Published:Updated:

பதுக்கலை ஆரம்பித்த தி.மு.க... களத்தை மாற்றிய கணிப்புகள்!

"வார இறுதிநாளுக்காகப் பல தொகுதிகளில் நிர்வாகிகள் காத்திருக்கிறார்கள். ஆனால், வெற்றி பெற்றுவிடுவோம் என்கிற மிதப்பு சில வேட்பாளர்களுக்கு இருப்பது உண்மைதான்” என்கிற கருத்தும் தி.மு.க பக்கம் கேட்கிறது. 

பதுக்கலை ஆரம்பித்த தி.மு.க... களத்தை மாற்றிய கணிப்புகள்!
பதுக்கலை ஆரம்பித்த தி.மு.க... களத்தை மாற்றிய கணிப்புகள்!

அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணிமீது தமிழகம் முழுவதும் எழுந்துள்ள எதிர்ப்பலை ஒருபக்கம், ஆளும் கட்சி மீதான அதிருப்தி மறுபக்கம் என தி.மு.க கூட்டணிக்குச் சாதகமாகத் தமிழகத்தின் தேர்தல் களம் மாறியுள்ளது. கருத்துக்கணிப்புகளும் அதையே வெளிப்படுத்த, உற்சாகத்தில் உள்ள தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி மிதப்பில் இப்போது சுற்ற ஆரம்பித்திருப்பதை அந்தக் கட்சியின் தொண்டர்களே அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள். 

தமிழகம் மற்றும் புதுவை உட்பட 40 நாடாளுமன்றத் தொகுதிகள், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பிரதான போட்டியாளர்களாகக் களத்தில் நிற்கின்றன. இவர்களுடன் தினகரனின் அ.ம.மு.க மற்றும் கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் நிற்கின்றன. தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணியே நாடாளுமன்றத் தேர்தலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும் நிலை தற்போது உள்ளது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்துக்குச் செல்லும் இடங்களில் கூடும் கூட்டத்தைப் பார்த்த தி.மு.க நிர்வாகிகள், மேலும் உற்சாகத்தில் உள்ளார்கள். இதுவே இப்போது தி.மு.க-வுக்குச் சிக்கலாகிவிடுமோ என்ற அச்சம் அந்தக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ளது.

"முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க தலைமையில் ஏற்பட்ட மாற்றம், பி.ஜே.பி-யின் செல்லப்பிள்ளையாகத் தமிழக அரசின் செயல்பாடுகள் இருந்தது போன்றவை அக்கட்சியின் கூட்டணிக்கு எதிராகப் பலமான எதிர்ப்பலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கும் முன்பே நாற்பதுக்கு நாற்பது என்ற இலக்கை அடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ஸ்டாலின். அதற்கேற்ற வகையில் வேட்பாளர்கள் பட்டியல் இருக்க வேண்டும் என்ற முடிவில் தி.மு.க தலைமை இருந்தது. மேலும், “ஆளும் கட்சி அவர்களது  ஆட்சியைத் தக்கவைக்கவும், மத்தியில் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்தவும் கரன்சிகளைவைத்து தமிழகத் தேர்தல் களத்தை மாற்ற நினைப்பார்கள். எனவே, அதற்குத் தகுந்தாற்போல நாமும் தேர்தல் வியூகத்தை வகுக்க வேண்டும்” என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலேயே ஸ்டாலின் அறிவித்தார். தி.மு.க வேட்பாளர்கள் தேர்வுக்கான நேர்காணல் நடைபெற்றபோதுகூட, “உங்களால் எவ்வளவு செலவு செய்யமுடியம்“ என்ற கேள்வி பிரதானமாக இடம்பெற்றது. குறிப்பாக 10 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யத் தகுதி இருந்தவர்களுக்கே வாய்ப்பும் அளிக்கப்பட்டது. தி.மு.க தரப்பில் ஒரு தொகுதிக்கு 20 கோடி முதல் 30 கோடி ரூபாய் வரை செலவு திட்டம் போடப்பட்டது. பாதித் தொகையை வேட்பாளரும் பாதித் தொகையைக் கட்சியும் வழங்கத் திட்டமிடப்பட்டது. 

