Published:Updated:

‘அந்த’ 2,797 வாக்குகள்; 2 கோடி ஆண்டுகள்; ‘விஷவாயு’ விவசாயி! - விழுப்புரம் தொகுதியின் நிலவரம்

விழுப்புரம் தொகுதியில் ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் காரணிகள் எவை?

‘அந்த’ 2,797 வாக்குகள்; 2 கோடி ஆண்டுகள்; ‘விஷவாயு’ விவசாயி! - விழுப்புரம் தொகுதியின் நிலவரம்
‘அந்த’ 2,797 வாக்குகள்; 2 கோடி ஆண்டுகள்; ‘விஷவாயு’ விவசாயி! - விழுப்புரம் தொகுதியின் நிலவரம்
‘அந்த’ 2,797 வாக்குகள்; 2 கோடி ஆண்டுகள்; ‘விஷவாயு’ விவசாயி! - விழுப்புரம் தொகுதியின் நிலவரம்

தொகுதி: விழுப்புரம்

விழுப்புரம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விக்கிரவாண்டி, திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை என 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

2 கோடி ஆண்டுகள்! 

முகலாய ஆட்சியின்போது பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களிடம் ஒப்பந்தம் போடப்பட்டு மதராஸ் மாகாணத்தில் கீழிருந்த இந்த ஊர், கர்நாடகப் போர்களின் களமாகவும் இருந்திருக்கிறது. பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனியால் ஆக்கிரமிக்கப்பட்டு, இந்தியா சுதந்திரம் அடையும் வரை ஆங்கிலேயர்களின் வசம் இருந்தது. 2 கோடி ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படும் கல்மரங்கள் இருக்கும் திருவக்கரை, செஞ்சிக் கோட்டை, 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் சிற்பங்கள் போன்றவை சிறப்பம்சங்கள். சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் சொந்த ஊரான ஓமந்தூர் இத்தொகுதியின் கீழ்தான் வருகிறது. அதேபோல், ராமசாமி படையாச்சியால் வன்னியர்களுக்கென்று பிரத்யேகமாகத் தொடங்கப்பட்ட தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியும் இங்கு 2 முறை வெற்றிபெற்றிருக்கிறது. 

‘அந்த’ 2,797 வாக்குகள்; 2 கோடி ஆண்டுகள்; ‘விஷவாயு’ விவசாயி! - விழுப்புரம் தொகுதியின் நிலவரம்

விழுப்புரமாகிய ஜனநாத மங்களம்! 

விழுப்பரையன் என்ற சிற்றரசன் ஆட்சி செய்ததாலேயே விழுப்புரம் எனப் பெயர் பெற்றது என்கின்றன வரலாற்று ஆவணங்கள். தற்போது பழைய பேருந்து நிலையம் இருந்த இடத்தில்தான் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட ஆதிவாலீஸ்வரர் கோயில் இருந்தது. ராஜராஜ சோழனுக்கு அப்போது ஜனநாதன் என்ற பெயரும் இருந்திருக்கிறது. அதனால், `விழுப்புரமாகிய ஜனநாத மங்களம்' என்று குறிப்பிடும் கல்வெட்டுகள் இன்றும் இருக்கின்றன. பிரெஞ்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் மொகலாயர்களும் அடிக்கடி மோதிக்கொள்ளும் இடம் இது. ஒருவேளை பிரெஞ்சுக்காரர்கள் இங்கு வெற்றி பெற்றிருந்தால் விழுப்புரம் புதுச்சேரியுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

2,797 வாக்குகள்!

தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து விழுப்புரம் ராமசாமி படையாச்சியார் மாவட்டம் என உருவாக்கப்பட்டு, பின்னர் விழுப்புரம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் திண்டிவனத்திலிருந்து பிரிக்கப்பட்டு விழுப்புரம் மக்களவைத் தொகுதி (தனி) உருவாக்கப்பட்டது. 2009-ம் ஆண்டுதான் இந்தத் தொகுதி முதல் மக்களவைத் தேர்தலைச் சந்தித்தது. அப்போது தி.மு.க கூட்டணியில் இங்கு போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சாமிதுரை 3,04,029 வாக்குகளைப் பெற்றார். அதேசமயம், அதைவிட 2,797 வாக்குகளை கூடுதலாகப் பெற்று அவரை வீழ்த்தி வெற்றிபெற்றார் அ.தி.மு.க வேட்பாளர் எம்.ஆனந்தன். இந்தத் தேர்தலில் தே.மு.தி.க 1,27,476 வாக்குகளைப் பெற்றது என்பது ஹைலைட். 

2014-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் டாக்டர் முத்தையன் 2,89,337 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் எல்.ராஜேந்திரன் 4,82,704 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவர் 2019 பிப்ரவரி மாதம் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இதே தேர்தலில் தே.மு.தி.க வேட்பாளர் உமாசங்கர் 2,09,663 வாக்குகளைப் பெற்றார். 

‘அந்த’ 2,797 வாக்குகள்; 2 கோடி ஆண்டுகள்; ‘விஷவாயு’ விவசாயி! - விழுப்புரம் தொகுதியின் நிலவரம்

எட்டாக் கனியான தனிக் கழிவறை! 

