாடா. 
2. அதிகாரம்.
3. ஆள்பலம்.
4. பிரசார வியூகம்.
5. வேட்பாளர்களின் வாக்குறுதிகள்.

பிரசாரத்தில் என்ன நடக்கிறது..?

தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ், "மீனவர்களுக்குத் தனி அமைச்சகம் உருவாக்குவோம். வேதாரண்யம் உப்பை சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுப்போம். வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளை உருவாக்குவோம்" என்பன போன்ற வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் முன்வைக்கிறார்.அ.தி.மு.க. வேட்பாளர் தாழை.சரவணனோ, "நாகப்பட்டினத்தில் சர்வதேச தரத்தில் துறைமுகத்தை உருவாக்கி, ஏற்றுமதி வசதிகளை ஏற்படுத்துவோம். மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம். குடிசைகள் இல்லாத தொகுதியாக நாகையை மாற்றுவோம்" என வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்கிறார். அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கொடி, "மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களைத் தடுத்து நிறுத்துவோம். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க, நடவடிக்கை எடுப்போம்" என முழங்கி வருகிறார். 'இந்தப் போராட்டத்தில் வெல்லப்போவது இரட்டை இலையா... சுத்தி அரிவாளா..?' என்பதை அறிந்துகொள்ளக் காத்திருக்கின்றனர் தொகுதிவாசிகள்.