Published:Updated:

`அவள படிக்க வைச்சது வேஸ்ட், மகனைத்தான் அனுப்பணும்!'- வீடியோ சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் வேட்பாளர்

`அவள படிக்க வைச்சது வேஸ்ட், மகனைத்தான் அனுப்பணும்!'- வீடியோ சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் வேட்பாளர்
`அவள படிக்க வைச்சது வேஸ்ட், மகனைத்தான் அனுப்பணும்!'- வீடியோ சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் வேட்பாளர்

கேரள மாநிலம் கண்ணூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வெளியிட்டுள்ள பிரசார வீடியோ, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 


நாடு முழுவதும் கடந்த 11-ம் தேதி தொடங்கி வரும் மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள தொகுதிகள் மற்றும் புதுச்சேரிக்கு, நாளை (ஏப்ரல் 18) ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, வரும் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. அங்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி, காங்கிரஸின் யூ.டி.எஃப் கூட்டணி மற்றும் பா.ஜ.க என மும்முனைப் போட்டி நிலவுகிறது. 

இதில், கண்ணூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சுதாகரன் வெளியிட்டுள்ள பிரசார வீடியோ, பெண்களை இழிவுபடுத்தும் விதமாக சித்திரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை வெடித்திருக்கிறது. பெண்கள் குறித்த தனது முந்தைய கருத்துக்களால் பலமுறை சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் அவர், தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோவில், ஆண் சென்றால்தான் ஒரு விஷயத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு வர முடியும் என்கிற வகையில் காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்றிருக்கின்றன. எனவே, ஆண் வேட்பாளரை வெற்றிபெறவைத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என்கிற ரீதியில் அந்த வீடியோ செல்கிறது. 


கண்ணூர் தொகுதியின் சிட்டிங் எம்.பி-யான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.கே.ஶ்ரீமதி டீச்சரை குறிவைத்தே இந்த வீடியோவை அவர் வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுதாகரன், 421056 வாக்குகள் பெற்றார். அவரை 6 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற ஸ்ரீமதி டீச்சர், எம்.பி ஆனார். 

இந்த நிலையில், சுதாகரன் குறும்பட பாணியில் எடுக்கப்பட்டுள்ள பிரசார வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், மகன் மற்றும் மகள் இடையில் தந்தையின் சொத்தைப்  பிரித்துக்கொடுப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. அதில், தந்தையும் அவரது நண்பரும் உரையாடிக் கொண்டிருக்கும் சூழலில் வரும் மகன், தனது சகோதரிகுறித்து தந்தையிடம் புகார் கூறுகிறார். சகோதரி, தனது வேலைகளைச் சரியாக முடிப்பதில்லை என்கிறரீதியில் இருக்கிறது அந்தப் புகார்.

இதையடுத்து நண்பரிடம் பேசும் தந்தை, தனது  மகளைப் படிக்கவைத்து ஆசிரியையாக்கியது தவறு என்று குறிப்பிடுகிறார். மேலும், மகன் சென்றால், தனக்கு வேண்டியவற்றைப் பெற்ற பின்னரே வருவான்  என்று தந்தை குறிப்பிடும் வகையில் இருக்கிறது அந்த வீடியோ. இது, கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பெண் வாக்காளர்களுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவரும்  சுதாகரன், பெண்களை அவமதிக்கும் வகையில் பிரசார வீடியோ எடுத்திருப்பதாக கேரளாவில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.