Published:Updated:

தேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்டம் ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல! - முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்

மோகன் இ
தேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்டம் ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல! - முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்
தேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்டம் ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல! - முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்

தேசியக் கட்சியோ, மாநிலக் கட்சியோ, ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கி சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் பணி. ஆனால், இங்கே அது சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்டம். தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்டம் தொடர்பானதே இந்தக் கட்டுரை.

எவ்வாறு அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுகின்றன?

பொதுவாக அரசியல் கட்சிகளுக்கான நிதி ஆதாரம் தன்னார்வலர்கள்மூலம் கிடைக்கிற நன்கொடை, உறுப்பினர் மற்றும் இதழ்களின் சந்தா, கட்சிக் கூட்டங்களில் வசூலிக்கப்படுகிற தொகை மற்றும் நிறுவனங்கள் நேரடியாக அளிக்கிற நன்கொடை ஆகியவையே. கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் 90 சதவிகிதம் அதிகமானவை கார்ப்பரேட் நிறுவனங்கள்* அளித்த நன்கொடைகளே.

இதில் 20,000 ரூபாய்க்குக் குறைவாகப் பெறப்படுகிற நன்கொடைகளுக்கு எந்தவிதமான கணக்கும் வைத்திருக்கத் தேவையில்லை. 20,000 ரூபாய்க்கு அதிகமாகப் பெறப்படுகிற நன்கொடை தொடர்பான தகவல்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தக் குறைந்தபட்ச வரம்பை மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு கொண்டுவந்த சட்டத்திருத்தத்தின்மூலம் 2,000 ரூபாய் எனக் குறைத்தது. அரசியல் கட்சிகள் ஒவ்வோர் ஆண்டும் வரவு, செலவுக் கணக்குகளைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். அரசியல் கட்சிகள் மொத்தமாகப் பெற்றுள்ள நன்கொடை விவரங்கள் தேர்தல் ஆணையத்திடம் இருக்கும். இந்தக் குறைந்தபட்ச வரம்புக்குக்கீழ் பெறப்படுகிற நன்கொடைகளுக்கு எந்தவிதமான கணக்கும் வைத்திருக்கத் தேவையில்லை என்பதால் அரசியல் கட்சிகள் பெரும்பாலான நன்கொடை விகிதத்தை இந்தப் பிரிவின்கீழ் கணக்கு காட்டிவருகின்றன.

மத்திய அரசு கொண்டுவந்த நிதி மசோதா 2017-ன் மூலம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், ரிசர்வ் வங்கிச் சட்டம், வருமான வரிச் சட்டம் மற்றும் நிறுவனங்களின் சட்டம் ஆகியவற்றில் பல்வேறு சட்டத்திருத்தங்களைக் கொண்டுவந்தது. இதில் முக்கியமானவை, ``20,000 ரூபாய் என்கிற குறைந்தபட்ச வரம்பை 2,000 எனக் குறைத்தது, இந்தியர்களால் நடத்தப்படுகிற வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து அரசியல் கட்சிகள் நன்கொடைகள் பெறலாம். கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய லாபத்திலிருந்து 7.5 சதவிகிதம்வரைதான் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க முடியும் என்கிற வரம்பைத் தளர்த்தியது” ஆகும்.

 
தேர்தல் செலவின் உச்ச வரம்பு என்ன?

ஒரு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.28 லட்சம் வரை செலவு செய்யலாம். ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.70 லட்சம் வரை செலவு செய்யலாம். இதற்கு அதிகமாகச் செலவு செய்தால் அந்த வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை வெறும் வேட்பாளர்கள் செய்கிற செலவுக்கான உச்சவரம்பு, அரசியல் கட்சிகள் செய்கிற தேர்தல் செலவுகளுக்கு எந்தவிதமான உச்சவரம்பும் இல்லை. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் முறையே தேர்தல் முடிந்த 90 மற்றும் 30 நாள்களுக்குள்ளாகச் செலவுக் கணக்குகளை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். 

இந்நிலையில் கடந்த ஆண்டு தேர்தலில் அரசியல் கட்சிகள் செய்கிற செலவுகளுக்கு உச்சவரம்பு விதிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் முன்வைத்த பரிந்துரைக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் ஆதரவு இருந்தபோதும் ஆளும் பி.ஜே.பி. கட்சி இந்த முடிவைக் கடுமையாக எதிர்த்தது.

தேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்டம் என்றால் என்ன?

மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு ஜனவரி 2018 முதல் செயல்பாட்டில் உள்ள தேர்தல் நன்கொடைப் பத்திரத்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மூலம் மட்டுமே பெற முடியும். ஒரு நிதியாண்டில், நான்கு முறை மட்டுமே இந்தத் தேர்தல் நன்கொடைப் பத்திரத்தைப் பெற முடியும். ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் பத்து நாள்கள்வரை இந்தப் பத்திரத்தைப் பெற்று 15 நாள்களுக்குள் ஏதாவதோர் அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்டு கடைசியாக நடைபெற்ற பொதுத் தேர்தல் அல்லது சட்டப்பேரவைக்கான தேர்தலில் ஒரு சதவிகிதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற்ற கட்சிகளே தேர்தல் நன்கொடைப் பத்திரத்தைப் பெற முடியும்.

இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ``ரொக்க நடைமுறையில் நன்கொடைகள் பெறப்படுகிறபோது அதில் வெளிப்படைத்தன்மை இருக்காது, எனவே, வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கத்தான் இந்தப் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

இந்தத் தேர்தல் நன்கொடைப் பத்திரத்தை இந்தியர் அல்லது இந்தியாவில் பதிவுசெய்துள்ள எந்தவொரு நிறுவனமும் பெற்று அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கலாம். இதில் பத்திரத்தைப் பெறுபவரின் தகவல்கள் வங்கியிடம் மட்டுமே இருக்கும். நன்கொடைப் பத்திரத்திலும் நன்கொடை அளிப்பவரின் பெயர் இருக்காது. அரசியல் கட்சிகள் அவர்களுடைய பெயரை வெளியிட வேண்டிய தேவை இல்லை எனச் சட்டமும் திருத்தப்பட்டுள்ளது. நிதி மசோதா 2017 மூலம் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தில் ரூ.2,000-க்கு மேல் தேர்தல் நன்கொடைப் பத்திரம் மூலம் பெறுகிற நன்கொடை தொடர்பான தகவல்களைத் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கத் தேவையில்லை என அரசு சட்டத்தைத் திருத்தியுள்ளது. தற்போது தேர்தல் ஆணையத்திடம் நன்கொடைப் பத்திரம் மூலம் எவ்வளவு பணம் பெறப்பட்டது என்கிற தகவல் இருக்கும். ஆனால் அந்த நன்கொடையை, யார் அளித்தார் என்கிற தகவல்கள் இருக்காது.

இந்தத் திட்டத்தின்மூலம் கடந்த ஆண்டில் 1,056 கோடி ரூபாயும், இந்த ஆண்டில் தற்போது வரையில் 1,716 கோடி ரூபாயும் அளவுக்கான நன்கொடைப் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக அளவிலான தேர்தல் நன்கொடை, தேர்தல் பத்திரத்தின் மூலமே பெறப்பட்டுள்ளது. தேர்தல் நன்கொடைப் பத்திரம் மூலம் 95 சதவிகிதம் அதிகமான நன்கொடை, ஆளும் பி.ஜே.பி-க்கு மட்டுமே கிடைத்துள்ளது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. பல எதிர்க்கட்சிகளுமே தேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளன.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு?


இந்தத் திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான அமைப்பு ஆகியன உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்குத் தொடுத்தன. இதில், கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். அந்த மனுவில் இந்தத் திட்டத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் அல்லது நன்கொடை அளித்தவர்களின் தகவல்களைப் பொதுவெளியில் அறிவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது தேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்டம் அரசியல் கட்சிகளுக்கான நிதி அளிப்பதில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் என மத்திய அரசு வாதிட்டது. ``அரசியல் கட்சிகளுக்கு யார் நன்கொடை அளிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்கான உரிமை பொது மக்களுக்குக் கிடையாது” – என அரசுத் தரப்பை ஆதரித்து வாதாடிய அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் தன்னுடைய நிலைப்பாட்டில், ``தேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், இதில் நன்கொடையாளர்களின் விவரத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும்” எனத் தெரிவித்தது. 

இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில் தேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்டத்திற்குத் தடை விதிக்க மறுத்ததோடு, அரசியல் கட்சிகள் இந்தத் திட்டம் மூலம் பெறப்பட்ட நன்கொடைகளின் முழு விவரத்தைத் தேர்தல் ஆணையத்திடம் சீல் செய்யப்பட்ட கவரில் மே 30-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பாக விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் எனக் கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

காங்கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தேர்தல் சீர்திருத்தங்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், ``தேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்டம் முழுக்க ஆளுங்கட்சிக்குச் சாதகமாக இருப்பதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளதால் அது முற்றிலுமாக ஒழிக்கப்படும். மேலும், தேசிய தேர்தல் நிதி ஒன்று உருவாக்கப்படும்” என்றுள்ளது.


``தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதங்கள் அவ்வப்போது எழுகிறபோதிலும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அதில் பெரிய அளவில் நாட்டம் இல்லை" என்கிறார் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி. காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ள தேசிய தேர்தல் நிதி தொடர்பாக 2004-ம் ஆண்டே தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்திருந்தது. ஆனால் அதைப்பற்றி இதுநாள் வரையில் எந்தவொரு நடவடிக்கையும், விவாதமும் மேற்கொள்ளப்படவில்லை. அப்போது தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தவர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி. அவரிடம் பேசினோம். ``தேர்தல் சீர்திருத்தங்கள் அனைத்துமே நீதிமன்றத்தின் மூலமாகத்தான் வந்திருக்கின்றன. அரசியல் கட்சிகள் இணைந்து சில தவறான சீர்திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளன. இந்தத் தேர்தல் நன்கொடைப் பத்திரம் என்பது மிகவும் தவறான ஒரு திட்டம், இது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. எந்த நிறுவனமும் கட்சிகளுக்கு நிதியளிக்கலாம். ஆனால் மக்களுக்கு, எந்தக் கட்சிகளுக்கு நிதியளிக்கிறார்கள் என்பது தெரியவராது. தேர்தல் அரசியல் என்பது ஒரு பொது நடவடிக்கை, இதுவொன்றும் தனிப்பட்ட வணிகம் அல்ல. அரசியல் கட்சிகளுக்கு யார் நிதியளிக்கிறார்கள், அவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும்.

தேசிய தேர்தல் அரசியல் நிதி என்பது பொதுமக்கள் மூலம் திரட்டப்படுவது. சில மேற்குலக நாடுகளில் அரசு நிதியின் மூலம் தேர்தல் செலவுகள் செய்யப்படுகின்றன. இந்தியாவில், அது சாத்தியமில்லை. அதனால்தான் சுயாதீனமான தேசிய தேர்தல் நிதி ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இது யார் சார்பும் இல்லாமல் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் இயங்க வேண்டும். நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் நேரடியாக அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக இந்தப் பொது நிதியில் செலுத்தலாம். பின்னர், அதை அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்காகப் பயன்படுத்தலாம். இது கட்சிகளின் முடிவுகள், செயல்பாடுகளில் கார்ப்பரேட் ஆதிக்கம் செலுத்துவதைக் குறைக்கும். 2,000 ரூபாய் என்கிற குறைந்தபட்ச வரம்புமே நீக்கப்பட வேண்டும். தேர்தல் அரசியலில் பயன்படுத்தப்படுகிற ஒவ்வொரு ரூபாயும் கணக்கு காட்டப்பட வேண்டும். இதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளையும் கூட்டி வழிமுறைகளை உருவாக்கலாம்” என்றார்.

தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாட்டை விமர்சித்த டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ``தேர்தல் ஆணையம் இந்தத் திட்டத்தை முழுவதுமாக எதிர்த்திருக்க வேண்டும். ஆனாலும் நன்கொடை அளித்தவர்களின் தகவல்கள் பொதுவெளியில் வந்தாலே இந்தத் திட்டம் இல்லாமல் போய்விடும். உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றபோதிலும் முழுமையான விசாரணை முடிந்து இறுதித் தீர்ப்பு வருகிறபோது இந்தத் திட்டம் நீதிமன்ற விசாரணையைத் தாங்காமல் ரத்து செய்யப்பட்டுவிடும்” என்றார்.