Published:Updated:

பக்காவாக முடிந்துவிட்டது பணப்பட்டுவாடா... பக்கத்தில்கூட வரவில்லை தேர்தல் ஆணையம்!

பக்காவாக முடிந்துவிட்டது பணப்பட்டுவாடா... பக்கத்தில்கூட வரவில்லை தேர்தல் ஆணையம்!
பக்காவாக முடிந்துவிட்டது பணப்பட்டுவாடா... பக்கத்தில்கூட வரவில்லை தேர்தல் ஆணையம்!

மே 19-ல் தேர்தல் நடக்கவுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் தொகை இன்னும் அதிகமாகிவிடலாம். முதற்கட்டமாகத் தேர்தல் நடக்கவுள்ள எல்லாத் தொகுதிகளிலும் பக்காவாக பணப்பட்டுவாடா முடிந்து விட்டது. எங்கேயும் எதையும் தேர்தல் ஆணையம் தடுக்கவேயில்லை. 

‘‘வேலூர் தொகுதி... தி.மு.க 150 கோடி ஒரு தரம்... அ.தி.மு.க 180 கோடி ஒரு தரம்..!’’

‘‘தேனி தொகுதி... அ.ம.மு.க 100 கோடி ரெண்டு தரம்.... அ.தி.மு.க 140 கோடி ஒரு தரம்..!’’

‘‘மத்திய சென்னை... பா.ம.க 100 கோடி ஒரு தரம்... தி.மு.க 150 கோடி... ஒரு தரம்!’’

வரிசையாக 40 மேசைகளில் ஏலம் நடக்க ஒவ்வொரு மேசையின் முன்பாகவும் பலர் அமர்ந்து ஏலம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்து அடுத்த அரங்கத்துக்குள் நான் நுழைகிறேன். அங்கே இதைவிட அதிகமான கூட்டம் காணப்படுகிறது. அங்கே 234 மேசைகள் இருக்கின்றன. இரண்டுக்கும் நடுவே பொதுவாக ஒரு மேடை இருக்கிறது. அதில் ஒரு மிகப் பெரிய பெயர்ப்பலகை இருக்கிறது. தேர்தல் ஏல ஆணையம்!

டிங் டிங் டிங்... அலைபேசியின் அலாரம் ஒலிக்க, திடுக்கிட்டு நான் கண் விழிக்கிறேன். உடலெல்லாம் வியர்த்துக்கொட்ட நிஜத்தை உணர்கிறேன்... கண்டது கனவு. ஐ.பி.எல் மேட்ச்களையும் தேர்தல் செய்திகளையும் மாற்றி மாற்றிப் பார்த்ததன் விளைவாய் இருக்கும்போல. ஆனால், தூக்கம் கலைந்த பின்னும் அந்தக் கனவு துரத்தியது. இது கனவா அல்லது தீர்க்கதரிசனமா. யோசித்துப் பார்த்தால் இது எதிர்காலத்தை உணர்த்தும் நிகழ்காலத்தின் நிதர்சனம் என்று புரிந்தது. தமிழகத்தில் இனிமேல் தேர்தல் நடத்த வேண்டுமா என்ற கேள்வியும் எழுந்தது.

தேர்தல் அறிவிப்புக்குப் பின் நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் பிடித்திருக்கும் பணம் மற்றும் பொருள்களின் மதிப்பு 2,000 கோடி ரூபாயை நெருங்கியுள்ளது. இதில் 25 சதவிகிதத்தொகையும் பொருள்களும் தமிழகத்தில் பிடிபட்டவை. உண்மையைச் சொல்வதென்றால், இந்தத் தொகையும் 2 அல்லது 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் செலவிட்டுள்ள தொகைக்கும் குறைவுதான். இது தேர்தல் ஆணையத்துக்கும் தெள்ளத்தெளிவாகத் தெரிந்த ரகசியம்தான். ஆனால், வெளிமாநிலங்களில் இருந்து புதிது புதிதாகப் பார்வையாளர்களை அழைத்து வந்து, தமிழகக் கூத்துகளை வேடிக்கை பார்க்கிறது தேர்தல் ஆணையம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டமும் மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தின் பல்வேறு பிரிவுகளும் தேர்தல் ஆணையம், வேட்பாளர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கான அதிகாரம், கடமை அனைத்தையும் வரையறுத்துள்ளன. கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை, இவை எல்லாமே வெறும் காகிதத்தில்தான் இருந்தன. அதுவரை தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் யாருமறியாததாக இருந்தது. விடிய விடிய பிரசாரம், வீதியெல்லாம் தோரணம், விளம்பர ஆக்கிரமிப்பு, பகிரங்கமாகப் பணப்பட்டுவாடா என்றிருந்தது. 