தி.மு.க போட்டியிடும் தொகுதியில் ஏற்கெனவே கட்சிக்காரர்களைக் குஷிபடுத்த இரண்டு ரவுண்டு பூத் கமிட்டி பணம் ஒவ்வொரு பூத்துக்கும் வழங்கப்பட்டுவிட்டது. குறிப்பாக 8,000 முதல் 10,000 ரூபாய் வரை வேட்பாளரின் வசதியைப் பொறுத்து வழங்கப்பட்டுவிட்டது. இன்னும் இரண்டு நாள்களில் மூன்றாவது ரவுண்டு பணம் வழங்கப்பட உள்ளது. பூத் கமிட்டி பணத்தைத் தாண்டி வி.ஐ.பி பேக்கேஜ் என்ற அடிப்படையில் தொகுதியில் உள்ள முக்கியஸ்தர்களுக்குத் தனி கவனிப்பும் வேட்பாளர்கள் சார்பில் செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு தி.மு.க சார்பில் 300 முதல் 500 ரூபாய் வரை கொடுக்கலாம். அ.தி.மு.க கொடுக்கும் தொகையைப் பொறுத்து நாம் கொடுக்கலாம் என்று முடிவு செய்திருந்தார்கள். பெரும்பாலான தொகுதிகளுக்கு வாக்காளர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணம் சென்றுவிட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் பல்வேறு நிறுவனங்கள் மூலம் வெளியான கருத்துக்கணிப்பில் 30 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க வெற்றிபெற்றுவிடும் என்று வெளியானது. இது தி.மு.க தலைமைக்கும் மாவட்ட நிர்வாகிகளுக்கும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இதன் பிறகு நடந்த கதையே வேறு என்கிறார்கள். “இந்தக் கருத்துக்கணிப்பு தந்த உற்சாகமே இப்போது ஆபத்தாகிவிடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. குறிப்பாக, தி.மு.க கண்டிப்பாக வெற்றிபெற்றுவிடும் என்று 30 தொகுதிகளைக் குறிவைத்துள்ளார்கள். அந்தத் தொகுதியில் உள்ள மாவட்ட நிர்வாகிகள் இப்போது மிதப்பில் இருக்கிறார்கள். கட்சி வாக்காளர்களுக்குக் கொடுக்கச் சொல்லி கொடுத்த பணம், ஒவ்வொரு தொகுதியிலும் முக்கிய நிர்வாகிகள் வசம் உள்ளது. இந்தப் பணம், கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு இதுவரை சென்று சேரவில்லை. பல தொகுதிகளில் இதுதான் நிலை. பணம் கொடுக்காமலேயே தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று இப்போது புதிதாகப் பலரும் கணக்குப் போடுகிறார்கள். வேட்பாளர்கள் பணத்தைக் கொடுக்கச் சொல்லி, நிர்வாகிகளிடம் கொடுத்துவிட்டாலும் பணம் அடுத்தகட்டத்துக்குச் செல்வதில் இப்போது நின்றுவிட்டது. பணத்தைப் பதுக்கும் வேலையில் பல தி.மு.க புள்ளிகள் இறங்கிவிட்டார்கள். எட்டு ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் இருந்தவர்களுக்கு, இவ்வளவு தொகையைப் பார்த்ததும், பதுக்கும் எண்ணம் வந்துவிட்டது. இதற்கு, கருத்துக்கணிப்பு முடிவுகளே பிரதான காரணம். இந்த விவரம் எதிர்க்கட்சிகளுக்குத் தெரிந்தால், அவர்கள் முழுவீச்சில் பணத்தை விநியோகம் செய்து தேர்தல் முடிவை மாற்றும் அபாயமும் இருக்கிறது” என்று அச்சப்படுகிறார் தி.மு.க மாவட்ட நிர்வாகி ஒருவர். 

அதே நேரம், “தி.மு.க-வில் பணம் கொடுக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், எங்களைத் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்துள்ளது தேர்தல் ஆணையம். அதனால், பண விஷயத்தில் நாங்கள் அமைதியாக இருக்கிறோம். பணம் பதுக்கல் நடைபெற்றாலும் அதை முழு அளவில் பதுக்கமாட்டார்கள். ஓரளவேனும் பணம் சென்றடைந்துவிடும். வார இறுதி நாளுக்காகப் பல தொகுதிகளில் நிர்வாகிகள் காத்திருக்கிறார்கள். ஆனால், வெற்றி பெற்றுவிடுவோம் என்கிற மிதப்பு சில வேட்பாளர்கள் இருப்பது உண்மைதான்” என்கிற கருத்தும் தி.மு.க பக்கம் கேட்கிறது. 

ஆமை - முயல் கதையைத் தி.மு.க-வுக்கு மீண்டும் நினைவூட்ட வேண்டியுள்ளது.