Published:Updated:

"நான் தோற்றுப்போவேன் என்று தெரிந்தேதான் போட்டியிடுகிறேன்" - சி.எஸ்.கர்ணன்!

"நான் தோற்றுப்போவேன் என்று தெரிந்தேதான் போட்டியிடுகிறேன்" - சி.எஸ்.கர்ணன்!
"நான் தோற்றுப்போவேன் என்று தெரிந்தேதான் போட்டியிடுகிறேன்" - சி.எஸ்.கர்ணன்!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறியதோடு, பிரதமருக்குக் கடிதமும் எழுதினார் அப்போது நீதிபதி பதவியில் இருந்த சி.எஸ்.கர்ணன். இதனால் அவரைக் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து,  நீதிபதிகளுக்கு எதிரான கர்ணனின் குற்றச்சாட்டுகளைத் தாமாக முன்வந்து விசாரித்தது உச்ச நீதிமன்றம். இந்த வழக்குத் தொடர்பாக, பலமுறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாத கர்ணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது உச்ச நீதிமன்றம். அதனை ஏற்காத கர்ணன், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக அதிரடியாக ஆணைப் பிறப்பித்தார்.

உச்ச நீதிமன்றத்தையே அதிரவைத்த கர்ணனின் நடவடிக்கையால், அவர் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றார். பின்னர், அந்த வழக்கில் மன்னிப்புக் கோரியதுடன், நீதித்துறையில் இருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார் கர்ணன். தற்போது "ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி" என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ள அவர், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியிலும் போட்டியிடுகிறார். அவரின் அரசியல் ஆர்வம், வேட்பாளராகப் போட்டியிடுவது போன்றவை குறித்து கர்ணனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

"அரசியலுக்கு வந்துள்ள உங்களின் இந்த அனுபவம் மற்றும் தேர்தல் பிரசாரம் குறித்து...?" 

"அரசியல் களத்தில் புதிய யுக்திகளைக் கையாளப் போகிறேன். குறிப்பாக, லஞ்சத்தை ஒழிப்பதற்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன். நீதித்துறை தொடங்கி அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நீதித்துறையில் இருந்து செய்யமுடியாத சில விஷயங்களை, அரசியல் களத்தில் இருந்து செய்ய முடியும் என்று நம்புகிறேன். 

"நான் தோற்றுப்போவேன் என்று தெரிந்தேதான் போட்டியிடுகிறேன்" - சி.எஸ்.கர்ணன்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகள்  உள்படப் 20 பேர் மீது பிரதமரிடம் ஊழல் புகார் கொடுத்திருந்தேன். அந்தப் புகாரின்மீது பிரதமர், விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தால் இந்தளவுப் பிரச்னைகளைச் சந்தித்திருக்க மாட்டேன். ஆனால், பிரதமர் என்னுடையக் கடிதத்தை  உச்ச நீதிமன்றத்திற்கே திருப்பி அனுப்பியதால் அவர்கள் மீது நடவடிக்கை இல்லாமல் நீர்த்துப்போய் விட்டது. இதையெல்லாம்  சரிசெய்ய  வேண்டும் என்றால் அதிகாரமிக்க ஒரு பதவி தேவைப்படுகிறது. அதனால்தான் அரசியல்களத்தை நான் தேர்ந்தெடுத்துள்ளேன்" .

"உங்களுடைய கட்சி சார்பில் 40  தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்களா?" 

"சின்னம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடியாமல் போயிற்று. இந்தச் சூழலிலும் பீகாரில் 38  தொகுதிகளில் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். ஆனால், அந்த 38 பேரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இந்தநிலையில்தான், தமிழகத்தில் எட்டுத் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒன்றரை லட்சம் ரூபாய் கட்சி நிதியாகக் கொடுத்து தேர்தலில் நிறுத்தியுள்ளேன். வரும்  சட்டமன்றத் தேர்தலிலும் வேட்பாளர்களின் செலவை கட்சியே ஏற்கும்".

"தமிழகத்தில் பெரிய அரசியல் கட்சிகள் எல்லாம் இருக்கும்போது, அந்தக் கட்சிகளை எதிர்த்து உங்களால் வெற்றிபெற முடியுமா?"

"ஜெயிக்க முடியும். பணம் இருந்தால் போதும். இந்தத் திராவிடக் கட்சிகளை வீழ்த்த முடியும். என்னிடமே மக்கள் வந்து கேட்கிறார்கள், 'எங்கள் வீட்டில் இத்தனை ஓட்டுகள் உள்ளன. நீங்கள் காசு கொடுங்கள்' என்கிறார்கள். அவர்கள் வறுமையில் இருப்பதால் கொள்கைகளை எல்லாம் அவர்களால் பின்பற்ற முடியாது. எனவே, அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கிவிடுகிறார்கள். என்னிடம் அந்தளவுப் பணம் இல்லாததால், எங்கள் கட்சி தோல்வியடைய வாய்ப்புள்ளது. இங்குள்ள அரசியல்வாதிகள் மக்களின் பலவீனத்தை தங்களின் சுயலாபத்திற்கு ஏற்றவகையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பணம் கொடுக்கும் அரசியல்வாதிகளின் பிடியில் உள்ள மக்களை மீட்டுக் கொண்டுவருவதற்கு சில காலம் அவகாசம் தேவைப்படுகிறது. அதுவரை அரசியல்களத்தில் பொறுமையுடன்தான் செயல்பட வேண்டும்".

"நீங்கள் தோற்றுப்போவீர்கள் என்று தெரிந்தும், தேர்தலில் ஏன் போட்டியிடுகிறீர்கள் ?"

"Failure is not final", இந்தத் தேர்தலில் இல்லை என்றாலும், எதிர்காலத்தில் மக்கள் எங்களை நன்றாகப் புரிந்து கொள்வார்கள். அரசியலுக்கு வந்து, 30 நாட்களுக்குள் வேட்பாளர்களை நிறுத்தி, எங்களால் முடிந்தவரை பிரசாரம் செய்து கொண்டிருக்கிறோம். தொடங்கி 50 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ள திராவிடக் கட்சிகளை எதிர்த்துப் போட்டியிடும் அளவுக்கு மன வலிமையோடு இருக்கும்போது, அரசியலில் என் பயணம் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது". 

"நீதித்துறையில் ஏற்பட்ட மனக்கசப்பை அரசியலால் சரிசெய்ய முடியும் என்று நினைக்கிறீகளா?".

"என்னால் நீதித்துறையில் உள்ளவர்களுக்குத்தான் மனக்கசப்பு. எனக்கு எந்த மனக்கசப்பும் இல்லை. தவறுகளைத் தைரியமாக எதிர்த்துக் கேட்டேன் என்பதற்காகத் தூக்கி உள்ளே வைத்தார்களே, அவர்கள்தான் மனம் கசந்துபோய் தலைகுனிய வேண்டும்".

"எதை முன்வைத்து பிரசாரம் செய்கிறீர்கள்?"

அனைத்துத் துறைகளிலும் உள்ள ஊழலை முதலில் ஒழிக்கவேண்டும். குற்றங்களைக் குறைப்பதற்கு என்ன நடவடிக்கையோ, அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது, சிறையில் உள்ள கைதிகளுக்கு மறுவாழ்வு அளிப்பது, எந்தத் துறையில் யார் தவறு செய்திருந்தாலும் பாரபட்சமின்றி அவர்களுக்குத் தண்டனை வாங்கித்தருவது, விவசாயிகளை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட கொள்கைகளை மக்களிடம் என்னுடைய வாக்குறுதிகளாக முன்வைத்துள்ளேன். இந்தமுறை என்னால் ஜெயிக்க முடியாது என்றாலும், அடுத்தமுறை தேர்தலில் வெற்றிபெற்று, இந்தியாவின் பிரதமராகப் பதவி ஏற்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. எப்போதும் வைத்தகுறியில் இருந்து பின்வாங்காதவன் இந்தக் கர்ணன்".