திருநெல்லை நாராயண சேஷன் எனும் டி.என்.சேஷன், இந்திய தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற பின்பே, இதற்கெல்லாம் முடிவுரை எழுதப்பட்டது. அதன் பின்பு, இரவு 10 மணிக்குள் பரப்புரை முடிக்கப்பட்டது. தொகுதிக்கு இவ்வளவுதான் செலவிட வேண்டுமென்று வரையறுக்கப்பட்டது. இப்போது சட்டமன்றத் தொகுதிக்கு 22 லட்ச ரூபாய், நாடாளுமன்றத் தொகுதிக்கு 70 லட்ச ரூபாய் என்று தேர்தல் செலவுக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், கால் நூற்றாண்டுக்கு முன்பிருந்ததைவிட இப்போது நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது.

10 மணிக்குப் பரப்புரை முடிந்துவிடுகிறது; சுவர்களில் விளம்பரங்கள் இல்லை; வேட்புமனுத்தாக்கல் என்று வாகன அணிவகுப்பு ஏதுமில்லை. கொடிகளில்லை, பெரிதாக கோஷங்களில்லை. தேர்தல் அமைதியாய் நடக்கிறது. ஆனால், அந்த அமைதிக்குப் பின்னே இருக்கும் பல விஷயங்கள், அரசியல் அறத்தையும் இந்திய ஜனநாயகத்தையும் ஆழமாகக் குழிதோண்டிப் புதைத்துக்கொண்டிருக்கின்றன. பணம், பணம். பணம்... எல்லாவற்றையும் பணமே முடிவு செய்கிறது. தேர்தலை நடத்துவது ஆணையமில்லை... பணம்.

ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 22 லட்ச ரூபாய் என்றால், 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியுள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 1.32 கோடி ரூபாய் செலவிட அனுமதிக்க வேண்டும். ஆனால், வெறும் 70 லட்ச ரூபாய் என்று நிர்ணயித்திருப்பதிலேயே, செலவின வரம்பு என்பதை எவ்வளவு பெரிய கேலிப்பொருளாகத் தேர்தல் ஆணையம் பார்க்கிறது என்பது தெளிவாகிறது. மற்ற மாநிலங்களில் எப்படியோ... தமிழகத்தில் சில முக்கிய வேட்பாளர்களின் ஒரு நாள் செலவே, 70 லட்சங்களை சாதாரணமாகத் தாண்டிவிடுகிறது. தொகுதிக்கு 200 கோடி, 300 கோடி ரூபாய் பட்ஜெட் போட்டு மிரட்டுகிறார்கள் பல பணக்கார வேட்பாளர்கள்.

பி.ஜே.பி ஆளும் மாநிலங்களில்கூட, தேர்தல் ஆணையம் ஆளும்கட்சிக்கு இத்தனை ஒத்தாசையாக இருந்திருக்குமா என்பது சந்தேகமாகவுள்ளது. அந்த அளவுக்குத் தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அப்பட்டமான பாரபட்சமாகவுள்ளன. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலிலேயே தேர்தல் ஆணையம் செயல்படாமல் இருந்ததற்கான ஆதாரங்கள், இப்போது வெளியாகியுள்ளன. அந்தத் தேர்தலில் தி.மு.க-விடமிருந்து வெற்றியை 1 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் தட்டிப் பறிக்க, தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு 650 கோடி ரூபாய் பணத்தை எஸ்.ஆர்.எஸ் மைனிங் என்ற கம்பெனி மூலமாக விநியோகம் செய்துள்ளதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் வருமானவரித்துறையிடம் கிடைத்துள்ளன. அப்போது அமைச்சர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் மற்றும் வைத்திலிங்கம் மூன்று பேரும் குறித்து வைத்திருந்த கணக்குப் புத்தகங்கள், துண்டுத்தாள்கள், தயாரிக்கப்பட்டிருந்த ரகசிய பண விநியோகப் பட்டியல்கள் அனைத்தும் கிடைத்துள்ளன. இதற்கான ஆதாரங்களை வருமான வரித்துறை புலனாய்வுத்துறை டைரக்டர் ஜெனரலுக்கு 09.05.2017 அன்றே துறையின் முதன்மை இயக்குநர் அனுப்பி வைத்துள்ளார். அனைத்தையும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கும்படியும் தெரிவித்துள்ளார். 

