Published:Updated:

வெறும் 12 சதவிகிதம்: எப்படி இருக்கிறது காஷ்மீர் தேர்தல் நிலவரம்?

வெறும் 12 சதவிகிதம்: எப்படி இருக்கிறது காஷ்மீர் தேர்தல் நிலவரம்?
வெறும் 12 சதவிகிதம்: எப்படி இருக்கிறது காஷ்மீர் தேர்தல் நிலவரம்?

“கடந்த மூன்று வருடங்களில் எங்கள் ஊர்மக்கள் நிறையப் பேர் இறந்துவிட்டார்கள். நிறையப் பேர் இன்னும் மருத்துவமனைகளிலேயே இருக்கிறார்கள். எங்கள் அப்பா, அண்ணன்கள் அனைவரும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் இருக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள், நாங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? யாருக்காக வாக்களிக்க வேண்டும்?”

ல்லைப் பிரச்னை மற்றும் தீவிரவாதத் தாக்குதல் அச்சத்துக்கிடையே காஷ்மீர் தனது தேர்தலைச் சந்தித்து வருகிறது. காஷ்மீரின் முக்கிய மக்களவைத் தொகுதியான அனந்த்நாக், நாட்டிலேயே இல்லாத வகையாக மூன்றுகட்டமாக வாக்குப்பதிவுகளைச் சந்தித்து வருகிறது. இருந்தும், மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய அனந்தநாக் தொகுதியில் வெறும் 12 சதவிகித வாக்குப்பதிவே நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு இருந்த 39 சதவிகித வாக்குப்பதிவுடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஒருசில இடங்களில் வாக்குப்பதிவு நடந்தாலும் பெரும்பாலான இடங்களில் காலிப்பெட்டிகளுடன் வெளியேறுகின்றனர்.

மக்களிடம் அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை, “கடந்த மூன்று வருடங்களில் எங்கள் ஊர்மக்கள் நிறையப் பேர் இறந்துவிட்டார்கள். நிறையப் பேர் இன்னும் மருத்துவமனைகளிலேயே இருக்கிறார்கள். எங்கள் அப்பா, அண்ணன்கள் அனைவரும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் இருக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள், நாங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? யாருக்காக வாக்களிக்க வேண்டும்?” என்கின்றனர்.

இது, ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லையென்றாலும், இன்னும் சில வலுவான காரணங்களும் இருக்கின்றன. மூன்று வருடத்துக்கு முன்பு இதே அனந்தநாக் பகுதியின் பும்தோராவில்தான் ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பைச் சேர்ந்த 22 வயது புர்ஹான் வானி என்னும் இளைஞர் பாதுகாப்புப் படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டதன் எதிரொலி அடுத்த ஆறு மாதங்களுக்குப் போராட்டமாகத் தொடர்ந்தது.

இதில் 90-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் நான்கு மாத காலத்துக்குள் 50-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படைவீரர்களும் தீவிரவாதிகள் என்று சொல்லப்பட்ட 58-க்கும் மேற்பட்ட மக்களும் சுட்டுக்கொல்லப்படவில்லை. கடந்த வருடத்தில் மட்டும் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் 168 பேர் பயங்கரவாதிகள் எனப் பாதுகாப்புப் படை கணக்குக் காட்டியுள்ளது. அனந்தநாக் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் முக்கியமானவர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெஹபூபா முஃப்தி. தனது தந்தையின் பெயரைச் சொல்லி வாக்கு கேட்பது ஒருபக்கம் தொடர்ந்தாலும், மறுபக்கம் அவர் வெற்றி பெறமாட்டார் என்று திட்டவட்டமாகச் சொல்லிவருகிறார் தேசிய மாநாட்டுக் கட்சியின் ஒமர் அப்துல்லா.

அவர்கள் தரப்பில் முன்னாள் நீதிபதி ஒருவரை, அந்தத் தொகுதியில் களமிறக்கியுள்ளார்கள். ஒமர் அப்துல்லாவின் கணிப்புக்குச் செவி சாய்த்ததுபோல மெஹபூபாவின் சொந்த ஊரான பிரிஜிபெஹராவில் (Bijbehara) இதுவரை 2-4 சதவிகித வாக்குகளே பதிவாகியுள்ளன. அனந்த்நாக்கின் 40 பூத்களில் வாக்குப்பதிவுகளே இல்லை என்கிற தகவலையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மேலும் வரலாற்றிலேயே இல்லாத வகையில், காஷ்மிரி அல்லாத ஒருவர் அனந்தநாக் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். தொடரும் பிரச்னை காரணமாக, பி.ஜே.பி. கட்சியும் தங்களுடைய கட்சி அடையாளங்களை மறைத்துக்கொண்டு பிரசாரங்களையும் அடக்கி வாசிப்பதாகவே கூறப்படுகிறது.

கடந்த முறை மெஹபூபா முப்தி பி.ஜே.பி.-யுடன் வைத்த கூட்டணி மற்றும் அதற்குப் பிறகான காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை விவகாரத்தில் ஏற்பட்ட பிளவு மற்றும் பல மூத்த தலைவர்கள் கட்சியிலிருந்து விலகியது காஷ்மீர் மாநில அரசியலில் திருத்த முடியாத வரலாற்றுப் பிழையாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில், மெஹபூபா முப்தியின் வெற்றி தோல்விதான் மாநிலத்தின் சுயாட்சி உரிமை உட்பட அனைத்தையும் நிர்ணயிப்பதாகவும் இருக்கிறது. மே 6 அன்று அங்கு மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதையடுத்து, மொத்த வாக்குப் பதிவு சதவிகிதத்தைவைத்தே மாநிலத்தின் தலைவிதியும் நிர்ணயிக்கப்படும்.

அடுத்த கட்டுரைக்கு