Published:Updated:

`கள்ளச்சாராய வியாபாரம் செஞ்சேன், இரவு 11 மணிக்கு வீட்டுக்குப் போவேன்!'-அமைச்சர் கருப்பணன் சர்ச்சைப் பேச்சு

`கள்ளச்சாராய வியாபாரம் செஞ்சேன், இரவு 11 மணிக்கு வீட்டுக்குப் போவேன்!'-அமைச்சர் கருப்பணன் சர்ச்சைப் பேச்சு
`கள்ளச்சாராய வியாபாரம் செஞ்சேன், இரவு 11 மணிக்கு வீட்டுக்குப் போவேன்!'-அமைச்சர் கருப்பணன் சர்ச்சைப் பேச்சு

``ஸ்டாலின் இனிமேலாவது மரியாதையாக பேச கத்துக்கணும். நான் கிராமத்துல இருந்து வந்தவன். எனக்கும் பச்சைப் பச்சையா பேசத் தெரியும். நான் பேசுனா நீங்க தாங்க மாட்டீங்க” என ஈரோட்டில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் கருப்பணன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் எம்.எஸ்.எம் ஆனந்தனை ஆதரித்து ஈரோடு மாவட்டம், பவானி பேருந்து நிலையம் அருகே பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பேசுகையில், ``அ.தி.மு.கவினுடைய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளைப் பார்த்தும், நாட்டுக்கு நன்மை செய்வது யார் என்றும் யோசித்தும் அரசியலில் மூத்த ஞானி ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்து வாசலில் படுத்துக் கிடந்த தி.மு.க-வினரை விரட்டியடித்துவிட்டு அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்திருக்கிறார். ஆனால், எதிர்க்கட்சிகளோ கொள்ளை அடிப்பதற்காகவும், கொலை செய்வதற்காகவும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.

ஸ்டாலின் வீசியெறிந்த காசை வாங்கிக் கொண்டு, இன்றைக்கு அவருடன் பலர் கூட்டணி சேர்ந்திருக்கின்றனர். ஸ்டாலின் ஒரு பேசத் தெரியாத ஆள். தான் ஒரு கட்சியின் தலைவராக இருக்கிறோம் என உணர்வில்லாமலும், பொறுப்பில்லாமலும் ஸ்டாலின் பேசிவருகிறார். முதலமைச்சராவதற்கு ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது. ஸ்டாலின் இனிமேலாவது வாயை அடக்கிக்கணும். மரியாதையா பேச கத்துக்குங்க. நான் கிராமத்துல இருந்து வந்தவன். எனக்கும் பச்சைப் பச்சையா பேசத் தெரியும். பொது இடமென்று கூடப் பார்க்க மாட்டேன்” என எடுத்த எடுப்பிலேயே விளாசினார்.

தொடர்ந்து பேசியவர், ``கருணாநிதி ஐந்து முறை முதலமைச்சராகவும், ஸ்டாலின் துணை முதலமைச்சராகவும் இருந்திருக்கிறார்கள். மக்கள் போற்றக்கூடிய என்ன திட்டங்களைச் செய்து கிழித்திருக்கிறார்கள். தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் உட்படப் பல லட்சம் பேருக்கு நாம் வீடு கட்டிக் கொடுத்திருக்கிறோம். அதேபோல 100 யூனிட் மின்சாரம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்குக் கொடுத்திருக்கிறோம். லேப்டாப் தயாரிக்குற ஜப்பான்லகூட அந்த அரசு அதை இலவசமாகக் கொடுக்கலை. ஆனால், நமது ஆட்சியில் மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுத்துக்கிட்டு இருக்கோம். தமிழகத்தில் இளைஞர்களுக்கு நிறைய வேலைவாய்ப்பு இருக்கிறது. நான் கள்ளச்சாராய வியாபாரம் செஞ்ச காலத்தில இருந்து, ரியல் எஸ்டேட், அமைச்சர் பதவி என இப்போது வரைக்கும் ராத்திரி 11 மணிக்குத் தான் வீட்டுக்குப் போவேன். அப்படிப் போறப்ப சுடுகாட்டுப் பக்கத்துல உட்கார்ந்து பசங்க செல்போன் பேசிக்கிட்டு இருக்காங்க. இப்படி இருந்தா எப்படி வேலை கிடைக்கும். வாழ்க்கையில செட்டில் ஆக முடியும். எனவே, தயவுசெய்து உங்களுடைய குழந்தைகளுக்கு செல்போனை மட்டும் வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள்” என்றவர் “அதேபோல, நாம் அம்மா காப்பீட்டுத் திட்டம் கொண்டு வராமல் போயிருந்தால், இந்தக் கூட்டத்தில் பாதிப் பேர் செத்துப் போயிருப்பார்கள்” எனக் கூட்டத்தையே கிறுகிறுக்க வைத்தார்.

தொடர்ந்தவர், ``8 வருஷத்துக்கு முன்னாடி தமிழ்நாட்டுல கரன்ட்டே இல்லை. ஆனா, இன்னைக்கு 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் கிடைக்கிறது. கடந்த தி.மு.க ஆட்சியைப் போல மின்சாரத் துறையில் ஊழல் செய்து கொள்ளையடிக்காமல், இன்றைக்கு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க அரசு செய்த திட்டங்களால் மக்களுடைய முழு ஆதரவை இன்று நாம் பெற்றிருக்கிறோம். எனவே, இந்தத் தேர்தலில் நாம் மாபெரும் வெற்றியைப் பெறப் போவது உறுதி” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு