Published:Updated:

`டென்ஷன்' டி.ஆர்.பாலு; `கலங்கும்' வைத்தி; `நம்பிக்கை' நாராயணன்! - ஸ்ரீபெரும்புதூர் தொகுதி களநிலவரம்

அறிமுகம் இல்லாத வேட்பாளரும் அ.தி.மு.க மீதான அதிருப்தி அலையும் தன்னைக் கரையேற்றும் என எதிர்பார்க்கிறார் டி.ஆர்.பாலு. ஸ்ரீபெரும்புதூரின் ஸ்டேட்டஸ் நிலவரம் இதோ...

`டென்ஷன்' டி.ஆர்.பாலு; `கலங்கும்' வைத்தி; `நம்பிக்கை' நாராயணன்! - ஸ்ரீபெரும்புதூர் தொகுதி களநிலவரம்
`டென்ஷன்' டி.ஆர்.பாலு; `கலங்கும்' வைத்தி; `நம்பிக்கை' நாராயணன்! - ஸ்ரீபெரும்புதூர் தொகுதி களநிலவரம்

தொகுதி: ஸ்ரீபெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர், தாம்பரம், பல்லாவரம், அம்பத்தூர், மதுரவாயல் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. 

துறவிகளின் அரசர்! 

துறவிகளின் அரசர் எனப் போற்றப்படும் ஸ்ரீராமாநுஜர் அவதரித்த ஊர் ஸ்ரீபெரும்புதூர். தொண்டை மண்டலத்தில் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் ராமாநுஜருக்கு ஆலயம் அமைந்துள்ளது. பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களான நிசான், ஹூண்டாய், ராயல் என்ஃபீல்டு, செயின்ட்கோபெயின் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்களும் அதற்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் அதிகளவில் இருக்கின்றன. வெளிமாநிலத்தவர்கள் அதிகம் பேர் இங்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை, மீனம்பாக்கம் விமான நிலையம், தாம்பரம் மெப்ஸ் ஏற்றுமதி வளாகம், நெஞ்சக நோய் மருத்துவமனை, தேசிய சித்த மருத்துவ நிறுவனம், ராஜீவ்காந்தி நினைவிடம், பல்லவர்கள் ஆண்ட பல்லாவரம் எனப் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியது. 

காங்கிரஸ் சென்டிமென்ட்! 

1991-ல் ஆண்டு நடந்த தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்தார் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி. அப்போது தற்கொலைப் படையினர் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம், உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறுவது வழக்கம். ராஜீவ் படுகொலைக்குப் பிறகு தி.மு.க., அ.தி.மு.க. என எந்தக் கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அவர்களுக்கே ஒதுக்கப்பட்டு வருகிறது. இதன் பின்னர் தொடர்ச்சியான காங்கிரஸ் கட்சியும் இந்தத் தொகுதியில் கரையத் தொடங்கியது. 

வேலையிழந்த 50,000 பேர்!

ஸ்ரீபெரும்புதூரில் 800 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள நோக்கியா தொழிற்சாலை கடந்த 6 வருடங்களாக மூடிக்கிடக்கின்றது. அதுபோல் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் எனக் கடந்த ஐந்து வருடங்களில் பல நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டனர். இதனால் 50,000 தொழிலாளர்கள் வேலை இழந்துவிட்டனர். தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரியது அம்பத்தூர் தொழிற்பேட்டை. 1964-ம் ஆண்டு 1,250 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது. ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள், டெக்ஸ்டைல்ஸ், இன்ஜினீயரிங் கம்பெனிகள், `டைனி'  குறுந்தொழிற்சாலைகள் என மொத்தம் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கம்பெனிகள் இங்கு உள்ளன. பல ஆயிரம் குடும்பங்கள் இந்தத் தொழிற்சாலையை நம்பியிருக்கின்றன. நாளுக்குநாள் நலிந்துகொண்டிருக்கும் இத்தொழிற்பேட்டையை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல சரியான திட்டங்கள் இல்லை.

சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 35 சதவிகிதப் பணிகள் முடிந்த நிலையில் அரசியல் மோதலால், பறக்கும் சாலைப் பணிகள் முடங்கின. அரசு அறிவித்தபடி, 2013-ம் ஆண்டு முடிந்திருக்க வேண்டிய திட்டத்தை மீண்டும் 2014-ம் ஆண்டு தூசு தட்டினார்கள். குடிசைகள் அகற்றுவதில் பிரச்னை, திட்டத்தில் மாற்றம் என மீண்டும் மறுமதிப்பீடு செய்யப்பட்டது. இப்போது, 1,300 கோடி ரூபாய்க்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இப்போது, `பறக்கும் சாலை பூந்தமல்லி' எனப் பெயரிட்டு, 2,400 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிட்டுள்ளனர். பறக்கும் சாலைக்கு என அமைக்கப்பட்ட தூண்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

பம்மல், நாகல்கேணி பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலை கழிவு நீர், அடையாறு ஆற்றில் கலக்கிறது. இதனால், இந்தப் பகுதி முழுவதும் நிலத்தடி நீர்பாழாகிவிட்டது. அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல் பஜார் பகுதிகளில் அடையாறு ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  

`தலைவலி' போக்குவரத்து!

ஶ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி முழுக்கவே போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருக்கின்றன. பல்லாவரம், தாம்பரம், மதுரவாயல் போன்ற பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாகப் பண்டிகைக் காலங்களில் சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்வதற்குள் பயணிகள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். தொடர்ந்து மூடப்படும் தொழிற்சாலைகளால் அதிக அளவில் வேலையிழப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க போதுமான சலுகைகளை அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் இருக்கிறது. 

