Published:Updated:

`எங்களிடம் ஓட்டு கேட்கமாட்டியா?'-அ.தி.மு.க நிர்வாகியை வம்புக்கிழுத்து கம்பியால் தாக்கிய அ.ம.மு.க-வினர்

`எங்களிடம் ஓட்டு கேட்கமாட்டியா?'-அ.தி.மு.க நிர்வாகியை வம்புக்கிழுத்து கம்பியால் தாக்கிய அ.ம.மு.க-வினர்
`எங்களிடம் ஓட்டு கேட்கமாட்டியா?'-அ.தி.மு.க நிர்வாகியை வம்புக்கிழுத்து கம்பியால் தாக்கிய அ.ம.மு.க-வினர்

வாக்கு கேட்க வந்த அ.தி.மு.க நிர்வாகிமீது அம்மா மக்கள் முன்னேற்றக் கழககத்தினர் கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுக்க நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. அரசியல் கட்சி நிர்வாகிகள் தங்கள் கட்சிக்கு வாக்கு சேகரித்து ஆங்காங்கே பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அப்படி திருச்சியில் பிரசாரம் செய்த  அ.தி.மு.க நிர்வாகிமீது நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கே.கே.நகர் அடுத்து உள்ள சாத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. திருச்சி 32-வது வட்ட அ.தி.மு.க செயலாளராகவும், திருச்சி ஏர்போர்ட் தென்றல் நகர் கூட்டுறவு சங்கத் தலைவராகவும் உள்ளார். தொடர்ந்து இவர் இன்று காலை சாத்தனூர் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று வாக்கு சேகரித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்தப் பகுதியில் இருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மதி, அழகர் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் கந்தசாமியிடம், ``நீ எங்களிடம் ஓட்டு கேட்க மாட்டியா' என வம்பிழுக்க, அப்போது ஏற்பட்ட தாக்குதலில் மதியின் கூட்டாளிகள், கையில் வைத்திருந்த இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கந்தசாமியைத் தாக்கினார்கள். தாக்குதலில் காயமடைந்த கந்தசாமி, ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். பதறியடித்து ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் கந்தசாமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கந்தசாமி. அவரை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இச்சம்பவம் குறித்து திருச்சி மாநகர காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், கந்தசாமி மீது தாக்குதல் நடத்திய வெள்ளைத்துரை, மதி உள்ளிட்ட 4 பேரை போலீஸார் தேடி வருகிறார்கள். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், ``திருச்சி மாவட்ட அ.தி.மு.க-வில், சிட்டிங் மாநகர் மாவட்டச் செயலாளரும் எம்.பி-யுமான குமார் மற்றும் அமைச்சர்  வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் தனித்தனி அணிகளாகச் செயல்பட்டு வருகிறார்கள்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கத் தேர்தலில் பல வருடங்களாகத் தி.மு.க வசமிருந்த, திருச்சி ஏர்போர்ட் தென்றல் நகர் கூட்டுறவு சங்கத் தேர்தலில், எம்.பி.குமார், கந்தசாமியைத் தேர்தலில் நிறுத்தி வெற்றிபெற வைத்தார். அதுவரை குமார் அணியில் இருந்த கந்தசாமி, அடுத்த சில மாதங்களில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அணிக்கு மாறிவிட்டார்.

கந்தசாமியைத் தாக்கிய 4 பேரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அ.தி.மு.க-வில் இருந்துள்ளனர். அப்போது அவர்களுக்கும் கந்தசாமிக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், அதனால் அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்குச் சென்றுவிட்டதாகக்  கூறப்படுகிறது. ஆனாலும் அவர்களும் குமார் எம்.பி-யும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், எம்.பி. குமாருக்கான கொஞ்சம் அமைதியாக இருந்தனர்.

ஆனால், தற்போது கந்தசாமி அணி மாறியதால், எதற்கும் துணிந்துவிட்ட மதி தரப்பு, கந்தசாமியை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்துத் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

வாக்கு சேகரிக்க வந்த அ.தி.மு.க நிர்வாகி திருச்சியில் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.