Published:Updated:

தேர்தல் பிரிவு டி.ஜி.பி-யானார் அசுதேஷ் சுக்லா அடுத்த நடவடிக்கை என்ன?

தமிழக சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யான டி.கே.ராஜேந்திரன் டம்மி ஆக்கப்பட்டிருக்கிறார். இவர் ஏற்கெனவே ஓய்வுபெற்று பணி நீட்டிப்பில் இருக்கிறார். "இப்படி உள்ளவர் தேர்தல் தொடர்பான பிரச்னைகளை எப்படிக் கையாள முடியும்'' என்பது இளம் ஐ.பி.எஸ்-களின் கேள்வி?

தேர்தல் பிரிவு டி.ஜி.பி-யானார் அசுதேஷ் சுக்லா அடுத்த நடவடிக்கை என்ன?
தேர்தல் பிரிவு டி.ஜி.பி-யானார் அசுதேஷ் சுக்லா அடுத்த நடவடிக்கை என்ன?

தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும்போது, பல மாநிலங்களில் சட்டம் - ஒழுங்குப் பிரிவு டி.ஜி.பி-தான் தேர்தல் தொடர்பான பணிகளைக் கவனிக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் மட்டும் தலைகீழாக நடக்கும். சட்டம் - ஒழுங்குப் பிரிவு டி.ஜி.பி-யைத் தேர்தல் முடியும்வரை டம்மி ஆக்கித் தேர்தல் வேலையை அவரிடமிருந்து பிரித்து, புதியவரை நியமிப்பார்கள். இப்படித்தான், தற்போது தமிழகத் தேர்தல் பிரிவு டி.ஜி.பி-யாக அசுதோஷ் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கம்போல், தமிழக சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யான டி.கே.ராஜேந்திரன் டம்மி ஆக்கப்பட்டிருக்கிறார். இவர் ஏற்கெனவே ஓய்வுபெற்று பணி நீட்டிப்பில் இருக்கிறார். "இப்படி உள்ளவர் தேர்தல் தொடர்பான பிரச்னைகளை எப்படிக் கையாள முடியும்'' என்பது இளம் ஐ.பி.எஸ்-களின் கேள்வி? அதேநேரம், எதிர்க்கட்சிகளும் டி.கே.ராஜேந்திரன் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளதால், அவரை மாற்றும்படி மத்திய அரசுக்கும் தேர்தல் கமிஷனுக்கும் கோரிக்கை வைத்தன. 

இதுபுறமிருக்க... மறுபுறம், கூடுதல் டி.ஜி.பி சட்டம் - ஒழுங்கு என்கிற பதவியில் விஜய் குமார் ஐ.பி.எஸ் இருந்துவந்தார். அவருக்கு அண்மையில் பதவி உயர்வு வந்தது. உடனே, அவரது  பதவியை அப்கிரேட் செய்து இதுவரை தமிழக போலீஸ் வரலாற்றில் இல்லாத வகையில், 'டி.ஜி.பி ஸ்பெஷல்' என்று புதிய பதவியை உருவாக்கினார்கள். ஆக, விஜய் குமாரும்  சட்டம் - ஒழுங்குப் பிரிவைத்தான் கவனிக்கிறார். 

இந்தச் சூழ்நிலையில், திடீரென ஏப்ரல் 11-ம் தேதி மதியம் 1 மணி நேரத்தைக் குறிப்பிட்டு தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் டி.ஜி.பி என்கிற பேனரில் அசுதோஷ் சுக்லாவை நியமித்துள்ளது. தமிழகத் தேர்தல் முடியும் நாள்கள்வரை தமிழகத்தில் போலீஸ் சம்பந்தப்பட்ட அனைத்துத் தேர்தல் வேலைகளையும் இவர்தான் கவனிக்கப்போகிறார். இதிலிருந்து பார்த்தால், தமிழகத்தில் நடக்கும் அனைத்து க்ரைம், அரசியல் மோதல் சம்பவங்கள் அனைத்தையும் விசாரிக்கும் பொறுப்பு சுக்லாவுக்குப் போகிறது. எக்காரணம் கொண்டும் டி.கே.ராஜேந்திரன், மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் பேசக்கூடாது. அதிகாரிகள் லெவலில் ஆன கூட்டங்களை நடத்தக்கூடாது என்று கறாராகத் தெரிவித்துவிட்டது. அப்படியானால்... டி.கே.ராஜேந்திரன் என்ன செய்வார் என்பது குழப்பமாக இருக்கிறது. சரி... சட்டம் - ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி-யான விஜய் குமார் என்ன செய்வார் என்பதும்கூடப்  புரியாத புதிராக இருக்கிறது. 

இதுபற்றி டி.ஜி.பி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, "இதெல்லாம் ஒரு சம்பிரதாய நியமனம். முன்பு, ராமானுஜம், அசோக்குமார்... இருவரும் டி.ஜி.பி-யாக இருந்த சமயத்தில் தேர்தல் வந்தபோது, அனூப் ஜெய்ஸ்வால், மகேந்திரன்... இருவரையும் தேர்தல் டி.ஜி.பி என்கிற பெயரில் தேர்தல் கமிஷன் நியமித்தது. அவர்களை மூலையில் உட்காரவைத்துவிட்டு, பழையவர்களே சட்டம் - ஒழுங்குப் பணியைக் கவனித்தனர். மாவட்ட அதிகாரிகள், புதிதாக வந்தவர்களிடம் எப்படி உத்தரவுகளை வாங்குவது என்று குழம்பினர். பெயருக்கு இந்த இருவரையும் உட்காரவைத்துவிட்டு, பழையபடி சீனியர்களே தேர்தல் பணிகளைச் செய்தனர். அதுபோலத்தான், இப்போது சுக்லாவை நியமித்திருக்கிறார்கள். திரைக்குப் பின்னால், இவரை டம்மியாக உட்காரவைத்துவிட்டு தேர்தலை நடத்தப்போவது டி.கே.ராஜேந்திரனும் விஜய் குமாரும்தான்'' என்றனர். 

சுக்லா, கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் சென்னை போலீஸ் கமிஷனராகத் தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டார். அப்போது, தி.மு.க-வின் மு.க.ஸ்டாலின் பிரசாரத்துக்குச் சென்றபோது, அவருக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரேஞ்சுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று சுக்லா சொன்னதாகப் போலீஸ் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. இது, அ.தி.மு.க அனுதாபிகளான போலீஸ் அதிகாரிகளை எரிச்சலடைய வைத்தது. இப்படியிருக்க... தற்போது புதிய டி.ஜி.பி ஆக யாரை நியமிக்கலாம் என்று பேச்சு எழுந்தது. சில ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பெயர்களைத் தமிழக அரசு தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியது. அதில், சுக்லாவைத் தேர்தெடுத்து அறிவித்தது, தேர்தல் கமிஷன். உடனே பதவி ஏற்றுக்கொண்டார். "மக்கள் பயமின்றி வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது'' என்று மீடியாக்களிடம் சொன்னார் சுக்லா!