Published:Updated:

`இப்ப ஒருத்தர் வந்திருக்கார், அவர் மூன்றாவதாக துளிர்விட்ட இலை!'- டி.டி.வி-யை கிண்டலடித்த கமல்ஹாசன்

`இப்ப ஒருத்தர் வந்திருக்கார், அவர் மூன்றாவதாக துளிர்விட்ட இலை!'- டி.டி.வி-யை கிண்டலடித்த கமல்ஹாசன்
`இப்ப ஒருத்தர் வந்திருக்கார், அவர் மூன்றாவதாக துளிர்விட்ட இலை!'- டி.டி.வி-யை கிண்டலடித்த கமல்ஹாசன்

`மூன்றாவதாக துளிர்விட்ட இலை' என ஒருவர் வந்திருக்கிறார். அவர் எப்படி வந்தார், அவர்கள் யார், இந்தk கூட்டம் என்ன செய்தது என எல்லோருக்கும் தெரியும். இப்ப நல்லா சிரிக்கிறார். அதனால் நல்ல  அரசியல் செய்வார் என்று நம்புகிறோம் என்கிறார்கள். உங்களுக்கு சின்ன பரிசு பெட்டியைக் கொடுப்பாங்க. ஆனால், பெரிய கஜானா காலியாகிவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்'' என தஞ்சாவூரில் கமல்ஹாசன் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யத்தின் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சம்பத் ராமதாஸ், சட்டமன்றத் தொகுதி கூட்டணிக் கட்சியான வளரும் தமிழகம் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் துரைசாமி ஆகியோரை ஆதரித்து, கமல்ஹாசன் இன்று பிரசாரம் செய்தார். முன்னதாக, தாடியில்லாத பெரியார், தொப்பியில்லாத எம்.ஜி.ஆர் என நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். கமல் படம் போட்ட முகமூடியை தொண்டர்கள் அணிந்திருந்தனர். ஹைட்ராலிக் லிஃப்ட்டுடன் நவீனமாக வடிவமைக்கப்பட்ட வேனில் கமல்ஹாசன் மற்றும் வேட்பாளர்கள் லிஃப்ட் மூலம் வேனுக்கு மேலே வர, அனைவரும் இதை ரசித்தனர். பிறகு மைக் பிடித்த கமல்ஹாசன், ``எங்கு சென்றாலும் மக்கள் எனக்கு அன்பை வாரி வழங்குகிறார்கள். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. செயல்முறையில் மக்கள் பணியாக அதை மாற்றிக்காட்ட வேண்டும். எங்க கட்சி வேட்பாளர்களுக்கு இருப்பது என்னுடைய முகம்தான்.

அரசியலில் அவர்கள் சம்பாதிப்பதற்காக வரவில்லை. அதுவே, அவர்களுடைய தனித்துவம். மக்கள் நீதி மய்யத்தின் தனித்துவம் என்னவென்றால், எப்படியாவது இந்தத் தேர்தலை கடத்தி விட்டுவிட வேண்டும் என்று நினைக்கிற கட்சி இல்லை. அதற்கு நல்ல உதாரணத்தைச் சொல்ல வேண்டும் என்றால், இந்தக் கூட்டம், காசு கொடுத்து சேர்ந்த கூட்டம் இல்லை. மற்றவர்கள் தொலைகாட்சியில் காட்டுவதற்கு பெரிய கூட்டம் தேவைப்படுகிறது. அதற்காக, பெரிய தொகையைச் செலவுசெய்து கூட்டத்தைத் திரட்டுகிறார்கள். அந்த மாதிரியான செலவெல்லாம் நாங்க பண்ண முடியாது. இப்போது செய்வதே பெரிய செலவுதான். நான் சினிமாவில் சம்பாதித்ததை வைத்து வசதியாக இருக்கிறேன்.

