Published:Updated:

பிரச்னை ஏற்பட்ட இடங்களில் மறுவாக்குப்பதிவு உண்டா? என்ன சொல்கிறார் சத்ய பிரத சாஹூ?

பிரச்னை ஏற்பட்ட இடங்களில் மறுவாக்குப்பதிவு உண்டா? என்ன சொல்கிறார் சத்ய பிரத சாஹூ?
பிரச்னை ஏற்பட்ட இடங்களில் மறுவாக்குப்பதிவு உண்டா? என்ன சொல்கிறார் சத்ய பிரத சாஹூ?

பிரச்னை ஏற்பட்ட இடங்களில் மறுவாக்குப்பதிவு உண்டா? என்ன சொல்கிறார் சத்ய பிரத சாஹூ?

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, கடந்த ஒரு மாதகாலமாக மிகவும் பிஸியாக இருந்தார், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ. வாக்குப்பதிவை ஒருவழியாக முடித்த கையோடு, அடுத்தகட்ட வேலைகளில் பிஸியாக இருந்த அவரைச் சந்தித்தோம்....

``உங்களைப் பொறுத்தவரை தேர்தல் எப்படி நடந்தது?"

``மிகவும் திருப்தியாக நடந்து முடிந்தது. பெரிய அளவில் எந்தவிதமான சட்டம் - ஒழுங்குப் பிரச்னையும் ஏற்படவில்லை. மூன்று லட்சம் ஊழியர்களுக்கு வாக்குப்பதிவு பற்றிய ட்ரெயினிங் கொடுத்தோம். 80,000 இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது, சுமார் 300 மெஷின்கள் ரிப்பேர். அவற்றை உடனுக்குடன் சரிசெய்தோம். தர்மபுரி, திருவள்ளூர், கடலூர் போன்ற ஊர்களில் ஒருசில பிரச்னைகள் ஏற்பட்டன. அவற்றை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அங்குள்ள தேர்தல் பார்வையாளர்களுடன் ஆலோசனை செய்து ரிப்போர்ட் அனுப்பியிருக்காங்க. அவை குறித்து விரிவான விசாரணை நடத்தி முடிவு எடுப்போம்". 


``பல தொகுதிகளில் கொத்துக்கொத்தாக வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் விடுபட்டது, பூத் ஸ்லிப் வழங்குவதில் அதிகாரிகள் குளறுபடிகள் போன்ற விஷயங்கள் வாக்காளர்கள் மத்தியில் எரிச்சலை உண்டுபண்ணியதே?"

``வாக்காளர் பட்டியல் குறித்து, தேர்தல் ஆணையம் சார்பில் பலமுறை சிறப்பு முகாம்களை நடத்தினோம். அங்குசென்று தங்கள் பெயர் இடம்பெற்றிருக்கிறதா என்பதைப் பார்க்க வசதிசெய்தோம். 'வாக்காளர் ஸ்லிப்' இல்லை என்பதால், ஒருவரை ஓட்டு போடமுடியாதுன்னு சொல்லமுடியாது. வாக்காளர் பட்டியலில் சம்பந்தப்பட்டவரின் பெயரைத் தேடிப்பார்க்கிறதுக்கு நேரமாகும். 

தேர்தலுக்கு முன்பு, நாங்க என்ன சொன்னோம்னா, பூத் ஸ்லிப்புடன் வாக்காளர் அடையாள அட்டையையும் எடுத்துக்கிட்டு வரணும்னு சொல்லியிருந்தோம். ஆனா, மக்கள் மத்தியில ஒரு தவறான தகவல் பரவியிருக்கு. பூத் ஸ்லிப் தேவைப்படாது என்று நினைத்து, பலர் அடையாள அட்டை மட்டுமே கொண்டுசென்றிருக்கிறார்கள். வாக்களிக்கக் காத்திருந்த மக்களில் பலர் பூத் ஸ்லிப்புடன் நின்றார்கள். சிலர் ஐ.டி. கார்டுடன் நின்றார்கள். இருந்தும், அதிகாரிகள் அவர்களுக்கு உதவியிருக்கிறார்கள். வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர் எந்த சீரியல் நம்பர்ல இருக்கு எனப் பார்ப்பதற்கு ஒருசில இடங்களில் கொஞ்சநேரம் எடுத்துக்கொண்டது. என்றாலும் உடனுக்குடன் பிரச்னையைச் சரிசெய்துவிட்டோம். வாக்குப்பதிவு சதவிகிதத்தைப் பார்க்கும்போது, இந்தப் பிரச்னைகளால அவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படவில்லைன்னு தெரியுது. அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகளும் வாக்குச்சாவடிகளுக்கு வெளியே இருந்து, வாக்காளர்களுக்கு உதவியிருக்கிறார்கள்". 

``நடிகர் ரஜினிக்கு வலது கைவிரலில் மை வைத்திருக்கிறார்களே, இது தேர்தல் விதிமீறலில் வருமா?" 

``தவறு நடந்திருக்கலாம். விளக்கம் கேட்டிருக்கிறோம்". 

``நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், இருவரும் வெவ்வேறு வாக்குச்சாவடிகளுக்குப் போயிருக்கிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், பட்டியலில் பெயர் இல்லை. இருந்தபோதும், அவர்களை ஓட்டு போட அனுமதித்திருக்கிறார்களே, சாமான்ய  மக்களை இதே காரணத்திற்காகத் திருப்பி அனுப்பும்போது, அவர்கள் இருவருக்கு மட்டும் எந்தவிதத்தில் சலுகை தரப்பட்டது?"

``ஒருவேளை, அவர்களின் பெயர்களை வாக்குப்பதிவு செய்யும் இடத்தில் அதிகாரிகள் தேடிப்பார்த்து அனுமதித்திருப்பார்கள். அதைப்பற்றி மீடியாவில் நானும் கேள்விப்பட்டேன். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் ரிப்போர்ட் கேட்டிருக்கோம்". 

`` `வாக்காளர்களுக்குப் பல இடங்களில் ஆளுங்கட்சியினர்தரப்பில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது. அவை குறித்த வீடியோ, ஆடியோ ஆதாரத்துடன் தேர்தல் அதிகாரிகளிடம் புகார்களும் தரப்பட்டுள்ளன. ஆனால், நடவடிக்கைதான் எடுக்கப்படவில்லை' என்று எதிர்க்கட்சியினர் புகார் சொல்கிறார்களே?" 

மாவட்டங்களில் மீடியாக்கள், அரசியல் கட்சியினர் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் சட்டவிரோதப் பணப் பட்டுவாடா பற்றி தகவல்வரும், புகார்களும் வரும். அவற்றை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்புவோம். உடனே, தேர்தல் அதிகாரி அவருக்குக் கீழ் உள்ள அதிகாரிகளை அனுப்பி விசாரிப்பார். இனிஷியல் ரிப்போர்ட், செகண்டரி ரிப்போர்ட் என்று அடுத்தடுத்து விசாரித்து, ரிப்போர்ட் அனுப்புவாங்க. வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் ஒரு வீட்டுக்குள்ளே இருப்பதாக உறுதியாகத் தெரியவந்தால், ஐ.டி. துறையினருக்குத் தகவல் அனுப்பப்படும். அவங்க நடவடிக்கை எடுக்கப் போவாங்க. தங்கம் பதுக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், கஸ்டம்ஸ், டி.ஆர்.ஐ. அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்படும். அவர்கள் சென்று விசாரணை நடத்துவாங்க. ரிப்போர்ட்டை, டெல்லி தேர்தல் கமிஷனுக்கு அனுப்புவோம். அவர்கள் சொல்லும் அறிவுரைப்படிதான் செயல்படுவோம். 

``அப்படியென்றால், மாநிலங்களில் இருக்கும் உங்களைப் போன்ற தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு என்னதான் அதிகாரம் உள்ளது? டெல்லிக்குத் தகவல்களை அனுப்பும் கூரியர் சர்வீஸ் மாதிரி செயல்படுகிறீர்களா?" 

``கூரியர் சர்வீஸ்னு சொல்றது சரியில்லை. நான், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் உட்பட தேர்தலை நடத்தும் எல்லாரும் தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில்தான் வேலைசெய்கிறோம். ஒருசில விஷயங்களில் ஃபைனல் முடிவுகளை நாங்கள் எடுக்கலாம். மறுவாக்குப்பதிவு, வாக்குப்பதிவுகளை நிறுத்திவைப்பது போன்ற முடிவுகளை டெல்லி தேர்தல் கமிஷன்தான் எடுக்கமுடியும். ஐ.டி. வேலை என்னன்னா, அவங்களும் டெல்லிக்கு தகவல் அனுப்புறாங்க. அதை கூரியர் சர்வீஸ்னு சொல்லமுடியுமா? ஒவ்வொருவரும் அவங்கவங்க லெவல்ல நடவடிக்கை எடுக்கிறாங்க". 

``மத்தியில் ஆளும் பி.ஜே.பி, தேர்தல் ஆணையத்துடன் கூட்டணிபோட்டுச் செயல்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறாரே? ஆளுங்கட்சியினர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா?" 

``நான் அடிக்கடி மீடியாக்களைச் சந்திக்கிறேன். ஒவ்வொரு அரசியல் கட்சியினர் மீதும் எவ்வளவு கேஸ்களை பதிவு பண்ணியிருக்கிறோம் என்பதுபற்றி அவ்வப்போது சொல்லிவருகிறேன். ஏன், தி.மு.க.வினர்கூட எங்களிடம் நிறைய புகார்களை அளித்துள்ளனர். சில விவகாரங்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அவற்றைக்கேட்டு, வந்தவர்கள் திருப்தியடைந்துவிட்டுப் போயிருக்கிறார்களே?" 

``பிரச்னைகள் நடந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடக்குமா, அப்படியானால் எப்போது?"

``ஒருசில இடங்களில் நடந்தவை குறித்த ரிப்போர்ட்டுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து எங்களுக்கு வந்துவிட்டது. அவற்றை நாங்கள் டெல்லி தலைமை தேர்தல் கமிஷன் பார்வைக்கு அனுப்பியிருக்கிறோம். அவர்களின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம்".

அடுத்த கட்டுரைக்கு