`கடுகடு' பாலு! 

1984, 1989, 1991 எனத் தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மரகதம் சந்திரசேகர் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து தி.மு.க நான்கு முறையும் அ.தி.மு.க இரண்டு முறையும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த முறை தி.மு.க சார்பாக டி.ஆர். பாலு போட்டியிடுகிறார். தி.மு.க முதன்மை நிலையச் செயலாளர், வேட்பாளர் தேர்வுக்குழுவில் உள்ளவர், தேர்தல் அறிக்கைக் குழுத்தலைவர் எனப் பல முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர் டி.ஆர்.பாலு. கட்சியில் கோஷ்டிப் பூசல்கள் இருந்தாலும், `தங்கள் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ?' எனத் தி.மு.க-வினர் இறங்கி வேலை செய்கிறார்கள். 1996, 1998, 1999, 2004 என நான்குமுறை தொடர்ந்து தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார் பாலு. 2009-ல் தொகுதி மறுசீரமைப்பின் படி தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் இருந்த தாம்பரம், ஆலந்தூர், பல்லாவரம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் வந்துவிட்டன. `இது தனக்குப் பரிச்சயமான தொகுதி' என்பதால் டி.ஆர்.பாலு இந்த முறையும் போட்டியிடுகிறார். 2004-2009 கப்பல் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது சென்னையில் அதிக அளவில் மேம்பாலங்களைக் கட்டினார். இந்தச் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டு வருகிறார். 

கடுகடுவெனப் பேசுவதும், கடந்த முறை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்றபிறகு தொகுதி வளர்ச்சிக்குச் சொல்லும்படியாக பெரிய திட்டம் எதையும் கொண்டுவராததும் டி.ஆர்.பாலுவின் மைனஸ். நாடாளுமன்றம் சென்றுவிட்டால் கட்சிக்காரர்களே இவரைச் சந்திக்க முடியாது என்ற புலம்பல்களும் கேட்கின்றன. கடந்த முறை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு தொகுதிப் பக்கமே இவர் எட்டிப் பார்க்கவில்லை. மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. 

அ.தி.மு.க அணியில் பா.ம.க-வைச் சேர்ந்த வைத்தியலிங்கம் போட்டியிடுகிறார். அன்புமணியின் நெருங்கிய நண்பர். ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்தச் சமுதாயத்தினர் இவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். பா.ம.க-வினரும் ஓடியாடி வேலை செய்கிறார்கள். தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர் என்பது இவரது மைனஸ். அ.தி.மு.க-வின் வாக்குகளை நம்பியே இவர் இருக்கிறார். தேர்தல் கருத்துக் கணிப்புகள் இவருக்கு எதிராகவே இருப்பதால் பணத்தை செலவு செய்ய தயங்குகிறார் எனக் கட்சிக்காரர்களே புலம்புகின்றனர். அ.ம.மு.க சார்பில் `தாம்பரம்’ நாராயணன் போட்டியிடுகிறார். தினகரனுக்காகக் கிடைக்கும் வாக்குகளும் அ.தி.மு.க.வின் அதிருப்தி வாக்குகளும் வந்து சேரும் என அ.ம.மு.கவினர் எதிர்பார்க்கின்றனர். 

தீர்மானிக்கும் டாப்-5 காரணிகள்!

1. தொழிற்சாலைகள் அதிக அளவில் மூடப்பட்டு வருவதால் ஏற்படும் வேலை இழப்புகள் 

2. போக்குவரத்து நெரிசல் 

3. வேட்பாளர்களின் சொந்த செல்வாக்கு, பிரசாரம்

4. சிட்டிங் எம்.பி மீதான கோபம் 

5. மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்பு

பிரசாரத்தில் என்ன நடக்கிறது? 

தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.பாலு தனது பிரசாரத்தில், "ஸ்ரீபெரும்புதூரிலிருந்து ஒரகடம், குன்றத்தூர், காஞ்சிபுரத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர். இவ்வாறு செல்பவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியடைகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைத்து, ஸ்ரீபெரும்புதூரிலிருந்து ஒரகடம், குன்றத்தூர், காஞ்சிபுரம் செல்லும் சாலைகளின் சந்திப்பில் தளம் பிரிப்பு (கிரேடு செப்ரேட்டர்) மேம்பாலம் அமைக்கப்படும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல்கள் குறைந்து, பொதுமக்கள் அவர்களுக்கு தேவையான இடங்களுக்கு உரிய நேரத்தில் எளிதாகச் சென்று வர முடியும்" என வாக்கு சேகரித்து வருகிறார். தனது முந்தைய சாதனைகளையும் மக்களிடம் மேற்கோள் காட்டுகிறார் பாலு. 

அதேநேரம், பா.ம.க. வேட்பாளர் மருத்துவர் வைத்தியலிங்கமும், மக்கள் பிரச்னைகளை முன்வைத்து வாக்கு சேகரித்து வருகிறார். வேலையிழப்புகளைச் சரிசெய்வது, தொழிற்பேட்டைகளை மேம்படுத்துவது, போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு எனப் பிரசாரத்தில் முன்வைக்கிறார். அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் பலமும் பிரசாரமும் தனக்குக் கை கொடுக்கும் என உறுதியாக நம்புகிறார். அறிமுகம் இல்லாத வேட்பாளரும் அ.தி.மு.க. மீதான அதிருப்தி அலையும் தன்னைக் கரையேற்றும் என எதிர்பார்க்கிறார் டி.ஆர்.பாலு. இந்த மோதலில் யாருக்கு வெற்றி என்பதற்கான பதில், வாக்கு எண்ணிக்கை நாளில் தெரியவரும்.