Published:Updated:

``நாங்கதான் பிரதமரைத் தேர்ந்தெடுக்கப் போறோம்” - கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்ட பெண்!

``நாங்கதான் பிரதமரைத் தேர்ந்தெடுக்கப் போறோம்” - கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்ட பெண்!
``நாங்கதான் பிரதமரைத் தேர்ந்தெடுக்கப் போறோம்” - கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்ட பெண்!

``எனக்கு வயசு 35. நான் இப்போது நடக்கவிருக்கும் தேர்தலில்தான் முதல்முறையாக வாக்களிக்கப் போகிறேன். மக்களோடு மக்களா நானும் வரிசையில் நின்று ஓட்டு போடப் போகிறதை நினைக்கும்போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றவர் தொடர்ந்து, தான் கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்ட கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

லகப் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் வட அமெரிக்கா கண்டத்தின் மொத்த மக்கள்தொகை 57 கோடிதான். ஆனால், இந்தியாவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் 90 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்க உள்ளனர். அதிலும், இந்தியா இன்று தன்னைச் சுதந்திரக் குடியரசாக நிலைநிறுத்தி, தன்னுடைய வல்லரசு கனவுகளை நோக்கி நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. இருந்தபோதிலும், கொத்தடிமை முறை போன்ற சாதிய, பொருளாதாரக் காரணிகளால் ஒடுக்குமுறைகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த ஒடுக்குமுறைகளுக்கு பலியாகி பல லட்சம் இந்தியர்கள் அடிப்படை உரிமையற்றவர்களாய் இந்தக் குடியரசு நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது வேதனையின் உச்சம்.

சென்னை அருகே உள்ள காஞ்சிபுரம் மாவட்டம், மாம்பாக்கசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் லதா சண்முகம். இவர், குடும்பத்துடன் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகக் கொத்தடிமையான சிறைவாழ்வை வாழ்ந்தவர். தற்போது அந்தக் கொத்தடிமை முறையிலிருந்து விடுதலையாகி தன்னுடைய 35-வது வயதில் முதல்முறையாகத் தேர்தலில் வாக்களிக்க உள்ளார். இதுகுறித்து அவரிடம் பேசினோம்...

``எனக்கு வயசு 35. நான் இப்போது நடக்கவிருக்கும் தேர்தலில்தான் முதல்முறையாக வாக்களிக்கப் போகிறேன். மக்களோடு மக்களா நானும் வரிசையில் நின்று ஓட்டு போடப் போகிறதை நினைக்கும்போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றவர் தொடர்ந்து, தான் கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்ட கதையைச் சொல்ல ஆரம்பித்தார். ``எங்க சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கசத்திரம். சாதாரண கூலி வேலைசெய்துதான் வாழ்வை நடத்திவந்தோம். என் கணவருடைய சகோதரியின் திருமணத்துக்குப் பணமில்லாமல் தவித்தேன். அப்போதுதான் உறவினர் ஒருவர் மூலமாக, வேலூர் மாவட்டம் கல்புதூரைச் சேர்ந்த செங்கல்சூளை முதலாளியிடம் 5,000 ரூபாய் கடன் வாங்கினோம். கடைசியில், வாங்கிய கடனை அவர்கள் கேட்ட நேரத்தில் எங்களால் கட்ட முடியாமல் போனது. அதனால்,  அவர்களின் செங்கல்சூளையில் என் குடும்பத்தைக் கொத்தடிமையா ஆக்கிட்டாங்க. செங்கல்சூளையிலேயே ஒரு கீற்றுக் கொட்டகை. அதில்தான் இரண்டு கைக் குழந்தைகளோடு ஐந்து வருஷத்துக்கு மேல குடும்ப நடத்தினோம். எங்களின் இருண்டகாலம் அது. யாராவது காப்பாற்றமாட்டார்களா என தினந்தினம் காத்துக்கொண்டிருப்போம். அப்போது என் பையனுக்கு 3 வயசு. அந்தக் குழந்தையை மாடுமேய்க்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துவார்கள். ஒழுங்கான துணிகூட எதுவும் அப்போ இல்லை. காலையில் எழுந்ததிலிருந்து பொழுதுசாயுறவரைக்கும் எல்லா வேலைகளையும் பார்க்கவேண்டும். நாங்க குடும்பமே சேர்ந்து உழைத்தாலும் வாரம் 300 ரூபாய்தான் கொடுப்பாங்க. கடைசிவரை எங்களால் அந்தக் கடனை அடைக்கவே முடியலை. ஒருகட்டத்தில், என்னுடைய உடல்நிலை மிகவும் மோசமாகபோனது. நாங்களும் பலமுறை அங்கிருந்து தப்பிக்க முயன்று மாட்டிக்கொண்டோம்.

அந்த நேரத்தில்தான் வேலூர் கலெக்டர், தாசில்தார் எல்லாம் செங்கல்சூளைக்கு வந்து, `கொத்தடிமை யாராவது இருக்கிறார்களா' என விசாரணை நடத்தினார்கள். அவர்கள்தான் எங்களை அங்கிருந்து மீட்டு, `நீங்க இனி யாருக்கும் அடிமையில்லை... நீங்க இனி சுதந்திரமா வாழலாம்' என்று சொன்னதுடன், உடனடி நிதி உதவி செய்து எங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தார்கள்.

இப்போது பலருடைய உதவியோடு பேப்பர் பைகள், மூங்கில் கைவினைப்பொருள்கள் எனச் சொந்தமா சுயதொழில் செய்து வாழ்வை நடத்திவருகிறோம். இப்போது நாங்கள் யாருக்கும் தொழிலாளியும் இல்லை; யாருக்கும் முதலாளியும் இல்லை. நாங்கள் கொத்தடிமையா இருந்தபோதெல்லாம் தேர்தல் நடக்கும். அப்போதெல்லாம் ஓட்டு போட அனுமதி கேட்போம். `நீ ஓட்டு போட்டு என்ன பிரதமரையா உருவாக்கப்போற' எனச் சொல்லி அடிச்சி அனுப்பிடுவாங்க. `ஆமா... இப்போ நாங்க ஓட்டு போட்டுதான் பிரதமரைத் தீர்மானிக்கப் போறோம்” என்றவரிடம், ``இந்தத் தேர்தலில் எந்த அடிப்படையில் வாக்களிக்கப் போகிறீர்கள்" எனக் கேட்டதற்கு, ``ஏற்கெனவே கொத்தடிமையா, ஓர் அடிமை வாழ்வை வாழ்ந்து வந்துள்ளோம். இப்போதாவது, மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய நல்லவர்களைத் தேர்ந்தெடுத்து ஓட்டு போடலாமென்று இருக்கிறேன்” என்றார், நெகிழ்ச்சியுடன்.

தீண்டாமை, கொத்தடிமை முறை போன்றவை இந்திய அரசியலமைப்புச் சட்டங்களில் ஒழிக்கப்பட்டிருந்தாலும் அவை இன்னும் சமூகத்தில் நிழலாடிக் கொண்டிருப்பதுதான் வேதனை. 

அடுத்த கட்டுரைக்கு