Published:Updated:

`ஓட்டு போட்ட அளவுக்குத்தான் தண்ணீர்!' - பா.ஜ.க அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

`ஓட்டு போட்ட அளவுக்குத்தான் தண்ணீர்!' - பா.ஜ.க அமைச்சர் சர்ச்சைப் பேச்சு
`ஓட்டு போட்ட அளவுக்குத்தான் தண்ணீர்!' - பா.ஜ.க அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

“நீங்க ஓட்டு போட்ட அளவுக்குத்தான் உங்களுக்குத் தண்ணீர் கிடைக்கும்” என குஜராத்தில் தண்ணீர் பற்றாக்குறையைக் கண்டித்து  போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பதிலளித்துள்ளார், பி.ஜே.பி-யைச் சேர்ந்த அமைச்சர். இந்திய மக்களவைத்  தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு, கடந்த ஏப்ரல் 11-தேதி நடந்து முடிந்தது. இன்னும் ஆறு கட்டங்களாகத் தேர்தல்கள் வரும். மே 19-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்நிலையில், தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. கட்சிகளின் பேச்சாளர்கள், முதல் முக்கியத் தலைவர்கள் வரை எல்லோரும்  வெற்றி இலக்கோடு தொடர் பிரசாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

குஜராத்தில் தற்போது, விஜய் ரூபானி தலைமையிலான  பி.ஜே.பி ஆட்சிசெய்துவருகிறது. தற்போது உள்ள சூழலில், தண்ணீர் பிரச்னை குஜராத் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. குஜராத்தின்  பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காணச்சொல்லி போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், ராஜ்கோட் பகுதிக்கு  அருகில் உள்ள கனேசாரா பகுதியைச் சேர்ந்த மக்கள்,  குடிநீர் பற்றாக்குறைக்குத் தீர்வு காணச்சொல்லி போராட்டங்களை மேற்கொண்டுவந்தனர். அப்போது அந்த பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த  குஜராத் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கன்வர்ஜி பவாலியாவிடம் மக்கள் நேரடியாகக் கேள்விகளை எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், “ இந்தப் பகுதி மக்கள்  எந்த அளவுக்கு வாக்களிக்கின்றீர்களோ, அந்த அளவுக்குத்தான் உங்களுக்கு தண்ணீர் கிடைக்கும்”எனக் கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் இவ்வாறு கன்வர்ஜி பவாலியா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.