Published:Updated:

`விஜயகாந்த் பாவம், அவர் என்ன செய்வார்!' - அ.தி.மு.க கூட்டணியைக் கலாய்த்த லியோனி

`விஜயகாந்த் பாவம், அவர் என்ன செய்வார்!' - அ.தி.மு.க கூட்டணியைக் கலாய்த்த லியோனி
`விஜயகாந்த் பாவம், அவர் என்ன செய்வார்!' - அ.தி.மு.க கூட்டணியைக் கலாய்த்த லியோனி

`` 'சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது' என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறினால், துணை முதல்வர் பன்னீர்செல்வம், 'தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது' என்று கூறுகிறார். சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய போலீஸார், தற்கொலை செய்துகொள்கிறார்கள். தமிழகத்தில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட போலீஸார் தற்கொலை செய்துகொண்டனர்'' என லியோனி தெரிவித்தார்.

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் பழனிமாணிக்கம்,சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் நீலமேகம் ஆகியோரை ஆதரித்து, தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் கடைவீதி மற்றும் மாதாக்கோட்டை பகுதிகளில், தி.மு.க கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை துணைத்தலைவர் திண்டுக்கல் லியோனி பிரசாரம் செய்தார். அப்போது, ``'தி.மு.க தலைவர் ஸ்டாலின் என்ன உழைத்து விட்டார்... அவர் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட' என்று பழனிசாமி கேட்கிறார். உழைப்பு என்பதற்கு அர்த்தம் தெரியாத கூட்டம் அ.தி.மு.க கூட்டம். அவர்கள் உழைப்பைப் பற்றி பேசுகிறார்கள். அ.தி.மு.க கூட்டணியில் உள்ளவர்களைப் பாருங்கள், பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க. இதில் இருப்பவர்கள் பிரசாரத்தில் பேசும்போது தொடர்ச்சியாக தவறாகப் பேசிவருகிறார்கள்.

அன்புமணியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டால், பத்திரிகையாளர் கோபமாக இருக்கிறார், அவருக்கு முதலில் குடிப்பதற்கு தண்ணீர் கொடுங்கள் என்று கூறுகிறார். ராமதாஸ் பேசும்போது, அடுத்த பிரதமராக வாஜ்பாய் வரவேண்டும் என்கிறார். குடிபோதையில் இருப்பவர்கள்தான் இப்படிப் பேசுவார்கள். அ.தி.மு.க கூட்டணியில் இருப்பவர்கள் தோல்வி பயத்திலேயே இப்படிப் பேசுகிறார்கள். மோடிக்கும், பதவிக்கும் அடிமையானவர்கள் இவர்கள். அ.தி.மு.க-வினர் ஜெயலலிதாவை அம்மா என்று அழைக்கிறார்கள். மோடியை டாடி என்று அழைக்கிறார்கள். ரவா இல்லாமல் ஒரு அண்டா உப்புமாவை வாயிலேயே கிண்டுபவர் பிரதமர் மோடி. நான் வெற்றிபெற்றால் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைப்பேன் என்றார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவேன் என்றார். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கச் செய்வேன் என்றார். இதில் எதை மோடி செய்தார். 

கடந்த நான்கரை ஆண்டு காலமாக மோடி எதையுமே செய்யாமல், அதை செய்தேன்  இதை செய்தேன் என்று பேசிவருகிறார். பொறியியல் படிக்க கல்விக் கடன் வாங்கியவர்கள், தங்களது கடனை அடைக்க இன்று  பரோட்டா கடைகளில் வேலைபார்த்து வருகிறார்கள். எதை செய்ய முடியுமோ அதைத்தான் தி.மு.க கூட்டணி தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று கூறினால், துணை முதல்வர் பன்னீர்செல்வம், தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது என்று கூறினார். சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய போலீஸார் தற்கொலை செய்துகொள்கிறார்கள். தமிழகத்தில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட போலீஸார் தற்கொலை செய்து கொண்டனர்.

கார்ட்டூன் வரைபவர், கிராமியப் பாட்டு பாடுபவர்கள்மீது தமிழக அரசு குண்டர் சட்டத்தைப் பாய்ச்சுகிறது. நீதிபதிகளையும் போலீஸாரையும் அவதூறாகப் பேசிய ஹெச்.ராஜா, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரசாரம் செய்துவருகிறார். கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசலாம் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதிலிருந்து கொடநாட்டில் என்ன நடந்துள்ளது என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ளலாம். 8 வழிச்சாலைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதுபோல, அ.தி.மு.க-விற்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வந்துகொண்டிருக்கிறது. 

அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பாவம். அவர் என்ன செய்வார். கூட்டணிகுறித்து பேச்சுவார்த்தை நடத்த விஜயகாந்த் வீட்டுக்கு எடப்பாடியும் பன்னீர்செல்வமும் சென்றனர். இதைப் பார்த்த விஜயகாந்த், இவர்கள் எதற்கு இங்கு வந்தார்கள் என்று புரியாமல் முழித்துக்கொண்டு, தனது மனைவி பிரேமலதாவைப் பார்த்தபோது, பணம் எல்லாம் வாங்கி பீரோவில் வைத்துவிட்டேன் என்று கூறினார். இப்படிச் செய்தவர், இன்று தி.மு.க கூட்டணியைக் கேவலமாக விமர்சனம் செய்துவருகிறார். தமிழகத்திலும், இந்தியாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட தி.மு.க கூட்டணி கட்சிகளை வெற்றிபெறச் செய்ய வேண்டும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு