Published:Updated:

`8 வழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்ற முயன்றால் பா.ம.க முக்கிய முடிவை எடுக்கும்!' - பாலு

`8 வழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்ற முயன்றால் பா.ம.க முக்கிய முடிவை எடுக்கும்!' - பாலு
`8 வழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்ற முயன்றால் பா.ம.க முக்கிய முடிவை எடுக்கும்!' - பாலு

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டம் நிறைவேறியே தீரும் என்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் அறிவிப்பால் பா.ம.க  தலைமை அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு அ.தி.மு.க - பா.ஜ.க  கூட்டணியை ஏன் தேர்வு செய்தோம் என்ற கடுப்பில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எட்டு வழிச் சாலைத் திட்டத்தால் கூட்டணியில் சலசலப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள்  கருத்து தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பா.ம.க செய்தித் தொடர்பாளர் பாலுவிடம் பேசினோம். ``எட்டு வழிச் சாலைத் திட்டத்தை நிறுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் மத்திய  அமைச்சர் 

நிதின் கட்கிரி எட்டு வழிச் சாலைத் திட்டம் நிறைவேறியே தீரும் என்று கூறியுள்ளார். அது அவருடைய தனிப்பட்ட கருத்து. இந்தக் கருத்தை மத்திய அரசின் கருத்தாகவோ அல்லது எதிர்காலத்தில் அமைய உள்ள அரசின் கருத்தாகவோ எடுத்துக்கொள்ள முடியாது.

இந்தநிலையில் எதிர்காலத்தில் அமைய உள்ள மத்திய அரசுக்குக் குறைந்தபட்ச செயல் திட்டத்தை நாங்கள் முன் வைக்கிறோம். இதற்கு ஒத்துழைப்பு கொடுத்தால் எங்களுடைய மத்தியில் இருப்பவர்களுக்கு ஆதரவு இருக்கும். இல்லை என்றால் ஆதரவை விலக்கிக்கொள்வோம். வரப்போகிற அமைச்சரவை, கூட்டணி அமைச்சரவைதான் என்பது முடிவாகிவிட்டதால், சாலைப் போக்குவரத்துத்துறை தமிழகத்தில் உள்ள ஒரு அமைச்சருக்குக் கிடைக்கலாம். அப்போது இந்தத் திட்டத்தின் நிலை தெளிவாகும். 

இதற்கிடையில், மாநில அரசும்  நீதிமன்றத் தீர்ப்பை ஏற்பதாகக் கூறிவிட்டது. இப்படிப்பட்ட சூழலில் அந்தத் துறையைக் கவனித்த அமைச்சர் என்ற முறையில் நிதின் கட்கரி இவ்வாறு  பேசியுள்ளார். மாநிலத்தில் உள்ள  பா.ஜ.க நிர்வாகிகள் எட்டு வழிச்சாலைத் திட்ட  பிரச்னை குறித்து  மத்திய அரசுக்குத் தெளிவாக எடுத்துரைத்திருந்தால், இப்படியான கருத்துகள் வர வாய்ப்பில்லை. மேலும், எங்களுடைய தரப்பிலிருந்து இந்தத் திட்டத்தை  செயல்படுத்துவதற்கு விட்டுக்கொடுக்க மாட்டோம். மக்கள் போராட்டத்தையும் சட்டப் போராட்டத்தையும் முன்வைப்போம். அதையும் மீறி அந்தத் திட்டம் தொடருமானால் அப்போது, பா.ம.க ஒரு முக்கிய முடிவை எடுக்கும்" என்றார்.