ஆனால், நாட்டுக்கே செலவு செய்ய வேண்டும் என்றால் எந்த பணக்காரர்களாலும் முடியாது. அம்பானியால்கூட முடியாது. ஆனால், ஒரு அரசாங்கத்தால் செய்ய முடியும். ஆனால் அங்கும் சென்று, கவலையில்லாமல் கொள்ளையடிக்கும் கூட்டத்தை அகற்றியே ஆக வேண்டும். மக்கள் நீதி மய்யத்தின் தலைவன் ஆகாவிட்டாலும், நான் ஒரு தமிழனாக உங்களிடம் இதை கேட்டிருப்பேன். நீங்கள் செயல்படாமல் இருந்தால் கொள்ளையடிப்பவர்கள் அகல மாட்டார்கள். அரிய வாய்ப்பு ஒன்று ஆரம்பித்திருக்கிறது. தொடர்ச்சியாக வாய்ப்புகளும் வரும். அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். மனத்தைத் தளரவிடாமல், வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களியுங்கள். நல்லவர்களும் இருக்கிறார்கள் இந்த நாட்டில். அதற்கு சான்றே இங்கு கூடியிருக்கும் கூட்டம். நல்லது நடக்கும்; ஒரு புதிய மாற்றத்தை நோக்கி நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம்.

இப்ப ஒருத்தர் வந்திருக்கார். அவர், மூன்றாவதாகத் துளிர்விட்ட இலை. அவர் எப்படி வந்தார், அவர்கள் யார். இந்தக் கூட்டம் என்ன செய்தது என எல்லோருக்கும் தெரியும். இப்ப நல்லா சிரிக்கிறார். அதனால் நல்ல  அரசியல் செய்வார் என்று நம்புகிறோம் என சொல்கிறார்கள். அது எப்படி செய்ய முடியும். உங்களுக்கு  பரிசுப் பெட்டியைக் கொடுத்துவிட்டு,  கஜானாவை தட்டிக்கொண்டு போகலாம் என்று நினைப்பவர்களை நீங்கள் எப்படி விடலாம். அவர் சரியா வரமாட்டார். உங்களுக்கு சின்ன பரிசுப் பெட்டியைக் கொடுப்பாங்க. ஆனால்,  பெரிய கஜானா காலியாகிவிடும், மறந்துடாதீங்க. உங்களுக்கு சாய்ஸ் நிறைய இருக்கு. அதில் முக்கியமாக, தலை நிமிர்ந்து நிற்கக்கூடிய சாய்ஸ், மக்கள் நீதி மய்யம். நான் வாக்கை விற்க வரவில்லை, கேட்க வந்திருக்கேன்.

வாக்களிக்க 100 மீட்டர் உள்ள வாக்கு சாவடிக்கு  நடந்து செல்லும்போது, தமிழகத்தைப் பற்றி யோசிச்சு சென்றால், கண்ணில் டார்ச் லைட் தென்படும். தஞ்சாவூரில் பல குறைகள் உள்ளன. குப்பைக் கிடங்கு நகரத்தின் நடுவே உள்ளது. குடிநீரில் சாக்கடை கலக்கிறது. இது அடிப்படையிலேயே தப்பு என்று தெரியாதவர்களை நாட்டை ஆழ விட்டிருக்கிறோம். இதற்கு நாம்தான் வருத்தப்பட வேண்டும். காவிரி என சண்டை போட்டுகொண்டே இருக்கிறோம். ஆனால், விவசாயிகளுக்கு பன்முகத் தன்மை விவசாயத்தில் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். இப்போது, அவர்களுக்கு என்ன லாபம் கிடைக்கிறதோ அதைவிட நூறு மடங்கு லாபம் கிடைக்கச்செய்ய முடியும். அதைத்தான் நாங்கள் செய்யப்போகிறோம்.

தமிழகத்தை இந்தியாவின் தலைவாசலாக மாற்றிக்காட்ட வேண்டும். அதை தஞ்சையில் நின்று சொல்கிறேன். அதற்கான ஆரம்ப விதையை நீங்கள் தூவ வேண்டும். தஞ்சை விவசாயிகள் நினைத்தால் எப்பெயரையும், எப்பயிரையும் வளர்த்துவிடலாம். இப்பயிரை வளர்ப்பதற்கு அவர்களுக்கு என்ன கடினம்? நேர்மையை விதைக்கவேண்டியது உங்கள் பொறுப்பு. ஏப்ரல் 18-ம் தேதி, விதையை விதையுங்கள். அரசியலில் நாங்கள் லாபம்பார்க்க வரவில்லை. உங்கள் கையில், நல்ல மனத்தில் இவர்களுக்கு இடம் அளித்துவிட்டால் நாளை நமதே'' என்றார்.