Published:Updated:

``செ.ம.வேலுச்சாமிக்கு வருத்தமா?'' - வேட்பாளரை பதில் சொல்லவிடாத அமைச்சர்

எம்.புண்ணியமூர்த்தி
``செ.ம.வேலுச்சாமிக்கு வருத்தமா?'' - வேட்பாளரை பதில் சொல்லவிடாத அமைச்சர்
``செ.ம.வேலுச்சாமிக்கு வருத்தமா?'' - வேட்பாளரை பதில் சொல்லவிடாத அமைச்சர்

செ.ம.வேலுச்சாமி குறித்த கேள்விக்கு சூலூர் அ.தி.மு.க வேட்பாளர் கந்தசாமியை பதில் சொல்லவிடாமல் பேட்டியை முடித்த  எஸ்.பி.வேலுமணி அ.தி.மு.க-வில் அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம்" என்று கூறிவிட்டுச் சென்றார்.

சூலூர் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்த கனகராஜ் மரணமடைந்ததால் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஆகிய தொகுதிகளோடு சேர்த்து சூலூருக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.  அ.தி.மு.க சார்பில் கனகராஜின் சித்தப்பா மகனான கந்தசாமிதான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  தி.மு.க வேட்பாளராக பொங்கலூர் பழனிச்சாமி, அ.ம.மு.க வேட்பாளர் சுகுமார், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் மயில்சாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஜயராகவன் ஆகியோரை எதிர்த்துப் போட்டியிடும் கந்தசாமி,  மேளதாளம் முழங்க… பட்டாசு வெடிக்க... அமைச்சர் எஸ்.பி.வேலுமணியோடு ஊர்வலமாக வந்து சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்  தேர்தல் அதிகாரியான பாலகிருஷ்ணனிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். 

மனுத் தாக்கல் செய்வதற்கு நான்குபேர்தான் உள்ளே செல்ல வேண்டும் வேறு யாரும் வரவேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளிடம் கையெடுத்துக் கும்பிட்டபடியே சென்றனர் வேலுமணியும் வேட்பாளர் கந்தசாமியும். வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு, மீடியாக்களிடம் பேட்டி கொடுக்க வந்தனர்.  மைக் முன்பு வந்து நின்ற கந்தசாமி, ``முதல்வர், துணை முதல்வர்  கொண்டு வந்த அத்தனை திட்டங்களையும் இந்தத் தொகுதியில் நிறைவேற்றப் பாடுபடுவேன்.  

பொதுமக்களில் ஒருவனாக இருந்து உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வேன். சுல்தான்பேட்டை, சூலூர் இரு இடங்களிலும் எனக்கு  வீடு இருக்கிறது. எனவே, இங்கிருந்தே மக்கள் பணியாற்றுவேன். அடித்தட்டு மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தேவையானதைச் செய்வேன்" என்றார். அதையடுத்து,  முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமிக்கு சீட் கொடுக்காததால்  அதிருப்தியில் இருப்பதாகச் சொல்கிறார்களே என்று கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு வேட்பாளரை பேசவிடாத வேலுமணி, ``அதெல்லாம் ஒன்றுமில்லை. அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். ஒன்றிணைந்து செயல்படுவோம். 50,000 வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெறுவோம்" என்று சொல்லிவிட்டு பேட்டியை முடித்துக்கொண்டு புறப்பட்டார்.