Published:Updated:

``தேர்தல் ஆணையம் இன்னும் கண்டிப்புடன் இருந்திருக்க வேண்டுமா?" - என்ன சொல்கிறார் முன்னாள் ஆணையர்

மோகன் இ

மேற்கு நாடுகளில் கூட 50% தான் வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்களிப்பதற்கான உரிமை என்பது வாக்களிக்காமல் இருப்பதற்கான உரிமையையும் உள்ளடக்கும். அதைக் கட்டாயமாக்குவது இந்தியாவில் சாத்தியமற்றது. சில சலுகைகள் குடுத்து வாக்காளர்களைக் கவர்வதற்கான பிரசாரங்களை மட்டுமே இந்தியச் சூழலில் மேற்கொள்ள முடியும்.

``தேர்தல் ஆணையம் இன்னும் கண்டிப்புடன் இருந்திருக்க வேண்டுமா?" - என்ன சொல்கிறார் முன்னாள் ஆணையர்
``தேர்தல் ஆணையம் இன்னும் கண்டிப்புடன் இருந்திருக்க வேண்டுமா?" - என்ன சொல்கிறார் முன்னாள் ஆணையர்

"மிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ள நிலையில்,  தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்".

``இன்றைய தேர்தல் சூழலுக்கு ஏற்ப மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என நினைக்கிறீர்கள்?"

``நிறைய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறை என்பது ஒரு நடைமுறைதான். அது சட்டமாக இல்லாததால் அதைச் செயல்படுத்த முடியாது. தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு மட்டுமே செய்யலாம். அது பல வருடங்கள் விசாரிக்கப்படும். தேர்தல் விதிகளை மீறி வெறுப்புப் பிரசாரம் மற்றும் வன்முறையைத் தூண்டும் செயல்களில் ஈடுபடுவோர் உடனடியாக தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும். அதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை. ஒரு பயம் இருந்தால்தான் தேர்தலைச் சுமுகமாக நடத்துவதற்கான சூழல் உருவாகும். இடைக்காலமாக அபராதம் விதிப்பதற்கான அதிகாரமும் ஆணையத்திற்கு இருக்க வேண்டும்".

``டி.என். சேஷன் காலத்தில் இருந்த தேர்தல் ஆணையத்திற்கும், தற்போதுள்ள ஆணையத்திற்கும் உள்ள ஒப்பீடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

``பெரிய வித்தியாசம் இல்லை. மனிதர்களின் அணுகுமுறை மாறியிருக்கிறது. ஆனால், தேர்தல் விதிகள் எல்லாமே அப்படியேதான் பின்பற்றப்படுகின்றன. தனிப்பட்ட முடிவுகளில் சில வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால், தேர்தல் ஆணையத்தின் அனைத்து முடிவுகளையும் மூன்று பேர் கொண்ட ஆணையர்கள் குழுதான் எடுக்கிறது. தேர்தல் ஆணையத்தின் அனைத்து முடிவுகளையும் நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம். ஆனால், தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையம்தான் தலையாய அமைப்பாகும்".

``பிரசாரத்திற்காக ராணுவத்தையும், ராணுவ வீரர்களையும் பயன்படுத்துவதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?"

``இதை வார்த்தை ஜாலங்களாகப் பயன்படுத்துகிறார்கள். தேர்தல் ஆணையம் ஒரு வழிமுறையை வகுத்துக் கொடுத்து, அது பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்கிறது. அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும்தான் அதைச் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும். நடத்தை விதிகள் சட்டமாக இல்லாததால் ஆணையத்தின் அதிகாரம் வரையறுக்கப்பட்டதாக உள்ளது".

``அத்தனை முயற்சிகளுக்குப் பிறகும் பணப்பட்டுவாடா தொடர்ந்ததே?. ஆணையம் இன்னமும் கண்டிப்புடன் செயல்பட்டிருக்கலாமா?"

