Published:Updated:

தி.மு.க கமாண்டர்கள்; ஜெ, கருணாநிதி சமாதி; உட்கட்சி குஸ்தி! - மத்திய சென்னை தொகுதி நிலவரம்

மத்திய சென்னை தொகுதியின் எல்லையில்தான் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகள் உள்ளன. அந்த இருவர் மீதும் விசுவாசத்தை வைத்துள்ள தொண்டர்கள் தொகுதி முழுவதும் நிறைந்துள்ளனர். இந்தத் தொகுதியில் ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் டாப் 5 காரணிகள் எவை?

தி.மு.க கமாண்டர்கள்; ஜெ, கருணாநிதி சமாதி; உட்கட்சி குஸ்தி! - மத்திய சென்னை தொகுதி நிலவரம்
தி.மு.க கமாண்டர்கள்; ஜெ, கருணாநிதி சமாதி; உட்கட்சி குஸ்தி! - மத்திய சென்னை தொகுதி நிலவரம்

தொகுதி: மத்திய சென்னை

ஆயிரம் விளக்கு, எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, அண்ணாநகர், வில்லிவாக்கம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது

'லேண்ட் மார்க்’ தொகுதி! 

தமிழகத்தில் உள்ள மற்ற தொகுதிகளைவிட பரப்பளவில் சிறிய தொகுதியாகும். இங்கு சுமார் 13 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம், ரிசர்வ் வங்கி, நேரு விளையாட்டு அரங்கம், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், மெரினா கடற்கரை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்கள் எனச் சென்னையின் லாண்ட் மார்க்குகள் நிறைந்த தொகுதி. தி.மு.க.-வுக்கு பலமான வாக்குவங்கி உள்ள தொகுதிகளில் இதுவும் ஒன்று. 

லிட்டில் இந்தியா!

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியை 'லிட்டில் இந்தியா' என்று சொல்லலாம். மார்வாடிகள், குஜராத்திகள் என வெளிமாநிலத்தவரின் ஆதிக்கம், முஸ்லிம், கிறிஸ்துவர், மீனவர்கள் எனப் பல்வேறுபட்ட சமூகங்களின் கூட்டுக் கலவையாகத் திகழும் தொகுதி. வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர் எனப் பலரும் வந்து செல்வதால், லிட்டில் இந்தியா என அழைக்கின்றனர். 

தி.மு.க-வின் 7 வெற்றிகள்! 

1977 முதல் 2014 வருடம் நடந்த தேர்தல்களைக் கவனித்தால், 7 முறை தி.மு.க வென்றிருக்கிறது. இரண்டு முறை காங்கிரஸ் (1989, 1991). இதன் பிறகு ஜனதாகட்சி ஒருமுறையும் (1977), அ.தி.மு.க (2014) ஒருமுறையும் வென்றுள்ளன. 1998-ல் மத்திய அரசு அமைத்த தொகுதி சீரமைப்புக் குழுவினரின் ஆய்வுக்குப் பிறகு மாற்றம் ஏற்பட்டது. தொகுதி சீரமைப்புக்கு முன்பு இந்தத் தொகுதியில் பல்வேறு சமூகத்தினர் இருந்தனர். சீரமைப்புக்குப் பின்பு துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி என 2 தொகுதிகள் இணைக்கப்பட்டன. தொகுதியின் வெற்றியை நிர்ணயிக்கும் சமூகமாக இஸ்லாமியர்கள் உள்ளனர். 1996, 1998 மற்றும் 1999 எனத் தொடர்ந்து மூன்று முறை முரசொலி மாறன் இந்தத் தொகுதியின் எம்.பி-யாக இருந்தார். 2004 மற்றும் 2009 என இருமுறை தயாநிதி மாறனும் 2014-ம் வருடம் அ.தி.மு.க-வின் விஜயகுமாரும் எம்.பி-யாகத் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது நடக்கும் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளரான சாம் பால், தயாநிதி மாறனை எதிர்த்துக் களமிறங்கியுள்ளார். 

எழும்பூர் அவலம்! 

1. எழும்பூர் ரயில் நிலையத்துக்குத் தினம்தோறும் பல்லாயிரம் பேர் வந்து செல்கின்றனர். ரயிலைவிட்டு இறங்கி, ரோட்டின் எதிர்ப்புறத்துக்கச் செல்வதற்காகப் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு நடை மேம்பாலம் இருந்தது. அங்குள்ள கடைக்காரர்களுக்கு இடையூறாக இருப்பதாகச் சொல்லி, அதையும் அகற்றிவிட்டனர். இதனால் அதிகாலை, இரவு நேரங்களில் வரும் முதியவர்கள், குழந்தைகளுடன் வரும் பயணிகள் பெட்டிகளுடன் அல்லாடும் காட்சி பரிதாபமானது. தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர்களும் இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய எந்த முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை. 

2. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம்.

3. சேப்பாக்கம், எழும்பூர், துறைமுகம், வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல். 

நீண்டகால பிரச்னை?

சென்ட்ரல் ரயில் நிலையமும் எழும்பூர் ரயில் நிலையமும் இணைக்கப்படாமல் இருப்பது. 

தற்போதைய நிலவரப்படி கட்சிகளின் செல்வாக்கு என்ன? 

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளும் தி.மு.க. வசம் உள்ளன. அந்த எம்.எல்.ஏ-க்களைக் கமாண்டர்களாகப் பார்க்கிறது தி.மு.க. அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க.-வின் வேட்பாளராக இருக்கும் சாம் பால். அவர் சார்ந்த கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவர். அ.ம.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் தெஹ்லான் பாகவி களமிறங்கியிருக்கிறார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் கமீலா நாசரும் போட்டியில் இருக்கிறார். சிறுபான்மை சமூகத்தின் வாக்குகள் பெரும்பாலும் தி.மு.க அணிக்கே செல்லும் என்பது கடந்தகால தேர்தல் வரலாறு. எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் தெஹ்லான் பாகவி, மக்கள் நீதி மய்யத்தின் கமீலா நாசர், பா.ம.க. சாம் பால் ஆகியோர் சிறுபான்மையின சமூகத்தின் வாக்குகளைப் பிரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இவை தயாநிதி மாறனுக்கான மைனஸாகப் பார்க்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்பு, ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு, கூட்டணிக் கட்சிகளின் பலம், தி.மு.க கோட்டை என்பதெல்லாம் தயாநிதிக்கான பெரிய ப்ளஸ்கள். 

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள்?  

1. சிறுபான்மை சமூகங்கள் மற்றும் மார்வாடிகளின் வாக்குகள். 
2. பணப்பட்டுவாடா.
3. பா.ம.க வேட்பாளர் சாம் பால் தொடர்பான வீடியோ சர்ச்சை. 
4. மத்திய மாநில அரசுகள் மீதான எதிர்ப்பு.
5. மின்வெட்டு மற்றும் குடிநீர்த் தட்டுப்பாடு.

பிரசாரத்தில் என்ன நடக்கிறது!

மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. விசுவாசிகள் ஏராளமானோர் உள்ளனர். தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறன் தனது பிரசாரத்தில், "தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் சமாதிக்கு 6 அடி மண்ணைக் கேட்டோம். ஆனால், முதலமைச்சர் பழனிசாமியோ அதைக்கூட தர மறுத்தார். நீதிமன்றத்தை நாடியே சமாதிக்கு இடம் வாங்கினோம்" என உடன்பிறப்புகள் மத்தியில் சென்டிமென்டாகப் பேசுகிறார். "மோடி அரசின் தவறான கொள்கைகளால் சீரழிந்துபோன பொதுமக்களின் வாழ்வாதாரம் சீரமைக்கப்படும். வாடிக்கையாளர்கள் வங்கிகளில் குறைந்தபட்சத் தொகை வைக்காத காரணத்துக்காக வசூலிக்கப்படும் கட்டணத் தொகைகள் முழுவதுமாக வட்டியுடன் வாடிக்கையாளர்களுக்குத் திரும்ப அளிக்கப்படும்" எனத் தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களை முன்வைத்துத் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். 

பா.ம.க வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து அன்புமணி ராமதாஸ், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். "மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பேன். பொதுப்போக்குவரத்தை அதிகப்படுத்துவதோடு குறைந்த கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுப்பேன். மின்சார பேருந்து இயக்கப்படும். மருத்துவம், கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்" என ஏகப்பட்ட வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். 

மத்திய சென்னை தொகுதியின் எல்லையில்தான் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகள் உள்ளன. அந்த இருவர் மீதும் விசுவாசத்தை வைத்துள்ள தொண்டர்கள் தொகுதி முழுவதும் நிறைந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரது செயல்பாடுகளால் உள்ளூர் அ.தி.மு.க.-வினரும் புகைச்சலில் உள்ளனர். தி.மு.க தரப்பிலும் சில நிர்வாகிகள் உள்ளடி வேலைகளைச் செய்து வருகின்றனர். இவை அனைத்தையும் தாண்டி, யாருக்கு மகுடம் சூட்டப்போகிறது மத்திய சென்னை என்பதற்கான விடை, தேர்தல் முடிவில் தெரியவரும்.