Published:Updated:

தி.மு.க. வேட்பாளர் பிரசாரத்தில் கோஷ்டிப் பூசல் - முன்னாள் எம்.எல்.ஏ-யின் சட்டையைப் பிடித்த தொண்டர்!

தி.மு.க. வேட்பாளர் பிரசாரத்தில் கோஷ்டிப் பூசல் - முன்னாள் எம்.எல்.ஏ-யின் சட்டையைப் பிடித்த தொண்டர்!
தி.மு.க. வேட்பாளர் பிரசாரத்தில் கோஷ்டிப் பூசல் - முன்னாள் எம்.எல்.ஏ-யின் சட்டையைப் பிடித்த தொண்டர்!

தஞ்சாவூர் தொகுதி தி.மு.க வேட்பாளர்  பழனிமாணிக்கம்  பிரசாரத்தில் கோஷ்டிப் பூசலால் முன்னாள் எம்.எல்.ஏ. கார் கண்ணாடியை உடைத்து, அவர் சட்டையைப் பிடித்து பிரச்னை செய்ததால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்  நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் வேட்பாளராக போட்டியிடுபவர் பழனிமாணிக்கம். இவர் ஒரத்தநாடு அருகே செல்லம்பட்டியில், இன்று பிரசாரம் செய்துகொண்டிருந்தார். இதற்காக திறந்தவெளி மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. கட்சியின் தொண்டர்கள் ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். மேடையில் பழனிமாணிக்கம், மாவட்டச் செயலாளர் சந்திரசேகர், ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.ராமசந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ, மகேஷ் கிருஷ்ணசாமி மற்றும் பல நிர்வாகிகள் இருந்தனர்.

பழனிமாணிக்கம் பேசுகையில், `மத்திய இணை அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்களை எண்ணிப் பார்த்து எனக்கு வாக்களியுங்கள். சில குள்ளநரிகள் கடந்த ஒரு வருடமாக கட்சியிலும், மக்களிடத்திலும் என்னைப் பற்றி பல அவதூறுகளைக் கூறி வந்தனர். அவை எதுவும் எடுபடாமல் போய்விட்டது. மக்களுக்கு இடையூறாக நான் இருந்தேன் என யாராவது சொல்ல முடியுமா. மக்களுக்காக உழைத்த என்னை மீண்டும் உழைப்பதற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என பேசி முடித்தார். கூட்டம் முடிந்ததும் நிர்வாகிகள் அனைவரும் கிளம்பினர். முன்னாள் எம்.எல்.ஏ.,மகேஷ் கிருஷ்ணசாமி காரில் புறப்பட்டார். அப்போது பின்னையூரைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் மகேஷ் கிருஷ்ணாசாமியின் கார் பின்பக்கத்தைத் தட்டி உடைத்துள்ளார். 

இதையடுத்து கோபம் அடைந்த மகேஷ் கிருஷ்ணசாமி காரைவிட்டு இறங்கி வந்து,  `ஏன் காரை தட்டுகிறாய்?' எனக் கேட்க புகழேந்தி அவரின் சட்டையைப் பிடித்துள்ளார். இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த நிர்வாகிகள் அவர்களை விலக்கிவிட்டு சமாதானம் செய்தனர். பின்னர் மகேஷ் கிருஷ்ணாசாமி காரை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டார். இதுகுறித்து விவரமறிந்தவர்களிடம் பேசினோம். `கடந்த தேர்தலில் பழனிமாணிக்கத்துக்கு சீட் கொடுக்காமல் டி.ஆர்.பாலுவுக்கு சீட் கொடுத்தனர். அப்போதில் இருந்தே பழனிமாணிக்கம் அணி, டி.ஆர்.பாலு அணி என இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். தற்போது பழனி மாணிக்கமும் டி.ஆர்.பாலுவும்  சமாதானம் அடைந்துவிட்டாலும் டி.ஆர்.பாலுவின் ஆதரவாளர்கள் இன்னும் பழனிமாணிக்கத்திடம் ஒட்டாமல் விலகியே நிற்பதோடு, கோஷ்டி அரசியலும் செய்கின்றனர்.

மேலும், இந்தத் தேர்தலில் போட்டியிட டி.ஆர்.பாலு ஆதரவாளரான மகேஷ் கிருஷ்ணசாமியும் சீட் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு கிடைக்கவில்லை. கடந்த சில நாள்களாக பழனிமாணிக்கம், மகேஷ் கிருஷ்ணசாமி தரப்புக்கு இடையே கோஷ்டிப் பூசல் இருந்து வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் மகேஷ் கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்கள் பிரச்னையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில்தான், மகேஷ் கிருஷ்ணசாமி சட்டையைப் பிடித்து வம்பிழுத்துள்ளனர். இதை உடனே தலைவர் ஸ்டாலின் கவனத்தில் கொண்டு தீர்த்து வைக்க வேண்டும். அப்போதுதான் தொகுதியில் வெற்றி பெறமுடியும்'' என்றனர்.