``சில அரசியல்வாதிகள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிரசாரம் செய்யக்கூடாது எனத் தடைவிதித்துள்ளார்கள். அது போதுமானதாக இருக்காது. அவர் இல்லையென்றால் வேறொருவர் வந்து பிரசாரம் செய்யப்போகிறார். வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு வேண்டும். மூன்று நாள், நான்கு நாள் தடையால் ஜனநாயகம் மேம்பட்டுவிடாது. தற்போதைய சூழலில்  ஆணையத்திற்குள்ள குறைந்தபட்ச அதிகாரத்தை வைத்துக்கொண்டு அமைதியான முறையில் தேர்தலை நடத்துவது என்பது கடினமானது".

``தேர்தல் பணிகளில் ஈடுபடுகிற மாநில அரசு அதிகாரிகள், ஆளும் கட்சிக்குச் சாதகமாக நடந்துகொள்வதாகக் குற்றச்சாட்டு உள்ளதே...அதைப்பற்றி?"

``நிச்சயமாக உண்டு, அதற்காகத்தான் தேர்தல் நேரங்களில் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்கின்றனர். ஆனால்,.சில மாநில அரசுகள் மற்றும் முதலமைச்சர்கள் அதற்கு ஒத்துழைப்பதில்லை. தேர்தல் ஆணையம் சற்று கடினமாக நடந்து கொண்டால் பின்னர் ஒத்துழைக்கிறார்கள். தேர்தல் ஆணையமும் அதைப் பாரபட்சமின்றி உறுதிசெய்ய வேண்டும்".

``வேட்பாளரின் தேர்தல் செலவு உச்சவரம்பு மாற்றியமைக்கப்பட வேண்டுமா? சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இவை வேறுவேறாக உள்ளதே?"

``தேர்தல் செலவு வரம்பு என்பது வேட்பாளர்களுக்கு மட்டும்தான். கட்சிகள் செய்கின்ற செலவுகளுக்கு ஒரு வரம்பே இல்லை. என்னைக் கேட்டால் இந்தச் செலவு வரம்பையே எடுத்துவிட வேண்டும். கட்சிகள் பல்வேறு வழிகளில் பணத்தை வாரியிறைக்கின்றனர். இதற்குப் பொதுவான தேசிய தேர்தல் நிதி ஒன்றை உருவாக்க வேண்டும். நிறுவனங்கள் நேரடியாக அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதைத் தடுக்க வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது என்பது வெளிப்படைத்தன்மை இல்லாததாக உள்ளது".

``தேர்தல் காலங்களில் நடைபெறுகிற வருமான வரித்துறை சோதனைகள் பற்றி...? ஒரு தலைபட்சமாக எதிர்க்கட்சிகளை மட்டுமே குறிவைத்து நடத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு உள்ளதே?"

``நான் இருந்த சமயத்தில் வருமான வரித்துறை சோதனைகள், இந்த அளவிற்கு இருந்ததில்லை. தற்போதுதான் அதிகரித்திருக்கிறது. இதற்குத் தேர்தல் சமயத்தில் பணப்புழக்கம் அதிகரித்திருப்பதுதான் காரணம் என அவர்கள் சொல்கிறார்கள். ஒவ்வொரு சோதனையையும் வருமான வரித்துறை தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவித்துவிட்டு செய்ய முடியாது. ஆனால், தேர்தல் சமயங்களில் எழுகிற ஒருதலைபட்சமான நடவடிக்கை போன்ற குற்றச்சாட்டுகளைத் தவிர்ப்பதற்கு தேர்தல் ஆணையம் சோதனை நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் அதைப்பற்றிய விளக்கத்தைத் தெளிவாக அறிவிக்க வேண்டும்".

``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன; வாக்குச்சீட்டு நடைமுறைக்கு மாறுவது சாத்தியமா?"