இந்த ஆதாரங்களைக் காட்டி மிரட்டியே, அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க கூட்டணி வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த குற்றச்சாட்டின் அம்சங்கள், கவனத்தில் கொள்ள வேண்டியவை. அந்தத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல்போன தி.மு.க-வுக்கும், ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்ட அ.தி.மு.க-வுக்கும் இடையிலான வாக்குவங்கியின் வித்தியாசம் வெறும் 2 சதவிகிதத்துக்கும் குறைவுதான். இப்போதும் பணத்தாலேயே பல தொகுதிகளின் வெற்றியைத் திசை மாற்றிவிடும் வாய்ப்பே அதிகமாகத் தெரிகிறது. 

சமீபத்தில் வெளியான தேசிய அளவிலான கருத்துக்கணிப்புகளில், மத்தியில் பி.ஜே.பி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று சொல்லியிருந்தாலும் தமிழகத்தில் பி.ஜே.பி இணைந்துள்ள அ.தி.மு.க கூட்டணிக்கு மிகவும் குறைவான தொகுதிகளே கிடைக்குமென்றே கூறப்பட்டுள்ளது. அதனால் நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குக்கு 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் கொடுத்திருப்பதாக மாநிலம் முழுவதிலுமிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

அதேபோன்று, தமிழகத்தில் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக எவ்வளவு பெரிய விலையும் கொடுப்பதற்கு அ.தி.மு.க தயாராகவுள்ளது. அதனால் கட்சிக்காரர்களுக்கும்  வாக்காளர்களுக்குப் பணத்தை வாரியிறைக்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று துவங்கிய பணப்பட்டுவாடா வாக்குப்பதிவுக்கு முதல்நாள் இரவு வரையிலும் தொடர வாய்ப்புள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குக்கு 250 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரையும், சட்டமன்றத் தொகுதிகளில் 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரையிலும் வாக்காளர்களுக்கு லஞ்சம் தரப்பட்டுள்ளது.  மே 19-ல் தேர்தல் நடக்கவுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் இந்தத் தொகை இன்னும் அதிகமாகிவிடலாம். முதற்கட்டமாகத் தேர்தல் நடக்கவுள்ள எல்லாத் தொகுதிகளிலும் பக்காவாக பணப்பட்டுவாடா முடிந்து விட்டது. எங்கேயும் எதையும் தேர்தல் ஆணையம் தடுக்கவேயில்லை. 

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஆளும்கட்சி மட்டும்தான் பணத்தை நம்பியிருக்கிறது என்று அர்த்தமில்லை. ஆளும்கட்சிகளான பி.ஜே.பி மீதும், அ.தி.மு.க மீதும் ஆயிரமாயிரம் குற்றச்சாட்டுகளை அடுக்கும் தி.மு.க.–வும் தன் பங்குக்கு பணப்பட்டுவாடா செய்திருக்கிறது. இவர்கள் இப்படியென்றால், அ.தி.மு.க. எப்படியும் ஜெயித்துவிடக் கூடாது என்பதற்காகவே, தேர்தலில் நிற்கும் டி.டி.வி.தினகரன் தரப்பும் வெற்றி கிடைக்குமென்று நம்பும் சில நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்துள்ளது.

இந்திய ஜனநாயகத்தில் தேர்தல் என்பது அரை நூற்றாண்டுக் காலமாக, கொள்கைகளும்  கோரிக்கைகளும் மோதிக்கொள்கிற ஒரு களமாகவே இருந்து வந்துள்ளது. இப்போது அது சாதியும் பணமும், பொய்களும் புரட்டும் கலந்து விளையாடுகிற மைதானமாக மாறியிருக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, இரும்புக்கரம் கொண்டு, தேர்தல் விதிமீறல்களைத் தடுத்து நிறுத்திய தேர்தல் ஆணையம், இப்போது எதையும் துணிந்து செய்வதற்குத் திராணியற்ற வெறும் பொம்மை அமைப்பாக உருமாறியிருக்கிறது. பணப்பட்டுவாடாவைத் தடுப்பதில் மட்டுமன்றி, தனது எல்லாக் கடமைகளிலுமே தேர்தல் ஆணையம் பின் வாங்கிக்கொண்டிருப்பதைத்தான் அதன் பல்வேறு செயல்பாடுகளும் உறுதிப்படுத்துகின்றன. 