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் மேம்பாலம் அமைத்தால் அன்றாடம் நடக்கும் விபத்துகளைத் தடுக்க முடியும்.

தலித் மக்களின் குடியிருப்பான பெரிய காலனியில் இன்றும் திறந்தவெளிக் கழிப்பிடங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். அன்றாட வாழ்க்கையையே சமாளிக்க முடியாமல் திணறும் அந்த மக்களுக்கு, தனிக் கழிவறை என்பது இன்றும் எட்டாக் கனி.

விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எல்லிஸ் சத்திரம் கூட்டு ரோட்டில் மேம்பாலம் அமைப்பது.

நந்தன் கால்வாய் திட்டம்! 

திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் நீர் ஆதாரத்துக்காகக் கடந்த நூற்றாண்டில் கொண்டு வரப்பட்ட திட்டம் நந்தன் கால்வாய் திட்டம். இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் இரண்டு மாவட்டங்களில் சுமார் 6,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

தற்போதைய நிலவரப்படி கட்சிகளின் செல்வாக்கு என்ன? 

தி.மு.க கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார். அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க பொதுச் செயலாளர் வடிவேல் இராவணனும், அ.ம.முக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ கணபதியும் களமிறங்கியுள்ளனர். வன்னியர்களும் தலித்துகளும் பெரும்பான்மையாக இருக்கும் இந்தத் தொகுதியில் அ.தி.மு.கவும், தி.மு.கவும் பலமான வாக்குவங்கியைத் தக்க வைத்திருக்கின்றன. 

‘அந்த’ 2,797 வாக்குகள்; 2 கோடி ஆண்டுகள்; ‘விஷவாயு’ விவசாயி! - விழுப்புரம் தொகுதியின் நிலவரம்

தொகுதிக்குத் தொடர்பே இல்லாதவர் என்பது பா.ம.க வேட்பாளர் வடிவேல் ராவணனுக்கு மைனசாகப் பார்க்கப்பட்டாலும், அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பலம், கூட்டணிக் கட்சிகளின் பலம் போன்றவை அவருக்குப் பிளஸ். தி.மு.கவுக்கு கணிசமான வாக்குகள் இருக்கும் பகுதி என்பதால் உதயசூரியன் சின்னத்தில் நிற்பதை பலமாகப் பார்க்கிறார் ரவிக்குமார். அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மீதான அதிருப்தி, பா.ஜ.க மீதான வெறுப்பு போன்ற விவகாரங்களை பிளஸ்ஸாகப் பார்க்கிறார். 

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் ` டாப்-5’ காரணிகள்

1. பணப் பரிமாற்றம்
2. சாதி
3. வேட்பாளர்களின் தகுதி
4. இறுதிக்கட்ட பிரசாரம்
5. மத்திய, மாநில அரசுகள் மீதான அதிருப்தி

‘அந்த’ 2,797 வாக்குகள்; 2 கோடி ஆண்டுகள்; ‘விஷவாயு’ விவசாயி! - விழுப்புரம் தொகுதியின் நிலவரம்

பிரசாரத்தில் என்ன நடக்கிறது?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர்  ஸ்டாலின் ஆகியோர் விழுப்புரத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டனர். பிரசாரத்தில் ஸ்டாலின் பேசும்போது, ` தான் ஒரு விவசாயி எனக் கூறும் முதல்வர் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் அவர் விவசாயி அல்ல விஷவாயு' என்றார். ரவிக்குமாரும் தன்னுடைய பிரசாரத்தில், ` இரட்டை இலை,  தாமரை, மாம்பழம் ஆகியவை ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதது. இது பொருந்தாக் கூட்டணி. தி.மு.க கூட்டணி இயற்கையான கூட்டணி. பொங்கல் வைத்து சூரியனுக்குப் படைக்க பானை வேண்டும். பானையைப் பிடிக்கக் கை வேண்டும். ஆகவே, இது பொருந்தும் கூட்டணி' என அசரடிக்கிறார். 

மத்திய, மாநில அரசுகள் மீதான விமர்சனத்தை முன்வைத்து வாக்கு சேகரித்து வருகிறார். இதற்குப் பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமியும்,` 15 ஆண்டுக்காலம் மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க மக்களுக்கு செய்தது என்ன. காவிரி, முல்லைப் பெரியாறு என எந்தப் பிரச்னையையும் இவர்கள் தீர்க்க முயற்சி செய்யவில்லை. அதனால் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்' எனக் கூறி வாக்கு சேகரித்தார். ராமதாஸின் பிரசாரம், கூட்டணி பலம், கடைசி நேரப் பணப்பட்டுவாடா போன்றவற்றை நம்பிக் களமிறங்கியிருக்கிறார் வடிவேல் ராவணன். இவை அனைத்தையும் தாண்டி, தொகுதி மக்களின் மனதில் யார் இருக்கிறார்கள் என்பதற்கான விடையை வாக்கு எண்ணிக்கை நாளில் அறியலாம்.