``வாக்குச்சீட்டு நடைமுறை என்பது நாட்டிற்கு நல்லதல்ல. அவை நடைமுறையில் இருந்த காலத்தில் பல்வேறு வட மாநிலங்களில் போலியான வாக்குகள் அதிக அளவில் பதியப்படும். எனவே, அதற்குத் திரும்புவது என்பது சாத்தியமற்றது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தேர்தல்களில் முதலில் நான்தான் அறிமுகப்படுத்தினேன். பல்வேறு கட்ட பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகுதான் அவற்றை நடைமுறைப்படுத்தினோம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பேட்டரியுடன் இயங்கக்கூடிய ஒரு கால்குலேட்டர் மட்டுமே. இயந்திரங்கள் தவறு செய்யாது. மனிதர்கள் தவறு செய்வார்கள். தற்போது `விவிபேட்' வந்தபிறகும் சந்தேகிப்பது சரியானதாக இல்லை".

``100% வாக்குப்பதிவைக் கட்டாயமாக்குவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா? இல்லையென்றால் வாக்குப்பதிவை அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?"

``மேற்கத்திய நாடுகளில்கூட 50 சதவிகிதம்தான் வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்களிப்பதற்கான உரிமை என்பது வாக்களிக்காமல் இருப்பதற்கான உரிமையையும் உள்ளடக்கும். அதைக் கட்டாயமாக்குவது இந்தியாவில் சாத்தியமற்றது. சில சலுகைகள் கொடுத்து வாக்காளர்களைக் கவர்வதற்கான பிரசாரங்களை மட்டுமே இந்தியச் சூழலில் மேற்கொள்ள முடியும்".

``சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

``அதற்கு முதலில் அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும். எந்தவொரு சீர்திருத்தம் கொண்டு வருவதற்கும் அரசியல் கட்சிகள் உடனடியாக ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் அதற்குச் சாத்தியமான சூழல் உருவானால் அது வரவேற்கத்தக்க ஒரு முடிவுதான்".

``போலிச் செய்திகள் மற்றும் சமூக ஊடகங்கள் தேர்தல் முடிவுகளில் தாக்கம் செலுத்த முடியுமா?"

``நிச்சயமாக உண்டு. நாளிதழ்களை ஒரு ஆணையம் கொண்டு கட்டுப்படுத்தலாம். அப்போதும் சில ஊடகங்கள் பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளத்தான் செய்கின்றன. சமூக ஊடகங்களுக்குத் தேர்தல் ஆணையம் வழிமுறைகளைத்தான் வகுத்துக் கொடுத்திருக்கிறதே தவிர, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை".

``வாக்கிற்குப் பணம் தரும் நடைமுறையைப் பற்றி..? அதை மாற்ற என்ன செய்ய வேண்டும்; யாரிடமிருந்து தொடங்க வேண்டும்?"

``இது மனிதர்களின் தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும். கட்சிகள் பணம் கொடுக்கத் தயாராக இருக்க, மக்களும் வாங்குவதற்குத் தயாராக இருக்கின்றனர். அதற்கு எதிராகப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், வறுமை நிலையில் உள்ள மக்கள், அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ளவே செய்கின்றனர். அதை முழுவதுமாக தடுப்பது சாத்தியமற்றது. கறுப்புப் பணமும் இதில் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு ஒரேவழி கட்சிகளுக்கான நிதி அளிப்பதை ஒழுங்குபடுத்தி, தேசிய தேர்தல் நிதியை உருவாக்குவதுதான் தீர்வாக இருக்கும். நான் தேர்தல் ஆணையராக இருந்தபோது, ஜூலை 2004-ல் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக அரசுக்கு 24 பரிந்துரைகளை அளித்தோம். அதை நடைமுறைப்படுத்த எந்த அரசியல் கட்சிக்கும் விருப்பமில்லை. சில பரிந்துரைகள் நீதிமன்றம் மூலமாகத்தான் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இனியும் தேர்தல் சீர்திருத்தங்கள் நீதிமன்றங்கள் மூலம் வருவதற்கான சாத்தியங்கள்தான் இருக்கின்றன".

``வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள்?"

``தேர்தல் ஆணையம் முறையான விசாரணை நடத்தி அறிக்கையைப் பெற்றுத்தான் அந்த முடிவை எடுத்திருப்பார்கள் என நம்புகிறேன்".