Published:Updated:

`அந்த' 87 வாக்குகள்; பானை படும்பாடு; கரன்ஸி வீச்சு! - சிதம்பரம் தொகுதியின் களநிலவரம் இதுதான்

சிதம்பரம் தொகுதியில் ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் காரணிகள் எவை?

`அந்த' 87 வாக்குகள்; பானை படும்பாடு; கரன்ஸி வீச்சு! - சிதம்பரம் தொகுதியின் களநிலவரம் இதுதான்
`அந்த' 87 வாக்குகள்; பானை படும்பாடு; கரன்ஸி வீச்சு! - சிதம்பரம் தொகுதியின் களநிலவரம் இதுதான்

தொகுதி: சிதம்பரம் (தனி)

சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், ஜெயங்கொண்டம், அரியலூர், குன்னம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

நாட்டிய நகர்! 

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் உலகப் பிரசித்திபெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் இந்தத் தொகுதியில் அமைந்துள்ளது. ஆலயநகர், நாட்டிய நகர் எனப் பல்வேறு அடைமொழிகளால் அழைக்கப்படுகிறது. நாட்டியம், கட்டடக்கலை, பக்தி ஆகியவற்றுக்குப் புகழ்பெற்ற நகரம். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பிச்சாவரம் சுற்றுலா மையம், வீராணம் ஏரி, ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் ஆகியவை பெருமைமிகு அடையாளங்கள். ராகவேந்திரர் அவதரித்த புவனகிரி, இந்தத் தொகுதிக்குள்தான் வருகிறது. விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் நிரம்பியுள்ள தொகுதி.

`அந்த’ 87 வாக்குகள்! 

சிதம்பரம் தொகுதியில் இதுவரை நடந்த 16 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 6 முறையும் தி.மு.க 4 முறையும், பா.ம.க 3 முறையும் அ.தி.மு.க இரண்டு முறையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1999-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நான்கு முறை தேர்தலில் போட்டியிட்டாலும், 2009-ம் ஆண்டு மட்டுமே வெற்றி பெற்றார் திருமாவளவன். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் காட்டுமன்னார் கோவிலில் போட்டியிட்ட அவர் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் முருகுமாறனிடம் தோற்றார். தற்போது ஐந்தாவது முறையாகத் தேர்தலில் போட்டியிடுகிறார்.  

வளமான விளைநிலத்தில் என்.எல்.சி! 

கடலூரிலிருந்து சிதம்பரம், ஜெயங்கொண்டம் வழியாக அரியலூருக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதியில் மக்களின் கோரிக்கையாக உள்ளது. ஜெயங்கொண்டத்தில் முந்திரி தொழிற்சாலை, பொன்னேரியை ஆழப்படுத்துவது, வீராணம் ஏரியைத் தூர் வாருவது போன்றவை முக்கியமான கோரிக்கைகள். என்.எல்.சி நிறுவனத்துக்குக் கம்மாபுரம் பகுதியில் உள்ள வளமான விளை நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. 

கைக்கு எட்டாத அனல்மின் நிலைய நிதி! 

ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையத்துக்காக நிலம், வீடு ஆகியவற்றை இழந்தவர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், நீண்டகாலமாக இதைக் கேட்டு அந்தப் பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இழப்பீடு பெற்றுத்தருவதாக வாக்கு கொடுக்கும் வேட்பாளர்களும் தேர்தல் முடிந்த பிறகு, மறந்துவிடுவது வாடிக்கையாக இருக்கிறது. 

கரன்ஸி மேளா... பானை படும்பாடு! 

தி.மு.க கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தன்னுடைய பிரசாரத்தில், "நீட் தேர்வை ரத்து செய்வோம், கல்விக் கடனை ரத்து செய்வோம், கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்ப்போம்" எனக் கூறி வாக்கு கேட்டு வருகின்றார். அ.தி.மு.க வேட்பாளர் சந்திரசேகர், மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டு வருகிறார். "மத்தியில் நிலையான பாதுகாப்பான ஆட்சி மலர வேண்டும் எனில் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும்" என்பதை பிரதானமாக முன்வைக்கிறார். தொகுதியில் உள்ள 5 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் அரசு கொறடா தாமரை ராஜேந்திரனின் ஆதரவும் அள்ளிவீசப்படும் கரன்ஸிகளும் சந்திரசேகருக்குப் ப்ளஸ். மோடி எதிர்ப்பு அலை, தொகுதிக்கு அறிமுகம் இல்லாதது போன்றவை மைனஸ். அ.ம.மு.க, சார்பில் இளவரசன் போட்டியிடுகிறார். இவரும் தன்பங்குக்குப் பணத்தை வாரியிறைப்பதால், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இவர் பிரிக்கப்போகும் வாக்குகள் வி.சி.க-வுக்குச் சாதகமாகும் என்ற பேச்சும் தொகுதிக்குள் வலம் வருகிறது. 

வாக்குப்பதிவைத் தீர்மானிக்கும் காரணிகள்! 

1. பணப்பட்டுவாடா.

2. கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு.

3. மத்திய மாநில அரசுகள் மீதான அதிருப்தி.

4. கட்சிகளின் செயல்பாடு. 

5. வேட்பாளர்களின் சொந்த செல்வாக்கு.

பிரசாரத்தில் என்ன நடக்கிறது?

சிதம்பரம் தொகுதி திருமாவளவனுக்குக் கடும் சவாலாகவே உள்ளது. தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், முஸ்லிம் லீக் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் பலமும் தொகுதிக்குள் நிறைந்திருக்கும் தலித் சமுதாய வாக்குகளையும் நம்பிக் களமிறங்கியிருக்கிறார். தொகுதியில் கணிசமாக உள்ள இஸ்லாமிய வாக்குகளும் முதலியார், யாதவர், உடையார், பிள்ளைமார் உள்ளிட்ட சமுதாய வாக்குகளைப் பெறவும் கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கிறார். "மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டத்தை அழித்து ஒழித்துவிடுவார். அம்பேத்கர் எழுதிய சட்டம் இந்தியாவை ஆளக்கூடாது என்பதுதான் அவரது நோக்கம்" என்பதை பிரசாரத்தில் முன்வைக்கிறார் திருமாவளவன். 

பா.ம.க நேரடியாகப் போட்டியிடாவிட்டாலும் திருமாவளவனைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறார் ராமதாஸ். சமீபத்தில் அரியலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராமதாஸ், "சிதம்பரம் தொகுதியில் நான்தான் போட்டியிடுகிறேன் என நினைத்து தேர்தல் பணியாற்றுங்கள். எதிரணியில் போட்டியிடும் திருமாவளவனை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்" எனக் கொதித்தார். இது ஆளும்கட்சி வேட்பாளருக்கு கூடுதல் பலத்தைக் கொடுத்துள்ளது.

அ.ம.மு.க வேட்பாளராகப் போட்டியிடும் இளவரசன், அ.தி.மு.க வேட்பாளருக்குக் கடும் நெருக்கடியைக் கொடுக்கும் வகையில் பிரசாரம் செய்து வருகிறார். பணம் பிரதானமாக இருப்பதால், சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தின் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்து வருகின்றனர் வி.சி.க தொண்டர்கள். "பரிசுப் பெட்டியையும் இலையின் கரன்ஸி வீச்சுக்களையும் தாண்டி தொகுதியை யார் தக்க வைக்கப் போகிறார்கள்?" என்ற விவாதம், சிதம்பரம் தொகுதிக்குள் அனல் பரப்பிக்கொண்டிருக்கிறது.