Published:Updated:

`தீபாவளிக்காகவா அணுஆயுதங்களை வைத்திருக்கிறோம்?!' - பிரதமர் மோடியின் சர்ச்சைப் பேச்சு

கார்த்தி
`தீபாவளிக்காகவா அணுஆயுதங்களை வைத்திருக்கிறோம்?!' - பிரதமர் மோடியின் சர்ச்சைப் பேச்சு
`தீபாவளிக்காகவா அணுஆயுதங்களை வைத்திருக்கிறோம்?!' - பிரதமர் மோடியின் சர்ச்சைப் பேச்சு

'தீபாவளிக்காகவா அணு ஆயுதங்களை வைத்திருக்கிறோம்' எனத் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.  

`தீபாவளிக்காகவா அணுஆயுதங்களை வைத்திருக்கிறோம்?!' - பிரதமர் மோடியின் சர்ச்சைப் பேச்சு

புல்வாமா தாக்குதல் மற்றும் அதையடுத்து நடைபெற்ற சம்பவங்கள், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை அதிகப்படுத்தியது. சிறைப்பிடித்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை வாகா எல்லையில் ஒப்படைத்த பாகிஸ்தான், இந்தப் பதற்றத்தைத் தற்காலிகமாகத் தணித்தது. ஆனால், இந்த விவகாரம் குறித்து இருநாடுகள் தரப்பில் பல்வேறு தலைவர்கள் கூறிவரும்  கருத்துகள் அந்தப் பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது. 

அபிநந்தன் விடுதலையின்போது பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,``அனைத்துப் பிரச்னைகளும் பேச்சுவார்த்தைமூலமே தீர்வு காணப்பட வேண்டும். கர்தார்பூர் எல்லையை நாங்கள் திறந்தும், இந்தியாவிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. புல்வாமா தாக்குதல் நடந்தபோது, 30 நிமிடத்தில் நாங்கள் குற்றம் சுமத்தப்பட்டோம். இந்தியா ஏதேனும் செய்தால், நாங்கள் பதிலடிகொடுப்போம் எனச் சொல்லியிருந்தேன். இந்தியா, ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சை மீறிவிட்டது. நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானியை விடுவிக்கிறோம். தீவிரவாதம் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகள் குறித்தும், பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே இருக்கிறது. புல்வாமா தாக்குதல்குறித்து இந்தியாவுடன் பேச நாங்கள் தயாராக இருந்தோம்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.  இந்திய பிரதமரிடம் பேச முயற்சித்தோம். ஆனால், எங்களுக்கு எந்தவிதமான பதிலும் வரவில்லை என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

இந்த நிலையில், அணு ஆயுதங்கள்குறித்து தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தானின் பால்மர் பகுதில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுவருகிறார் மோடி. அவர் பேசுகையில், ``பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களுக்கு நாம் பயப்படும் காலம் மலையேறிவிட்டது. அணு ஆயுதத்தை அழுத்துவதற்கான பட்டன் இருக்கிறது என சொல்வதில் என்ன பயன். நாம் என்ன அதை தீபாவளிக்காகவா வைத்திருக்கிறோம்" என அணு ஆயுதத்தை மையப்படுத்தி கருத்து தெரிவித்திருந்தார். 

வரலாற்று ஆய்வாளரும், Gandhi before India, India After Gandhi போன்ற புத்தகங்களின் ஆசிரியருமான ராமச்சந்திர குஹா இதைக் கடுமையாக எதிர்த்துள்ளார். ``ஒரு நாட்டின் பிரதமர், தேர்தலில் மீண்டும் வெல்வதற்காக அணு ஆயதத்தை மையப்படுத்தி அரசியல் செய்வது மிகவும் கண்டனத்துக்குரியது. இந்தியா, இந்தியர்கள், உலகம், மனிதம் போன்ற பதங்களில் இவருக்கு யாதொரு அக்கறையும் இல்லை. தனது நாற்காலியைப் பத்திரப்படுத்த மட்டுமே இவர் சிந்திக்கிறார்'' என்று கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கிறார். இலங்கையில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்போல, இந்தியாவில் நடைபெறாமல் இருக்க பா.ஜ.க ஆட்சி தொடர்வது அவசியம் என கருத்து தெரிவித்து இருக்கிறார் சுப்ரமணிய சுவாமி. 

வட கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளே அணு ஆயுதங்களை விட்டுவிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவரும்போது, பிரதமர் மோடி இவ்வாறு அணுஆயுதம் குறித்து பேசியிருப்பது ஆச்சர்யமளிக்கிறது.

அணுஆயுதம் குறித்து பிரதமர் மோடி பேசியிருப்பது பற்றி, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். உங்கள் கருத்தினை கமென்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.