இலவசப்பொருள்கள் வழங்குவது தொடர்பாக சில அரசியல்கட்சிகள் கொடுத்த தேர்தல் அறிக்கைகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் 2013-ல் ஒரு மனுத்தாக்கல் (Supreme Court order dated 05.07.2013 in SLP(C) 21455 of 2008, S.Subramaniam Balaji Vs Govt. of TN & Others) செய்யப்பட்டது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 

தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு சில வரையறைகளைத் தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியது. ஆனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சாத்தியமே இல்லாத பல வாக்குறுதிகளையும் பல்வேறு கட்சிகளும் வாரி வழங்கியுள்ளன. வெறும் இரண்டு மூன்று தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் கட்சிகளும்கூட, நதிகளை இணைப்போம், கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என சாத்தியமில்லாத வாக்குறுதிகளையும் தெரிவித்துள்ளன. இவை எதையுமே தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை; கேள்வியும் எழுப்பவில்லை.

மகாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் அசோக் சவான் செய்த தேர்தல் செலவினம் தொடர்பான வழக்கில், தேர்தல் செலவில் பொய்க்கணக்குக் காண்பிக்கும் வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில் பார்த்தால், தமிழகத்தில் முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் யாருமே இந்தத் தேர்தலில் போட்டியிட முடியாது. தேர்தல் செலவு கணக்கைத்தாக்கல் செய்யாத நூற்றுக்கணக்கான வேட்பாளர்களை மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாதபடி நோட்டீஸ் அனுப்பியுள்ள தேர்தல் ஆணையம், பொய்க்கணக்கு மட்டுமே காண்பிக்கும் யார் மீதும் ஒரு சிறிய நடவடிக்கையும் எடுத்ததேயில்லை. 

இதே போன்று வேட்புமனுத் தாக்கல் செய்யும் பெரும்பாலான அரசியல்கட்சி வேட்பாளர்களும் பொய்யான தகவலையே தருகின்றனர். இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பத்தில் ஒரு வேட்பாளரின் சொத்துக்கணக்கை வருமானவரித்துறை, காவல்துறை உதவியுடன் பரிசீலித்து, பொய்த்தகவல் தரும் வேட்புமனுக்களை நிராகரிப்பது எளிதான விஷயமே. எதிர்க்கட்சியினரின் வீடுகளைக் குறி வைத்து ரெய்டு நடத்தி பணம் பறிப்பதில் தேர்தல் ஆணையமும் வருமானவரித்துறையும் காட்டும் ஒற்றுமையை இதில் காண்பிப்பதில்லை. கார்த்தி சிதம்பரத்தின் சொத்து மதிப்பு ரூ.79.34 கோடி, டி.ஆர்.பாலுவின் சொத்து மதிப்பு ரூ.20.42 கோடி, அன்புமணி ராமதாஸ்க்கு ரூ.33.84 கோடி என்பதையெல்லாம் நம்ப வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். 

இவற்றை விடுங்கள்... சாதி, மதத்தை முன் நிறுத்தித் தேர்தல் ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீதும் நடவடிக்கை தேவை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இதிலும் தேர்தல் ஆணையம் பெரிதாக எதையும் செய்துவிடுமென்று தோன்றவில்லை. மற்ற மாநிலங்களில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு எப்படியிருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால், தமிழகத்தில் தேர்தல் ஆணையம் என்ற ஒன்று இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. 

தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நடவடிக்கைகள், பணப்பட்டுவாடா என்று பல்வேறு விஷயங்கள் பற்றியும் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கேட்டால், ‘‘துளியும் பாரபட்சமில்லை. பண விநியோகம் போன்ற நடவடிக்கைகள் குறித்து ரகசியத் தகவல் ஏதாவது இருந்தால், வருமானவரி துறையிடம்கூட தெரிவிக்கலாம். காவல்துறையிடமும் கொடுக்கலாம். தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் கண்காணிப்பார்கள்’’ என்பது போன்ற பொத்தாம்பொதுவான பதிலையே தருகிறார்.

மக்கள் சக்தி தீர்மானிக்க வேண்டிய தேர்தல் முடிவுகளைப் பணம் முடிவு செய்யுமென்றால் இப்படி ஒரு தேர்தல் ஆணையம் எதற்கு... இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து தேர்தல் எதற்கு? 

அடுத்த கட்டுரைக்கு