Published:Updated:

"இவற்றை எல்லாம் பார்க்காமல் வாக்களியுங்கள்" - இயக்குநர் ராஜு முருகன் பேட்டி

"எப்போதும் போராடிக்கொண்டிருப்பதாலேயே இடதுசாரிகளை நாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், கோமாளியாக பார்க்கக்கூடிய நிலை இருக்கிறது. ஆனால், மக்களுக்கு இவர்கள் துணை நிற்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

"இவற்றை எல்லாம் பார்க்காமல் வாக்களியுங்கள்" - இயக்குநர் ராஜு முருகன் பேட்டி
"இவற்றை எல்லாம் பார்க்காமல் வாக்களியுங்கள்" - இயக்குநர் ராஜு முருகன் பேட்டி

'வட்டியும் முதலும்' மூலம் எளியோர் வாழ்வின் அழகியலை எழுத்தாக்கியவர்; அநீதிக்கு எதிராகவும் அடிப்படைத் தேவைகளுக்காகவும் போராடுபவர்களை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது என்ற சீரியஸான அரசியலை, 'ஜோக்கர்' படம் மூலம் பேசியவர். ஒரு பத்திரிகையாளராகப் பயணம் செய்தாலும், தன்னுடைய சினிமாவில் ஊடகங்களை விமர்சிக்கத் தயங்காத கலைஞர் ராஜுமுருகன்.

ஜோக்கரைத் தொடர்ந்து, அடுத்ததாக 'ஜிப்ஸி' படத்தில் பிஸியாக இருக்கிறார். "Very Very bad" பாடலில், தமிழகத்தின் மோஸ்ட் வான்ட்டடு போராளிகளை வைத்து எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார். இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் இடதுசாரி வேட்பாளர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரை ஆதரித்து பிரசாரத்தில் குதித்திருக்கிறார் ராஜுமுருகன். கோவை நாடாளுமன்றத் தொகுதி சி.பி.எம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து பிரசாரத்துக்காக வந்திருந்த ராஜுமுருகனைச் சந்தித்துப் பேசினோம்.

"எதற்காக இந்த முடிவு..?"

"பொதுவாகவே நான் இடதுசாரி சிந்தனை உடையவன். அதனால், இந்தத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறேன். இடதுசாரிகள் எளிமையானவர்கள். மக்கள் அவர்களை எளிதில் அணுக முடியும். இவர்கள் வெற்றிபெற்றால், மக்களுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளனுக்கும் ஆதரவாகவும் பிரசாரம் செய்கிறேன். அவர், சமூக நீதிக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார். எனவே, அவரை ஆதரிப்பது என் கடமை."

"கம்யூனிஸ்ட்களை ஆதரிக்கக் காரணம்?"

"எப்போதும் போராடிக்கொண்டிருப்பதாலேயே இடதுசாரிகளை நாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், கோமாளியாக பார்க்கக்கூடிய நிலை இருக்கிறது. ஆனால், மக்களுக்கு இவர்கள் துணை நிற்பார்கள் என்று நான் நம்புகிறேன். இதனால், தி.மு.க மற்றும் காங்கிரஸுக்கு நான் ஆதரிக்கப்போவது கிடையாது. என்னுடைய ஆதரவு இடதுசாரிகளுக்கும், தொல்.திருமாவுக்கும் மட்டும்தான். மற்ற தொகுதிகளில் யாரை ஆதரிக்கவும் எனக்கு மனது வரவில்லை."

" 'தி.மு.க - காங்கிரஸுக்கு ஆதரவு இல்லை' என்று கூறுகிறீர்கள். ஆனால், இடதுசாரிகளும் தொல்.திருமாவும் அந்தக் கூட்டணியில்தானே இருக்கின்றனர்? நீங்கள் பிரசாரம் செய்பவர்கள் வெற்றிபெற்றால், அதில் தி.மு.க - காங்கிரஸ் கட்சிகளும்தானே பயன்பெறும்?"

"இந்த ஐந்து தொகுதிகளில் இவர்கள் வெற்றி பெறாவிடின், யார் வெற்றிபெறுவார்கள் என்பதை யோசிக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் முதலில் மக்களுக்கான குரலாக இருக்க வேண்டும். இன்றைக்கு நான்கு பேராக இருப்பவர்கள், நாளைக்கு 40 பேராக மாற வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம்."


"என்ன மாதிரியான பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளீர்கள்?"

"ஐந்து தொகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று பிரசாரம் செய்கிறேன். மேலும், காம்ரேட் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனல் மூலமாக அரசியல் வீடியோக்களை உருவாக்கி வருகிறோம். அதில், இடதுசாரிகளுக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தையும் விழிப்பு உணர்வையும் செய்து வருகிறோம்."

"தற்போதைய தமிழக அரசின் செயல்பாடு?"

"மத்திய அரசின் நேரடி அடிமையாக இருக்கிறது. மாநில சுயாட்சிதான் திராவிட இயக்கங்களில் மிகப்பெரிய கோஷமாக இருந்தது. ஆனால், தற்போது அந்தச் சுயாட்சியை அடமானம் வைத்துவிட்டனர். இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. மத்திய அரசின் மூலம் பிரிவினை அதிகரித்துவிட்டது. இந்த இரண்டு அரசையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்."


"பல இடங்களிலும் மோசம், மிக மோசம் என்று ஒப்பிட்டுத்தான் வாக்களிக்க வேண்டுமா? ஏன் வலுவான மூன்றாவது அணியை உருவாக்க முடியவில்லை?"

"மக்கள் நலக் கூட்டணி என்ற விஷயத்தை முன்வைத்தபோது மக்களிடம் அதற்குச் சரியான ஆதரவு கிடைக்கவில்லை. இங்கு பணம்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. அரசியல் கட்சிகள், ஊடகங்கள், கலை என்று அனைவரும் சேர்ந்து ஓர் ஊழலான உலகத்தை உருவாக்கியிருக்கின்றன. அவற்றுக்கு எதிராக அனைத்துத் தளங்களிலும் போராட வேண்டும். அதற்காகத்தான் இதுபோன்ற பணிகளில் நான் ஈடுபட்டுள்ளேன்."

"தமிழகத்தில் தீர்வு காணப்பட வேண்டிய தலையாய பிரச்னைகள் என்று நீங்கள் நினைப்பது?"

"விவசாயம் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க வேண்டும். நீர்நிலைகளை மீட்டெடுக்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பைப் பலப்படுத்த வேண்டும். சாதிய, மத வன்முறைகள் முழுமையாக ஒழிய வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்."

" 'இந்த ஒரு விஷயத்தைச் சிந்தித்துவிட்டு வாக்களியுங்கள்' என்று பொதுமக்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?"

"வேட்பாளரின் தரத்தைப் பார்க்க வேண்டும். 'இதையெல்லாம் பாருங்கள்' என்பதற்குப் பதிலாக, 'இதையெல்லாம் பார்க்காமல் வாக்களியுங்கள்' என்று சொல்ல வேண்டும். அதில் பணம், சாதி, அதிகாரம் போன்றவற்றை எல்லாம் பார்க்காமல் வாக்களித்தாலே போதும்."

" 'ஜிப்ஸி' படம் தாமதத்துக்கு அரசியல் அழுத்தம் ஏதாவது காரணமா?"

"அப்படி எதுவும் இல்லை. 'ஜிப்ஸி' சற்று பெரிய படம். சி.ஜி பணிகள் எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன. பணிகள் முடிந்ததும் படம் ரிலீஸாகிவிடும்."

"இடதுசாரியாக இருப்பதால் சினிமா துறையில் என்ன மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்கிறீர்கள்?"

"பிரச்னை எதுவும் இல்லை. ஆனால், மன அழுத்தம் எப்போதும் இருக்கும். யாருக்காக நாம் துணை நிற்கப்போகிறோம் என்பது மிகவும் முக்கியம். இதுதான் நம்முடைய சந்தோஷம் என்று முடிவுசெய்துவிட்டோம். இதனால், அதையெல்லாம் கடந்துசென்றுதான் ஆக வேண்டும்."

"சமீபத்தில் நீங்கள் பார்த்து ரசித்த அரசியல் படம்?"
 
"இப்போது தமிழில் நிறைய நல்ல அரசியல் படங்கள் வருகின்றன. சமீபத்தில், 'உறியடி 2' பார்த்தேன். சிறப்பாக இருந்தது. நல்ல கதைக்களம். விஜயக்குமார் தரமான படைப்பைக் கொடுத்திருக்கிறார்."

" 'வட்டியும் முதலும்' மாதிரியான எழுத்தை மீண்டும் உங்களிடம் எப்போது எதிர்பார்க்கலாம்?"

"நிறைய பேர் இதைக் கேட்கிறார்கள். நம்மை நாமே புத்துணர்வு ஆக்கிக்கொள்ள உதவுவது எழுத்துதான். கூடிய விரைவில் அது நடக்கும்."